Friday, June 27, 2014

சொட்டு மருந்து! [1]

சொட்டு மருந்து!

இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=47260
Evening-Tamil-News-Paper_96997797490
சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.
உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.
சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.
“பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.
ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.
வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:
‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’
தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.
மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.
வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

Wednesday, June 25, 2014

பனையூர் நோட்ஸ் 5:நெடுநல்வாடை 5

பனையூர் நோட்ஸ் 5


இன்னம்பூரான்
25 06 2013

நெடுநல்வாடை  5
ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே...
(தொடருகிறது)
மழையும், மலையும், குளிரும் ஐம்பூதங்களை நமக்கு நினவு படுத்தின. அவையாவன: விண்வெளி, காற்று, தீ, நீர், மண். விண்வெளி என்ற ஆகாசகோட்டை நம் கற்பனைக்கெட்டாத அளவு பெரியது. 
விண்டுரைக்க, அறிய, அரியதாய் 
     விரிந்த வான வெளியென நின்றனை. 
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை 
     அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால் 
     வருவ தெத்தனை அத்தனை யோசனை, 
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

(மகாசக்தி வாழ்த்து - 1: மஹாகவி பாரதியார்)
நாம் வாழும் பூமண்டலம் தான் விண்வெளியில் உயர்ந்தது என்ற பத்தாம்பசலி தற்பெருமை சுக்குநூறாக உடைந்து விட்டது. அது பிரபஞ்சத்தின் ஒரு சிறுதுளியே என்று மேற்கத்திய விஞ்ஞானம் அறிந்து கொள்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியபட்டர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியார் போன்ற இந்திய விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். தற்காலம்  விண்வெளிப்பயணம், ஏவுகணை உந்துகை, ஏன் விண்வெளிக் குடியேற்றம் வரை, ஏதோ பக்கத்துப் பேட்டை போக்குவரத்தைப்போல பேசப்படுகிறது. க்யூராசிடி என்ற நவீன விண்கோள் கிரகத்தில் இறங்கி இரண்டு வருஷக்குடித்தனம் செய்யப்போகிறது. இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடுமோ!
வாயு தேவன் தென்றலாகவும் வருவான்; அனுமனையும், பீமனையும் பெற்ற அந்த பலசாலி தந்தை புயலாகவும் வீசுவான்;தென்றலாகவும் வந்து மகிழ்வூட்டுவான்; ஆடை கலைப்பான். முகத்திலே மிருதுவாக மேய்ந்து புன்னகை தருவிப்பான்; பாவையின் தோகையை ஊடுருவி கூந்தலை அலக்கழித்து ராஸலீலை செய்திடுவான்.  மேகத்தை விரட்டுவான். பாவேந்தர் பாரதி தாசன் ‘தென்றல்’ என்ற கவிதையில் சொல்வதைப்போல:


மென்காற்றும் வன்காற்றும்
அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14
.......
உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்!
பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு
உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18
****
அக்னி தேவன் என்று பூஜிக்கப்படும் ‘தீ’ யை பற்றி மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
தேவன் வந்தான்!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
சாமகிரியைகள் எல்லாம் புதியவை. மங்கலமானவை. சாஸ்த்ரோக்தம்.
எடுத்து வைத்து விட்டேன், குருநாதா!
யாகசாலைக்குக் கோலம் போட்டுவிட்டேன். 
செம்மண் கரையோரங்கள். வெள்ளைக்கோலங்கள், பிராணநாதா!
புஷ்பமாலைகள் வகைக்கு ஒன்று, தொடுத்துக் கோர்த்து அடுக்கியிருக்கிறேன், அப்பா!
முக்கனிகளும் கொணர்ந்தேன், தந்தையே! கூடை கூடையாக.
ஸ்வாமி! நாங்கள் தான் அண்டை, அயல். அணிகள் பல கொணர்ந்தோம்; ஆபரணக்குவியல் பார்த்தீரோ! நவரத்னங்கள் கொட்டிக்கிடப்பதைக் கண்டீரோ! எல்லாம் சமர்ப்பணம்.
சிஷ்யா! அக்னிதேவன் வந்தாரே. முகமன் கூறினாயோ?
ஸ்வாமி! கடைந்துகொண்டு இருக்கிறோம். 
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
எழுந்தருளவேண்டும், ஐயனே! 
நன்நிமித்தத்தீயே வருக. 
தெய்வத்திருமகனே வருக.
அன்னை ‘ஸ்வாஹா’ வந்திருக்கிறாளோ!
இருவரும் ஆசனத்தில் அமருக. 
அலங்காரங்கள், ஜோடனை, ஷோடசோபசாரங்கள், முகஸ்துதி, சாஷ்டாங்க நமஸ்காரம்.
அக்னிதேவனுக்கு அதீதப் ப்ரீதீ! சிஷ்யா! மறுபடியும் எல்லாரும் தண்டனிடுவோம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒரு பொறி பிறந்தது. 
பிறகு பறந்தது. 
தீ மூண்டது.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
கொழுந்து விட்டு எரிந்தது.
ஸ்வாஹா: ஸ்வாஹா: ஸ்வாஹா: ஆஹூதி! பூர்ணாஹூதி! 
அக்னிதேவன் ஸ்வீகரித்துக்கொண்டார். 
அக்னி தழுவ, தழுவ, முனகும் சப்தங்கள். 
மற்றபடி நிசப்தம்.
எனக்கு பசிக்கிறது.
அம்மா! அப்பாவுக்கு பசிக்கிறதாம்.
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
அடுப்பில் உனக்கு வாசம். வா! சடுதியில் வா! அவருக்கு பசி தாங்காது.
போஜனம்! தாம்பூலம்! அடுப்பில் பூனை! கணகணப்பும் உன் நல்வரவே!
என்ன அங்கே ஹீனக்குரல்! 
அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார், தந்தையே!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஸ்வாமி! ரக்ஷிக்கணும். 
அப்படியெல்லாம் பேசக்கூடாது. யான் சாமான்யன்.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை. 
எஜமானன் வந்தார். என் அன்னை...
தெரியுமே! அதனால் தான் அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார் போலும்!
ஈஷ்வரோ ரக்ஷது!
சாயுங்காலம்! 
சூர்யன் முழுதும் அஸ்தமிக்கவில்லை.
சந்திரோதய வேளை.
இருட்டவில்லை. மங்கிவிட்டது.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
சாகரம் சென்று வருகிறீர்களா?
ஆம் ஸ்வாமி! அக்னிதேவன் வந்தார்.
ஆற, அமர தழுவினார், என் அன்னையை.
உன் அன்னை அங்கு செல்லவே இல்லை, அப்பனே!
ஆம்! ஸ்வாமி! இல்லை, ஸ்வாமி!
அக்னி! பிறகு ஜலம்! இனி நான் என் அம்மாவை காண முடியாது. 
அவள் உன்னுள் என்றும் வாழ்வாள். உனக்கும் நித்யவாஸ ப்ராப்தம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!

(இன்னம்பூரான்
 02 07 2011)
நீரின் இன்றியமையாதை அது ‘அமிழ்தம்’ என்று சுருங்கச்சொல்லி தெளிவாக விளங்க வைத்து விட்டார், திருவள்ளுவர். 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று...நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.’ [குறள் 11 & 20]

தாய்மண்ணை தொட்டு வணங்குவது உலக மரபு. இன்னம்பூரில் நானும் செய்கிறேன். பிரதமர் மோடியும் செய்தார். போப்பாண்டவரும் செய்தார். 

‘நீர் எனும் பூதத்திலிருந்து தோண்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.னே முதன்மை.’ என்று பஞ்சஈகரணத்தில் விளைவுகளை ஆராய்ந்து எழுதிய ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவி சுவாமி சதானந்தர் கூறுகிறார்.

மழை பெய்தால் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும்; மறுபடியும் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும். இறைவா! என்னே உன் கருணை ! 

சுற்றி வளைத்து நெடுநல்வாடைக்கு வருகிறோம். உரை நச்சினார்க்கினியார்; சுவடிகளை பரிசோதித்துப் பதிவு செய்தது, தமிழ் தாத்தா உ வே சா.

மழைக்காலச் செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண் மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க  (13 – 28)

பாடலுக்கு
சொற்பொருள் விளக்கம்
                புன்கொடி முசுண்டை - மென்மையான முசுண்டைக்கொடி, பொதிப்புற வான்பூ - பருத்த வெண்ணிறப் பூ, பொன்போல் பீரமொடு - பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு, புதல் புதல் - புதர்கள் தொறும், மலர - மலர்ந்திருக்க, பைங்காற் கொக்கின் - பசுங்காலையுடைய கொக்கின், மென்பறை - மென்மையான சிறகு, தொழுதி - கூட்டம், இருங்களி பரந்த - கரிய வண்டல் மணலில் பரந்து, ஈர வெண்மனல் - ஈரமான வெண்மணலில், செவ்வரி நாரையொடு - சிவந்த வரிகளையுடைய நாரைகளோடு, எவ்வாயும் கவர - எந்தெந்த இடங்களில் மீன்கள் கிடைக்கின்றதோ  அங்கு நின்று மீன்களைக் கரவ, கயல் அறல் எதிர - மீன்கள் நீரினை எதிர்த்து வர, கடும்புனல் - வேகமாக வந்த நீரின் ஓட்டம், சாஅய் - தளர்ந்து, பெயல் - மழை, உலந்து - நீங்கிய, எழுந்த - எழுந்த, பொங்கல் வெண்மழை - மிகுதியான வேண்மேகம், அகல் இரு விசும்புன் - அகன்ற பெரிய வானத்தில், துவலை கற்ப - மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாக (தூவிக்கொண்டிருந்தன).
                அங்கண் - அவ்விடத்தில், அகல் வயல் - அகன்ற வயல்களில், ஆர் பெயல் - நிறைவாக மழை, கலித்து - செழித்து; வளர்ந்த, வண் தோட்டு - வளப்பமான கதிர்த் தாளினை உடைய, நெல்லின் - நெல்லின், வருகதிர் வணங்க - விளைந்த கதிர் வணங்கி நிற்க, முழுமுதற் கமுகின் - நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின், மணி உறழ் - நீல மணி போன்ற, எருத்தின் - கழுத்துப் பகுதியில், கொழு மடல் - செழித்து வளர்ந்துள்ள மடல்களில், அவிழ்ந்த - காய்த்துள்ள, குழுஉக்கொள் பெருங்குலை - கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகள், நுண்நீர் - உள்ளிருக்கும் நீர் வற்றி, தெவிள வீங்கி - திரண்டு புடைத்து, புடை திரண்டு - பக்கங்களில் பருத்து, தெண்நீர் - தெளிந்த நீரினையுடைய, பசுங்காய் - பசுமையான காய், சேறு கொள முற்ற - இனிமையான காய்களாக முற்ற, நளிகொள் - செறிந்து விளங்கும், சிமைய - மலையுச்சியில், விரவுமலர் - பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கம், வியன்கா - அகன்ற சோலையில், குளிர்கொள் சினைய - குளிர்ச்சியான மரக்கிளைகளில், குருஉத் துளி - குருத்துக்களில் மழைத்துளி, தூங்க - இடையறாது விழுந்து கொண்டிருக்க,
கருத்துரை
மென்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன.  பசுங்கால்களையும் மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கருநிற வண்டல் மணல் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன.  அவை மழைநீரின் பெருக்குத் தளர்ந்தவுடன் அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ அங்கே நின்று கொண்டு கவர்ந்தன.  மழை நீங்கிய அகன்ற வானத்தில் எழுந்த வெண்மேகம் மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டேயிருந்தன.
                அகன்ற வயல்களில் நிறைவாக மழை பெய்ததினால், செழித்து வளர்ந்த வளப்பமான தாளினையுடைய நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன.  நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல்களில் காய்ந்திருக்கும் பாக்குக் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி பருத்தும், பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின. மலை உச்சியில் பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன.
=#-
சித்திரத்துக்கு நன்றி:  http://hdfons.com/wp-content/uploads/2013/01/Rain-Drops-Wallpaper-1.jpg


Wednesday, June 18, 2014

பனையூர் நோட்ஸ் 4 நெடுநல்வாடை 4


பனையூர் நோட்ஸ் 4
இன்னம்பூரான்
18 06 2013

 நெடுநல்வாடை  4

‘... ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?/ பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்...
[தொடருகிறது]
நெடுநல்வாடையில் கூறப்படும் ‘கூதிர்க்காலத்தின் தன்மை’ பற்றி நான்கு வரி எழுதுவதற்குமுன் சில வார்த்தைகள். நான் தான் சொல்லி விட்டேனே! meandering இவ்விழையின் இயல்பு என்று.

கிருஷ்ணனை புகழ்ந்து விட்டு இராமனை விடுவார்களோ, நினைவில் இருக்கும் ரசிகமணி அவர்களின் குறிப்பின் வாசகம் கிடைக்க வில்லை என்றாலும்! அது அபராதமல்லவோ! அதா அன்று!  தேமொழியும், கீதா மதிவாணனும் அளித்த கீழ்க்கண்ட விளக்கமே, எம்மை ஶ்ரீராமசந்திர மூர்த்தியிடம் அழைத்துச்செல்லும் நன்நிமித்தமென்க.

{“...கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  [ ref: http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html }

ரசிகமணி டி.கே.சி. அவர்களின் ரசனையை தேடி களைத்து விட்டேன். அது பற்றி நான் மின் தமிழில் எழுதியது கூட கிடைக்கவில்லை.  அதனால், என் மனதில் பட்டதை எழுதத் துணிந்தேன்.
போரும் பாசறையும் புறத்திணை. உள்ளமெனும் அகம்வாழ்- துணையாக திகழ்பவளோ, எங்கோ இருக்கும் அசோக வனத்தில் இற்செறிக்கப்பட்டு வாடி இருக்கும் சீதா தேவி. அகம் தழுவிய புறம் தரும் அரும் காட்சியை - யுத்த காண்டத்தின் கடல் காண் படலத்தில் கம்ப நாட்டான் தரும் சொற்றலங்காரத்தையும் அது தரும் சித்திரக்காட்சியையும் - காண்போமாக.  

பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன் - கடலைக் கண்ணுற்றான். 
2 கடல்காண் படலம்.
....
'தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,
வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு?-ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ? 
7 கடல்காண் படலம்.

யுத்தத்திற்கும் ஆயத்தம் ஆகிவருகிறார்கள், ஒரு பெருஞ்சேனை. வானரசேனையல்லவா! ஆயத்தத்தின் யத்தனம் அவர்களின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது. ‘புறத்தும் அகத்தும் என்றார், கம்பர். கடலோரம் அல்லவா! கூதிர்பாசறையில் தனித்திருந்து மருகும் இராமனுக்கு தூக்கம் வரவில்லை. துயிலாத கண்ணன் தென்திசை-கடலை கண்ணுற்றான், என்றார், கம்பர். இதுவரை புறத்திணை. அவன் கடலை நோக்கும்போது, அவன் மனக்கண்ணில் வலம் வந்தது என்னமோ, சங்கு வளை அணிந்திருந்த ‘சீதா பிராட்டி’ [இது கம்பரின் சொல்.] இதற்கு மிஞ்சிய அகத்திணை/துணை யாது அய்யா? மயில்  போன்ற சீதாபிராட்டி இருந்த  இடம் நெடுந்தூரமில்லை என்று அகம்  சொல்லிற்று. விரகதாபத்தால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வரும் இராமனை, ‘சடக்’ என்று புறத்திணை தடுத்தாட்கொண்டது; தன்மானம் தலைக்கேறியது. வில்லின் நாணும் முறுக்கேற்றிக் கொண்டது.  ‘ஏழை மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?’ என்று மறுபடியும், அகம். அதாவது, சீதாபிராட்டியின் புன்முறுவல் ‘வாட்டர் மார்க்காக’ அகம் ஆண்டது. எழுந்த வினா: அந்த இலங்கை  அரக்கர்களுடனே உனக்கு என்ன உறவு இருக்கிறது? கூதிர் பாசறையில் அகமும், புறமும் மாற்றி மாற்றி இராமனை  ‘to be or not to be’ என்ற கவலையில் ஆழ்த்தினவோ! நெடுநல்வாடையின் கூதிர்காலம் பெரியாழ்வாரிடமும், கம்பநாட்டானிடமும் இழுத்துச்சென்றால், நானா பிணை? நெடுல்வாடைக்கு திரும்புவோம்.

கூதிர்க்காலத்தின் தன்மை
நாங்கள் காஷ்மீர் போயிருந்த போது, நண்பர்களின் உதவியால், ஊர்சுற்றிகள் போகாத இடங்கள் எல்லாம் போய் ஆனந்தத்துடன் பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட காட்சி ஒன்று: ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் கொண்ட பல ஆட்டுமந்தைகளை, படை போல் திரண்டிருந்த இடையர்கள் மேயவிட்டுக்கொண்டு, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும், அசகாயமாகக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். போக வர பல மாதங்கள் ஆகுமாம். சோத்துக்கடை, பாக சாலை, உக்கிராணம் முதற்கொண்டு பலமான முன்னேற்பாடுகள். சற்று தூரம் அவர்களுடன் நடந்த பின் தான் யாதவ குல உன்னதம் தென்பட்டது. அதே மாதிரி, வெப்பம் தவிர்க்க, புல்தரைகள் நாடி, நூற்றுக்கணக்கான மாடுகள் வருடாவருடம்  கச் பிராந்தியத்திலிருந்து தெற்கு குஜராத் நோக்கி புலன் பெயர்வதையும் பார்த்துத் திகைத்தோம். நெடுநல்வாடையின் கூதிர்க்காலத்தின் தன்மை, அதை நினைவுக்கு கொண்டு வைத்தது. 
நெடுநல்வாடையில் விவரிக்கப்படும் காலமோ குளிர்காலம். இருப்பதோ கடலோரம். அடிக்கிறதோ ஊதற்காற்று. ஒரே ஈரபதம். ஆதவன் அஸ்தமித்து, இருள் சூழ்ந்து கொண்டது. பனி மழை. குளிர் தாங்கவில்லை. ஆடுமாடுகள் மேய்வதை மறந்து விட்டன. பெண் குரங்குகள் (மந்தி) கோணாமாணா என்று உடலை வருத்திக்கொண்டன. புட்கள் மரக்கிளைகளிலிருந்து வீழ்ந்தன. தாங்கொண்ணா சினம், குளிர் தாங்காமல். அதனால், ஆவினம் பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து விரட்டின. ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே.
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9 – 12 நெடுநல்வாடை)
மா – கால்நடை/ மேயல் மறப்ப – மேய மறந்து போய்/ மந்தி கூர – பெண் குரங்குகள் உடலை வளைத்து/பறவை படிவன வீழ – பறவைகள் இருக்கையிலிருந்து விழ/ கறவை – ஆவினம்/கன்று கோள் ஒழிய –பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து/  கடிய – கோபத்தில்/, வீசி –வீசி/குன்று குளிர்ப்பன்ன –மலையை உறைய வைக்கும்/ கூதிர்ப் பானாள் – குளிர் நள்ளிரவுகள்.
உசாத்துணை: கம்பராமாயணம்; எமது ’அகம்’ முன் கொணர்ந்தது; டி.கே.சி.யின் ரசனை.
சித்திரத்துக்கு நன்றி.http://www.noolulagam.com/book_images/6020.jpg

-#-

Monday, June 16, 2014

பனையூர் நோட்ஸ் 3: நெடுநல்வாடை 3

பனையூர் நோட்ஸ் 3

இன்னம்பூரான்
17 06 2013

 நெடுநல்வாடை  3
[தொடருகிறது]
‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற...’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?...
ஓ! கோவர்த்தன கிரிதாரி என்ற சேவகனை பார்ப்போமே. நெடுநல்வாடை, நம்மை ஆய்ப்பாடி யாதவ குல சத்குருவிடம் எடுத்துச் சென்று விட்டு வரட்டுமே. எங்கிருந்து வந்தான், அவன்? கொடுங்கோலன் கம்சனின் காராகிருஹத்திலிருந்து புலன் பெயர்ந்தவன் அல்லவோ! அவன் தானே,  
யானும் இடர்மிகுந்து வாடுகையில், எங்கிருந்தோ வந்து ‘இடைச்சாதி நான்; மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்...’ என்றான்; மற்றம் பல சொன்னான், அந்த பண்டைக் காலத்துப் பயித்தியம். அதற்கென்ன இப்போ? அந்த சாரதியை பற்றி பாரதி சொல்லாததா? யாராவது கேட்டா, பாத்துக்கலாம். கேட்டுச்சொன்னால் தானே சுவை. தனக்குதானே ஆலாபனை செய்து மகிழ, அல்ட்ரா சவுண்டு எதுக்குச் சாமி?
‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும்...’ இடி முழங்கி, மின்னல் பளிச்சிட, உறுமிக்கொண்டு அலைந்து வரும் நீருண்ட மேகங்கள் பொழியும் மழை படுத்தும் பாடு: ஆவினம் பீதியில் உறைந்த மாதிரி, உடல் நனைந்த உபாதையினாலும் இன்னல்களின் உபத்ரவம் தாங்காமலும் , தவிக்கின்றன. இடைச்சாதி மகளிர் நனைந்த உடையினால், நாணமிகுந்து, தலை குனிந்தனர். கண்ணபிரான் கோவர்த்தன கிரியையே பரந்த வெண்குடையாக தூக்கிப்பிடித்து, ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதற்கிணங்க, லோக சம்ரக்ஷணம் செய்கிறார். அதற்கு பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்.

கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றும ழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

நான் யார் பெரியாழ்வார் பாசுரத்துக்குப் பாடம் எடுப்பது. தாரதம்யம் இல்லையோ, இப்பூவலகில்?கோஹினூர் வைரமிருக்க, ரங்கோன் டயமண்டுக்கு அலைவரோ? அபரஞ்சி தஙமிருக்க, கில்ட் நகை அணியலாமோ? நிதானமாக படியுங்கோ. ‘தத்துப்பித்து’ சொல்றமாதிரி, இது கம்பைய்ண்ட் ஸ்டடி அல்லவோ!
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் மேகமழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக்கொண்டு நின்றபடிக்கு ஓர் உவமை கூறுகின்றார் - முதலடியினால்; மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையையெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு: “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்”  எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க.  கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்; கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும் அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள்.  கடு - ?? என்ற வடசொல்விகாரம்.  கவளம் - ???. யானையின் உணவு.  (அடிவாய் இத்யாதி) ஒருதிருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக்கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க.  அடிவாய் - அடியிலே; வாய் - ஏழனுருபு. உற - ஊன்றும்படி.  மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கினகுடையாமென்பது - பின்னடிகளின் கருத்து.  கதுவாய்ப்படுதலாவது - குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது; வேறுவகையாகவுமுரைக்கலாம்.
உபயம்: http://dravidaveda.org

குறிப்பு: அங்கேயும், இங்கேயும் சஞ்சாரம் பண்ணுவதிலே தான் ருசி. எல்லை கடந்த பாடம். ‘கலாநிதி’ க.  கைலாசபதி அவர்களின் ஒப்பியல் இலக்கிய பாடமும் ஒரு முன்மாதிரி தானே.  அதான், அன்றே சொல்லி விட்டேனே, ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’!

-#-

போன மச்சான்...

போன மச்சான்...
இன்னம்பூரான்
16 06 2014
மச்சான்களில் பலவிதம். சிலர் போகவும் மாட்டார்கள்; போனால் வரவும் மாட்டார்கள். சிலர் பிகு மாஸ்டர்கள்.  தாம்பூலம் வைத்து அழைத்தால் தான் வருவார்கள். சிலர் கூப்பிடாவிட்டாலும், வந்துத் தொலைப்பார்கள். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்ற ரகமும் உண்டு.  மாற்றான் வீட்டு தோட்டத்துப் பூவா? என்று கேட்டு, என்னை மாட்டி விடாதீர்கள். மட்டறுத்து விடுவார்கள். ஆமாம். சொல்லிப்போட்டேன். எதையோ எழுத வந்து விட்டு எதையோ எழுதறேன்!
ஐயெஸீ 3 [ISEE-3: International Sun-Earth Explorer-3] என்றொரு விண்கலம், மண்கலமாகப்போறது, 36 வருடங்கள் பிரபஞ்ச சஞ்சாரம் செய்த பிறகு. 
பயோ-டாட்டா: 

தோற்றம் 1978: தாயுமானவர் நாஸா. ஊழியங்கள் பல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மெட்ரோ
மாதிரி வரத்துப்போக்கு. சூர்யோவாயு பற்றி தகவல் சேகரிப்பு, தடம் மாறி நிலவு தரிசனம், செப்டம்பர் 1985ல் ஜியகோபினி-ஜின்னர் என்ற வால் நக்ஷத்திரத்தின் வாலுருவதல் போன்ற பணிகள், பின்னர் போல்டாக, மறுபடியும் கிறுபடியும் கிரகசஞ்சாரம். நாஸா பிரகடனித்த ஓய்வு 1997. பிறகு, என் மாதிரி ஊர் சுற்றல். சும்மா. 1997லிருந்து கதிரவ பிரதக்ஷிணம். உலகம் நோக்கி  யாத்திரை, இப்போது. இரண்டு மாதத்தில் நெருங்கி விடும். மதியில்லாததால், மதியுடன் மோதிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. பின்னர் தடம் மாறி, திக்கு தெரியாமல் சூரியனை வலம் வந்து கொண்டிருக்குமோ என்ற ஐயமும் இருக்கிறது. என்ன பிரச்னை? சிக்கல் யாதும் இல்லை. ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழி நடத்தல் கையேடு [ஆபரேட்டிங் மேன்யுவல்] இல்லையே. {முனைவர் நா.கா., த.ம. அ.விடம் சொல்லியிருந்தால், மின்னாக்கம் செய்து வச்சுருப்போம் இல்லை!]
ஆபத்பாந்தவனாக வந்து இருப்பது, மிஸ்டர்.டென்னிஸ் விங்கோ என்ற ஆகாசகங்கை இஞ்சினீயர். மூடப்பட்ட ஒரு மக்டெனால்ட் சாப்பாட்டுக்கடை யிலிருந்து சக்கை போடு போடும் ஸ்கைக்கோர் கம்பெனி தான் அவருக்கு கை கொடுக்கிறது. சாண் கையில் முழம் அளக்கும் விந்தை மனிதரவர். போறப்போக்கை பார்த்தால், விண்கலத்தை மண்ணில் இறக்கிடுவாங்க போல் இருக்கு.
எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ. ஐயெஸீ 3 மண்கலமானவுடன், சவுடால் பொருத்தமாக, ஒரு பாட்டுப்போடுவார். 
-#-
தகவல் உபயம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 16 06 2014

சித்திரத்துக்கு நன்றி: http://yournewsticker.com/wp-content/uploads/2014/05/NASA-ISEE-3-1.jpg

Sunday, June 15, 2014

பனையூர் நோட்ஸ் 2 2.நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 2

இன்னம்பூரான்
15 06 2014

2.நெடுநல்வாடை
உலகிலே அதிக மழை பெய்யும் இடம் என்று பாலபாடத்தில் படித்த சிரபுஞ்சிக்கு போனபோது பெரிய குடை எடுத்து சென்றிருந்தோம். மழை என்னவோ பெய்யவில்லை! என்ன தான் மழை பெய்தாலும், அந்த ஊரில் தண்ணி கஷ்டமாம்!  தூறல், நனைவதற்கு இதமாக இருந்தது. எப்படி தெரியுமா? தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ‘சிந்தாமணி‘ இலக்கியத்தை அச்சுக்குக் கொடுக்க கிளம்பும் போது, ‘தூறுகிறது போலிருக்கிறதே‘ என்று திரு.கோபாலசாமி முதலியார். தயங்கி தயங்கி சொல்ல. ‘...சிறு தூறல் நல்லது தான். குற்றமில்லை. புறப்படலாம்.‘ என்றாராம், தாத்தா. ‘நாளும் கோளும் என் செய்யும்?’ என்று அப்பர் சுவாமிகளிடம் வினவிய திருஞானசம்பந்தர் 5 ஆவது கோளறு பதிகத்தில், ‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல அடியார்க்கு மிகவே’ [‘...என் உள்ளத்தில் புகுந்து சிவபெருமான் தங்கியுள்ளதால்...முழுங்குகிற இடி,மின்னல்...நல்லதே செய்யும்.] என்று ஆணையிட்டுக்கூறியது தாத்தாவின் நினைவுக்கு வந்திருக்கலாம். அந்த பதிகம் எனக்கு 1960ல் தெரியவந்தது காஞ்சி முனிவரின் அனுக்ரஹ பாஷணையினால். எட்டு கிரஹங்கள் ஒரு நாளில், ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்பதால் பெருங்கேடு வரும் என்று ஜோதிட உலகில் பரபரப்பு. எல்லாம் சர்வநாசம் என்று கூவினாலும், அவர்கள் தக்ஷிணை வாங்கிக்கொள்ள மறக்கவில்லை!  நானும், என் குடும்பமும் அன்று ‘வழிப்பறி கொள்ளை புகழ்’ மொகல்சராய் பாஸெஞ்சர் வண்டியில் பயணம், தந்தை சொல் மிக்க மந்திரமான கோளறு பதிக தியானம் செய்து கொண்டு. பிழைத்து மிஹிஜாம் ரயில் நிலையத்தில் இறங்கினோம் என்க.

இடி, மின்னல் மழை என்றவுடன், சின்ன வயதில் அப்பா சொன்ன கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ‘சோ’ என்று மழை பொழிகிறது. ஆலங்கட்டி மழை. வீதி நெடுக ஆறாய் ஓடியது, சக்கையும், சகதியுமாக. ‘...நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி (16-11-1916) புதன்கிழமை நல்ல நாளில் பாரதியார்...ஒரு மாடி வீட்டிற்கு குறைந்த வாடகைக்குக் குடியேறினார்...அன்று மாலை சுமார் நாலு மணியிலிருந்தே மேகக்கூட்டங்கள் குவிந்து குவிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன. எங்கள் வீடு ...மழைக் காலத்திற்குச் சுகமில்லை...இரண்டு மெத்தைகளுக்கு நடுவிலே இருக்கும் பள்ளமான அறை, வீதிப்புறம் இருக்கும் அறை, தொட்டில் இருக்கும் அறை - இவை மூன்றே நனையாத இடங்கள். மற்ற இடமெல்லாம் தெப்பமாகிவிடும்.’ என்று திருமதி யதுகிரி அம்மாள்
எழுதிய மாதிரியான இக்கட்டான நிலைமை. ஒரு தெப்பமான அறையில் அடைபட்டு கிடந்த இருவரில் ஒருவன், ‘இந்த மழை நிற்காது.’ என்று ஆரூடம் கூறிவிட்டு, மல்லாக்கப்படுத்தானாம். அடுத்தவனோ யதார்த்த வாதி, பிழைக்கிற பிள்ளை. ‘என்று தான் மழை நிற்கவில்லை?’ என்று வினாக்குள் விடையடக்கி சொல்லி விட்டு, தன் அலுவலை கவனிக்கப் போனானாம். அந்த மாதிரி...

பொய்யா மொழி போல, இடை விடாது பொய்க்காமல் பெய்த மழையிலிருந்து ஆவினத்தை காப்பாற்ற  தலை தெறிக்க ஓடினராம், இடைச்சாதி மக்கள்.  அதை எத்தனை தத்ரூபமாக நக்கீரனார் சொல்கிறார் என்பதை பாருங்கள்.

ஆடு மாடு மேய்க்கும் இடைசாதியினர் நீண்டு வளைந்த கோல் ஒன்றை வைத்திருப்பார்கள், மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமியை போல; மக்களை மேய்க்க அவதரித்த ஏசு பிரானை போல. அவர்களுக்கு இந்த மழை, வெள்ளம் எல்லாம் பிடிக்காது. குழப்பம்; பசு மாடுகளின் அவஸ்தை கண்டு விசனம். கால் நடைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  அவர்கள் அணிந்திருக்கும் பூமாலைகளிலிருந்து நீர் சொட்டுகிறது. ‘சில்’ லென்ற ஈர காத்து வேறே. குளிரில் கன்னங்கள் உப்ப, கைகள் நடுங்க, கடுங்குளிரில் வாடுகிறார்கள். எப்படியோ கனல் மூட்டி குளிர் காய்கிறார்கள்.

இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க  (3 – 8)
ஆர்கலி – வெள்ளம், சமுத்திரம் / முனைஇய –வெறுக்கும் / கொடுங்கோல் கோவலர் –வளைந்த கோல் பிடிக்கும் இடைச்சாதியினர் / ஏறுடை – கால் நடை / இன நிரை – மந்தை /  புலம் பெயர் – இருக்கும் இடத்தை விட்டு விலகி / வேறு புலம் பரப்பி / புலன் பெயர்ந்து /  புலம்பொடு – புலம்பலோடு / கலங்கி –, குழம்பி, விசனத்துடன் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழியும் /  நீடு இதழ் கோடல் கண்ணி– நீண்ட இதழ்கள் கொண்ட கோடற்பூமாலைகள் /   மெய்க்கொள் / அவர்களது உடலில் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழிய  /  பலருடன் -பலருடன் / பெரும் பனி நலிய – குளிரினால் வருந்தி / கவுள் புடையூஉ நடுங்க – உப்பிய கன்னங்களுடன்/ கைக்கொள் கொள்ளியர் –கைகளை தணலுக்கு மேலாக வைத்து குளிர் காய்கிறார்கள்.
இந்த எட்டுவரி யாப்பை ஒரு உருவகமாக கற்பனை செய்தால்:
ஆழ்கடலும், சினையுற்ற மேகங்களும், மழையும் ஒரு ‘மறுபடியும் கருவடையும்’ காலச்சக்கரமே. அதில் உழலும் உயிரினங்கள் தான் கால்நடை மந்தை. பாலையும் கறந்து, தோலையும் பதனிட்டு ஆதாயம் தேடுபவர்கள் தான் குளிர்காயும் மானிட ஜன்மங்கள். இது ஒரு உருவகம். மழை ஒரு இயற்கை வளம். அதிலிருந்து மந்தையை மீட்டு, குளிர் காய்ந்து தன்னையும் மீட்டு விமோசனம் காண்பவன் தான் ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?
குறிப்பு: முனைவர் வைதேகியின் ஆங்கில மொழியாக்கம் படிக்கக்கிடைத்தது. நன்றி.

Saturday, June 14, 2014

பனையூர் நோட்ஸ் 1: நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 1



முன்னுரை

மும்பையிலிருந்து கொண்டு ‘பனையூர் நோட்ஸ் எழுதலாமா என்று கேட்காதீர்கள். ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்...’ என்பது தானே தமிழ் பண்பு. இன்றிலிருந்து என் தாய்மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக உத்தேசம். கற்றுக்கொள்வதை உடனுக்குடனே பகிர்ந்து கொள்வது சாலவும் தகும், என் வயதில்! விருப்பம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். நட்புரிமையுடன், திசை மாற்றாமல், எள்ளி குதிக்காமல் அளிக்கப்படும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் கிடைக்கலாம். லாபம் ஒண்ணு. தனித்து விடப்பட்டால், சொந்த சாஹித்யமாச்சு. லாபம் இரண்டு. ‘பனையூர் நோட்ஸ்’ என்ற தலைப்பு ஒரு நெகிழ்வியல்பு கொடுக்கிறது. ‘திக்குத் தெரியாத காட்டில் புகுந்து விளையாடலாம். லாபம் மூன்று. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது போல மனம் இழுத்துச் செல்லும் மார்க்கத்தில்  நமது யாத்திரை பயணிக்கும். அதற்கு தடையேதும் இல்லை. லாபம் நான்கு. முதல் அடி எடுத்து வைச்சாச்சு.

பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன். நன்றி அவருக்கு; தாமதத்திற்கு சால்ஜாப்பு நமது. ஹிலேரி பெல்லாக் என்ற ஆங்கிலேய கட்டுரையாளர் எதை பற்றியும் எழுதுவார். ஒரு தலைப்பு ‘On Nothing’. நமக்கு ஒரு முன்னோடியும் கிடைச்சாச்சு. சில வருடங்களுக்கு முன்னால், அந்த தலைப்பை வைத்துக்கொண்டு ஒரு ரோட்டரி மீட்டிங்கை சமாளித்தேன். எல்லாரும் வரவேற்றார்களாம். ‘அனுபவம் பேசுகிறது’ என்று சொல்லி மார் தட்டிக்கொள்ளலாம்.

இன்னம்பூரான்
14 06 2013

  1. நெடுநல்வாடை

சங்கத்தமிழினின் பத்துப்பாடல்களில் ஒன்றாகிய 188 அடிகள் கொண்ட நெடுநல்வாடை என்ற நூலை ‘ஒரு பெருஞ்சுரங்கம்’ என்று திரு.வி.க. பாராட்டுகிறார்கள். ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை என்ற அந்த பெருந்தகை, ‘ ஒரு சிறு புல் நுனி மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் ஒரு பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன.’ என்கிறார். இதை விட வேறு என்ன பேறு வேண்டும், நமக்கு? எனக்கு நல்லதொரு தருணம் கிட்டியது. பாண்டித்தியம் மிகுந்த தமிழாசிரியர்களால் இந்த சங்கப்பாடல் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும். ஆய்வுகள் முன்னிறுத்தப்படும். நான் அங்கு ஒரு மாணவன். அதற்கெல்லாம் பீடிகை தான், இங்கே.

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா
இன்று முதல் இரண்டு அடிகள் மட்டும்.
மழை பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
தரணி தணிலே சூடு தணிந்து குளிர் பரவ, நீருண்ட மேகங்கள் உயர உயர ஏறின. புவனத்தை வளைத்தன. பொய்க்காமல் மழை பொழிந்தது. [மும்பையில் மான்ஸூன் மழைக்காக காத்திருக்கிறோம். ‘எங்கிருந்தோ வந்த’ மத்திய அரசின் பட்ஜெட்டே வருண பகவானின் கருணை பொறுத்துத் தான் அமையும். மாதுங்கா சங்கர மடத்திலே வருணஜபம் செய்தார்கள்.]
பழைய நினைவலை:
1966ம் வருடம் அந்தக்காலத்து கெரவெல் விமானத்தில் பம்பாய்-சென்னை பயணம். எட்டிப்பார்த்தால் பல மாடிகளுக்கு அடுக்கடுக்காய், கெட்டியாய், பஞ்சு மிட்டாய் போல இருந்தாலும், ஒரு நெகிழ்வியல்பு, ஆபரணமணியா, ஆலை குலைந்து நின்ற குதும்பாய் போல! நீருண்ட கார்மேகங்களுக்கு, நிமிடமொரு மேனியாக, வினாடியொரு அங்கமாக, மேகதூதம் விரைந்து விரைந்து நடந்து கொண்டிருந்தது. நெஞ்சம் மறக்கவில்லை.
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
இப்போது புரிகிறது.
விட்டேனே, அத்துடன்? மஹாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். 
புயற்காற்று
(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)
ஒரு கணவனும் மனைவியும்:
மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

மஹாகவியின் இந்த பாடலுக்கு, இடம், பொருள், ஏவல் உளது. யாராவது ஆயிரம் பேர் கேட்டால், பார்க்கலாம்.

அன்புடன்,
இன்னம்பூரான்
14 06 2014

குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இவை உதவும்; மற்றும் பல உள.
  1. உ.வே.சா. பதிப்பு (மூன்றாவது பிரசுரம்: 1931): https://archive.org/stream/TamilNedunalvadai/book-Tamil-Nedunalvadai-Nachchi-Uvesa-1909#page/n0/mode/1up
2. சில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்) - மின்னூல் - என். சொக்கன்



சித்திரத்துக்கு நன்றி: http://cache2.asset-cache.net/gc/AD3992-002-layer-of-dense-cumulonimbus-clouds-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=Fo5uDjh7ejCZ0DTbbB0Qm6MPwYbIRBpMiG4xh9IVA0U%3D