கனம் கோர்ட்டார் அவர்களே! (10)
Monday, July 2, 2012, 4:36
இன்னம்பூரான்
நான்கு வாரங்களுக்கு ‘வல்லமை’யில் நான் எழுதப்போவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒரு சூடான செய்தி வெளி வந்த ஒரு மணி நேரத்துக்குள் 1392 பின்னூட்டங்கள் வந்து என்னை உசுப்பி விட்டன.
சில சாதகம்; சில பாதகம். அதுவல்ல பிரதான விஷயம்.
அமெரிக்க மக்களின் விழிப்புணர்ச்சியை, பொதுஜன அபிப்பிராயத்தை, எதிர்ப்பார்ப்பை, சிறந்த விவாத அணுகுமுறையை அது பிரதிபலிக்கிறதே, அது தான் பிரதானம். அதில் ஒரு பின்னமாவது நம் நாட்டில் இருந்தால், நாம் ‘பாருக்குள்ளே நல்ல நாடாக’ என்றோ புகழ் ஈட்டிருப்போம். இப்போது தலைகீழாக, அதுவும் திரிசங்கு சுவர்க்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். நாட்டுக்குக் கூட பழவினை!
என்ன அந்த சூடான செய்தி?
அமெரிக்காவின் உச்சநீதி மன்றத்தில் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ், லேர்னட் ஹேண்ட், ஃபெலிக்ஸ் ஃப்ரான்க்ஃபர்டர் போன்ற பிதாமகர்கள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களை நான் மிகவும் மதிப்பவன். எனினும், இந்தியாவிலோ, பிரிட்டனிலோ இருப்பது போல இல்லாமல், அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அரசியல் வாடை வீசும்.
ஆனால் பாருங்கள். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் பேசப்படும். ஏழை பாழைகளுக்கும் மருத்துவ வசதி வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், இந்த காப்பீடு ‘விலங்கு’ அணிந்திருக்கும் அமெரிக்க சமுதாயத்தில் ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு சட்டம் வகுத்தார்.
அதன் முக்கிய ஷரத்து: ‘அமெரிக்கர்கள் யாவரும் காப்பீடு செய்து கொள்வது கட்டாயம். மீறுபவர்களுக்கு அபராதம்.’
நான்கு நீதிபதிகள் இந்த சட்டத்தை ஏற்கவில்லை.
‘இது செல்லுபடியாகாது; உச்சநீதிமன்றம் இதை ஆதரிப்பது மாபெரும் தவறு என்றார், அந்தோனி.எம். கென்னடி என்ற நீதிபதி.
அவரைப்போலவே பழங்காலத்து மனிதராக கருதப்படும் தலைமை நீதிபதி ஜான்.ஜி. ராபர்ட்ஸ் என்பவர், எதிர்பாராத வகையில், இந்த ‘அபராதத்தை’ வரி என்று வகைப்படுத்துவது தான் நியாயம், அத்தகைய வரியை விதிக்க அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அதை தடுத்தாட்கொள்வதோ அல்லது அதனுடைய தர்மத்தை அலசுவதோ, உச்சநீதிமன்றத்தின் நியதியன்று என்று சொல்லி, அந்தோனியார் கூற்றை குடை சாய்த்து விட்டார்.
ஆனால், ‘மெடிக்-எய்ட்’ என்ற ஏழைபாழைகளுக்கான திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு முட்டுக்கட்டை. மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்தக்கூடாது என்று அடித்து சொல்லி விட்டார்கள், ஏழு நீதிபதிகள்.
ஆனாலும், வணிக நோக்கு எனப்படும் ஷரத்தை தலைமை நீதிபதி அனுமதிக்காததை, தாராளபோக்குள்ள நான்கு நீதிபதிகள் குறை கூறியுள்ளார்கள். அவர்களில். மூவர் பெண்கள்.
செல்வம் மிகுந்த நாடுகளில், அமெரிக்காவில் மட்டும் தான், மருத்துவ வசதிக்குத் திண்டாட்டம். அது குறையும் என்பதால், இன்றைய தீர்ப்பு, பல்லாண்டுகளில் வந்தவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
‘இது மக்களின் வெற்றி என்றார், ஜனாதிபதி ஒபாமா. ‘இல்லை’, ‘இல்லை’ என்று அழுந்த சாதித்தார், அவருடன் அடுத்தத் தேர்தலுக்கு போட்டியிடும் மிட் ரோம்னி.
இந்த தீர்ப்பின் சிக்கல்களை ஆராய்வது என் இலக்கு அன்று. தலைமை நீதிபதி,‘மக்களை அவர்களுடைய அரசியல் முடிவுகளிலிருந்து ரக்ஷிப்பது எமது பணி அல்ல’ என்றார். அதன் உள்ளுறை, மக்களின் பிரிதிநிதிகளின் கடமையாற்றலில் அதீதமாக தலையிடக்கூடாது என்பதே.
தற்கால இந்தியாவில் அந்த உள்ளுறை பொருந்துமா என்பதே என் கேள்வி. அண்மையில், உச்சநீதிமன்றத்தின் முன்னால், அரசு எடுக்கும் ஏடாகூட நிலைப்பாடுகள் கவலை தருகின்றன. மேலும், பிரதிநிதிகள் மக்களின் பிரதிகூலர்களாக நடந்து கொள்கிறார்கள் என்ற தோற்றம் வலுத்து வருகிறது. என் செய்யலாம்?
புகைப்படத்துக்கு நன்றி:
No comments:
Post a Comment