போன மச்சான்...
இன்னம்பூரான்
16 06 2014
மச்சான்களில் பலவிதம். சிலர் போகவும் மாட்டார்கள்; போனால் வரவும் மாட்டார்கள். சிலர் பிகு மாஸ்டர்கள். தாம்பூலம் வைத்து அழைத்தால் தான் வருவார்கள். சிலர் கூப்பிடாவிட்டாலும், வந்துத் தொலைப்பார்கள். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்ற ரகமும் உண்டு. மாற்றான் வீட்டு தோட்டத்துப் பூவா? என்று கேட்டு, என்னை மாட்டி விடாதீர்கள். மட்டறுத்து விடுவார்கள். ஆமாம். சொல்லிப்போட்டேன். எதையோ எழுத வந்து விட்டு எதையோ எழுதறேன்!
ஐயெஸீ 3 [ISEE-3: International Sun-Earth Explorer-3] என்றொரு விண்கலம், மண்கலமாகப்போறது, 36 வருடங்கள் பிரபஞ்ச சஞ்சாரம் செய்த பிறகு.
பயோ-டாட்டா:
தோற்றம் 1978: தாயுமானவர் நாஸா. ஊழியங்கள் பல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மெட்ரோ
மாதிரி வரத்துப்போக்கு. சூர்யோவாயு பற்றி தகவல் சேகரிப்பு, தடம் மாறி நிலவு தரிசனம், செப்டம்பர் 1985ல் ஜியகோபினி-ஜின்னர் என்ற வால் நக்ஷத்திரத்தின் வாலுருவதல் போன்ற பணிகள், பின்னர் போல்டாக, மறுபடியும் கிறுபடியும் கிரகசஞ்சாரம். நாஸா பிரகடனித்த ஓய்வு 1997. பிறகு, என் மாதிரி ஊர் சுற்றல். சும்மா. 1997லிருந்து கதிரவ பிரதக்ஷிணம். உலகம் நோக்கி யாத்திரை, இப்போது. இரண்டு மாதத்தில் நெருங்கி விடும். மதியில்லாததால், மதியுடன் மோதிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. பின்னர் தடம் மாறி, திக்கு தெரியாமல் சூரியனை வலம் வந்து கொண்டிருக்குமோ என்ற ஐயமும் இருக்கிறது. என்ன பிரச்னை? சிக்கல் யாதும் இல்லை. ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழி நடத்தல் கையேடு [ஆபரேட்டிங் மேன்யுவல்] இல்லையே. {முனைவர் நா.கா., த.ம. அ.விடம் சொல்லியிருந்தால், மின்னாக்கம் செய்து வச்சுருப்போம் இல்லை!]
ஆபத்பாந்தவனாக வந்து இருப்பது, மிஸ்டர்.டென்னிஸ் விங்கோ என்ற ஆகாசகங்கை இஞ்சினீயர். மூடப்பட்ட ஒரு மக்டெனால்ட் சாப்பாட்டுக்கடை யிலிருந்து சக்கை போடு போடும் ஸ்கைக்கோர் கம்பெனி தான் அவருக்கு கை கொடுக்கிறது. சாண் கையில் முழம் அளக்கும் விந்தை மனிதரவர். போறப்போக்கை பார்த்தால், விண்கலத்தை மண்ணில் இறக்கிடுவாங்க போல் இருக்கு.
எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ. ஐயெஸீ 3 மண்கலமானவுடன், சவுடால் பொருத்தமாக, ஒரு பாட்டுப்போடுவார்.
-#-
தகவல் உபயம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 16 06 2014
சித்திரத்துக்கு நன்றி: http://yournewsticker.com/wp-content/uploads/2014/05/NASA-ISEE-3-1.jpg
No comments:
Post a Comment