சுவற்றில் அடித்த பந்து!
இன்னம்பூரான்
புதன் கிழமை: ஆகஸ்ட் 12, 2015
சிறிது நேரம் கிடைத்ததால், ஒரு சிறிய பதிவு; வழு தேடவேண்டாமே. சுவற்றில் அடித்த பந்து அதிவேகமாக திரும்பி வரும். பந்துக்கும், சுவற்றுக்கும் அடி தான் மிச்சம், வேறு ஆதாயமில்லை என்றாலும், அடித்தவன் கை நோகலாம்; வலு பெறலாம். அந்த மாதிரி தான் இந்த யாத்திரையின் போது கண்ட சில சமூகக் காட்சிகள். இந்தியாவுக்கு இருக்கும் கொடுப்பினையை சொல்லி மாளாது. என்னே பாரம்பரியம்! என்னே செங்கோலின் நேர்மை! என்னே வெண்குடையின் தருமம்! என்னே தெய்வ பக்தி! என்னே ஆற்றுப்படையாக பெருகி வந்து ஊக்கமளிக்கும் கலையார்வம்! என்னே வரலாற்று செய்திகள், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஏட்டுச்சுவடிகளிலும்!
இவற்றை நம் நாட்டு மக்கள் அறியாமல் குப்பை கொட்டுவதை கண்டால், மனம் கொதிக்கிறது. போகுமிடங்களில், மாணவ சமுதாயத்துடன் உறவு கொண்டாடினேன். என் மனம் முறிந்தது தான் மிச்சம், பல விஷயங்களை பற்றி பேசிப்பார்த்த பின். மெத்த படித்த மாணவர் ஒருவர் தனது விருதுகளை பாராட்டிக்கொண்டபின், சமுதாயம் தனது திறனை, அந்தோ பரிதாபம்!, பயன் படுத்திக்கொள்ளவில்லையே என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவரது துறைகளை பற்றி விசாரித்தால், ஒன்றும் தெரியாது என்று ஒத்துக்கொண்ட அவர், தனக்கு வழிகாட்டிகள் கிடைக்கவில்லை; ஆசிரியர்கள் உருப்போட்டதை தான் கிளிப்பிள்ளை போல் சொல்லி விட்டு, இடத்தை காலி செய்துவிடுவார்கள், பெற்றோர்கள் அறிவிலிகள் என்றவர், தனக்கு ஆங்கிலம் தெரியாது; சொல்லிக்கொடுத்ததைக்கூட தான் தலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அத்தனை தமிழ் மோகமாம். அதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டு உயர் அதிகாரிகள் தேர்வுக்கு படித்துக்கொண்டதாக சொன்னார். அதற்கான புத்தகம் எட்டாம் வகுப்புப்பாடம், தப்பும் தவறுமாக, தந்தி வாசகத்தில். சுருங்கச்சொல்லின், அவர் சம்பந்த்ப்பட்டவரையும், கல்வி வேஸ்ட். அதை அழுத்தம் திருத்தமாக சொன்ன பத்து வயது பையன், ‘நீங்க படிச்சு என்ன கண்டீங்க?’ என்று சுற்றி வளைத்துக்கேட்டான். தனது தந்தை பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அடிப்பதாகவும் சொன்னான். இது எல்லாம் கோயில் வளாகங்களில்! மற்றொரு மாபெரும் கோயிலின் மூலை கோபுரத்தின் நிழலில், சல்லாபம் நடந்து கொண்டிருந்தது. அதை ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த, தோரா யமாக முப்பது வயது வந்த மனிதன் ஒருவன் சுயலாகிரியில் இருந்தான். எங்களிடம் கடுப்பாக பேசி தெய்வ தரிசனத்தைத் தடுத்தாட்கொண்ட கோயில் காப்பாளர், அவர்களுக்கு உடந்தை!
மணிமேகலையின்,
“…படையிட்டு நடுக்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டா லகறலு முண்டோ!!!!!”
எனக்கு நினைவுக்கு வந்தது.
தூக்கம் வருகிறது; பிற பின்னர்.
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment