அம்மா சொல்படி ராஜூ: (‘படிப்பு தான் முக்யம்’) பகுதி 16: 1 11 2009
(‘நம்பினால் நம்புங்கள்’)
... நானும் ஆறாவது பிரஸவமாகி 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அங்கு என் நாத்தனார்கள் ரொம்பவும் குழந்தைகளை கவனித்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் இருவரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மைத்துனர் தஞ்சாவூரிலிருந்து புனா போனார். அவருக்கும் இரண்டு பெண். அவருக்கும் புனா போய் ஒரு பிள்ளை பிறந்து அம்மையில் இறந்துவிட்டதாம். பிறகு வெகு நாள் கழித்து என் ஓர்ப்படி77
குழந்தை உண்டாகி இருந்தது தெரியாமல் புனாவிலிருந்து நான் புறப்பட்டு உசிலம்பட்டி வருகிறேன் என்றும், என்னை மதுரை வந்து அழைத்துப் போங்கள் என்று அவள் என் புருஷனுக்கு லட்டர் போட்டாள். ஆனால், அவள் வருவதற்கு முன்பு தீபாவளி அன்று என் புருஷன் குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கி வந்தார். தீபாவளிக்கு நான் ஆத்தில் இல்லை. அதனால் குழந்தைகளுக்கு ஓட்டலில் வாங்கி வந்தார். (அன்றைக்கு). என் பெரிய பிள்ளை கள்ளர் ஹைஸ்கூலில் படிக்கிறான். அவன் தீபாவளி அன்று வாத்தியாரை புதுசு உடுத்திக்கொண்டு நமஸ்காரம் செய்யப்போகிறேன் என்று அதிகாலையில் வெளிச்சம் வருவதற்குள் போனான். அத்தக் கள்ளர் ஸ்கூல் தாண்டித்தான் போகவேண்டும். அதனால் தான் வாத்தியார் வீட்டுக்குப் போய் வரும்போது ஒரு வேப்பமரத்தைப்பிடித்து (கிளையை) இழுத்திருக்கிறான். வழுக்கிக் கீழே விழுந்துவிட்டான். அதில் கையில் நல்ல அடி. அவனோடு இரண்டொரு சிநெகிதன் போயிருக்கிறான். அவர்கள் கொண்டு விட்டார்கள். வாயில் அடிபட்டு ரத்தம் வந்து அவர்கள் நன்றாக வாயை அலம்பிவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். உடனே ஆஸ்பத்திரியில் காண்பித்து கையில் பார்த்தால் இரண்டு பிளாச்சு கையில் போட்டு கட்டி விட்டார்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டான். இரண்டு வாரம் ஆகி கட்டு அவிழ்த்து கைக்கு தூளி போட்டார்கள். ஆனால் அவன் ரொம்ப நாள் சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டான். நான் சாதம் ஸ்பூனில் கொடுப்பேன். இப்படியிருக்கும்போது புதுக்கோட்டை அத்தைக்கு ஸ்ரீகாரம் கொடுத்த அடுத்த வருஷம் அந்த அத்தை மூன்று நாள் ஜூரத்தில் இறந்து விட்டாள் என்றும் அதற்கு என் அப்பா தான் அந்த செலவுகள் செய்தார். ஆனால் அந்த சமயம் ரகுவுக்கு டபிள் நிமோனியா என்ற ஜுரம் வந்ததாம். உடனே எனக்கு லட்டர் வந்தது.
என்ன செய்வது. குழந்தைகளுக்கு சமையல் செய்து விட்டு பியூன் பெரியாண்டியிடம் சொல்லிக் குழந்தைகளை நான் வரும் வரையில் கவனிக்கும்படி செய்து விட்டு நான் போகலாம் என்று இருந்த சமயத்தில் புனாவிலிருந்து நான் வருகிறேன், நீங்கள் மதுரை வந்து அழைத்துப்போங்கள் என்று லட்டர் வந்தது. என்ன செய்வது என்று மதுரை வந்து காரைக்குடி பஸ்ஸில் என்னை ஏத்திவிட்டுட்டு புனாவிலிருந்து வருகிறவர்களை அழைத்துக்கொண்டு என் புருஷன் உசிலம்பட்டி போய்விட்டார். நான் நேராக காரைக்குடி போனேன். அங்கு யாரும் இல்லை. உடனே புதுக்கோட்டை போனேன். அம்மா தான் இருந்தாள். ரகுவிற்கு ரொம்ப ஜூரமாக இருந்ததால் என் அக்கா புருஷன் அத்தை காரியங்களை செய்தார். எனக்குக் கவலையாகப் போய்விட்டது. இதில் என்ன என்றால் என் அத்தைக்கு வேறு ஸ்ரீகாரத்தம்பி இருந்தான். அவனைத் தனக்குத் துணையாக ஆத்தில் ஒரு போர்ஷனில் குடியிருக்கச் சொன்னாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை. அத்தை இறந்த சமயத்தில் அவனுடைய அக்கா அத்தை பாத்திரம் எல்லாம் எடுத்துவிட்டாள். திருடு போய்விட்டது என்று எங்களிடம் சொல்லிவிட்டாள். ரகுவிற்கு நல்ல டாக்டர் வந்து பார்த்து நன்றாகத் தேவலை. அங்கு நான் ஒரு மாஸம் இருந்து என் புருஷனை வரும்படி லட்டர் போட்டு அவர் வந்து எல்லாம் நடந்தபிறகு ரகுவை என் அப்பா கொண்டு டிவிஷன் (tuition) வைத்து அடுத்த வருஷம் ஸ்கூலில் சேர்க்கலாம் எங்களுக்கு லட்டர் போட்டார்? நான் உசிலம்பட்டிக்கு வந்தால் என் மைத்துனர் ஆம்படையாள் இருக்கிறாள். வீடுகளை சரியாக கவனிக்காமல் குழந்தைகள் சட்டை எல்லாம் தோய்க்காமலும் இருந்ததது, ஏன் இப்படியிருக்கிறது என்று கேட்டால் எனக்கு ஜூரம் வந்து விட்டது என்று சொல்லி விட்டாள். ஆனால் அவள் குழந்தை உண்டாகி இருக்கே அதனால் மசக்கை வந்து ஜுரம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவள் பத்து நாளில் பூனா போய்விட்டாள். நானும் மற்ற குழந்தைகளுடன் இருந்தேன். அப்படியே அத்தை போய் ஒரு வருஷம் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் என் புருஷனுக்கு சப்ரிஜிஸ்ட்ரார் பெரோமோஷன் பேரில் திருநெல்வேலி மாத்தியிருந்தார்கள். என் புருஷன் என்ன செய்வது என்று கவலைப் பட்டார். நான் என் அப்பாவிற்கு லட்டர் போட்டேன். மாப்பிள்ளையை திருநெல்வேலி மாத்தல் ஆகியிருக்கிறது என்ன செய்வது என்று கவலைப்படுகிறார். குழந்தைகள் வேறு படிக்கவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று லட்டர் போட்டேன். அவர் லட்டர் பார்த்தவுடன் என் அப்பா, நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரைக்குடி வந்து விடு. உன் புருஷன் திருநெல்வேலி போய் வேலை பார்க்கட்டும்? புதுக்கோட்டையில் பெரிய வீட்டில் குடியிருப்பவர்களை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறேன். அவர் காலி செய்தவுடன் குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டும் வீட்டையும் நிலத்தையும் கவனிக்கலாம். முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்78 ...
77. கணவனின் சகோதரனின் மனைவி.
78. இது தான், ஏழையோ, பணக்காரனோ, பிராமண குடும்பங்களின் தாரகமந்திரமாக இருந்தது. இந்த இலக்கை அடைவது, பல இன்னல்களுக்கு நடுவே, அவர்களுக்கு வேள்வியாக அமைந்தது.
(‘படிப்பு தான் முக்யம்’)
No comments:
Post a Comment