வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -4
ஒன்பது வருடங்களுக்கு முன் இதே தினம் (ஜூன்,15,2004) குஜராத் போலீசாரால் ப்ரானேஷ் பிள்ளை (ஜாவேத் ஷேக்), இஷ்ரத் (19),அம்ஜத் அலி ரானா, சீஷன் ஜோகர் என்பவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு புறமும், இது ஜோடிக்கப்பட்ட என்கெளண்டர் என்பதால் படுகொலை என்று ஒருபுறமும் பெரிதும் பேசப்பட்டது. இது ஜோடிக்கப்பட்ட என்கெளண்டரா, இல்லையா என்பதை பாரபக்ஷமன்றி விசாரிக்கத்தான், அந்த விசாரணையை மத்திய புலனாய்வுத்துறையிடம், குஜராத் உயர் நீதிமன்றம் ஒப்படைத்திருந்தது. நேற்று (14 06 2013) கோர்ட்டார் அந்தத்துறையை தாமதத்திற்கும், கொடுத்தப் பணியை செய்யாமல், கொலையண்டவர்கள் பயங்கரவாதிகளா இல்லையா என்று திசை மாற்றியதற்காக கண்டித்த போது ஒரு நுட்பத்தை உணர்த்தினார்கள். தாமதத்தின் விளைவு: தீவிர குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன். இது சுபாஷிணியின் கேள்விக்கு பதில்: சட்டப்படி ஜாமீன் மறுக்கப்பட வேண்டிய வழக்கில், 90 நாட்களுக்கு மேல் தாமதம், ஜாமீன் பெறுவதற்கு வசதி செய்கிறது. கோல் போட்டாச்சு. சேம்ஸைட் கோல்? இல்லை? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்!
‘ஆள் கொணரும் உரிமை’ (Habeas corpus ad subjiciendum) என்ற லத்தீன் சொற்றொடரின் புனிதத்தை எடுத்துக்கூறவே, இந்த பீடிகை. ‘உடலை கொணருக’ என்ற பொருள்படும் இந்த சூத்திரத்தின் உள்ளுறை:அந்த உடலை உயிருடன் கொணரவேண்டும்.
சர்வாதிகாரங்கள் இந்த அடிப்படை உரிமையை தட்டிப்பறிக்கும். ஜனநாயகமும், மக்கள் நலன் போற்றும் அரிதான சில மன்னராட்சிகள் போன்ற தேசீய அமைப்புகளும் அதை பொக்கிஷமாக பாதுகாக்கும். அவ்வப்பொழுது பதவிமோகம் தலைதூக்கும்போது, பொக்கிஷத்தை ‘பொக்’ என தொலைத்து விடுவார்கள். இது கண்கூடு. மக்களின் விழிப்புணர்ச்சி ஒன்று தான் துணை. மற்றதெல்லாம் வெத்துவேட்டு. நீதிமன்ற ஆணையில்லாமல் அதிகார மையங்கள் யாரையும் இற்செறிக்கக்கூடாது என்பது அடிப்படை. அரசோ, தனியாரோ யாராவது ஒருவரை முடக்கிவைத்தால், அவரை மீட்க நீதி மன்றத்தில், எவரேனும் இந்த உரிமையை கோரலாம். உடனுக்குடன் வழக்கை கையில் எடுத்துக்கொள்வார்கள். நீதிபதியின் ஆணை படி அவரை விடுதலை செய்யவே வேண்டிய கட்டாயம் எழலாம்.
இந்த உரிமையின் வரலாறு சுவையானது. கி.பி. 1215க்கு முன்பே இங்கிலாந்தில் இது நாட்டப்பட்டதாக சட்டத்தின் வரலாறு கூறுகிறது. முதல் வழக்கு: கி.பி.1305. இது சட்டப்புத்தகத்தில் இடம் பிடித்தது என்னமோ கி.பி1679ல். அதில் வேடிக்கை என்னவென்றால்: கைதியை கோர்ட்டுக்கு கொண்டு வருவதற்காக, அதாவது அரசுக்கு/நீதிமன்றத்துக்கு உருவாக்கப்பட்ட ஈட்டி, தனி மனித உரிமையின் வாளியாக (அம்பு) மாறியதே. இதனுடைய குறிக்கோள் குற்றத்தையோ/குற்றமற்றதையோ நிரூபிப்பது அன்று. அடைத்து வைத்தது சட்டப்படி செல்லுமா என்பதே, இதனுடைய குறி. ஜமைக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு அடிமையாக கொண்டு வரப்பட்ட கறுப்பர் ஒருவரை விடுவிக்க, இந்த குறிக்கோளின் அடிப்படியை முன் வைத்து 1772ல் லான்பீல்ட் பிரபு வாதாடினார். கெலித்தார். அந்த அடிமை விடுவிக்கப்பட்டார். இத்தகைய அடித்தளம் இருந்தாலும், குடியரசு கோட்டையான இங்கிலாந்திலேயே, இந்த உரிமை 1793, 1817,1914, 1940, 1971 காலகட்டங்களில் பல அலைவரிசைகளில் முடக்கப்பட்டது. இத்தனைக்கும் அந்த நாட்டின் தர்மசாஸ்திரம் ஆகிய மாக்னா கார்ட்டா கூறுவது:
Article 39: "No freeman shall be taken or imprisoned or disseised or exiled or in any way destroyed, nor will we go upon him nor will we send upon him except upon the lawful judgement of his peers or the law of the land."
இங்கிலாந்து கதைக்கு பிறகு வருவோம். இந்திய அரசியல் சாஸனம் உயிர் வாழும் உரிமையையும், தனி ஒருவனின் சுதந்திரத்தையும் போற்றுகிறது. ஜோடிக்கப்பட்ட என்கெளண்டர்களும் பதிவாகின்றன. சில வருடங்களுக்கு முன், கபிலன் என்றவரை அடையார் காந்தி நகரில் சுட்டுக்கொன்றார்கள், கண்ணெதிரே. ஒரு அப்பாவியும் குண்டடி பெற்று இறந்தார்.
இன்னம்பூரான்
15 06 2013
உசாத்துணை:
Published: 2005/03/09 11:03:15 GMT
© BBC 2013
இன்னம்பூரான்http://innamburan.blogspot.co.ukhttp://innamburan.blogspot.de/view/magazinewww.olitamizh.com
No comments:
Post a Comment