அன்றொரு நாள்: நவம்பர் 9
ஸோராத் போனதும்,வந்ததும்.
இந்தியா விடுதலை அடையும் தருணம் பிரிவினை ஒரு சிக்கல், இனக்கலவரம்/வன்முறை ஒரு இன்னல், புலன் பெயர்தல்/அகதிகள் ஒரு பிரச்னை, இந்தோ-பாகிஸ்தான் மனஸ்தாபங்களும், தாயாதி விரோதமனப்பான்மையும், காழ்ப்புணர்ச்சியும் ஒரு வ்யாகூலம், கலோனிய அரசின் செயல்பாடுகளில் ஒரு குழப்பம், எல்லைத்தகராறு, நிர்வாக அனுபவமின்மை ஒரூ சவால், புதிய ஆளுமையும், பழைய அதிகாரமயமும் மோதல்/தழுவல்/நழுவல் என்றெல்லாம் ஒரு சூழல். ஆதலால், எதிர்நீச்சல். சிறுவனாக இருந்தாலும், இதெல்லாம் ஓரளவு புரிந்தது. அதனால் தான் அக்காலத்து தேசீயத்தலைவர்களை, இக்காலத்து வாண்டுகள் சாடும்போது, சிரிப்பு வருகிறது. காந்திஜீயின் மஹானாதீனமும், தியாகத்தீயில் புடம் போட்டு எடுத்த தலைவர்களின் தன்னலமற்ற பணியும், தேசாபிமானமும், பல வருடங்கள் விடுதலை வேள்வியில் புரோகிதம் செய்த நட்புரிமையும், அவரவருடைய பெர்சனாலிட்டியும் தான் இந்த களேபரத்தை கையாளுவதில் கை கொடுத்தன.இதையெல்லாம், நம் தலைவர்களின் ஆற்றலை பற்றியெல்லாம், சொல்ல நிறைய இருக்கிறது.
போதாக்குறைக்கு, பலசரக்கு சாமானை வந்து கூடத்தில் கொட்டினமாதிரி, பெரிய பொட்லமாக, சிறிய பொட்லமாக, தம்மாத்தூண்டுப்பொட்லமாக, 572 சமஸ்தானங்கள். அவை, பிரிட்டானிய துரைத்தனத்தாரின் அரவணைப்பை இழந்து, திக்குத்தெரியாமல், திரிசங்கு சுவர்க்கத்தில் அல்லாடிக்கொண்டிருந்தன. சட்டமும், திட்டமுமாக வக்கணை பேசும் பிரிட்டீஷ் அரசு முகலாய அரசின் வாரிசாக, ‘தானுமதுவாக பாவித்த வான்கோழி’ போல, அந்த சமஸ்தானாதிபதிகளிடம், “அஹோ! ஓடும் பிள்ளாய்! நான் கப்பலேறுகிறேன். எமது ‘வெண்குடையை’ அந்த காங்கிரஸ்க்காரனிடம் கொடுப்போமோ? அதை சுருட்டி கப்பலில் வைத்து விட்டோம். இனி உன் பாடு. அவர்கள் பாடு. நான் அம்பேல்” என்ற பொருள்பட பலஹீன பிரகடனம் செய்து விட்டு, நீட்டிவிட்டார்கள், கம்பி! இந்த மாஜி மகாராசாக்களும் , நவாபுகளும், தர்பார்களும், சாஹேபுகளும், மாட்டிக்கொண்டார்கள், சர்தார் படேலிடம். அந்த சஹாப்தம் எழுத நாள் பிடிக்கும். அதை தெரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவில் வாழலாமோ? இது நிற்க.
நான் கூட பார்த்திருக்கேன், புதுக்கோட்டை சமஸ்தானம், டவுன் ஹாலில், கொயட்டா, இந்தியாவுடன் இரண்டறக்கலந்ததை. ஆனா, சில அசடுகள் போர்க்கொடி பிடித்தன, ஸர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர்வாள் போல. காஷ்மீர் ஹரிசிங்கின் அடைக்கலப்பத்தும், நைஜாமின் டப்பாங்குத்தும் ஏற்கனவே எழுதப்பட்டன. இன்றைய தினம், நவம்பர் 9, 1947 ஜூனாகட் தினம். இந்தியாவுடன் இணைந்த தினம்.
ஜூனாகட்டின் நவாப்ஜாதா முகம்மது மஹாபத் கான் ஜீ III நல்ல மனிதர் தான். 300 நாய்கள் குரைத்தாலும், பொறுத்துக்கொள்வார். அவற்றின் மீது அலாதி பிரியம். கல்யாணம் காட்சியெல்லாமுண்டு. புகழ் வாய்ந்த கத்தியவாத் புரவி, கிர் பசு என்ற உயர்தர கால்நடை இனப்பெருக்கத்தை வளர்த்தவரும் இவரே. உலகப்புகழ் சாஸன்கிர் ஆசிய சிங்கத்தை பாதுகாத்தவரும் இவரே. ஏதோ அசட்டுத்தனமாக, ஹிந்து மெஜாரிட்டியாகவும், எல்லாரும் சுமுகமாக வளர்ந்த ஜூனாகட் ஸமஸ்தானத்தை பாகிஸ்தானோடு இணைந்ததாக, 15 ஆகஸ்ட்1947 அன்று அறிவித்து விட்டார். ஒரே மாதத்தில் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தது. இது ஸோராத் (ஜூனாகட்) போன கதை.
இத்தனைக்கும், ஜூனாகட்டை சுற்றிலும் இந்திய பிராந்தியம். பாகிஸ்தானுக்கு போகணும்னா, கடல் தாண்டணும்; பறந்து தான் போகணும். இவரும் பறந்தாரே, அக்டோபர் 26,1947 அன்று, குடும்பம், நாய்கள், கஜானாவிலிருந்த காசு, பணம், நகை, நட்டு, ஜங்கம சொத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு. அப்படி ஒன்றும் புராதனமான சுல்தனத் இல்லை இது. வம்சம் தலையெடுத்ததே 1735ல். எல்லாம் கலோனிய அரசின் காருண்யம். மனுஷனை அவ்வளவாக குற்றம் சொல்லமுடியாது. உலகத்திலேயே பிரமாதமான சாஸன்கிர் சிங்கத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தவராச்சே, இந்த வெள்ளைக்கார வேட்டைக்கும்பலிடலிருந்து. சுத்துப்படை அப்படி. பாகிஸ்தான் ப்ரேமை அப்படி. இந்த ஸமஸ்தானத்தின் குறுநில மன்னர்களாகிய மாங்ரோல், பப்ரியாவாத் ஜமீன்கள், சினம் பொங்கி, இந்தியாவுடன் இணைந்து கொண்டார்கள். நவாப் அவர்கள் மீது படையெடுத்தார்! சமல்தாஸ் காந்தி என்ற மக்கள் தலைவர் இந்தியாவில் ஜூனாகட் மக்களாட்சி அறிவித்தார். ஒரே கலாட்டா தான் போங்கள். எல்லாம் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டம்! எல்லாம் தலைகீழ். நவம்பர் 7, 1947 அன்று பிற்கால பாகிஸ்தான் தலைவரான திருமதி.பெனெஸைர் புட்டோவின் தாத்தாவான ஸர் ஷாநவாஸ் புட்டோ தான் ஜூனாகட் திவான். அவர் இந்தியாவின் ஸெளராஷ்டிரா கமிஷரான திரு, புச் அவர்களுக்கு, வந்துதவ வேண்டும் என கடிதம் எழுதினார். நவம்பர் 9, 1947 அன்று இந்தியா உள் நுழைந்து ஆவன செய்தது. பாகிஸ்தான் ஆக்ஷேபித்தது. இரு நாடுகளும் பேசிக்கொண்டபடி 24 ஃபெப்ரவரி 1948 அன்று மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி மறு நாள் ஸோராத் இந்தியாவுடன் இணைந்தது. போன மச்சான் வந்தான், பூமணத்தோட.
இன்னம்பூரான்
09 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment