பனையூர் நோட்ஸ் 3
இன்னம்பூரான்
17 06 2013
நெடுநல்வாடை 3
[தொடருகிறது]
‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற...’ குடை பிடித்த மஹானுபாவன். இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?...
ஓ! கோவர்த்தன கிரிதாரி என்ற சேவகனை பார்ப்போமே. நெடுநல்வாடை, நம்மை ஆய்ப்பாடி யாதவ குல சத்குருவிடம் எடுத்துச் சென்று விட்டு வரட்டுமே. எங்கிருந்து வந்தான், அவன்? கொடுங்கோலன் கம்சனின் காராகிருஹத்திலிருந்து புலன் பெயர்ந்தவன் அல்லவோ! அவன் தானே,
‘யானும் இடர்மிகுந்து வாடுகையில், எங்கிருந்தோ வந்து ‘இடைச்சாதி நான்; மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்...’ என்றான்; மற்றம் பல சொன்னான், அந்த பண்டைக் காலத்துப் பயித்தியம். அதற்கென்ன இப்போ? அந்த சாரதியை பற்றி பாரதி சொல்லாததா? யாராவது கேட்டா, பாத்துக்கலாம். கேட்டுச்சொன்னால் தானே சுவை. தனக்குதானே ஆலாபனை செய்து மகிழ, அல்ட்ரா சவுண்டு எதுக்குச் சாமி?
‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும்...’ இடி முழங்கி, மின்னல் பளிச்சிட, உறுமிக்கொண்டு அலைந்து வரும் நீருண்ட மேகங்கள் பொழியும் மழை படுத்தும் பாடு: ஆவினம் பீதியில் உறைந்த மாதிரி, உடல் நனைந்த உபாதையினாலும் இன்னல்களின் உபத்ரவம் தாங்காமலும் , தவிக்கின்றன. இடைச்சாதி மகளிர் நனைந்த உடையினால், நாணமிகுந்து, தலை குனிந்தனர். கண்ணபிரான் கோவர்த்தன கிரியையே பரந்த வெண்குடையாக தூக்கிப்பிடித்து, ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதற்கிணங்க, லோக சம்ரக்ஷணம் செய்கிறார். அதற்கு பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்.
‘கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றும ழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
நான் யார் பெரியாழ்வார் பாசுரத்துக்குப் பாடம் எடுப்பது. தாரதம்யம் இல்லையோ, இப்பூவலகில்?கோஹினூர் வைரமிருக்க, ரங்கோன் டயமண்டுக்கு அலைவரோ? அபரஞ்சி தஙமிருக்க, கில்ட் நகை அணியலாமோ? நிதானமாக படியுங்கோ. ‘தத்துப்பித்து’ சொல்றமாதிரி, இது கம்பைய்ண்ட் ஸ்டடி அல்லவோ!
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் மேகமழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக்கொண்டு நின்றபடிக்கு ஓர் உவமை கூறுகின்றார் - முதலடியினால்; மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையையெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு: “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க. கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்; கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும் அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள். கடு - ?? என்ற வடசொல்விகாரம். கவளம் - ???. யானையின் உணவு. (அடிவாய் இத்யாதி) ஒருதிருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக்கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க. அடிவாய் - அடியிலே; வாய் - ஏழனுருபு. உற - ஊன்றும்படி. மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கினகுடையாமென்பது - பின்னடிகளின் கருத்து. கதுவாய்ப்படுதலாவது - குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது; வேறுவகையாகவுமுரைக்கலாம்.
உபயம்: http://dravidaveda.org
குறிப்பு: அங்கேயும், இங்கேயும் சஞ்சாரம் பண்ணுவதிலே தான் ருசி. எல்லை கடந்த பாடம். ‘கலாநிதி’ க. கைலாசபதி அவர்களின் ஒப்பியல் இலக்கிய பாடமும் ஒரு முன்மாதிரி தானே. அதான், அன்றே சொல்லி விட்டேனே, ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’!
-#-
No comments:
Post a Comment