Friday, September 4, 2015

எங்கே தொலைந்து போனாள், வீரி?


எங்கே தொலைந்து போனாள், வீரி?

Friday, September 4, 2015, 5:00
– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்: செப்டம்பர் 4, 2015
என்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் கேட்டுக்கொண்டு வந்து போவது இல்லை. அவற்றின் போக்கே அலாதி. இறைவனைத் துதிக்கும்போது காதலி தோன்றுவாள்; அவளுடன் அன்யோன்யமாக இருக்கும்போது, என்றோ நம்மிடம் வளர்ந்த பூனைக்குட்டி நினைவில் தோன்றுவான். அந்த மாதிரி, ஜோதிகாவின் நடிப்புத்திறனால், எனக்கு வீரியை பற்றிய கவலை பற்றிக்கொண்டது.
கதாபாத்திரங்கள் எல்லாம் சுத்த கற்பனையே என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் உண்மையைப் பாயாய் சுருட்டிப் பதிவு செய்வார்கள். விமர்சனம் செய்பவரும், தன் பங்குக்கு, ‘இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி’ என்று ஒத்துப்பாடுவார். வீரியின் பெயரை கூட, நான் மாற்றவில்லை. மாற்றினால், அது கதையின் வழுவாக அமையும். அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும், ‘உள்ளது உள்ளபடி’ ஊரையும், மற்ற விவரங்களையும் கொடுக்க நான் தயாராக இல்லை. அவள் பழங்குடி இனம் தான். லம்பாடி என்று பெயர். அதற்காக நான் வம்படிக்கப்போவதில்லை. சொல்வது எல்லாம் நிஜம்; ஆங்காங்கே பொருத்தமான மிகையும், கற்பனையும் துணை புரியும்.
நாங்கள் வடநாட்டின் ஒரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுப் போனபோது, ஏற்கனவே நண்பராக இருந்த முன்னவரின் வீட்டிலேயே நாங்கள் வசிக்க நேரிட்டது. பல அன்றாட அலுவல்களைப் பற்றி பெண்ணரசிகள் பேசிக்கொண்டனர். அதன் பயனாக, கதவோரம் நின்று கொண்டிருந்த பேரழகி வீரி அவர்களின் சிபாரிசின் பேரில் எங்களுக்கும் ஏற்பாடு ஆனது. சில எச்சரிக்கைகளும் தமிழில் கொடுக்கப்பட்டன. அன்றிலிருந்து, வீரி ராஜ்யம் தான். சூது வாது அறியாத 16 வயது பதுமை போன்ற பெண். சிவப்புத்தோலுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயத்தில், அவளுடைய மாநிறம் தூக்கி அடித்தது. புயல் மாதிரி தான் உள்ளே நுழைவாள். கதவைத் திறந்து வைத்திருப்போம். இல்லையெனில் மணி அடித்து கலாட்டா செய்து விடுவாள். ஊரைக் கூட்டி விடுவாள். எதிர் வீடு உள்ளூர் கலெக்டரது. அவர் வீட்டில் மணி அடித்து விட்டு, எங்கள் திறந்த வீட்டில், ‘கை வீசம்மா! கை வீசம்மா’ என்று அட்டகாசமாக நுழைந்து விடுவாள். அந்த மாநிலத்தில் வீட்டுக்குக் கடைநிலை ஊழியர் கிடையாது. அவரே கதவை திறுந்து வந்து, ‘ஓ! வீரியா?’ என்று சிரித்து விட்டுப் போய்விடுவார். யாருமே அவளிடம் கடுஞ்சொல் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு குழந்தை.
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் வியர்த்தமாயின. அறைகளில் கண நேரத்தில் கூட்டி, பெருக்கி, மெழுகும் வீரி, குளியல் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாள். அது முடிந்த பின் ஜொலிப்பாள்; சோப்பு கணிசமாகக் கரைந்திருக்கும். பவுடர் டப்பா காலி. கூந்தல் தைலம் காலி. வஸந்தா, அவளுக்கு வேண்டிய ஒப்பனைச் சாமான்கள் வாங்கித்தருவதாகவும், எங்கள் பிரத்தியேக சோப்பு வகையறாவை விட்டு வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். எங்கிருந்து கிடைத்ததோ, அவளே பட்டியல் கொடுத்தாள்: பியர்ஸ் க்ளிசரைன் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், ஹிமாலயா ஸ்னோ, குஸுமாஞ்சலி என்ற கூந்தல் எண்ணைய். எனக்கு சம்பளம் போதாது என்பதால், நாங்கள் அந்த உயர்தர அலங்கார பொருள்களுக்கு போகவில்லை என்றாலும், அவளுக்கு வாங்கிக்கொடுத்தோம், லாக்டோ காலமைன் உள்பட. நோ யூஸ். அவள் அவற்றுடன் மற்றதையும் உபயோகிப்பாள்; பேசிப்பயன் இல்லை. ஆனால், அவள் மாதிரி வஸந்தாவின் அடர்ந்த கூந்தலுக்கு அகில் புகை சாற்ற, வீரிக்கு இணை வீரியே. சமையல் அறை சூபர்விஷன் செய்யும்போது இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ‘நன்றாயிருக்கிறது’ என்று சான்றிதழ் கொடுப்பாள். ஆகமொத்தம் வீட்டுக்குச் செல்லப்பெண்.
ஒரு நாள் தனக்கு கல்யாணம் என்று சொன்னாள். ஒரு நோஞ்சல் பையனை கொண்டு வந்து, அவன் தான் முறை மாப்பிள்ளை என்றாள். ஏதோ சொல்லி விட்டு, எங்கள் எதிரிலேயே ஒரு ஷொட்டு வாங்கிக்கொண்டான். நாங்கள் திருமணத்துக்கு சீர் எடுத்துச் சென்றிருந்தோம். சிறிது நேரம் தான் இருக்க முடிந்தது. ஒரே டான்ஸ். கொம்மாளம். வேலையை விட்டு விட்டாள். குலத்தொழிலாகிய கிருஷ்ணன், ராதை வகையறா களிமண் பொம்மைகளைச் செய்து தென்னாட்டில் கூவிக்கூவி விற்கப்போவதாகச் சொன்னாள். பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பல்லாவரம் பக்கம் காரில் சென்ற போது வீரி சாயலில் ஒரு பெண்ணைப்பார்த்து, வஸந்தா திரும்பவந்து கவனித்து, உறுதி செய்து கொண்டபின், இறங்கி குசலம் விசாரித்தோம். மூன்று குழந்தைகள்; வாடிய முகம்; மெலிந்து போன உடல். களைப்பு. ஒரு பாடாக, அருகாமையில் இருக்கும் அவர்கள் கூட்டத்தில் இவர்களது பொம்மைகளை ஒப்படைத்து விட்டு, அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்தோம். முசுடாகவே இருந்த அவள் புருஷன் பீடி பிடிக்க வெளியில் போய்விட்டான். குழந்தைகள் புரண்டு விளையாடின. ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரியும் போலிருக்கிறது!
பெருங்குரல் எடுத்து அழுதாள். கணவன் சோற்றுக்குப் பணம் கொடுப்பதில்லை, குடிகாரன், அடிப்பவன் என்றாள். அவனுக்கு மேலும் இரு தாரங்களாம். பஞ்சாயத்தில் விவாகரத்து கேட்டாள், லம்பாடி இன வழக்கப்படி. அந்தக் கட்டப்பஞ்சாயத்து மறுத்து விட்டதாம். மேலும் பல இன்னல்கள் பற்றிச் சொல்லி தேம்பினாள். அதை உங்களிடம் சொல்லமாட்டேன். ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தாலும், நாங்கள் ஆவன செய்யவில்லை என்ற சோகம் எங்களை வீட்டு நீங்கவில்லை.
எங்கே தொலைந்து போனாள், வீரி?


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, September 3, 2015

நாளொரு பக்கம் 95

நாளொரு பக்கம் 95

SATURDAY, THE 16TH JUNE 2015

‘கருதுமனம் புறம்போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த
கையும் ஆய், ஓர் கண் இட்டமையும் ஆய் வருவார்’.

இது திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சிலிருந்து ஒரு சிறிய செய்யுளின் ஒரு பாகம். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் - புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?" என்று அஞ்சவே தோன்றும்.”

என்று 1937லியே ரசிகமணி சிதம்பரநாத முதலியார் அவர்கள் கவலைப்பட்டார். கவலை தற்காலம் மிகவும் அதிகரித்து விட்டது.

பொருள்: குற்றாலநாதர், விடை மீதேறி, பவனி வருகிறார். அதை கட்டியக்காரன் முன்கூட்டி பாந்தமாக அறிவித்தவுடன், தேவர்களும், முனிவர்களும், அரக்கர்களும், சிவனடியார்களும் கூடி கண்டு மகிழ ஓடி வருகிறார்களாம். மகளிர் பல, அவர்களில். அந்த காலமல்லவா! ஆணாதிக்கம் கிடையாது. கவிராயர் அவர்களது மனநிலையை நிலைக்கண்ணாடியில் நமக்குக் காட்டுகிறார். ஒருகையில் வளையலை அணிந்த பெண்ணரசி ஒருவள், மற்றொரு கையில் அணிந்தாளில்லை. ‘ஒரு கண்ணுக்கு மை எடுத்த கையும் ஆய்...’ ஓடோடி வருகிறாள் மற்றொரு அழகி - ‘இருண்ட மேகம் சுற்றி சுருண்டு கழி எறியும் கொண்டையாள்’ -மற்றொரு கண்ணுக்கு மை தீட்டாமலே.

சற்றே மிகைப்படுத்திக்கூறுவது, இலக்கிய சுவை. அதன் ரசனை கூடுவதற்கு, நாமும் பக்தியின் அந்த நிலைக்கு செல்வது சாலத்தகும்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


Sunday, August 23, 2015

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

இன்னம்பூரான்
ஆகஸ்ட் 23, 2015

தாடி பத்தி எறியச்சே, பீடிக்கு நெருப்பு கேட்டானாம்! நம் நாட்டில் நடக்கும் விநோதங்களில்
சில, சிரிக்கவும் முடியாது: அழவும் முடியாது. தலைலெ துண்டுப் போட்டுக்கொண்டுட்டுக்கொண்டு, வங்காள விரிகுடாவில் முழுக்கு போடவேண்டியது தான். பாடியை வச்சுக்கிணு, விதண்டாவாதம் செய்வார்கள் தண்டல்காரர்கள்.

சூடான செய்தி. செருப்பை கையில் எடுத்துக்கொள்ளவும். அடிக்கணும் இல்லையா? விஷாலக்கிளமையில் காலை 6.18 க்கு பரைய்லி எனப்படும் ஸ்டேஷன் பக்கத்து ஷம்ஷான் பூமி ( தெரிஞ்சு தான் பேர் வச்சாங்களோ!!!), தண்டவாளத்தில் விழுந்து, ரயில் ஏறி, நசுக்கி ஒரு இளைஞர் செத்துப்போனான். பாடியை எடுப்பதில் தகற்ற்றாறு. ஜிஆர்பி போலீசும், பரைய்லி போலீசும் லத்திச்சண்டை போடல்ல. அதான் பாக்கி. வாயால் ஒருவரை ஒருவர், யார் பாடியை எடுக்க ஜூரிஸ்டிக்‌ஷன் பற்றி வாய்ச்சண்டை மணிக்கணக்காக போட, அந்த சவத்தின் மீது 16 ரயில் வண்டிகள் ஓடி விட, சவம் சபித்துக்கொண்டே ஓலமிட்டது என்று தோற்றம். ஆறு மணி நேரம் கழித்து வந்த டாப் ஆபீசர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் லடாய்! அப்றம் சவத்தை மூட்டையாகக் கட்டி, சவக்கிடங்கில் எறிந்தார்கள். பரிசோதனை நடந்ததாம். எதை என்ன பண்ணி அறுக்கமுடிந்தது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்! அப்றம் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் நடக்குமாம். மண்ணாங்கட்டி! தெருப்புழுதி! அறிவு கெட்ட மாந்தர்கள்.

இந்த மாதிரி தான் அன்றொரு நாள் ஒரு கயவன் அடையாறு பகுதியில் தன்னை பெற்ற அன்னையை தெருவில் செம்மையாக அடித்து, சாக்கடையில் தள்ளி பேயாட்டம் ஆடினான். குடிக்க காசு தரவில்லையாம். இரண்டு போலீஸ்காரர்கள் ( சாஸ்திரி நகர் & பெசண்ட் நகர்) பீடி குடித்துக்கொண்டு நின்று இருந்தனர். நான் புகாரித்தேன். என் பதவியை அறிவித்து, டி.ஜி. என் சக மாணவர். அந்த கழுதையை அரெஸ்ட் செய்யுங்கள் என்றேன். ‘சார்! உங்களுக்கு ஏன் வம்பு. இவன் பெரிய புள்ளி’ என்றார்கள். நான் குறுக்கிடப்போனேன். எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர், என்னை இழுத்துப் பூட்டி, ‘சார்! அவன் ரெளடி ஷீட்டர். கொலையும் செய்வான்’ என்று கை கூப்பி வேண்டிக்கொண்டார். வீட்டுக்கு ஃபோன் செய்து, அவர் புகாரிக்கவே, நமக்கு செம டோஸ்! 

என்னத்தைச் சொல்ல!
-#-
உசாத்துணை: 
Dna_Article_Middle_300x250_BTF

சித்திரத்துக்கு நன்றி: http://www.vinavu.com/wp-content/uploads/2008/11/சாரு-நிவேதிதா-ஜெயமோகன்.jpg

இன்னம்பூரான்

Friday, August 14, 2015

இந்தியா 2085

இந்தியா 2085
இன்னம்பூரான்
சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15, 2015

நமது இந்தியா விடுதலை அடைவதற்கு முன், கலோனிய அரசின் நிர்வாகத்தை பற்றி அறிந்தவர்களில் சிலர் தான் தற்காலம் இருக்கிறார்கள்; தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வரிசையிலும் சிறுபான்மையினர் தான் சமுதாய வரத்துப்போக்குகளை அலசுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில: முதுமையின் தள்ளாமை, ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று சிறுவயதிலிருந்து இருந்த மனப்பான்மை, அறியாமை. முதியோர்களின் நோக்கில் வரலாறு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் ஆராய்ச்சி அருளும் பரவசத்தை இங்கும் பெற இயலலாம். அப்படித்தான் அமைந்து விட்டது, குடியரசர் ப்ரணாப் முகர்ஜி அவர்களின் விடுதலை தினம் பொருட்டு ஆற்றிய உரை.

நேற்று இரவே, என் சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவு செய்ய முயன்றேன். ‘நான் அழுகிறேன்.’  என்ற தலைப்புடன் முற்றுப்புள்ளி. நல்ல நாளும் அதுவுமாக அழுகை ஏன் என்ற கேள்வி. ஆனால் பாருங்கள், குடியரசரே ஒரு குரல் அழுது விட்டார். பிரதமர் இன்று காலை கவசக்கண்ணாடியறையிலிருந்து நற்செய்திகள் பரப்பினாலும், அவரும் குடியரசரின் உரையை போற்றியுள்ளார். அவர் வேறு என்ன தான் சொல்லியிருக்கலாம் எல்லாம் ‘லாம்’ தான். அதாவது, அவரவர் கற்பனை.

என் அணுகுமுறை, குடியரசரின் தொலைநோக்கு கவலைக்கு ஏற்புடையது என்பதால், அதன் வெளிப்பாடு தான் என் சுதந்திர தின வாழ்த்துக்கள். முதன்மையாக, மக்களுக்கு, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் பெரும்பாலும் சுயநலம் நாடி, தப்பும் தவறுமாக திரவியம் தேடி, அதை மறைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆணவத்துடன் மக்கள் நலனை புறக்கணிக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி; அந்தோ பரிதாபம். உள்ளங்கை தான் அரிக்கிறது! மக்களே நேரிடையாக தீநிமித்தத்தில் மிதக்கிறார்களே! 

திருமூலரின் மரமும் மாமத யானையும் போலத்தான் அரசியல் கட்சிகள். ஒரே கட்சி தான் 1947லிருந்து அரசாளுகிறது. சுயநலம், அதிகார துஷ்பிரயோகம், துட்டு புரட்டுதல் என்று வந்தால். பெருந்தலைவர் காமராஜர் சொன்னமாதிரி ‘எல்லாம் ஒரே குட்டையில் அழுகிய மட்டை.’ வாக்கு வாங்கி, மக்களுக்குப் போக்குக்காட்டுவது என்றால், அவரவர் கட்சி, கொடி, தடி, மண்ணாங்கட்டி எல்லாம். நூடிலை (மறுபடியும் கிறுபடியும் வரதாமே!) இழுத்தால், நீண்டு வந்து கிழியும். சணற்கயிரானால், திரி பிரியும். கப்பல்களில் கட்டுவதற்கு ஏற்றதாக சிசல் கயிற்றை உபயோகிப்பார்கள். கயிறு அறுந்தால், உயிர் பிரிந்துவிடும். அதனால் வலிமை வாய்ந்த கயிறு. சிசல் கயிறாக 1947ல் நம்மிடம் வந்துள்ள விடுதலை, இன்று சணற்கயிராகி, பாரதமாதா உயிருக்கு அபாயமாகி, விடுதலையையும், நாட்டின் பெருமிதத்தையும் பறித்து விடுமோ என்று அஞ்சுகிறார், குடியரசர். நல்லவேளை நூடிலாகி நொந்து போகவில்லையே, அந்தவரைக்கும் லாவம்! என்பர், சிலர். அவர்களை நம்பாதே என்பது என் கட்சி. ஆதரவு தருவது, குடியரசர்.

ஏற்கனவே காலம் தாழ்ந்து விட்டதே என்று அங்கலாய்க்கும் குடியரசர், “…நாம் உடனே பிரிந்த திரிகளை விட்டுவிட்டோம் ஆனால், எழுபது வருடங்களுக்கு பின் வரும் சந்ததி நம்மை தூற்றுமே, நாம் எழுபது வருடங்களுக்கு முன் (வயசாயிடுத்தோல்லியோ! அதையெல்லாம் மறந்து சில தலைமுறைகள் ஆயின என்பதை மறந்து விட்டார்!) நாம் தேசீயத்தலைவர்களை போற்றியது போல் அல்லாமல்…’  என்று தேம்பினார். அவரது கவலை நியாயமானது. நான் எழுத அஞ்சியதை அவர் கூறி விட்டார்.

இது நிற்க.

எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். கொண்டாடுவோம். பந்தாட வேண்டாம். 

சரியா?


_#_

Thursday, August 13, 2015

சுவற்றில் அடித்த பந்து!

சுவற்றில் அடித்த பந்து!
இன்னம்பூரான்
புதன் கிழமை: ஆகஸ்ட் 12, 2015

சிறிது நேரம் கிடைத்ததால், ஒரு சிறிய பதிவு; வழு தேடவேண்டாமே. சுவற்றில் அடித்த பந்து அதிவேகமாக திரும்பி வரும். பந்துக்கும், சுவற்றுக்கும் அடி தான் மிச்சம், வேறு ஆதாயமில்லை என்றாலும், அடித்தவன் கை நோகலாம்; வலு பெறலாம். அந்த மாதிரி தான் இந்த யாத்திரையின் போது கண்ட சில சமூகக் காட்சிகள். இந்தியாவுக்கு இருக்கும் கொடுப்பினையை சொல்லி மாளாது. என்னே பாரம்பரியம்! என்னே செங்கோலின் நேர்மை! என்னே வெண்குடையின் தருமம்! என்னே தெய்வ பக்தி! என்னே ஆற்றுப்படையாக பெருகி வந்து ஊக்கமளிக்கும் கலையார்வம்! என்னே வரலாற்று செய்திகள், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஏட்டுச்சுவடிகளிலும்!

இவற்றை நம் நாட்டு மக்கள் அறியாமல் குப்பை கொட்டுவதை கண்டால், மனம் கொதிக்கிறது. போகுமிடங்களில், மாணவ சமுதாயத்துடன் உறவு கொண்டாடினேன். என் மனம் முறிந்தது தான் மிச்சம், பல விஷயங்களை பற்றி பேசிப்பார்த்த பின். மெத்த படித்த மாணவர் ஒருவர் தனது விருதுகளை பாராட்டிக்கொண்டபின், சமுதாயம் தனது திறனை, அந்தோ பரிதாபம்!, பயன் படுத்திக்கொள்ளவில்லையே என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவரது துறைகளை பற்றி விசாரித்தால், ஒன்றும் தெரியாது என்று ஒத்துக்கொண்ட அவர், தனக்கு வழிகாட்டிகள் கிடைக்கவில்லை; ஆசிரியர்கள் உருப்போட்டதை தான் கிளிப்பிள்ளை போல் சொல்லி விட்டு, இடத்தை காலி செய்துவிடுவார்கள், பெற்றோர்கள் அறிவிலிகள் என்றவர், தனக்கு ஆங்கிலம் தெரியாது; சொல்லிக்கொடுத்ததைக்கூட தான் தலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அத்தனை தமிழ் மோகமாம். அதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டு உயர் அதிகாரிகள் தேர்வுக்கு படித்துக்கொண்டதாக சொன்னார். அதற்கான புத்தகம் எட்டாம் வகுப்புப்பாடம், தப்பும் தவறுமாக, தந்தி வாசகத்தில். சுருங்கச்சொல்லின், அவர் சம்பந்த்ப்பட்டவரையும், கல்வி வேஸ்ட். அதை அழுத்தம் திருத்தமாக சொன்ன பத்து வயது பையன், ‘நீங்க படிச்சு என்ன கண்டீங்க?’ என்று சுற்றி வளைத்துக்கேட்டான். தனது தந்தை பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அடிப்பதாகவும் சொன்னான். இது எல்லாம் கோயில் வளாகங்களில்! மற்றொரு மாபெரும் கோயிலின் மூலை கோபுரத்தின் நிழலில், சல்லாபம் நடந்து கொண்டிருந்தது. அதை  ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த,  தோராயமாக முப்பது வயது வந்த மனிதன் ஒருவன் சுயலாகிரியில் இருந்தான். எங்களிடம் கடுப்பாக பேசி தெய்வ தரிசனத்தைத் தடுத்தாட்கொண்ட கோயில் காப்பாளர், அவர்களுக்கு உடந்தை!

மணிமேகலையின்,
“…படையிட்டு நடுக்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டா லகறலு முண்டோ!!!!!”

எனக்கு நினைவுக்கு வந்தது.

தூக்கம் வருகிறது; பிற பின்னர்.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, August 11, 2015

நண்பர்களே 2

நண்பர்களே,

யான் தேசாந்திரியாக அலைகிறேன். எழுதுவதில் தாமதம். மன்னித்தீர்கள் அல்லவா!

ஆலாய் பறந்தாலும், பற்பல புராதனங்களை பார்த்துக்கொண்டு, ஆராய்ச்சிமணியின் டிங் டாங் கேட்டுக்கொண்டு, லால்குடியில் லா.ச.ரா. வின் சொல்லில் மயங்கிய தேவி தரிசனம், புதுக்கோட்டையில் நான் விட்டுசென்ற திரிசமன் தலங்களையும் திருகோகரணத்திலும், திருமயந்த்திலும், நார்த்தாமலையிலும் தரிசனங்கள் செய்து விட்டு, கானாடுகாத்தானில் டேரா போட்டு, பள்ளத்தூர் மஹாத்மியங்களை கண்டு களித்து, ஆத்தங்குடி பெரிய வீடு, சின்ன வீடு எல்லாம் சென்று, இன்னம்பூரில் திவ்யதரிசன்ம் செய்து விட்டு, நாளை பா.சே. க்கு பயணம். பிறகு என்ன? தொல்காப்பியம் தான்.

இன்னம்பூரான்
11 08 2015

Thursday, August 6, 2015

நண்பர்களே,

யான் தேசாந்திரியாக அலைகிறேன். எழுதுவதில் தாமதம். மன்னிப்பீர்களாக.
இன்னம்பூரான்

Saturday, August 1, 2015

நாளொரு பக்கம் 98

நாளொரு பக்கம் 98
Thursdayday, the 3rd July, 2015

‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
-வள்ளலார்

மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக இராமலிங்க அடிகளார், அருளினாரோ மேலே!

‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது. உன்மத்தம் தலைக்கேற, ஏறவே, அதன் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை:

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 
-(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
-#-

Wednesday, July 29, 2015

Puducherry Flash.

Puducherry Flash.

I hope to visit this site in the fast track.

PUDUCHERRY: An underground chamber close to a twelfth-century Siva temple at nearby Villianoor was on Wednesday found by workers engaged in renovation work. 

The workers came across a granite slab close to the Lord Somaskandar shrine and when they removed it, they found a 15 foot deep chamber with some stepping stones leading to it, officials said. 

The contractor engaged in renovation work said he got into the chamber and went ahead for a few feet and found it to be a strong structure. He could not proceed further because of the airtight nature of the basement, he said. 

Officials of the Revenue, Hindu Religious Institutions and Police departments who rushed to the spot opined that the chamber could have been used as a safety vault to store valuable icons and other valuables. 

The temple was constructed during the Chola period and it was estimated that it was constructed in 12th century. 

As soon as news spread of the chamber being found, a large number of people made a beeline to see it. 

Police were deployed to prevent people from getting close to the site as it has a narrow entrance.

With No Comments.


Puttaparthi Confidential

With No Comments.
*
The mystery over the treasure trove inside the late Sathya Sai Baba’s personal chamber ‘Yajur Mandir’ was on Friday unravelled with the disclosure that it contained 98 kg of gold, 307 kg of silver apart from Rs 11.56 crore in cash.
The Central Sathya Sai Trust, which conducted an inventory of the things stored inside the Yajur Mandir since it was broken open yesterday, came out with the announcement this evening listing details of the treasure trove.
The assessment was done in the presence of retired judge of Supreme Court A P Mishra and retired judge of Karnataka High Court Vaidyanatha.
An assessor approved by the Income Tax Department was also present to assist in evaluating the gold, jewellery and silver, Trust member and Sai Baba’s nephew R J Ratnakar told the media. Apart from five trustees, two members of the Council of Management including former Chief Justice of India PN Bhagavati, were also present as independent witnesses, he said.
Source: Business Standard today