பனையூர் நோட்ஸ் 2
இன்னம்பூரான்
15 06 2014
2.நெடுநல்வாடை
உலகிலே அதிக மழை பெய்யும் இடம் என்று பாலபாடத்தில் படித்த சிரபுஞ்சிக்கு போனபோது பெரிய குடை எடுத்து சென்றிருந்தோம். மழை என்னவோ பெய்யவில்லை! என்ன தான் மழை பெய்தாலும், அந்த ஊரில் தண்ணி கஷ்டமாம்! தூறல், நனைவதற்கு இதமாக இருந்தது. எப்படி தெரியுமா? தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ‘சிந்தாமணி‘ இலக்கியத்தை அச்சுக்குக் கொடுக்க கிளம்பும் போது, ‘தூறுகிறது போலிருக்கிறதே‘ என்று திரு.கோபாலசாமி முதலியார். தயங்கி தயங்கி சொல்ல. ‘...சிறு தூறல் நல்லது தான். குற்றமில்லை. புறப்படலாம்.‘ என்றாராம், தாத்தா. ‘நாளும் கோளும் என் செய்யும்?’ என்று அப்பர் சுவாமிகளிடம் வினவிய திருஞானசம்பந்தர் 5 ஆவது கோளறு பதிகத்தில், ‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல அடியார்க்கு மிகவே’ [‘...என் உள்ளத்தில் புகுந்து சிவபெருமான் தங்கியுள்ளதால்...முழுங்குகிற இடி,மின்னல்...நல்லதே செய்யும்.] என்று ஆணையிட்டுக்கூறியது தாத்தாவின் நினைவுக்கு வந்திருக்கலாம். அந்த பதிகம் எனக்கு 1960ல் தெரியவந்தது காஞ்சி முனிவரின் அனுக்ரஹ பாஷணையினால். எட்டு கிரஹங்கள் ஒரு நாளில், ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்பதால் பெருங்கேடு வரும் என்று ஜோதிட உலகில் பரபரப்பு. எல்லாம் சர்வநாசம் என்று கூவினாலும், அவர்கள் தக்ஷிணை வாங்கிக்கொள்ள மறக்கவில்லை! நானும், என் குடும்பமும் அன்று ‘வழிப்பறி கொள்ளை புகழ்’ மொகல்சராய் பாஸெஞ்சர் வண்டியில் பயணம், தந்தை சொல் மிக்க மந்திரமான கோளறு பதிக தியானம் செய்து கொண்டு. பிழைத்து மிஹிஜாம் ரயில் நிலையத்தில் இறங்கினோம் என்க.
இடி, மின்னல் மழை என்றவுடன், சின்ன வயதில் அப்பா சொன்ன கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ‘சோ’ என்று மழை பொழிகிறது. ஆலங்கட்டி மழை. வீதி நெடுக ஆறாய் ஓடியது, சக்கையும், சகதியுமாக. ‘...நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி (16-11-1916) புதன்கிழமை நல்ல நாளில் பாரதியார்...ஒரு மாடி வீட்டிற்கு குறைந்த வாடகைக்குக் குடியேறினார்...அன்று மாலை சுமார் நாலு மணியிலிருந்தே மேகக்கூட்டங்கள் குவிந்து குவிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன. எங்கள் வீடு ...மழைக் காலத்திற்குச் சுகமில்லை...இரண்டு மெத்தைகளுக்கு நடுவிலே இருக்கும் பள்ளமான அறை, வீதிப்புறம் இருக்கும் அறை, தொட்டில் இருக்கும் அறை - இவை மூன்றே நனையாத இடங்கள். மற்ற இடமெல்லாம் தெப்பமாகிவிடும்.’ என்று திருமதி யதுகிரி அம்மாள்
எழுதிய மாதிரியான இக்கட்டான நிலைமை. ஒரு தெப்பமான அறையில் அடைபட்டு கிடந்த இருவரில் ஒருவன், ‘இந்த மழை நிற்காது.’ என்று ஆரூடம் கூறிவிட்டு, மல்லாக்கப்படுத்தானாம். அடுத்தவனோ யதார்த்த வாதி, பிழைக்கிற பிள்ளை. ‘என்று தான் மழை நிற்கவில்லை?’ என்று வினாக்குள் விடையடக்கி சொல்லி விட்டு, தன் அலுவலை கவனிக்கப் போனானாம். அந்த மாதிரி...
பொய்யா மொழி போல, இடை விடாது பொய்க்காமல் பெய்த மழையிலிருந்து ஆவினத்தை காப்பாற்ற தலை தெறிக்க ஓடினராம், இடைச்சாதி மக்கள். அதை எத்தனை தத்ரூபமாக நக்கீரனார் சொல்கிறார் என்பதை பாருங்கள்.
ஆடு மாடு மேய்க்கும் இடைசாதியினர் நீண்டு வளைந்த கோல் ஒன்றை வைத்திருப்பார்கள், மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமியை போல; மக்களை மேய்க்க அவதரித்த ஏசு பிரானை போல. அவர்களுக்கு இந்த மழை, வெள்ளம் எல்லாம் பிடிக்காது. குழப்பம்; பசு மாடுகளின் அவஸ்தை கண்டு விசனம். கால் நடைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் பூமாலைகளிலிருந்து நீர் சொட்டுகிறது. ‘சில்’ லென்ற ஈர காத்து வேறே. குளிரில் கன்னங்கள் உப்ப, கைகள் நடுங்க, கடுங்குளிரில் வாடுகிறார்கள். எப்படியோ கனல் மூட்டி குளிர் காய்கிறார்கள்.
இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (3 – 8)
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (3 – 8)
ஆர்கலி – வெள்ளம், சமுத்திரம் / முனைஇய –வெறுக்கும் / கொடுங்கோல் கோவலர் –வளைந்த கோல் பிடிக்கும் இடைச்சாதியினர் / ஏறுடை – கால் நடை / இன நிரை – மந்தை / புலம் பெயர் – இருக்கும் இடத்தை விட்டு விலகி / வேறு புலம் பரப்பி / புலன் பெயர்ந்து / புலம்பொடு – புலம்பலோடு / கலங்கி –, குழம்பி, விசனத்துடன் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழியும் / நீடு இதழ் கோடல் கண்ணி– நீண்ட இதழ்கள் கொண்ட கோடற்பூமாலைகள் / மெய்க்கொள் / அவர்களது உடலில் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழிய / பலருடன் -பலருடன் / பெரும் பனி நலிய – குளிரினால் வருந்தி / கவுள் புடையூஉ நடுங்க – உப்பிய கன்னங்களுடன்/ கைக்கொள் கொள்ளியர் –கைகளை தணலுக்கு மேலாக வைத்து குளிர் காய்கிறார்கள்.
இந்த எட்டுவரி யாப்பை ஒரு உருவகமாக கற்பனை செய்தால்:
ஆழ்கடலும், சினையுற்ற மேகங்களும், மழையும் ஒரு ‘மறுபடியும் கருவடையும்’ காலச்சக்கரமே. அதில் உழலும் உயிரினங்கள் தான் கால்நடை மந்தை. பாலையும் கறந்து, தோலையும் பதனிட்டு ஆதாயம் தேடுபவர்கள் தான் குளிர்காயும் மானிட ஜன்மங்கள். இது ஒரு உருவகம். மழை ஒரு இயற்கை வளம். அதிலிருந்து மந்தையை மீட்டு, குளிர் காய்ந்து தன்னையும் மீட்டு விமோசனம் காண்பவன் தான் ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’ குடை பிடித்த மஹானுபாவன். இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?
குறிப்பு: முனைவர் வைதேகியின் ஆங்கில மொழியாக்கம் படிக்கக்கிடைத்தது. நன்றி.
No comments:
Post a Comment