Thursday, September 3, 2015

நாளொரு பக்கம் 95

நாளொரு பக்கம் 95

SATURDAY, THE 16TH JUNE 2015

‘கருதுமனம் புறம்போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த
கையும் ஆய், ஓர் கண் இட்டமையும் ஆய் வருவார்’.

இது திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சிலிருந்து ஒரு சிறிய செய்யுளின் ஒரு பாகம். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் - புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?" என்று அஞ்சவே தோன்றும்.”

என்று 1937லியே ரசிகமணி சிதம்பரநாத முதலியார் அவர்கள் கவலைப்பட்டார். கவலை தற்காலம் மிகவும் அதிகரித்து விட்டது.

பொருள்: குற்றாலநாதர், விடை மீதேறி, பவனி வருகிறார். அதை கட்டியக்காரன் முன்கூட்டி பாந்தமாக அறிவித்தவுடன், தேவர்களும், முனிவர்களும், அரக்கர்களும், சிவனடியார்களும் கூடி கண்டு மகிழ ஓடி வருகிறார்களாம். மகளிர் பல, அவர்களில். அந்த காலமல்லவா! ஆணாதிக்கம் கிடையாது. கவிராயர் அவர்களது மனநிலையை நிலைக்கண்ணாடியில் நமக்குக் காட்டுகிறார். ஒருகையில் வளையலை அணிந்த பெண்ணரசி ஒருவள், மற்றொரு கையில் அணிந்தாளில்லை. ‘ஒரு கண்ணுக்கு மை எடுத்த கையும் ஆய்...’ ஓடோடி வருகிறாள் மற்றொரு அழகி - ‘இருண்ட மேகம் சுற்றி சுருண்டு கழி எறியும் கொண்டையாள்’ -மற்றொரு கண்ணுக்கு மை தீட்டாமலே.

சற்றே மிகைப்படுத்திக்கூறுவது, இலக்கிய சுவை. அதன் ரசனை கூடுவதற்கு, நாமும் பக்தியின் அந்த நிலைக்கு செல்வது சாலத்தகும்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


No comments:

Post a Comment