Sunday, April 28, 2013

அம்பா! நீ இரங்கலாகாதா?


அம்பா! நீ இரங்கலாகாதா?
Innamburan Innamburan Fri, Sep 28, 2012 at 7:24 AM

அம்பா! நீ இரங்கலாகாதா?


*
1941: ஒரு நாள் அதிகாலை. கும்பகோணம் ஐயங்கார் தெரு. மேற்கு மூலையில் சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளி. கிழக்கு மூலையில் கறுப்பு ராமாஞ்சு வீடு, அண்ணா பட்டு ஸ்வாமிகளுடன்.  அவர் தான் பிரபல வைணவ சான்றோன் வைகுண்டவாசி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். என் அப்பாவுக்கு மாப்பிள்ளைத்தோழன், அவர் கல்யாணத்தின்போது. எங்கள் குடும்பத்திற்கு ஆச்சார்யன். அருகாமையில் இருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி பகவத்பாதாள் ‘பெரியவா‘ சந்திரசேகரசரஸ்வதி மகானின் தூதுவர், அம்பேத்காரிடம். தெருவின் மத்யபாகத்தில் தான் சிவப்பு ராமாஞ்சு வீடு. அவர் தான் வைணவ சான்றோன் வைகுண்டவாசி ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ராமானுஜ தாத்தாச்சாரியார். சாக்ஷாத் என் வேத அத்தை ஆத்துக்காரர். நாலு வேதம் அத்யனனம் பண்ணவர். கரதலையாக ஒப்பிப்பார், மனசு இருந்தால். எனக்கு ‘பழேத்து நாமத்தின்‘ அருமையை உணர்த்தியவர். சில காலம் முன்பு அவரது புத்திரர்கள் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடினார்கள். அவர் தான் இந்த பாமர கீர்த்தியின் கதாநாயகனின் தோப்பனார். இரண்டு ராமாஞ்சுவும் காஞ்சி காமகோடி மடத்துக்கு வாடிக்கையாக போய் வருவார்கள். 
நம் கதாநாயகன், குளிச்சி,கிளிச்சுப்பிட்டு, அழகிய திருநாமத்துடன், சந்தியாவந்தனம் எல்லாம் செய்து விட்டு, கதிரவன் ‘இளநீர்’  கதிர் விடும்போதே, ஓடி விடுவான். சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளிக்கு, ரகுவீரகத்யம் கற்றுக்கொள்ள. ஆத்துக்கு வந்து அப்பாவிடம் சந்தஸுடன் ஒப்பிக்கவேண்டும். மயில் சிலிர்த்துக்கொள்ளுமே, அந்த மாதிரி பீற்றிக்கொள்வான், மற்றவர்கள் கேட்டால். எனக்கு பொறாமையாக இருக்கும். எனக்குத்தான் ஸத்ருக்ன கத்யம் கூட தெரியாதே. ஒரு நாள் நானும் திண்ணைப்பள்ளிக்குப் போனேன், இவன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று. சம்பத்து மாமா ‘நீ வரக்கூடாது. உங்கப்பன் ஏன் உனக்கு பூணல் போடவில்லை’ என்று கேட்க, நான் ‘நீங்க தான் போட்டுவிடுங்கோளேன்’ என்று சொல்லப்போய், சிவப்பு ராமாஞ்சுக்கு ரொம்ப திருப்தி. ஆனால், என்னை கோவிச்சிண்டார், அத்தை கிளுகிளுக்க. அத்தைக்கு எல்லாமே கேலி. அதான் பிள்ளையாண்டானுக்கும் வந்துடுத்து. அக்கா ராஜம்மா கல்யாணத்தின் போது தான் இவனுக்கு பூணுல் போட்டார்கள். மறுநாள் காலையில் அத்திம்பேர் அவனை அக்னிசந்தானம் பண்ணணும் வாடான்னு கூப்டறார். அவன் வாயை பொத்திண்டு அழறான்! பூணலை காணும்! என் தாத்தா இன்னம்பூர் பட்டாமணியம் ராஜம் அலையஸ் ஸெளந்தரராஜ ஐயங்கார் சமயசஞ்சீவி. டக் என்று தன் பூணலை கழற்றி அவனுக்கு அணிவித்து பேரனை உய்வித்தார். தாத்தாவைப்போல பேரன்!
*
1945: நன்னா பாடுவான், கீ கொடுத்தமாதிரி. கொஞ்சம் ஙொண ஙொண என்று மூக்கால் பாடினாலும். ஆலாபனையெல்லாம் பிரமாதம். பிடித்த கீர்த்தனை: அம்பா! நீ இரங்கலாகாதா? இப்போ எனக்கு பொறாமை ஜாஸ்தி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் எட்டாம் வாய்பாட்டை முணமுணப்பது போல் ‘பனை மரமே! பனை மரமே!  ஏன் வளர்ந்தாய் பனைமரமே?’ என்ற ஒப்புவித்தல். அவன் பாடினால் ரசிப்பார்கள். நான் பாடினால் சிரிப்பார்கள். அப்ப வந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இன்னும் போகவில்லை. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ்ஸுக்கு இன்னொரு பிரமேயம். எனக்கு இரண்டுங்கெட்டான் வயசு. அவனுக்கு அரும்பு மீசை பருவம். ரகசியமாக வசீகர கலை என்ற புத்தகம் படிப்பான். கொஞ்சம் சொல்லுவான். ரொம்ப மறைச்சுடுவான். எப்போ பார்த்தாலும் பொண்டுகளை பற்றித்தான் பேச்சு. பொறாமையாக இருக்கும்.
*
1951: நான் தர்மமிகு சென்னையில் பட்டணப்பிரவேசம் செய்த வருடம். அந்த அரிய நிகழ்வுக்கு அவன் தான் சர்வாதிகாரி. ஒரு தடவை மின் தமிழில் எழுதியிருந்தேன். இப்போ அதை காணோம். ஒரு டப்பா வண்டியை இரவல் வாங்கிக்கொண்டு, எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்தான். என்னை நிழல் மனிதனாக வைத்துக்கொண்டு, ஸ்டோன் நைல் படவாகினியை அடக்கி வைத்தான். நாளாவட்டத்தில் சென்னையின் எல்லா பரிமாணங்களையும் எனக்கு புரியவைத்த புண்ணியம் அவனை சார்ந்தது. அதான், இப்போ தகரியமா லண்டன் உலா வர முடிகிறது. ஒரு மூன்று வருடங்களில், ‘செல்ஃப் இல்யூமினேஷன்’ (சுயம்பிரகாசம் மாமா நடத்தியது.) தட்டச்சு நிலையத்தில், இவன் தயவால் பரிச்சியமான பெண்கள் எல்லாருடைய பெயர்களும், அந்தக்காலத்து முகாரவிந்தங்களும், பசுமையாக நினைவில் உள்ளன. இதையெல்லாம் கண்டு வியந்த என் தந்தை அவனுக்கு ‘ஜகதலபிரதாபன்’ என்று நாமகரணம் செய்தார். 
*
1955: என் திருமணத்தின் போது, இவன் அடித்த லூட்டியை பார்த்த பெண்ணை பெற்ற ஐயங்கார் மாமிகள் எல்லாரும் இவனை வளைத்துப்போட பார்த்தார்கள்; பெண்களும் தான். பிற்காலம் கெலித்தது பட்டு. இவன் கல்யாணம் பிரமாதம். சமையலுக்கு வந்தவர்கள் சாமான்யமாக கிடைக்காத அஸ்கா சர்க்கரையை அமுக்க, அதை எஜமானி அம்மாள் பிடிக்க, அவர்கள் ஸ்ட்றைக் செய்ய, வீட்டு பெண்மணிகளே அருமையாக சமைத்து விருந்தோம்பினார்கள். கோமளவல்லி & ஶ்ரீநிவாஸன் வயலின் கச்சேரி.
*
1986: நான் அஹமதாபாத் நகருக்கு மாற்றலாகி வந்த போது, அவன் அங்கிருந்தான். நளபாகன். அவன் எங்களுக்கு நல்வரவு கூறி, ஒரு நாள் செய்து அளித்த அக்கார வடிசல் இன்றும் இனிக்கிறது. என் பெண் சொல்றமாதிரி,’ நெய் பெய்து முழங்கை வழி வார...’
*
1994: அவனுடைய பையர் ஶ்ரீனிவாஸனுக்கும் ஶ்ரீமதிக்கும் விவாகம் 20 05 1994. அந்த நன்னாளன்று அவன் கொடுத்த வடூவூர் ராமனின் உத்ஸவ கோல சித்திரம் இன்று போர்ட்ஸ்மத் பூஜை அறையில்.
*
2009: அவனுடைய சதாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். ‘வாயை மூடு. கொன்னுப்பிடுவேன்’ என்றான். ஏனென்றால், ஒத்தரை ஒத்தர் ப்ளாக்மைல் செய்வது தொன்று தொட்டு வழக்கம். அத்தனை பயம், அவனுக்கு.
1933லிருந்து நாங்கள் சேக்காளிகள். உறவை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எங்கள் இரு குடும்பங்களும் நகமும், சதையுமாக இருந்தன. உற்ற துணை என்றால், அவனுக்கு நான்; எனக்கு அவன். எத்தனை சுகதுக்கங்களை பகிர்ந்து ஆறுதல் கண்டிருக்கிறோம். ஓடோடி வந்து உதவியிருக்கிறோம். பிரச்னை என்றால் ஆலோசனைக்கு அவன் எனக்கு;நான் அவனுக்கு. இத்தனைக்கும் எங்கள் வாழ்வியல் அலை வரிசைகள் வேறு வேறு. மனோபாவமோ ஒன்று.
***
2012: இன்று கிடைத்த செய்தி. 25 09 2012 அன்று கண்ணன் என்ற ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ரங்காச்சாரியார் ஆச்சார்யன் திருவடிகளை அடைந்தார். சாதம் அளிஞ்சு போனமாதிரி, மனசு குழம்பிக்கிடக்கிறது. வாழ்க்கையின் பல தளங்களை, இன்பமும், துன்பமுமாக, சுகமும், துக்கமுமாக அனுபவித்து, நீண்ட நாள் வாழ்ந்து மூப்பு அடைந்த பின் தான் அத்தான் கண்ணன் மறைந்தான். ஆனாலும் என் துக்கம் தாங்கொண்ணா துக்கம் தான். அவனுடைய குடும்பத்திடம் உபசாரம் கேட்பதை விட வேறு ஒன்றும் வெளிப்படையாக செய்ய இயலவில்லை.
அவனுடைய ஆத்மா சாந்தியடைக என்று மனதார வேண்டிக்கொண்டாலும், அது சம்பிரதாயமாக படுகிறது.
இன்னம்பூரான்
27 09 2012
பி.கு. இது முழுதும் நிஜம். கற்பனை கிஞ்சித்தும் இல்லை. 


காமேஷ் Fri, Sep 28, 2012 at 7:30 AM

பாவம் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். புகைப்படம் இல்லியோ ?

1930, 1940களில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எப்படி ஞாபகத்தில் வச்சிருக்கீங்க இன்னபூரானாரே ?

 

coral shree Fri, Sep 28, 2012 at 7:34 AM

அன்பின்ன் இ ஐயா,

உங்களுடைய நினைவாற்றலும், விவரிக்கும் நடையும் அபாரம். தங்களுடைய ஆத்மார்த்த இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்தம் குடுமபத்தினருக்கு மன அமைதியை ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவளா



                                                              
            *    
வருத்தம்தான்.. முடிவு இப்படியாக இருக்கலாகுமோ என முதலிலேயே ஒரு கணம்
எதிர்பார்த்ததை இங்கே சொல்லிவிடுகிறேன். முதியவர்தானே என்று ஒரு போதும்
தோன்றவில்லை.. ஏனெனில் நினைவுகள் எப்போதுமே பசுமையான இளமைதானே.. உங்களைப்
போன்றோரின் அன்பு கிடைத்திருக்கும் பேறு பெற்றிருக்கும்போது உங்கள்
அத்தானின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்..

திவாகர்


amaithi cchaaral Fri, Sep 28, 2012 at 7:54 AM

 நினைவுகளால் நம் உயிருடன் இரண்டறக் கலந்தவர்கள் பிரியும்போது, நம் உயிரைப் பிய்த்துக்கொண்டு போகும் துயரம் தாளமுடியாததுதான். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

உங்கள் நினைவாற்றல் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கும் ஒன்றி இ. ஐயா,

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்
[Quoted text hidden]

--

 

amaithi cchaaral 
உங்கள் பகிர்வில் ஒன்றி விட்டதால் ஒன்று என்பது திரிந்து விட்டது. மன்னிக்கவும்.


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, Sep 28, 2012 at 9:45 AM

நெகிழவைக்கும் நட்பின் நெருக்கம்  உங்களுடையது.  உங்கள் கண்ணன் கொடுத்து வைத்தவர்.  உங்களைப் போன்ற நண்பர்கள் கிட்டியமைக்கு.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.  உங்கள் துயரத்தில் பங்கேற்கிறேன்.

உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.  காலம் பற்றி.

வருத்தங்களுடன்

பென்

-----------------------------------------------------------------------------------------

 

Granny Visalam Fri, Sep 28, 2012 at 9:47 AM

அன்பு இன்னம்பூரான்   ஜி    முதல் முக்கால்  பகுதியில்   உங்கள் எழுத்து
என் மனதைக்கவர்ந்தது

கடைசிப்பகுதியில்  என் மனமே கனத்தது .  உண்மைதான்  பழையகால நட்பு  நட்புதான் .
அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்

Tn Elango Fri, Sep 28, 2012 at 10:10 AM

அன்புள்ள இ ஐயா,

இந்த சோகத்திலும் , இவ்வளவு கோர்வையாக, ரசமாக எப்படி எழுத முடிகிறது?

உங்கள் சோகம் என்னையும் தாக்குகிறது.

நட்பின் பிரிவின் சோகத்தை அதிகமாக உணர்ந்தவன், உணர்பவன் நான்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

இளங்கோ


 

Tthamizth Tthenee Fri, Sep 28, 2012 at 10:31 AM

நண்பனாய் மந்திரியாய் பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்  கண்ணன்
கண்ணன் ஆன்மா  சாந்தியடைவதாக
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

meena muthu Fri, Sep 28, 2012 at 10:39 AM

தங்களின் வேதனை ... கண்ணீராய் திரள்கிறது

கனத்துப்போன மனது ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

Innamburan Innamburan Fri, Sep 28, 2012 at 2:00 PM

இதோ கண்ணனுடைய ஃபோட்டோ. நீங்கள் எல்லாரும் இத்தனை வாத்ஸல்யத்துடன் பேசினதால், விட்டுப்போன சிலவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன். என் பையனிடம் சொன்னேன். எல்லா குடும்பநிகழ்வுகளையும் ‘lively’செய்யும் மாமா என்றான். மாட்டுப்பெண்ணிடம் சொன்னேன். ‘என் கல்யாணத்தின் போது அப்படி ஓடியாடி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார் என்றாள். தமிழ்த்தேனீ பேசும் கண்ணன் தான், இவன். இவனுடைய வாழ்க்கை எதிர் நீச்சல் சுயமுன்னேற்றத்திற்கு உதாரணம். பீ ஈ எம் எல் நிறுவனத்தில் அடி மட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவன் அந்த நிறுவனத்தின் ஸ்டோர்ஸ் இலாக்காவில் நிபுணராக விளங்கினான். ஓய்வு பெற்ற பின், பல வருடங்கள் அகில இந்திய தேசாந்திரியாக அலைந்து, திரிந்து வேலை பார்த்தான். சென்ற விடமெல்லாம் நல்ல பெயர். ஆனால், கேலிக்கும், கூத்துக்கும், லூட்டிக்கும் பஞ்சமில்லை. ஃபோட்டோ மூப்பின் கொடுமையை பிரதி பலிக்கிறது. அவனுடைய பெர்சனாலிட்டியை அல்ல.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

KANNA MAAMA PHOTO.jpg
36K

Tthamizth Tthenee Fri, Sep 28, 2012 at 2:29 PM

பழுத்த பழம்!

அன்புடன்
தமிழ்த்தேனீ

meena muthu Fri, Sep 28, 2012 at 3:53 PM


ஆம் பழுத்தபழமாக இவரில் அந்தப்பெருமாளை பார்க்கிறேன்! 

2012/9/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஃபோட்டோ மூப்பின் கொடுமையை பிரதி பலிக்கிறது. அவனுடைய பெர்சனாலிட்டியை அல்ல.

--

 

rajam Fri, Sep 28, 2012 at 4:18 PM

மிக அன்யோன்யமானவர்களை இழப்பது மிகவும் கொடுமை. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


Subashini Tremmel Fri, Sep 28, 2012 at 6:47 PM

உங்கள் துக்கத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன். 
அவரது ஆன்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள்.

சுபா

shylaja Sat, Sep 29, 2012 at 5:11 AM

உங்களின் நினைவுப்பெட்டகமிருந்து  அத்தனையும்  எடுத்துக்கொடுத்து விட்டீர்கள்  இ சார். ஈடு செய்யமுடியாத இழப்பு..ஆச்சார்யன் திருவடியை அடைந்த அன்னாரின் பிரிவைத் தாங்கும் சக்தியை  இறைவன் தங்களுக்கு அளிக்க  வேண்டும். நேற்று  என் கணவரின்  நண்பரின் தந்தை  (75வயதிருக்கும்) இறந்துவிட்டார். மாலை  தகனம் செய்கிற  வரைக்கும் கல்போல  இருந்த நண்பர் அப்புறம்  வெடித்து அழுதார் பாருங்கள், யாரும் சமாதானம் செய்ய நெருங்கவில்லை... அழட்டும் அப்போது  தான் நல்லது என்றார் ஒரு பெரியவர்.  உங்க நண்பரின் பிரிவையும் இந்த  இடுகையில் வெளியிட்டதால்  சரியாகலாம். மனதை  தேற்றிக்கொள்ளுங்கள் இ சார்.
 

Innamburan Innamburan Sat, Sep 29, 2012 at 6:25 AM

வாஸ்தவம், ஷைலஜா. அன்றொரு நாள் 
'அப்பா எனக்கு ‘Home They Brought Her Warrior Dead’ [Alfred Tennyson], ‘Ye know, We stormed Ratisbon’ [Robert Southey], ‘We are Seven’ [Oliver Goldsmith] சொல்லிக்கொடுத்து இருக்கிறார். முடித்தது இல்லை. உணர்ச்சி வசப்படுவார். '
என்று எழுதியது ஞாபகம் வருகிறது.இன்னம்பூரான்


sk natarajan 
அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.






2012/9/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அம்பா! நீ இரங்கலாகாதா?

_______________________________________________________
இந்த இழையை சுபம் அன்று சபையில் படித்த கண்ணனின் மகனும், மருமாளும் தேம்பித்தேம்பி அழுதனராம். அதுவே ஆறுதலாக அமைந்ததாம்.
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHsj46RpQH0__pGCG6kU2iYEscHkmbSw7rTMtoHPTyJoNw1G6i1xpkFMLESeCvfOamjGkBmtn8KYd3Pm6zZvzu5JZCgBtjtGJEjczxdEFt8-rdU4By52jijjec3Ul_wgqeGs57uEwryG0/s1600/amma.JPG

இன்னம்பூரான்
28 04 2013 

 

No comments:

Post a Comment