அன்றொரு நாள்: நவம்பர் 7
மெடல்கள் குவிந்தன
நவம்பர் 7,1867 & நவம்பர் 7,1888 ஆகிய அன்றொரு நாட்களை, விஞ்ஞானம் என்றென்றும் பொன்னான நாட்களாக போற்றி, விழா எடுக்கவேண்டும். ஐந்து நோபல் மெடல்கள் அந்த தினத்தின் உபயம், விஞ்ஞான உலகத்திற்கு.
- பள்ளிப்படிப்புக்கும் பட்டப்படிப்புக்கும் இடையில் இண்டெர்மீடியட் என்ற ‘இரண்டுங்கெட்டான்’ அல்லது ‘அறிமுகவகுப்பில்’ ஒரு ‘ஒளி படைத்தக்கண்ணினாயின்’ பாமரகீர்த்தி படிக்க நேர்ந்தது. போலந்து மிகவும் பின் தங்கிய நாடு. ஒரு ஏழைப்பெண் நாலாவது வகுப்பு ரயில் பெட்டியில் ( அது இருந்தது, அக்காலம்- கூட்ஸ் வண்டி போல புளிமூட்டை.) பாரிஸ் வந்து சேருகிறாள், விஞ்ஞானம் படிக்க. இத்தனைக்கும் ஒரு புகழ்வாய்ந்த விஞ்ஞானியின் மகள். நவம்பர் 7, 1867ல் பிறந்த மேரி ஸ்க்லோடொவ்ஸ்கா விஞ்ஞானக்கருவிகளுடன் உறவாடிய குழந்தை. அபாரமான படிப்புத்திறன். மாணவ புரட்சி இயக்கத்தின் சேர்ந்ததின் விளைவாக, நாட்டை விட்டு செல்ல நேர்ந்தது. தேசாபிமானத்தை கையோடு எடுத்துச் சென்றவள், பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய சம்க்ஷிப்த சுயவரலாறு: ‘ நான் போலந்தில் பிறந்தேன். பியரி க்யூரியை மணந்தேன். எனக்கு இரண்டு பெண்கள். நான் கடமையாற்றியது, ஃபிரான்சில்.’ ‘எடுத்த பணியை செவ்வனே செய்வதும்’,‘தன்னலத்தை அறவே அகற்றியதும்’ அவருடைய நற்பண்புகள். போலந்தின் பெயரால் தன்னுடைய விஞ்ஞான கண்டுபிடிப்பான எலிமெண்ட்டுக்கு பொலோனியன் என்று நாமம் சூட்டினார். 1929ல் சொந்த மண்ணில் ஒரு விஞ்ஞானக்கூடம் நிறுவி, அமெரிக்க அன்பர்கள் கொடுத்த $ 50,000/- அதற்கு நன்கொடையாகக் கொடுத்தார்.
ஜூலை 5, 1934 அன்று கதிரியக்கத்தின் ஊடே வாழ்நாள் முழுதும் கழித்த பாதிப்பினால் உயிரிழந்த மேடம் க்யூரியும், அவருடைய கணவரும், திருமகளும், அவரது கணவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். மேடம் க்யூரி அதற்கெல்லாம் முன்னால், ஹென்ரி பெக்கரல் என்பவருடன் முதல் நோபல் பரிசு பெற்றவர். அவருக்கு அஞ்சலி செலுத்தி, ந்யூ யார்க் டைம்ஸ் எழுதியது:
“தன்னடக்கமே உருவான இந்த மாதரசியை போல மனிதகுலத்தின் பொது நலனுக்கும், விஞ்ஞான முன்னேற்றத்துக்கும் தொண்டு செய்தவர்கள் யாருமில்லை. அவருடைய அரிய சாதனைகள், பொலோனியமும், ரேடியமும் கண்டுபிடித்தது. இரண்டு நோபல் பரிசுகள் அளிக்கப்பெற்ற இந்த மேதையை, அதிர்ஷ்டமும், அளவு கடந்த செல்வமும் தேடி ஓடோடி வந்தும், அவர் தன் எளிய வாழ்க்கையை தான் நாடினார். விஞ்ஞானத்தின் சிற்றாளாக தன்னை பாவித்துக்கொண்டார். சமுதாயத்தில் விண்மீனாக மிளிர, அவர் விழைந்தது இல்லை. அவரும், அவரது கணவரும் தேர்ந்தெடுத்த பாதை ஒரு உன்னத நிலையே. மேரி க்யூரி விஞ்ஞானத்தின் மர்மங்களை வென்றதை விட,உலக மாந்தர்கள் யாவரின் இதயங்களை வென்றவர் அல்லவா!’
இவரை பற்றியும், குடும்பத்தை பற்றியும் நிறைய சொல்வதற்கு பொருத்தமான ‘அன்றொருநாள்’ வந்து கொண்டே இருப்பதாலும், உசாத்துணையில் குறிப்பிட்ட தமிழ் கட்டுரையில் இவரை பற்றிய முழுமையான விவரங்கள், இன்று வந்திருப்பதாலும், உங்களை அதையும் படிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு, மேடம் க்யூரியை சிரம் தாழ்த்தி வணங்கி, அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.
- இவரு எங்க ஆளு. இந்திய தணிக்கைத்துறையில் அசிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனெரலாக, தன் அண்ணனை போல் (பிற்காலம் அவரை போல் நானும்!) நுழைந்த திரு.வெங்கடராமனை, விஞ்ஞான உலகில் மறு பிறப்பு எடுக்க செய்தவர், ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி என்ற மாமேதை. நவம்பர் 7, 1888 அன்று சுபஜெனனம். ஆண் பிரஜை. இவருடைய அரும்பணி யாதெனில், இந்தியாவுக்கு விஞ்ஞான விழிப்புணர்ச்சி கொடுத்தது. அதை உரமிட்டு, நீர் பாச்சி, பாத்திக் கட்டி, வரப்புயர்த்தி, செழிக்க வைத்தார். இந்திய/பர்மாவின் விஞ்ஞானிகளில் பலர், விக்ரம் சாராபாயை போல், இவரது சிஷ்யகோடிகள். எப்போதும் அவருடைய பேச்சில் நகைச்சுவை இருக்கும். எனக்கு ஸர்.சி.வி.ராமனின் தரிசனம் கிடைத்த போது டா.சாராபாய், இவரும் உங்கள் தணிக்கைத்துறை என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். பதில்: ‘ஓ! ஸெளந்தரராஜன்! அது என் பூர்வாசிரமம். கணக்கு மறந்து போச்சா! நோபல் பணமும் மறைந்து போச்சு!’ ( ஆம். ஒருவர் இவரை ஏமாற்றி அதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.) 1928ல் ஒளிச்சிதறலின் போது, கோணங்களை பொறுத்து கதிர்களின் வீச்சு மாறுவதை பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு, ஒளியும், பொருளும் பரிமாற்றிக்கொள்ளும் சக்தியை பற்றி அறிய, அடித்தளமானது. ‘ராமன் ஒளிச்சிதறல்’, ‘ராமன் எஃப்பெக்ட்’ எனப்படும் இந்த கண்டுபிடிப்புக்களுக்காக, 1930 வருடம் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏற்கனவே, 1929ல் ‘ஸர்’ விருது கொடுத்து அரசு இவரை கெளரவித்தது. 1917ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். 1933ல் இந்தியன் விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர். 1947லிருந்து நவம்பர் 21, 1970 ல் அவருடைய மரணம் வரை, ராமன் ஆய்வுக்கழகத்தின் தலைவர். இந்திய விஞ்ஞான இதழையும் நிறுவியவர் இவரே. இவருடைய அண்ணன் திரு.சி.எஸ்.ஐயர் ஓய்வு பெற்ற அக்கவுண்டண்ட் ஜெனெரல். இசை ஆராய்ச்சியாளர். அவருடைய திருமகனார் டாக்டர் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றவர். அவரை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இன்னம்பூரான்
07 11 2011
உசாத்துணை:
|
|
No comments:
Post a Comment