அன்றொரு நாள்: நவம்பர் 7.1
அங்கொரு அணுமின்கலம்
மின் தமிழில் கூடங்குளம் அடிபடற மாதிரி தொல்காப்பியம் அடிபடறதில்லை. வாதம்,பிரதிவாதம், விவாதம், விதண்டாவாதம், கலாம், பார்க்’கலாம்’!,ஈ.ஏ.எஸ்.பிரசாத், இத்யாதி. இத்தனைக்கும்,பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விண்களங்களுக்கான பொறியாளர்/ விஞ்ஞானி. பொக்கரான் அணுசக்தி பரிசோதனைக்கும், இவர் வகித்த உயர் விஞ்ஞான பதவிக்கும் இருந்த உறவு சம்பிரதாயமானது மட்டும். நுண்ணிய ஆய்வு சம்பந்தமன்று. டா. சி.வி.ராமனுடைய சக ஆய்வாளரும், மத்திய ராணுவ அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த டா. பகவந்தம் அவர்களிடம் உதவியாளராக (rapporteur) இருந்தவன் என்பதால், ஏதோ கொஞ்சம் இந்த உறவுகளை பற்றி தெரியும். என்ன தான் புகழ் வாய்ந்த புற்றுநோய் சர்ஜனாக இருந்தாலும், அவரை பிரசவம் பார்க்க...! நமக்கேன் வம்பு? வரலாற்றை உரைப்பதுடன் சரி.
அன்றொரு நாள், நவம்பர் 8, 1957ல், பிரிட்டனின் கம்பர்லாந்து பகுதியில் உள்ள விண்ட்ஸ்கேல் அணு-மின் ஆலை விபத்து & தீ பற்றிய விசாரணை அறிக்கை வெளி வந்தது. சாராம்சம்: கருவிகள் மக்கார் & திறனற்ற நிர்வாகம் & ஊழியர்கள் செய்த தவறுகள். கேட்கும் போதே, குலை நடுங்குகிறது, 55 வருடங்களான பிறகும். அக்டோபர் 10, 1957 அன்று வழக்கமான மராமத்து நடக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஐயோடின்131 என்ற அபாய வாயு, நிர்ணயிக்கமுடியாத அளவு, ஆகாய மண்டலத்தில் தப்பித்தோட, கிலி பரவ, முதலில் பால் வியாபாரம் தடை செய்யப்பட்டது.
நடந்தது என்ன?: விண்ட்ஸ்கேல் அணு-மின் ஆலையில்: விக்னர் ரிலீஸ் என்ற மராமத்துப்பணியின் போது, அன்னீலிங் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூடேற்றத்தின் போது, அளக்கும் கருவிகள் அல்லாடியதால், அதீதசக்தி அதிவிரைவில் வெளியேறியது. அந்த கருவிகளின் திறன் போதாது, இந்த வேலைக்கு. எரிபொருள் உருகியது; அவற்றின் கலங்கள் வெடித்தன; யுரேனியம் பத்திக்கிச்சு. அயோடின் 131 சிம்ணிகள் மூலமாக வெளியேறி, புல்வெளியில் படிந்தது. பசுக்கள் மேய்ந்தன. பாலும், ஆய்வுக்கு பிறகு, தடை செய்யப்பட்டது. ரேடியேஷன் அபாயம் இல்லாதபோது, இந்த தடை பீதியை கிளப்பியது என்ற கருத்தும், அறிக்கையில். மின்சார த்துறைக்கு துணை போகும் அணு சக்தி மின் ஆலைகளின் பாதுகாப்புக்கும், இந்த விபத்துக்கும் தொடர்பில்லை என்ற புரியாத பேச்சு வேறே! மெடிகல் கெளன்சிலும் மக்களின் தேகாரோக்கியத்துக்கு இதனால் பழுதில்லை என்றதாம். எதற்கும் இருக்கட்டும் என்று பிரதமர் மேக்மில்லனும் நாடாளுமன்றத்து அங்கத்தினர்களிடம், இந்த நற்செய்தியை உறுதிபடுத்தினார். அதிகப்படி ஆதாரம் அவருக்குக் கிடைத்ததாக செய்தியில்லை. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை பற்றி ஆலோசனை அளிக்க மூன்று கமிட்டிகளை அமைத்ததையும் அறிவித்தார்.
கடந்த ஏழு வருடங்களாக இந்த ஆலை, யுரேனியத்தை எரிபொருளாகவும், க்ரேஃப்பைட்டை மத்தாகவும், காற்றை சூடு தணிக்கவும் உபயோகித்து, ராணுவத்துக்கு ப்ளூட்டோனியம் கொடுத்து வந்தது. பிரிட்டீஷ் அணுசக்தி நிறுவனத்தின் தலைவரான ஸர் எட்வின் ப்ளெடன் அணுசக்தி மின் கலங்களின் நிர்வாகமும், அங்குள்ள லோக்கல் சமாச்சாரங்கள், நடப்புகள் எல்லாம் ஒருவருக்கொருவருடன் நல்ல புரிதல் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.இவர்கள் புதிதாக என்ன தான் சொன்னார்கள் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
14 வருடங்களுக்கு பிறகு, 1971ல் இந்த மின்களத்தின் நிர்வாகம், பிரிட்டீஷ் அணுசக்தி நிறுவனத்தினிடமிருந்து கழட்டப்பட்டு பிரிட்டீஷ் அணுசக்தி எரிபொருள் மையத்திடம் கொடுக்கப்பட்டு ஸெல்லாஃபீல்ட் என்று நாமகரணம் செய்யப்பட்டது. ரேடியோ-ஆக்டிவ் வேஸ்ட் உற்பத்தியில் உலக ரிக்கார்ட் பெற்று, பெரும்பகுதியை ஐரிஷ் கடலில் கொட்டியது. ‘தோர்ப்’ என்ற புனரபி ஜனன எரிபொருள் ஸ்தலம் (nuclear fuel reprocessing plant) அங்கு 1994ல் பிறந்தது. 1996ல் ஒரு தொழிலாளிக்கு பாதிப்பு ஏற்பட்டபின் ‘மடியில் கை போட்ட வகையில் ("serious and significant" failures in safety) மாபெரும் தவறுகளை ஒப்புக்கொண்ட இந்த மையத்தின் மீது 25,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஐரிஷ் கடல் பெருமளவு மாசுபடுவதால், 2000ல் எதிர்ப்பு வலுத்தது. 2003ல் பிரிட்டனில் இதற்கும் மற்ற 14 தாத்தா அணு மின்சார உற்பத்தி தளங்களுக்கும் ஒரேடியாக இறங்குமுகம். மூடுவிழாக்கள் துரிதம். இந்த ஸெல்லாஃபீல்ட் தான் மாடல். எனினும் 2005ல், நிலக்கரி இல்லையே என்செய்யலாம் என்று ஒரு பொது மேடையில் விவாதம் வேண்டும் என்று அன்றைய லேபர் அரசு சொன்னது. இப்போது கன்ஸெர்வேட்டிவ் அரசு நடக்கிறது.
யார் என்ன சொன்னால் என்ன? பிரச்னை தீரவில்லை. 14 மாதங்களாக அபாயகரமான/ஆனால் அபாயகரமில்லாதா லீக் என்று ஸெல்லாஃபீல்ட் நிர்வாகம் சுற்றி வளைத்து சொன்னது, ஃபெப்ரவரி,2011ல். அப்பாடா! 45 வருடங்களுக்கு பிறகு, கொஞ்சம் எரிபொருளை,இந்த ஸெல்லாஃபீல்ட் நிர்வாகம், ஸெப்டம்பர் 2011ல் மீட்டிருக்கிறது. 2015க்குள் எல்லாவற்றையும் மீட்டு விடுவார்களாம்! அமெரிக்காவில் மார்ச் 28, 1979ல் ஏற்பட்ட Three Mile Island Unit 2 (TMI‑2) nuclear power plant விபத்தின் காரணம்: கருவிகள் மக்கார் & திறனற்ற நிர்வாகம் & ஊழியர்கள் செய்த தவறுகள். ஏப்ரல் 26, 1986 அன்று உக்ரேனில் நடந்த செர்னொபில் அணுசக்தி நிலைய விபத்தின் லீக்குகள் மற்ற நாடுகளில் கூட தென்பட்டது. மிகவும் மோசமான விபத்து. Chernobyl என்ற இதழ் 1986லிருந்து 2004 வரை இந்த விபத்தின் விளைவாக 985,000 புற்று நோய் சாவுகள் என்று கணித்திருக்கிறது. வழக்கமான மராமத்து நடக்கும்போது, பாதுகாப்பு வழிமுறைகளை சோதிக்கும்போது, தீடீரென்று மின்சக்தி அதீதமானது தான் விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஹூம்!
08 11 2011
உசாத்துணை:
Plus many many more.
|
|
No comments:
Post a Comment