அம்மா சொல்படி ராஜூ: பகுதி 5. 21 10 2009
(நகரத்தார் வாழ்க)
நாங்கள் ஒருவீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருந்தோம். அதே சமயத்தில் என் அக்கா வேறு குடுத்தினம் நடக்கும்படி செய்து கொண்டார்களாம். இந்த சமயத்தில் என் தம்பிக்கு பெரிய அம்மை போட்டியிருந்தது. அப்போது நானும் என் தம்பியும் சிவன் கோவில் தெருவில் இருந்த ஹேட்ஸ்கூலில் நாங்கள் படித்தேன். என் தம்பியும் அங்கு தான் படித்தான். அந்த நாளில் ஐந்து க்ளாஸுக்கு மேல் தான் இங்கிலீஷ். நான் ஏதொ 8 வரையில் படித்தேன். தம்பிக்கு அம்மை போட்டினதால், நான் வீட்டிற்கு போகமாட்டேன். எனக்கு அம்மை போட்டவில்லை. அதனால் என் அத்தை அதே தெருவில் இருந்தாள். அங்கு போய் சாப்பிடுவேன். இப்படியிருக்கும் (போது) திடீரென்று எனக்கு அம்மை போட்டுவிட்டது. என் அப்பாவும் இல்லை. அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாளாம். என்ன செய்வது. நானும் தம்பியும் அம்மையில் பிழைக்கமாட்டோம் என்று இருந்தாளாம், என் அம்மா. ஏதோ மகமாயி அருளால் இருவரும் உயிர் பிழைத்து எழுந்தோம். அம்மை போட்டின (து) நினைவு இருக்கிறது. நான் அம்மை வேகத்தில் பட்டுப்பாவாடை வேணும் என்று கேட்டேனாம். எங்களுக்கு மூன்று ஜலம் தலைக்கு விட்ட பிறகு என் அப்பாவுக்கு லெட்டர் போடும்படி என் அம்மா சொன்னாளாம். லட்டர் கிடைத்துவிட்டது. அந்தக்கணக்கும் முடிந்ததாம். உடனே என் அப்பா மெட்றாஸ்ஸில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கிவந்தார். அதை உடனே தைத்து நான் உடுத்திக்கொண்டேன்.15 அப்போது எனக்கு 10 வயது. ஆனால், அக்காவைக்கொடுத்த மாப்பிள்ளை அவர்கள் உறவில் ஸ்வீகாரம் போனவர்? 16
என் பெரியப்பா தஞ்சாவூருக்குப் போனவர், திடீரென்று என் வீட்டை விற்கப்போகிறேன். நீ வாங்கிகொள் என்று சொன்னாராம். அவருக்குக் காரைக்குடியில் மேல ஊரணீக்கரை மேல் ஒரு வீடு இருக்கிறது. அதைத்தான் வாங்கும்படி சொன்னாராம். உடனே என் அப்பா சரி என்று சொல்லிவிட்டாராம். தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம், நான் வீடு வாங்கப்போகிறேன் என்றும், அதற்கு பண உதவி நீங்கள் தான் செய்யவேண்டும் என்று சொன்னதின் பேரில், அப்பாவிற்கு அந்தச் செட்டியார் 1000 ரூபாய் கொடுத்தாராம். அதை வாங்கி பெரியப்பாவிடம் கொடுத்து வீட்டின் பேரில் பத்திரம் எழுதி வீட்டை வாங்கிக்கொண்டார்.
நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து விட்டோம். எங்களுக்கு அம்மை போட்டினபோது என் தம்பிக்கு திருப்பதியில் பூணூல் போடுகிறேன் என்று என் அம்மா வேண்டிக்கொண்டாளாம். இதற்கிடையில் என் அக்காவுக்கு தலைக்குழந்தை இறந்து போயிற்று. அப்பாவுக்கு செட்டியார் வீட்டில் நல்ல பெயர். அவர்கள் கார் வாங்கி, அதில் வெள்ளித்தகடு போட்டு இருக்கும். அந்தக்காரில் தான் என் அப்பா போவார். 17 நான் ஐந்தாவது பெண்ணாம். அதனால் எனக்கு 10 வயது ஆவதற்குள் நல்ல காலம் என்று என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்? இப்படியிருக்கும் போது தான் எனக்குக் கல்யாணம் செய்யவேணும் என்று என் அப்பா நினைத்தார்.
ஆனால், அரியக்குடி என்ற ஊரில் என் பெரி (ய) அத்தை இருந்தாள். எனக்கு நினைவு இருக்கிறது. அந்த அத்தைக்கு ஒரு பிள்ளை தான்.18 அதனால், அத்தை என் அப்பாவிடம் வந்து உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடு என்று கேட்டாள். அதற்கு அப்பா சொன்னது என்னவென்றால், வயது அதிகம், வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதற்குள் என் அத்தை வந்து என் மைத்துனர் பிள்ளை இருக்கிறான். நல்ல சம்பாத்தியம். நல்ல வேலை பார்க்கிறான். அவனுக்குக் கொடு என்றாள். அதையும் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், பையனுக்கு மூலா நக்ஷத்திரம் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் திருவித்யானம்19, கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். அவர் வந்து என் அப்பாவிடம் ஒரு ஜாதகம் வந்திருக்கிறது. அதை உன் பெண்ணுக்கு பார்க்கலாம் என்று சொன்னாராம். என் அப்பா அந்த ஜாதகத்தைப் பார்த்தாராம். ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது என்று தெரிந்ததும் என்ன செய்வது என்று யோசித்துப்பார்க்கும் போது, கும்பகோணத்தில் ரெட்டிராயர் குளத்தெருவில், என் அப்பாவுடைய மாமா பிள்ளை இருந்தார். அவருடைய பெயர் ஆராவமுது. 20 அவருக்கு லட்டர் (போட்டு) கேட்டார்களாம். அவர் வந்து என் தம்பி பெண்ணுக்குத் தான் பார்த்தது. பொருத்தம் இல்லை என்பதால் உனக்கு அனுப்பும்படி என் தம்பி சக்கரவர்த்தி எழுதியிருந்தான். அதனால் உடனே உனக்கு அனுப்பினேன். அவர்கள் நல்லவர்கள் தாம். சக்கரவர்த்தி சாத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கிறான். அங்கு தான் அந்த பையனும் இருக்கிறான். பையன் நன்றாக இருப்பான். வேலை நல்ல கெவர்மெண்ட் வேலை. அதனால் சாத்தூருக்கு லட்டர் போட்டு தெரிந்து கொள் என்று அந்த ஆராவமுது லட்டர் போட்டுவிட்டாராம். பிள்ளைவீட்டுக்காரர்களும் ஜாதகம் பொருத்தம் என்றும் லட்டர் போட்டுவிட்டார். அதனால், என் அப்பா உடனே சாத்தூருக்குப் போய் பிள்ளையைப் பார்த்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஊருக்கு வந்து விட்டார். என் அம்மாவிடம் பையன் நன்றாக இருக்கிறான், எனக்கு பிடித்து விட்டது; அவர்கள் பூர்வீக ஊர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறதாம். அவர்களுக்கு லட்டர் போட்டு கேட்கிறேன் என்று சொன்னாராம். அதன்படி அவர்களுக்கு என் (அப்பா) லெட்டர் போட்டாராம். 21
15. இதற்குப் பிறகு, ருக்மிணி, தனக்கென்று ஒரு ஆசை வைத்ததாக, நான் அறியேன்.
16. நாங்கள் அறியாத செய்தி.. சில செய்திகள் தொடர்பில்லாமல் இருந்தாலும், இடம், பொருள், ஏவல் பொருத்தி புரிந்து கொள்ளவேண்டும். கேள்விக்குறி ருக்மிணியோடது..
17. நகரத்தார் நாகரீகத்தார் அல்லவா!
18. இவர் என் ஃப்ரெண்ட்., ஹீரோ, அனுகூலசத்ரு. ஒரு நாள் அரியக்குடி உத்ஸவத்தின் போது எனக்கு பிடிக்காததை இலையில் போட்டார். சட்ணு அதை பரிமாறும் பாத்திரத்தில் வீசி எறிஞ்சேன். சுத்திவர ஆசார பிராமணா. அடிச்சார். பிறகு, தனியா அக்காரவடிசல் கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு, மும்பைக்கு போகும் ரயில்வண்டியில் பார்த்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். அவரது மகவுகள் வளப்பமாக இருப்பதாக சொன்னார்.
19. இறந்தவர்களுக்கு வருடாவருடம் செய்யும் திதி..
20. முதல் தடவையாக, ஒரு பெயர். இத்தனைக்கும் துணை மாந்தர். தன் அப்பாவின் பெயரைக்கூட ருக்மிணி எழுதவில்லை.
21. காரியத்திலெ இறங்கினா, தாத்தா சட்புட்ணூ முடித்து விட்டு தான் மறுவேலைக்குப் போவார். ஏகாக்ரஹ சதாவதானி. அடிக்கடி இதை பார்ப்போம்.
(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்)
No comments:
Post a Comment