வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3
இன்று போர்ட்ஸ்மத்தில் வீட்டுவாசலிலேயே விலங்கிடப்பட்டு சிறை சென்ற ஒரு இளம்பெண் செய்த குற்றம்: சமீபத்தில் முரசொலிக்கும் பணி புரியும் ராணுவவீரரொருவர் லண்டனில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். மக்கள் ஆவேசத்துடன் விசனம் அடைந்தார்கள். அதன் தொடர்பாக முகநூலில் இவர் எழுதியது இஸ்லாமிய இனத்தை இழிவுபடுத்தியது என்ற குற்றம். இதே காலகட்டத்தில் சென்னையில் ஒரு செல்வந்தரின் மகன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு. அதில் பல திடீர் திருப்பங்கள். ஏகப்பட்ட விமர்சனங்கள். இதே மாதிரி அட்மிரல் நந்தா என்ற கடற்படைத்தலைவரும், பிற்கால ஆயுத தரகரும் ஆகிவிட்டவரின் பேரன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு, சில வருடங்கள் முன். அதிலும் பல திடீர் திருப்பங்கள். முரண்கள். தகாத செயல்கள் மூன்றுக்கும் ஒப்புமை: Omne crimen ebrietas et incendit et detegit!
இந்த லத்தீன் சூத்திரத்தின் பொருள்:
‘குடிவெறி உசுப்பேத்தும்; குற்றங்களை காட்டிக்கொடுத்து விடும். எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி. குடிவெறியினால் ஏற்படும் தற்காலிக சித்தபிரம்மை என்று வாதாடி பயன் இல்லை. ஏனெனில், அந்த நிலை பொறுப்பை விலக்கவில்லை. சுயநினைவு இருக்கும்போது குடித்துவிட்டு, தன்வசம் இழந்திருந்தாலும், குற்றம் குற்றமே. குடிப்பழக்கம் கெடுத்து விட்டது என்று குடிகாரர்களும் வாதாடமுடியாது. நீதி சாத்திரம், ‘எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி‘ என்பதை எல்லா வழக்குகளிலும் ஏற்காவிடினும் கூட, குடிபோதையில் நடந்து விட்டது என்ற சால்ஜாப்பு தள்ளுபடி செய்யவேண்டியதாகும். [State v. Hundley, 46 Mo. 414 (Mo. 1870)]
இது அமெரிக்க தீர்ப்பு 150 வருடங்களுக்கு முன்பே. நான் தேடியவரை இந்தியாவில் இது பற்றிய தீர்ப்பு கிடைக்காவிடினும், சில மாதங்கள் முன் உச்ச நீதி மன்றம் கூறியது ஒன்றை நினைவிலிருந்து அளிக்கிறேன். வாசகம் மாறி இருக்கலாம். கருத்து மாறவில்லை. ‘நீங்கள் சின்ன மீனை பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பின்னம் கூட குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்பவர்களை பிடிப்பதில் இல்லையே ஏன்?’
அநேக கிரிமனல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை கறாராக பொருத்தமான சட்டம்/ஷரத்துக்களுடன் போலீசார் இயையவைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியாவில் பரவலாக உலவி வருகிறது. முதலில் தாக்கல் செய்யப்படும் ஆவணம், எஃப்.ஐ.ஆர். முதல் கோணல் முற்றும் கோணல் அங்கே தான் துவக்கம். அந்தக்காலத்துக் கதை. போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தர் (ரைட்டர்) என்று ஒரு தாணாக்காரர் அமர்ந்திருப்பாராம். ‘ஐய்யோ! குத்திக்கொலை செய்கிறானே’ என்று ஓடி வந்தால், ‘எஃப்.ஐ.ஆர். போடணும். ஒரு குயர் வெள்ளைப்பேப்பர் வாங்கி வா.’ என்பாராம். வாங்கி வந்தால், பேனா வாங்கி வா என்று அனுப்பி தாமதம் செய்வாராம். அந்த கேப்பில் அவர் விடும் சைக்கிள் எதிர்தரப்பைக் கூப்பிட்டு கட்டைப்பஞ்சாயத்து செய்து துட்டு பார்க்குமாம். அது ஒரு அரதப்பழுத ஜோக் என்றாலும், மிகையல்ல என்று தான் தோன்றுகிறது. Omne crimen ebrietas et incendit et detegit! என்ற சூத்திரத்தை முறியடிக்கும் பாணியில் ஒரு டில்லி வழக்கு நடந்தது. சூப்பர் செல்வந்தர்கள் புழங்கும் கள்ளுக்கடையில் குடிபோதையான் ஒருவன் ஒரு பெண்ணை சுட்டுக்கொன்று விடுகிறான். அவளை கொளுத்தி வருடங்கள் ஆயின. கேசு என்னமோ தொடர்கதை!
குடிவெறியில் இழைக்கப்படும் குற்றங்கள் நாள்தோறும் ஊடகங்களில். அங்கு எல்லாம் இந்த லத்தீன் சூத்திரம் கையாளப்படவிடின், அநீதியின் ஆளுமை பெருகும்.
ஒரு சின்ன சூத்திரம்: Crimen omnia ex se nata vitiat. அதன் பொருளின் உருவகம்:
‘நாய் விற்ற காசு குலைக்கும்’!
இன்னம்பூரான்
14 06 2013
உசாத்துணை:
No comments:
Post a Comment