Sunday, April 28, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு!


அன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு!
Innamburan Innamburan Tue, May 1, 2012 at 2:08 AM


அன்றொரு நாள்: ஏப்ரல் 29:
கிழக்கில் ஒரு மேற்கு!
அசையும், ஓசையும், இசையும் அபூர்வ சஹோதரிகள். யார் எங்கே எதை அருமையாக இசைத்தாலும், எம் கண் முன்னே தோன்றுவது தொன்மை வாய்ந்த நாடக மேடை, திரைகள், கச்சிதமாக அளவெடுத்து அழகுறை அமைத்த அந்த அரங்கத்தில் அகவை பனிரெண்டே ஆகிய மாதவியின் நடனம், பாட்டு, ஆசான்கள், இலக்கணம், மரபு. சபையே மகுடிக்கு மயங்கிய நாகமாக சுருண்டு கிடந்தது. இளங்கோ அடிகளார் இசையை ரசித்த விதத்தை இங்கே காணலாம்.
யாழும், குழலும், சீரும், மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
=தேசிகத்திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-
வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்.—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)

அந்த ‘அசையா மரபின் இசையோன்’ ஒருவரையும், அவருடைய குழுவையும் சைண்ட் லூயிஸ் இசை அரங்கில் கண்டு, அவர்கள் அளித்த இசை விருந்தை பருகியபோது, நினைவலைகள் ஒரு நிமிடம் இரண்டாம் ஆயிரம் ஆண்டுகள் பின் சென்று, ‘நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம், சந்தம் என்றெல்லாம் மனமுழுதிலும் அலை பாய்ந்தன, பீத்தோவன் என்ற இசை ஆசானின் கவின் நிறைந்த அரிதான படைப்புகளும், உள் புகுந்து, அலைகளை சற்றே சலசலத்தன. அதா அன்று. மற்றொரு நினைவலையும் தனிப்பாட்டை ஒன்றில். கடலலை ஓய்ந்தாலும் நினைவலை ஓய்வதில்லை அல்லவா! இந்த தரணி தனில் நிரந்தரமானவை, இந்த நினைவலைகள் தான். என்றென்றும் சுழற்சியில் இருப்பவை அவை தான். அதா அன்று. மூன்றாவது நினைவலையும் இன்னொரு தனிப்பாட்டையில்: அன்றொருநாள்: மார்ச் 24 ‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:):http://heritagewiki.org/index.php?title=அன்றொருநாள்:_மார்ச்_24
மும்பை ஷண்முகானந்த சபா. 1984/85. ஒரு கச்சேரி. சில மாதங்கள் முன்னாலேயே நுழைவுச்சீட்டு வாங்கி, இடம் பதிவு செய்தாகி விட்டது. நாங்கள் வசித்த கொலாபா பகுதியிலிருந்து வெகு தூரம். போக்குவரத்து நெரிசல் தாங்கமுடியவில்லை. ஒரு பாடாக போய்ச்சேர்ந்தோம். சபை களை கட்டி இருந்தது. அன்றைய ‘அசையா மரபின் இசையோன்’ கனகச்சித்தமான மேற்கத்திய இசை அரங்கத்து ஆடை உடை, பாவனைகளுடன், பொலிவுடன் வந்து நின்று, தலை குனிந்து, கட்டியம் கூறி, சபையோருக்கு பவ்யமாக வணக்கம் தெரிவித்த போது, யாவரும் ஒரு சேர, நின்று கொண்டு ஆரவாரத்துடன் கை கொட்டியது கண் கொள்ளாக்காட்சி. நிகழ்ச்சிகள் தொடங்கின. யான் உள்பட பெரும்பாலோருக்கு மேற்கத்திய இசை பரிச்சயம் மிகக்குறைவு என்றாலும், அடுத்த வந்த ஒரு இஸ்ரேலிய பெண்ணழகி, இசையோனின் நுட்பமாக கட்டளைத்தொகைக்கிணங்க, கிட்டத்தட்ட  அரை மணி நேரம். வயலின் வாசித்த போது, நிசப்தம். பிறகு எல்லாருமே ( இருபது வயலின், பத்து குழல், பலவகை பேரிகை, டமாரம், முரசு, மத்தளம், ராக்ஷஸ குழாய் வாத்தியங்கள்) ஒலி கூட்டின. எல்லரும் ஒரே மாதிரியான உடையா? ஜான் யாரு, பீட்டர் யாரு என்றும், லைஸா யாரு, மார்கெரட் யாரு என்று இனம் காணமுடியவில்லை.
நீங்களே பாருங்கள். ஒரு மாஹ்லர் சாகித்யம்: 1984. இசை பொருத்தம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்: ‘...யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைகள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தி’ அல்லவா அமைந்திருந்தது. பிறகு ஒரு மென்மையான ஷுபெர்ட் ஸாகித்யம் என்று நினைவு: ‘... வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வேற்றுச்சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையில்லா பாடல் ஒன்று...’. சுருங்கச்சொல்லின், சிலப்பதிகாரம் வகுத்த இசை மரபையும், இலக்கணத்தையும் ஜுபின் மேஹ்தா அவர்கள், செவிக்குணவாகவும், கண்ணுக்கு இனிய காட்சியாகவும், மனத்துக்கு நிறைவாகவும், ஒரு 180 நிமிட நிகழ்வில், அவைக்கு விருந்து படைத்தார். தெரிந்தவர்கள் அனுபவித்தார்கள். தெரியாதவர்கள், சற்றும் குறையாமல், அனுபவித்தார்கள். கச்சேரி முடிந்தவுடன், வானளாவிய கரகோஷம். 
கொலாபா நோக்கி அவர்களின் வண்டித்தொடரும், எமது காரும்  விரைவாக பயணித்துச் செல்ல, தாஜ் ஹோட்டலை அடைந்தோம். ஜுபின் மேஹ்தாவுடன் கைலாகு. மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அப்போது கிடைத்தத் திடுக்கிடும் செய்தி: அவர்களுக்கு இந்த நிகழ்வின் போது குண்டு வெடித்து, குழுவையும், சபையோரையும் கொல்லப்போவதாக மிரட்டல் வந்திருந்ததாம். போலீஸ் பாதுகாப்பு இருந்திருந்தாலும், இந்த மிரட்டலால், அஞ்சி, நடுங்கி, ஒடுங்காமல், இசை நிகழ்வை நடத்தியதற்கு என்ன சன்மானம் கொடுக்கலாம்!
மும்பை மைந்தரான ஜுபின் மேஹ்த்தா டாக்டராகி இருக்க வேண்டும். ஆனால், 18 வயதிலேயே, வியன்னாவில் மேற்கத்திய சங்கீதம் படிக்கப்போய்விட்டார். அதற்கு பிறகு ஏறுமுகம் தான். இசை உலகில் அவருடைய ஆளுமை, திறன், ஆற்றல், புகழ், பதவிகள், வருமானம் எல்லாம் ஏணியின் உச்சியில். இன்று (29 04 1936) அவருடைய பிறந்த நாள். அதான்... இன்னும் சொல்ல எத்தனை விஷயங்கள் உளன!
ஒரு துணுக் செய்தி: அவர் ஏழையாகி விட்டார். அவருடைய நிதி ஆலோசகரின் அயோக்கியத்தனத்தால், எல்லாவற்றையும் இழந்தார். பிறகு, சம்பாதித்தது தான்.
அதே மாதிரி தன் சொத்துப்பத்துக்களை இழந்த மற்றொரு இந்திய பிரமுகர்?
கேட்டால் சொல்லப்படும்.
இன்னம்பூரான்
29/30 - 04 2012
Inline image 1

உசாத்துணை:


செல்வன் Tue, May 1, 2012 at 2:11 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அதே மாதிரி தன் சொத்துப்பத்துக்களை இழந்த மற்றொரு இந்திய பிரமுகர்?
கேட்டால் சொல்லப்படும்.
தெரியலையே...

--
செல்வன்


Innamburan InnamburanThu, May 3, 2012 at 1:54 AM

ஸர்.சி.வி.ராமன்.

[Quoted text hidden]

No comments:

Post a Comment