Tuesday, April 30, 2013

அன்றொரு நாள்: மே 1: தையா! தக்கத்தையா!


அன்றொரு நாள்: மே 1: தையா! தக்கத்தையா!

Innamburan Innamburan Wed, May 2, 2012 at 11:42 PM


அன்றொரு நாள்: மே 1:
தையா! தக்கத்தையா!

சில சமயங்களில்,திட்டமிட்டதை, கையோடு கையாக, செயல் படுத்த முடிவதில்லை. மே 1 தினத்திற்கான இழையின் உசாத்துணை மே 2, 2012 அன்று தான் வெளிவந்தது. அதற்குள், மே தினம் சம்பந்தமான இழைகளில் தோற்றம், எதிர்பார்த்தது தான். அவற்றின் திசை மாற்ற எனக்கு விருப்பமில்லை. தவிர, இந்தத்தொடர் அன்றாடம் எழுதுவதற்கு, அன்றாடம் படிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, பிற்காலம் அந்த வரலாற்று சம்பந்தமான இழைகளுக்கு பயன் இருக்கும் என்று பலர் தனிமடல்களில் அறிவுரைக்கிறார்கள். மேலும், இது என் மனசந்துஷ்டிக்காகவும் எழுதப்படுவதும் தெரிந்த விஷயம். இது பின்னணி.

இந்த மே தின விழாவின் வரலாறு தொன்மையானது. பல மரபுகள். இருந்தாலும் தொழிலாளர்களுடன் பெரிதும் இணைத்துப் பேசப்படும் விழா தான் இன்றைய தினத்தை அஞ்சலி செலுத்தும் பொருட்டு அமைந்துள்ளது. அந்த வகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஷிகாகோ நகரின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான், இந்த மரபின் துவக்கம். அது பற்றி அந்த நகரத்தின் ஆதாரபூர்வமான வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பிறகு,‘பொதுமக்களின் வைரிகளான கடும்பட்டினி தொழிலாளர்கள்’, ‘அவர்களின் வயிற்றில் அடித்து செழித்து வாழும் செல்வந்தர்களாகிய சான்றோர்கள்’, ‘ஏழையை பிழிந்து, கரும்புச்சக்கையை மாசுபட தரணியில் எறிந்து, அஸ்கா சீனி உண்ணும் தியாகச்செம்மல்கள்’ என்றெல்லாம் கருத்து பதியலாம்.

இங்கிலாந்தின் தொழிற்வளர்ச்சிப்புரட்சி செல்வந்தர்களை மெகா செல்வந்தர்களாக ஆக்கும் அரிய பணிக்கு, குழந்தைகளையும், பெண்களையும், ஏழைபாழைகளையும் தினந்தோறும் பல மணி நேரம் கடுமையான வேலை செய்யச்சொல்லி, அவர்களை பலியிட்டது வரலாறு. அந்த நாடு 1875ம் வருடத்திற்கு முன்பே சுதாரித்துக்கொண்டது. அமெரிக்காவில் அப்படி இல்லை. 18 மணி நேரவேலை வாங்குவதெல்லாம் அத்துப்படி. ஜாஸ்தி போனால், ஏழைகள் அல்பாயுசில் செத்துப்போகும் அவ்வளவு தானே.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஏப்ரல் 1886 கடைசியில், இந்த அரைப்பட்டினிகள் ஒற்றுமை நாடினர். சலசலப்பு. மே மாதம் முதல் தேதி அன்றிலிருந்து, 35 ஆயிரம் தொழிலாளர்கள், வேலை செய்வதை உதறி, ஊர்வலம் வந்தனர், கிட்டத்தட்ட 19 தடவை, ஷிகாகோ மாநகரில். அவர்கள் தினசரி உழைப்புக்கு 8 மணி நேரம் மட்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் ஆயிரக்கணக்கானவர் கலந்து கொண்டனர். மக்கார்மிக் தொழிற்சாலை அருகில், பல தடவை வன்முறை செய்த போலீஸ் அரக்கர்கள் சில முறை சுட்டனர். இரண்டு ஏழைகள் மாண்டனர். கிளர்ச்சி செய்பவர்களுக்கு சூடு ஏற ஏற அத்தரப்பிலும் வன்முறை பிரச்சாரம் வலுத்தது. ஆனாலும், அமைதி போராட்டம். மேயர் ஹாரிசன் கூட போலீசை பொறுக்கச்சொன்னார். ஆனால், இன்ஸ்பெக்டர் ஜான் போன்ஃபீல்ட் தலைமையில் 176 போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கலைய சொல்லி ஆணையிட்டனர். இந்த கலவரத்திடையே, கூட்டத்திலிருந்து, யாரோ எறிந்த குண்டினால் தாக்கப்பட்டு, எட்டு அதிகாரிகள் மாண்டனர். அறுபது பேருக்குக் காயம். வெகுண்டெழுந்த போலீஸ் வெறித்தனமாக சுட்டுத்தள்ளினர். கூட்டத்தில் இறந்தவர்கள்/காயப்பட்டவர்கள் ஓலம் (ஜாலியன்வாலா பாக் போல). எத்தனை என்று கணக்கிடமுடியவில்லை. வணிகம், தொழிலதிபர்கள், இதழ்கள் எல்லாம், போலீஸுக்கு பயந்து, நடந்ததைக் கூறாமல், பொய்யும், புனைசுருட்டுமாக, தொழிலாளர்களை குற்றம் சாட்டினர். வழக்கும் போடப்பட்டது. ஆனால், குண்டு யார் எறிந்தது என்பது இன்று வரை தெரியாது. இன்று வரை அமெரிக்க நீதித்துறையின் கரும்புள்ளியாகக் கருதப்படும், இந்த சட்டத்தை சட்டை செய்யாத அழிச்சாட்டிய தீர்ப்பின் படி, ஏழு பேர்களுக்குத் தூக்குதண்டனை. அமெரிக்க மக்கள் கொதித்து எழுந்தனர். அப்பீல்கள் போடப்பட்டும், நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் தற்கொலை. லக்ஷக்கணக்கான மக்கள் இந்த ஐந்து ‘குற்றவாளிகளின்’ மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பாக்கி மூன்று பேர்களும், சாக்ஷியம் இல்லை, வழக்கு முறைகேடாக நடந்தது என்று சொல்லி, கவர்னர் ஜான் பீட்டர் அல்ட்கெட் அவர்களால், 1893ல் விடுதலை செய்யப்பட்டனர்.  இதையெல்லாம் விட்டு விட்டு...
இதுவும் போதாது என்றால், இணைத்திருக்கும் மே 2, 2012 தேதியிட்ட வீடியோ கண்டு, தெரிந்து கொள்ளலாம்.
இன்னம்பூரான்
01/02/மே/2012
Inline image 1

உசாத்துணை:
History of May Day in Chicago, U.S.

Subashini Tremmel Thu, May 3, 2012 at 5:44 PM


எப்போதும் போல.. மேலும் ஒரு சிறந்த அன்றொரு நாள் பதிவு.

சுபா

No comments:

Post a Comment