கல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6
|
|
|
|
அன்றொரு நாள்: நவம்பர் 6
கல்லும் கரைந்த கதை
கல்லையும் போட்டார். அதை கரைத்தும் கொடுத்தார்.
Was he the Pied Piper of Hamelin? அல்லது மகுடியூதி மயக்கிய பிடாரனா, இந்த பிச்சுக்குப்பன்? காலை 6:30 மணிக்கு 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, ஊர் எல்லை கடந்தார். சுட்டுப்புடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள், வியப்புடன், இந்த இரண்டுங்கெட்டான் படையை முறைத்து பார்த்தனர். வாளாவிருந்தனர். வழி நெடுக விருந்தோம்பல். சாயும் வேளை. கிட்டத்தட்ட 5000 பேர். ராத்தங்க முகாம் தயாரிக்கும்போது, கைது செய்தார்கள். உடனே ஜாமீனில் விடுதலை. இது ஆரம்ப கட்டம். ஒரு உரையாடல், அதற்கும் முன்னால்.
*
‘என்னிடம் யாது குறை? எனக்கு சிறை செல்ல தகுதி இல்லையா?’
‘சரி, உன் இஷ்டம்,’
*
சட்டத்தை மீறி, எல்லை கடந்து, சில பெண்கள் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து நேட்டாலுக்கு விஜயம். அவர்களை அரசு கைது செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து, மேற்படி உரையாடலுக்குப் பிறகு, சில ஃபீனிக்ஸ் குடியிருப்பு பெண்கள் ட்ரான்ஸ்வாலுக்கு பயணம். கைதாயினர், அவளும் உள்பட.நேட்டாலில் புகுந்த பெண்கள் ந்யூகேஸ்சில் நிலக்கரி சுரங்கபூமிக்கு சென்று, அடிமையாகாத தொழிலாளிகள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, சுரங்கத்தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்ய சொன்னார்கள். அந்த பெண்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொதி நிலை. அருமையாக போற்றி வளர்த்தத் தங்கள் பெண்ணினம் பட்ட அவதியை கண்டு இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். அடிமைகள் தொழிலாளிகளுடன் இணைந்தனர். சூத்ரதாரியும் பிரசன்னம். அவர்களை, சுரங்கத்தை விட்டு விட்டு தன்னுடன் பிராந்தியம் கடந்து, சிறை செல்ல ஆயத்தமாக வரச்சொன்னார். அவர்களும் சம்மதித்தனர். இந்த காலகட்டத்தில் தான் கைது/ஜாமீன்.
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி.
அந்த கைது/ஜாமீன் எல்லாம் பாசாங்கு. அவரை என்ன செய்வது என்று தான் அரசுக்கு புரியவில்லை. எட்டாம் தேதி, மறுபடியும் சிறையடைக்கும் படலம். மாஜிஸ்ட் ரேட் ஆணை. ‘ஓஹோ! எனக்கு பிரமோஷன்!’ என்று ‘நறுக்’ ஜோக் அடித்தார். மறுபடியும் ஜாமீன். மறுபடியும் யாத்திரை. ஐயாவை கைது செய்தால், பின் தொடருபவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஊஹூம்! வன்முறை வந்தால் தாக்கலாம் என்று பார்த்தார்கள். ஊஹூம்! அண்ணல் சொன்னதால், அமைதி; பூரண அமைதி. ‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் காரியதரிசியிடம், ‘ஜெனரல் இந்த அபாண்ட வரியை தள்ளுபடி செய்தால், நான் சட்டத்தை மீறும் இந்த யாத்திரையை நிறுத்தி விடுவேன்’ என்றார். அவர்கள் ‘உன்னால் ஆனதை பார்’ என்று சொல்லி, அந்த பேச்சை கடாசி விட்டார்கள். 9ம்தேதி மூன்றாம்முறை கைது. 11ம் தேதி 9 மாத கடுங்காவல் தண்டனை. மூன்றே நாட்களில் மற்றொரு குற்றச்சாட்டு. + 3 மாதம். கூட்டாளிகளும் கைது. தொழிலாளிகள் கட்டி இழுத்து ரயிலில் போடப்பட்டு திருப்பப்பட்டனர். அவர்கள் சிறைப்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆள்? அதனால், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊஹூம்! அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு தோன்றியது. நன்கொடையும், உதவியும் வந்து குவிந்தது. ஏன்? இந்தியாவின் வைஸ்ராயே தென்னாஃப்பிரிக்க அரசின் போக்கைக் கண்டித்தார். எல்லா தென்னாஃப்பிரிக்க சுரங்கங்களிலும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம். ஆயிரக்கணக்காக சிறையில். ராணுவம் மக்களை சுட்டுத் தள்ளியது. அண்ணல் காந்தி சொல்கிறார், ‘தென்னாஃப்பிரிக்க அரசு விழுங்கிய எலியை முழுங்கவும் முடியாமல், உதறவும் முடியாமல் இருக்கும் பாம்பு போல் தவிக்கிறது’. அப்படி தவித்த ஜெனெரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார். என்ன பிரயோஜனம்? இந்தியர்கள் சத்யாக்ரஹிகளை விடுதலை செய்யவேண்டும் என்றனர். இந்த விசாரணை கமிஷனில் ஒரு இந்திய தரப்பு (வெள்ளையனாக இருந்தாலும்) அங்கத்தினர் வேண்டும் என்றனர். ‘எலி விழுங்கிய’ ஸ்மட்ஸ் முடியாது என்றார். 1914 வருட புத்தாண்டு தினத்தில் மாபெரும் வேலை நிறுத்தம் என்று பிரகடனம் செய்தார், காந்திஜி.
இங்கு தான் முதல்முறையாக, காந்தீயம் தலையெடுத்து, ஜெனெரல் ஸ்மட்ஸ்ஸின் கல்மனதை கரைத்தது. அதே சமயத்தில், தென்னாஃப்பிரிக்காவே ஒரு ரயில் வேலை நிறுத்தத்தால் தவிக்க நேரிட்டது. காந்திஜி தன்னுடைய சத்யாக்கிரஹத்தை ஒத்தி வைத்தார், உன் இன்னல் என் ஜன்னல் அல்ல என்றார். ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி காந்திஜியிடம்: ‘ நீங்கள் எங்கள் கஷ்டகாலத்தில் கை கொடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது எப்படி கை வைக்க முடியும்? நீங்கள் வன்முறை பாதையில் சென்றால், உங்களை கையாளும் விதம் எங்களுக்கு தெரியும். நீங்களோ தன்னையே ஆஹூதி செய்து வெற்றி காண்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?’
ஜெனெரல் ஸ்மட்ஸும் காந்திஜியும் பேசிக்கொள்கிறார்கள். கடிதப்போக்குவரத்து வேறே. பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்தன. அபாண்ட வரி தள்ளுபடி. கிருத்துவ முறை அல்லாத விவாகங்களை சட்டம் அனுமதித்தது. ( இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்.) ‘என் கடன் முடிந்தது’ என்று 20 வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார், காந்திஜி. ஒரு மாபெரும் சத்திய சோதனைக்கு பிறகு. பிற்காலம், இந்தியாவின் விடுதலை வாங்கிக்கொடுத்தது அதுவல்லவா.
இந்தியாவுக்கு திரும்பும் முன், காந்திஜி ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு, தான் சிறையில் தைத்த ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தார். பல வருடங்களுக்கு பின்னால், ஸ்மட்ஸ் கூறியது, “ பல வருடங்களில் வேனில் காலத்தில் நான் அந்த காலணிகளை அணிந்துள்ளேன். ஒரு மாமனிதரின் காலணிகளில் நிற்க எனக்கு தகுதி உண்டா என்று தான் நினைத்துப்பார்ப்பேன்.’
இது தான் கல்லும் கரைந்த கதை.
இன்னம்பூரான்
06 11 2011
1913 Mohandas Gandhi was arrested while leading a march of Indian miners in ...
Indian women join Gandhi's passive resistance campaign
உசாத்துணை:
This biography was written by Roberta Strauss Feuerlicht and is reprinted here with the permission of the copyright holder.
No comments:
Post a Comment