Friday, April 29, 2016

பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!இன்னம்பூரான் பக்கம்: III:4

இன்னம்பூரான் பக்கம்: III:4
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[4]
பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!

இன்னம்பூரான்
ஏப்ரல் 27, 2016
வல்லமை பிரசுரம்: http://www.vallamai.com/?p=68413&cpage=1#comment-14657


“...தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்....”.

இந்த நாசமாப்போன ரேஷன் வந்தாலும் வந்தது, ஊழலும் அதன் கழுத்தைக்கட்டிக்கொண்டு வந்து உபத்ரவம் செய்தது. அரசு கொள்முதலில் நியாயவிலையில், ‘லாபம் ஒண்ணு..’ என்று நெல்லை படியளக்கும்போது, அதை உமி நீத்து, தவிடுத் தவிர்த்து அரிசியாக்கி மக்களுக்கு தருவதற்குள், ஒரு மோசடி நடந்து முடிந்திருக்கும். ஒரு படி நெல்லை அரைத்தால் அரைப்படி அரிசி தேறும்; குருணை, தவிடு, உமி எல்லாம் விலை போகக்கூடியவை தான். சொதப்பலான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்றால், ஒரு படி நெல்லுக்கு அரைப்படியை விட 10% குறைந்தால், பரவாயில்லை. 10% க்கு மேல் குறைந்தால்  ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பகிங்கரமாக அறிவித்து விடுவார்கள். திருடுவதற்கு, இதை விட சுகமான வழியே தேவையில்லை. ஒரு படி நெல்லுக்கு கால்படி அரிசி கொடுத்து விட்டு, கால் படி அரிசி வேஸ்ட் ஆனதாகச்சொல்லி, அபராதத்தை டீக் ஆகக் கட்டி விடுவார்கள். நான் இந்த தந்திரத்தை கண்டது ஒரிசாவில்; இங்கு உள்ளவர்கள் அப்படி சேமித்த அரிசியை கேரளாவுக்கு அனுப்பி வந்தார்களோ? நான் சொல்வதைத் தப்பாக நினைக்காதீர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும் தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே !

தணிக்கைத்துறையில் இதை மோப்பம் பிடித்து, அபராத விழுக்காடு திருடுவதற்கு ஊக்கத்தொகையாகப் பணி புரிகிறது என்று நாங்கள் பொதுக்கணக்கு மன்றத்தில் புரிய வைப்பது பெரும்பாடாக போய்விட்டது என்றாலும், அந்த துறை காரியதரிசி, ‘ஆடிட் சொல்வது உண்மையே. எங்களை இதை திருத்தவதை மேலா அனுமதிப்பதில்லை; ஆனால் ஆடிட் கூற்றை வைத்தே, அபராத விழுக்காடை ஐந்து மடங்கு உயர்த்திவிடுவோம் என்றார்.

எதற்கு சொல்ல வரேன் என்றால்.... பாருங்களேன் !

அடிக்கடி சென்னையில் காணப்படும் விருதா காட்சி ஒன்று: ‘ஆவின் பால் ஒப்பந்தவண்டி. அவசரம். வழி விடவேண்டும்.’ என்ற பதாகையுடன் வலம் வரும் லாரிகள். அவற்றில் பல நடு வழியில் நின்று நிதானமாக ரயில் இஞ்சின் மாதிரி தண்ணிப்போட்டது வேறு சமாச்சாரம். இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள், லஞ்ச வாவண்யங்கள் மக்களின் ஒத்துழைப்பால் தான் ரயில் மேட்டுக்கத்தாழையாக வாழ்கின்றன.

அரசு நிர்வாகமோ, தனியார் துறையோ, தன்னார்வக்குழுவோ, ஊழியர்கள் ‘கடைத்தேங்காயை எடுத்து தனது சமையலறையில் உடைத்து சட்னி செய்து ‘கொட்டிப்போம்.’ என்றால், பயிரை மேயும் வேலிகள் கை கட்டி நிற்கும்.

இந்த ஆடிட் ரிப்போர்ட்டை பாருங்கள். ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மாவட்ட அதிகாரிகள் ஊழல் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

  1. 29 அலுவலகங்களில் 9 அலுவலகங்களின் ஆவணங்களை, தணிக்கைக்கு வந்த செலவு ஆவணங்கள், ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்து ஆவணங்களுடன் இணைத்து பரிசோதனை செய்த போது, பஜாஜ், சேடக்,, வெஸ்பா, ஆக்டிவா வகையறா ஸ்கூட்டர்கள்,  புல்லுட், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைகிள், செத்துப்போன வண்டிகள் (சாம்பிள்: டாட்டா சுமோ JKB 5826) , டிராக்டர், புல்டோசர் எல்லா  வகையான வண்டிகளை நாலுகால் ப்ளெஷர் கார் என பொய்க்கணக்கு எழுதி, துட்டு சம்பாதித்ததாக ‘பகீர்’ நிரூபணம்;
  2. ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்துக்கண்களில் படாத நம்பர் சில வண்டிகள் கணக்கில்!;
  3. டூப்ளிகேட் பில்களுக்குத் தெரிந்தே பொய்க்கணக்கு எழுதி பட்டுவாடா;
  4. ஒன்பது மாவட்டங்களில் வண்டி வாடகை கொடுத்தது 57. 37 கோடி ரூபாய். வருமான வரி கழிக்காமல் விட்டது: 6.75 லக்ஷம் ரூபாய். இது பெரிதாகப்படாவிட்டாலும் , எல்லா 29 மாவட்டங்களில் என்ன என்ன நடந்ததோ?
  5. இப்படி மானாவாரியாக வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு கெடு: 24 12 2014.
அதை மதிக்காமல் ஜம்மு மாவட்டத்தில் 771 வண்டிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.6. விதித்த  அளவுக்கு மீறி வண்டிகளை வாடகைக்கு எடுத்ததில் ஒரு நாளைக்கு அதிகப்படி செலவு: 25.89 லக்ஷம் ரூபாய்கள்.

இப்படி போகிறது கதை. எல்லா மாநிலங்களிலும் இதன் பிரதிபலிப்பை காணலாம். சொன்னால் பொல்லாப்பு! இந்த ஆடிட் புண்ணியவான்கள் இப்படி பல துறைகளின் ஆவணங்களை அலசி, இந்த கந்தரகூளத்தை அம்பலத்துக்குக் கொண்டு வரலாமா?
ஒரு ஐடியா தோன்றது. வண்டி வாங்காமல், பில்லை மட்டும் (லஞ்சம் கொடுத்து) வாங்கி, ஒரு பினாமி வாடகையாக அதை கற்பனையில் விட்டு துட்டு சம்பாதிக்கலாமா? ஆடிட் ஒழிக என்று கூச்சல் போடலாமா?
-#-
படித்தது:
சித்திரத்துக்கு நன்றி:

Innamburan wrote on 29 April, 2016, 6:29

பிரசுரத்துக்கு நன்றி. தணிக்கை சுட்டும் குற்றங்களை காலாவட்டத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசுத்துறைகள் வாளா இருப்பார். இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணை தொடங்கியுளனர். அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னம்பூரான்
29 04 2016







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, April 27, 2016

அன்றொருநாள்: மார்ச் 29 திருப்புமுனையா? ஒடித்த முனையா?

அன்றொருநாள்: மார்ச் 29

திருப்புமுனையா? ஒடித்த முனையா?
மார்ச் 29, 1857 அன்று பொழுது நன்றாக விடியவில்லை. வங்காளத்து இந்தியர் படையாகிய 34வது ரெஜிமெண்டில் சிப்பாயாக இருந்த மங்கள் பாண்டே கம்பெனி நிர்வாகத்தை எதிர்த்து, புரட்சி செய்ய வீறு கொண்டு எழுந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அன்று நடந்த நிகழ்வுகளை பற்றியே ஒருமித்த ஆவணங்கள் இல்லை. அதை சிப்பாய் கலகம் என்றார், சிலர். முதல் இந்திய சுதந்திரப்போர் என்றனர், சிலர். ஆளுக்கொரு வரலாறு படைத்தனர். உண்மை வரலாறு கிடைப்பதற்கு அரிதாயிற்று. லக்னெளவில் லைட்& செளண்ட் காட்சிகள் சிறப்புற அமைக்கப்பட்டிருந்தாலும், அதே ஸ்தலங்களில் பேசாமடந்தையாக நிற்கும் வரலாற்று சின்னங்கள் கூறும் செய்தி வேறு. இது வரை, தக்க சான்றுகளுடன் அளிக்கப்பட்ட வரலாறுகள் நான்கு உலா வருகின்றன. அவை ஒத்துப்போகவில்லை. என்னுடைய ஆய்வு இன்னும் முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க, 1857 வருட புரட்சிக்கு, மார்ச் 29, 1857 அன்றைய நிகழ்வை மட்டுமே திருப்புமுனையாகவே திருப்பிய முனையாகவோ கருத இயலாது என்று தோன்றுகிறது. எனவே, அது பற்றி தக்கதொரு தருணத்தில் எழுதலாம். எனவே, உங்களை திசை திருப்பி, வடக்கு நோக்கி, பஞ்சாப் பிரதேசத்திற்கு அழைத்து செல்கிறேன்.
பாஞ்சாலம் புராதன தேசம். சிந்து நதியும், ஜீலம், சீனாப்,சட்லெஜ், ரவி, பியாஸ் ஆகிய திருவையாறுகளும் மனித நாகரீகத்தின் தொட்டில். பொன் விளைந்த களத்தூர்கள் நிறைந்த நாடு. மதியிழந்த யுதிஷ்டிரன், ‘இரு பகடை’ என்று அடகு வைத்த திருமகள் திரெளபதியின் பிறந்த வீடு, பாஞ்சாலம். பீஷ்மரை வீழ்த்த உதவியாக, முன்னின்று அர்ஜுனனுக்கு பெண்மையின் கவசம் அளித்த சிகண்டி என்ற பெரும்தேர் புரவலனுக்கு பாஞ்சால மண் வாசனை. அது இதிஹாசம் என்று ஒதுக்கினாலும், ஜூலை 12,1799ம் வருடத்தை பற்றி ‘அன்றொரு நாள்: ஜூலை 12’ இழையில் யான் எழுதியதை மறுபடியும் படித்து விட்டு வாருங்கள், இங்கே. 
இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார்...ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்...”
பொன் விழாவுக்கு பதில் தேசமும் போச்சு; அபிமான பங்கமும் ஆச்சு. எல்லாம் போச்சு. ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் இயற்கை எய்தி பத்து வருடங்கள் கூட கழியும் முன், மார்ச் 29, 1849 அன்று ஆங்கிலேயர்கள் பஞ்சாப் களவாடலை பூர்த்தி செய்தனர். விதவையான பஞ்சாபில் அரசின் நிலை குலைந்தது. தன்னலமிகுந்த லஞ்ச லாவண்ய பைசாசங்கள் தலை தூக்கின.  நாட்டுப்பற்றுள்ள ராணுவமோ கட்டவிழ்ந்தக் காளையாகி, குலைந்து போனது. 1809ம் வருட உடன்படிக்கையை உதறிவிட்டு, இந்த பேராசை கிழக்கிந்திய கம்பெனி 1845-46, துரோகிகளின் உதவியுடன், லாஹூரை கைப்பற்றினர். 1846 வது வருட லாஹூர் உடன்படிக்கைகள், பஞ்சாப் அரசை படுக்கப்போட்டது. இரண்டாவது யுத்தம் 1848&-49. முல்தானின் கவர்னர் மூல்ராஜ் செய்த புரட்சியை அடக்கிறேன் பேர்வழியென்று டல்ஹெளசி மார்ச் 29, 1849 அன்று பஞ்சாபை கலோனிய ஆட்சியுடன் இணைத்து, ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களின் மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?
அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்
29 03 2012
Inline image 1

The Last Sunset — The Rise & Fall of the Lahore Durbar By Amarinder Singh
உசாத்துணை:

Tuesday, April 19, 2016

இன்னம்பூரான் பக்கம் சுழலும் வட்டமேஜை

இன்னம்பூரான் பக்கம் 

சுழலும் வட்டமேஜை

Wednesday, April 20, 2016, 1:58

இன்னம்பூரான்.

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68165
இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

சில நாட்கள் எழுந்தவுடன் நரிமுக தரிசனம் கிடைக்கும். அந்த நாட்களில் எல்லாம் அமோகமாக நடந்தேறும். இன்று நரிமுகம் என்னை வட்டமேஜைக்கு இழுத்துச் சென்றது. அதுவும் அது என்னுடைய மாஜி வட்டமேஜை. இன்று காலை, வழக்கம் போல் ‘ஆல் ஓவெர் சென்னை’ சுற்றாமல் தாம்பரம், சித்லபாக்கம், சேலையூர், கிரோம்பேட் என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டியபோது அசாத்திய அனுபவங்கள் கிட்டின.
முதலில் அந்தமான் ‘கைதி’ கிருஷ்ணமூர்த்தி வசமாக நம்மிடம் சிக்கிக்கொண்டார். முனைவர் சதாசிவத்தை பார்க்கச் சென்றால், நெய்வேலி முரளி, சென்னை அரி (ஹரி அல்ல) பாபு புடைசூழ அமர்ந்திருந்த அந்தமானார் எம்மால் இற்செறிக்கப்பட்டார். ஜிலேபி, பழவகைகள், பசங்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உண்டு, நான் மதிக்கும் சதாசிவத்தின் அன்னைக்கு வணக்கம், இல்லத்தரசிக்கு வாழ்த்துக்கள், சிறாருக்கு ஆசி கூறி, விடை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய புத்தகச்சுமையை தலையில் கட்டினார், அருமை நண்பர் சதாசிவம்; அந்தமானில் மாட்டிக்கொண்ட கம்பனும் கூட வந்தார்.
இந்த நால்வர் அணி பைலட் ஆக முன் ஆடி வர, (சுழல் விளக்குதான் இல்லை) யாவரும் கிருஷாங்கிணி வீட்டுக்குப் படை எடுத்தோம். எக்கச்சக்க வரவேற்பு. ‘சுழலும் வட்டமேஜை’ தரிசனம். அது பற்றிய திண்ணைக் கட்டுரை மறு வாசிப்பு. அரவக்கோன் ஓவியங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தன. ஏன் தெரியுமா? வண்டி ப்ரேக்டெளன்.
அப்படியும் இப்படியும் கைபேசிகள் முணுமுணுத்த பின் மாற்று வண்டி பிடித்து, வீராங்கனை சீதாலக்ஷ்மி தரிசனம். அடேங்கப்பா! ராஜதர்பார் ஊஞ்சல். சீதாவை விட நல்லமாதிரி அவர்கள் தங்கை. உபசாரம் பலம். போனவிடம் எல்லாம் தண்ணீர்ப்பந்தல் தான், போங்கள். சீதாலக்ஷ்மியின் உறவினர்கள் விழுந்து கும்பிட்டார்கள். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜிப்பா!
ஒரு பாடாக தங்கை கமலா வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 17/19, 2016

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, April 18, 2016

கனம் கோர்ட்டார் அவர்களே [26]

கனம் கோர்ட்டார் அவர்களே [26]



இன்னம்பூரான்
ஏப்ரல் 16 ,2016

பிரசுரம் : http://www.vallamai.com/?p=68082
Monday, April 18, 2016, 5:10

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஆளவந்தார் கொலை வழக்கு நாள்தோறும் தடபுடலாக, ஊடகங்களில் உலா வந்தபடி இருக்கும். கட்டுப்பெட்டி பெண்ணரசிகளும் கட்டுக்கடங்கா ஆண்வர்க்கமும் விழுந்தடித்துப் படிப்பார்கள். அவர்கள் சற்றே அசந்தால் போதும். நாங்களும் ஒரு கண்ணோட்டம் விடுவோம். வகுப்பில், அக்கு வேறு, ஆணி வேறாக அலசுவோம். ஒரு குறுக்கு விசாரணை:
எதிர்த்தரப்பு வக்கீல்: ஆளவந்தாரும் தேவகியும் கட்டியணைத்து அந்தரங்கமாக இருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எந்த ஜன்னல்?
சாட்சி: குளியலறை ஜன்னல்.
எ.வ: உங்கள் மூக்குக்கண்ணாடி சோடாபாட்டில் கண்ணாடியாக இருக்கிறதே. அதை போட்டுக்கொண்டு தான் பார்த்தீர்களா?
சா: ஆமாம்.
எ.வ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சா. குளித்துக்கொண்டிருந்தேன்.
எ.வ. ஓஹோ! கண்ணாடி போட்டுக்கொண்டுதான் குளிப்பீர்களோ?
சா. உம்………
எ.வ. குறுக்கு விசாரணை முடிந்து விட்டது, கனம் கோர்ட்டார் அவர்களே!
[சாக்ஷியம் குப்பையிலே.]
அதை நினைவூட்டும் வகையில் ஒரு அரசியல் கொலையைப் பற்றிய ஒரு கொலை வழக்கு ஏப்ரல் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. டாக்டர் ஶ்ரீதர் என்ற பிஜேபி திருச்சி பிரமுகரை, ஒரு மதவெறி கும்பல் பெப்ரவரி 2, 1999 அன்று இரவு பத்து மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவருடைய கூக்குரலை கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த அவருடைய மகள் இதைக் கண்ணால் கண்டாள். அவளது நேர்முக சாட்சியத்தில் ஓட்டை கண்டுபிடிக்க, அவர் அந்த மங்கலான ஒளியில் இதைக் கண்டு இருக்கமுடியாது என்று குற்றம் சாற்றப்பட்டவர்களின் வக்கீல்கள் செய்த சாகசங்களை இப்போதைக்கு விடுவோம். தெரு விளக்கும், மற்ற விளக்குகளும் நல்ல வெளிச்சம் போட்டதால், அவரால் தன் தந்தையின் கொலைகாரர்களை காணமுடிந்தது என்பதில் ஐயமில்லை என்று உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பு. இந்த மாபெரும் இயல்பு – உண்மையைக் கண்டுபிடிக்க, அடித்தள கோர்ட்டார் மூன்று வருடங்களும், உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களும், உச்சநீதிமன்றம் எட்டு வருடங்களும் எடுத்துக்கொண்டன.
தெரு விளக்கு வெளிச்சத்தில் வெளிச்சம் காண 16 வருடங்கள்!
ஹூம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.thebigstorage.com/images/ebay/sa/E59383.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, April 15, 2016

சமையல் குறிப்புக்கள் & அனுபவம் புதிது!

சமையல் குறிப்புக்கள் &
அனுபவம் புதிது!

இன்னம்பூரான்
07042016
முன்னுரை

சமையல் ஒரு உயிர்மை, கவின்கலை; அறிவியல், அன்றாட அனுபவம், ருசிகரம், வாழ்க்கைப்பாடம் என்று சொல்வது மிகையாகாது. உணவு இல்லையெனில் வயிறு காயும். உடல் மெலியும். உயிர் பிரியும். பிரிந்த உயிர் திரும்ப வாராது என்பதால் தான் ஒளவைப்பாட்டி ஆண்டாண்டு அழுது புரளவேண்டாம் என்று அறிவுரைத்தாள்.  இது வாழ்க்கைப்பாடம். 

நீவிர் உண்டு களிக்க. அதற்கு சமையல் கலை அறிக.

அந்தணர்களின் உலகில், புகுந்த அகத்தில் பெண்ணுக்கு சமையல் தேர்வு நடக்கும். தயை என்பதை சற்றும் அறியாத இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி ( அது காரணப்பெயர். அந்த காலத்தில் ரங்காப்பாட்டி மாமியாக இருந்த போது, அவளும், சக்களத்தியும்... சரி விடுங்க. பிரச்னை வரும். சர்ச்சை வளரும். பிச்சு உதறி விடுவார்கள், இந்தக்காலத்துப் பெண்ணரசிகள்... வேண்டாம்...] நடத்துவாள். மணமகன் ராஜூ மாடியறையில் பகற்கனவில் ஆழ்ந்திருப்பான். அவனுக்கு நடக்கப்போகும் கொடுமையை அறிய வாய்ப்பில்லை. சற்றே மிகைப்படுத்தப்பட்ட உண்மை என்பதால், எல்லாம் உண்மைப்பெயர்கள். இது சத்தியம், சத்தியம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.  மணமகளின் பெயர், வசந்தா. அத்தையின் பெயர்  [அந்தணர்கள் மாமியார் என்பார்களாம்]. ருக்மணி. ரங்காப்பாட்டி பீடு நடை போட்டு, முட்டாக்கை இழுத்துக்கொண்டு, யானையின் கண்கள் போன்ற சிறு கண்களை இடுக்கிக்கொண்டு வருவதைக்கண்டு, அஞ்சி நடுங்கினாள், ருக்மணி. ஆதுரத்துடன் மருமகப்பெண்ணை அணைத்தவாறு, அவள், ‘இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி வரா. அவள் ஒரு துக்குரி. சாக்கிரதை’ என்றாள். (அத்தை நல்லவர் தான். ஆனால் அசல் பாப்பாத்தி, பேச்சுத்தமிழில்). இனி உரையாடலை தூய தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். 'துக்குரி' தனித்தமிழ் தான்.

ஒரு உரையாடல்.

இ இ. ர. பா: (வசந்தாவின் அடர்ந்த கூந்தலை சற்றே இழுத்தவாறு) ‘பார்த்தேன். கொள்ளை அழகு. வெள்ளைக்காரி மாதிரி சோப்பு. சிறு வயது. அடர்ந்த கூந்தல். அது திருப்பதியிலிருந்து வாங்கி வந்த சவுரியோ என்று ஐயம். இழுத்துப்பார்த்தேன். இது அலங்காரமில்லை. அசலே. ராஜு அதிர்ஷ்டசாலி (தமிழ் என்ன?).

மூக்கில் மணந்தது போல், இது கேட்டு இறங்கி வந்த ராஜு: ‘பாட்டி! அவள் கூந்தலில் எனக்கு என்ன பாக்கியம்? நான் நினைப்பதெல்லாம்......

அவசரப்பட்டு, இ.இ. ர. பா. ‘உன்னை யார் இங்கே வரச்சொன்னார்கள்? நீ உத்தியோகம் செய். இவள் சமையல் செய்வாள். போய் உன் வேலையை பார். இந்தா குட்டி!, நீ என்னிடம் வா. எல்லாம் சொல்லி தருகிறேன்.

ராஜு நகரவரை காத்திருந்த இ.இ. ர. பா. வசந்தாவுக்கு வலிக்கிற அளவுக்கு அவள் கூந்தலைக் கோதியவாறு: ‘ஆமாம்! தெரியாமல் தான் கேட்கிறேன். உன்னுடைய அம்மா, அசங்காமல், கசங்காமல் வந்து விட்டுப்போனாளே, அவளுக்கு சமையல் தெரியுமா?’ [உள்குத்து கவனித்தீர்களோ! வசந்தாவின் அம்மாவின் புடவையில் ஜரிகை அதிகம். அதனால் பொறாமை, இந்த நார்ப்பட்டு நாயகிக்கு].

அத்தை ருக்மணியின் கண்ணசைவை கண்டு கொள்ளாத அறியாப்பெண் வசந்தா:
‘இல்லை, பாட்டி. எங்களகத்தில் பரிசாரகர் (தவசிப்பிள்ளை) உளர். ஆனால், அம்மா, மனது வைத்தால், அற்புதமாக சமையல் செய்வாள்’.

இ.இ. ர. பா. ‘நான் அதை கேட்கவில்லைடீ. ஆமாம். என்னை பார்த்தால் பாட்டி மாதிரியாகவா இருக்கிறது? நீ இந்தக்காலத்துப் பெண். காலேஜுக்கு போனவளாமே. அதான் இத்தனை துக்குரியாக இருக்கிறாய்.’.

( வசந்தா கண்ணீர் மல்க, மிரண்ட மானைப்போல அத்தையை பார்க்க, அத்தை ருக்மணி நிற்கதியாக நின்றாள்.)

1955
அடுத்து வருவது ‘சமையல் செய்து பார்’ படலம்.

இ.இ. ர. பா. ‘குழந்தாய்! (குழந்தைக்குக் குலை நடுங்குகிறது). உனக்கு சமையல் சற்றளாவது தெரியுமா? அல்லது அவன் தான், பாவம்!. அரிசி களைந்து, மாசு வடித்து, உலையேற்றி, அடுப்பூதி, கண் கசக்கி, சோற்றை வடித்து, இலையில் இடவேண்டுமா? அவன் ஆண்மகன். கையை சுட்டுக்கொள்வான். ஐஏஎஸ் படித்து விட்டு, அடுப்பாங்கரை உத்யோகமா? ‘ இப்படி அடுக்கிக்கொண்டே போகிறாள், அந்த மாபாவி. வசந்தா அழ, ருக்மணி கையைப்பிசைய, இடம், பொருள், ஏவல், தெரியாமல், தந்தை சீனிவாசன் வந்து ஒரு கோப்பைக்காப்பிக்கு ஆணையிடுகிறார்.
இது தான் சாக்கு என்று, காப்பிக்கலக்க வந்த ருக்மணியை, நாக்கைத்த் துருத்தி, அடக்கி விட்டு, தேனொழுக மொழிகிறாள், இந்த இ.இ. ர. பா.

இ.இ.ர.பா. பெண்ணே! உன் பெயர் என்ன வசந்தாவா? அது என்ன சினிமாக்காரி பெயர் மாதிரி! வசந்தசேனா என்று சினிமா வந்தது, தெரியுமோ? எமதுகத்து ‘பாவிப்பிராமணன்’ (அகமுடையான்), இரண்டாவது காட்சிக்கு போய் வந்து விட்டு என் உயிரை...’ சரி! சரி! அது எதற்கு உனக்கு? என்ன கண் கொட்டாமல், இந்த பிரலாபத்தை எல்லாம் கேட்கிறாய்? அசடு. ராஜு நல்ல பையன்.’
ருக்மணியும், வசந்தாவும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டுகிறார்கள் (தெலையாட்றதுகள்).

இ.இ.ர.பா. ‘அம்மா, அந்த மதராஸ் காலேஜ் படித்த பெண்ணே! உன்னுடைய மாமனாருக்கு செரிமான பிரச்னை. மாங்கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் பருப்புத்துவையல் அரைத்து என் வீட்டுக்குக் கொண்டு வா. மார்க் போடுகிறேன்.’
(ஆரவாரத்துடன், ஒரு ஆழாக்கு காப்பித்தூள் மல்லைய்யா கடனாக எடுத்துக்கொண்டு போகிறாள்).
நுட்பம் யாதெனில், எப்படி வயிற்று வலியால் துடிப்பது போல் பாசாங்கு செய்ய முடியுமோ அந்த மாதிரி, பருப்புத்துவையல் எப்படி அரைத்தாலும், குற்றம் காண இயலும். சில மதிப்பீடுகள்:
  1. இப்படி வெழுமூனாக (தமிழ் என்ன?) அரைத்தால், அது சாணி மாதிரி.
  2. என்னது இது? காப்பிப்பொடி மாதிரி கர கர என்று இருக்கிறது?
  3. அம்மா, ருக்கு! ஒரு டம்ளர் கொணருக. உங்கள் வீட்டு மருமகள் பருப்புத்துவையல் செய்துள்ளாள்; அருந்தத்தான் வேண்டும்!
  4. என்ன துவையைல், இது? மூக்குப்பொடி மாதிரி?
அந்த சமயம் பார்த்து இறங்கி வந்த ராஜு, ‘ பாட்டி! பாட்டி! நீங்கள் மூக்குப்பொடி போடுவீர்களா?
( இ.இ.ர.பா. விரலை சொடுக்கிக்கொண்டு வாசற்படி தாண்டி, மறைகிறார்.
[துரித கதியில், வசந்தா நளபாகினி ஆனாள். அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும், அவள் தான் ஆசான்].

1995 [ஐம்பது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் சமையல் துணிச்சல் படலம்.
எங்கள் சங்கத்தில் மாதாமாதம் சோற்றுக்கடை, பட்டிமன்றம், வதந்தி நிலையம், சக்தி மசாலா எல்லாம் உண்டு. பிரபலங்கள் வந்து, திரவியம் நாடுவது, காப்பீடு குழப்பம், தண்டகருமாந்திரம் என்று பற்பல அரிய விஷயங்களை பற்றி உரை ஓதுவார்கள். எனக்கும் இயல்பான உறக்கம் கிடைக்கும். ஒரு தடவை ராஜு ‘சமையல் உத்திகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற விழைந்தான். உள்கை காரியதரிசி ஆவன செய்தான்.
அவன் உரை:
“ யாவருக்கும் வணக்கம். சட்புட் என்று தாளிப்பு உளுத்தம்பருப்பைப்போல் சொல்லி முடிக்கிறேன். வசந்தா பெண்ணிய கான்ஃபெரன்ஸ், இதே ஓட்டலில், போய் இருக்கிறாள். வருவதற்கு முன்:
  1. ‘நெய்யில் தாளித்தால் நறுமணம்;
  2. தண்ணீரில் தாளிக்கலாம், எண்ணை விலக்க. ஆனால் அதை சூடு செய்யவேண்டும்;
  3. உளுத்தம்பருப்பு பொன்னிறமானவுடன் மிளகாயை கிள்ளிப்போடவும்;
  4. புளியை வென்னீரில் ஊறவைத்து, பிழிந்தால் புளியஞ்சாறு அதிகம் கிட்டும்;
  5. வெண்டைக்காய் துண்டங்களை சற்றே தயிர் தடவி பொரித்தால், ‘மொற மொற’;
  6. இட்லி மாவில் நாலொருபாகம் பூசணி பத்தையை அரைத்து விட்டால், மல்லிகைப்பூ இட்லி உத்தரவாதம்;
  7. இட்லி வேகவேண்டும்; தோசை ‘சொய்ங்.; உப்புமா கிளறவேண்டும்;
  8. வெங்காயம் உரிக்கும்போது கண்களை கட்டிக்கொள்ளலாம்;
  9. புளியோதரைக்கு நல்லெண்ணைய்; அவியலுக்கு தேங்காய் எண்ணைய்; வடைக்கு கடலை எண்ணைய்; மீனுக்கு கடுகெண்ணைய்.
  10. பாலில் வெந்தியம் போட்டபின் தயிர் துவைத்தால், நீரழிவு கட்டுப்படும்;
  11. புதினா போட்டுத் தயிர் துவைத்தால், செரிமானத்துக்கு உதவும்.
  12. கல்லைக்கரைத்து, உப்பிட்டு...
இந்த காலகட்டத்தில் வசந்தா வந்து விட்டாள் என்பதை கண்டுகொள்ளாமல், கூடியிருந்த குடும்பத்தலைவிகளின் கேள்விகளை அசால்ட்டா ஃபீல்ட் செய்தான், ராஜு.( இதற்கு தமிழ் என்ன?).
‘சட்’ என்று மேடை ஏறிய வசந்தாவை  கணவனை கடையேற்றியதற்குக் கை தட்டி வரவேற்றார்கள் பெண்ணினம். ஆண்வர்க்கம் முறைத்துக்கொண்டு கிடந்தது.
கையமர்த்தி, மீனாள் போல் கண்ணசைத்து வசந்தா செப்பியது கேளும், மாந்தர்காள்!
‘இந்த மனிதர் என்றாவது சமையலறைக்குள் தலையை காட்டினாரா? என்று வினவுக. அவர் சொல்வது எல்லாம் புருடா (தமிழ் என்ன?) என்றாள். அடுத்த ஹால் ஆசாமி ஒருவர் வந்து, ‘கொஞ்சம் மெதுவாக’ என்று கோபத்தில் உரக்கக்கத்தினார். அப்படி அப்ளாஸ் நம்மாத்து அம்மாமிக்கு!.

ஏப்ரல் 7, 2016
[ மேலும் இருபது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் இன்றைய சமையல்  படலம்
சில நாட்களாக வெயில் தாங்காமல், ராஜுவே காலை/ மத்திய உணவு குறைத்து நடுவில் ‘சுயம்பாகம்’ (சொந்த சமையல்).
இப்போது மிகுந்த அதிகப்படி விலையில் நாணும் பெண்ணைப்போல் வளையும், ருசிக்கும் வெள்ளரிப்பிஞ்சு கிடைக்கிறது. விலை அதிகம்.கிலோ ரூ.130. 
வெள்ளரிப்பிஞ்சு     - 5 கண்டதுண்டமாய்.
தக்காளி           - 4  கண்டதுண்டமாய்.

கொய்யா            - 2 கண்டதுண்டமாய்.

ஆப்பிள்    - 1 கண்டதுண்டமாய்.

மாதுளைமுத்துக்கள் - 187
கமலா ஆரஞ்சு   - சில சொளைகளை பிழிந்து
இஞ்சி              -சிறிது அரைத்து
உப்பு, மிளகுத்தூள், பெருமாள் தீர்த்தப்பொடி, தூவி
புதினா இலைகளை அறுத்துத்தூவி

இறுக்குமதி செய்யப்பட்ட விதைக்கொத்து, ஏலக்காய், வவங்கைப்பட்டை வகையறா சேர்த்து,

எல்லாவற்றையும் பல குலுக்கல்கள், குலுக்கி, அண்டை வீட்டுக்கு எடுத்துச்செல்கிறான். அவரும் அவனும் கதைத்துக்கொண்டே சுவைக்கிறார்கள். பொருத்தமான உணவு + என்கிறார், டாக்டர். அதற்குள் அடுத்த வீட்டு பெண் வந்திருந்தார். ருசி பார்த்து விட்டு கொஞ்சம் வாங்கிக்கொண்டு போனார். ராஜு காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: https://s-media-cache-ak0.pinimg.com/236x/f0/96/4d/f0964dbd6f4bd8b6d85d9adf118cd914.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, April 13, 2016

மொழியின் வரலாறு



தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக பிரசுரித்த சிறப்பு மலரில் வந்துள்ள என் கட்டுரை, இது.


மொழியின் வரலாறு

இன்னம்பூரான்
ஏப்ரல் 9, 2016

தகவல்/கருத்து பரிமாற்றம் மனிதனின் நிகரற்ற திறமை என்பது ஒரு மாயை. எறும்புகள் அணி வகுத்து செல்லும் போது, நின்று பேசி விட்டு செல்கின்றன. பூனையும் நாயும் நமக்கு உற்ற தோழர்கள்; பாப்பி என்ற பூனை என்னை காலையில் 4 மணிக்கு எழுப்பி தின்பண்டம் கேட்பாள். டிஃபன் என்ற நாய் வீட்டுக்கு எஜமானனாக பீடு நடை போட்டாலும், நூறு ஆணைகளில் ஒன்றைச் சொன்னால் உடனடியாக பணிந்து இயங்குவான். ராணுவ நாய்கள் தியாகச்சுடர்கள். கிளியும் மைனாவும் திருப்பிச்சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியன் என்னை தனது பறவைப்பண்ணைக்கு அழைத்து சென்ற போது இரு ஈமு பறவைகள் அவருக்கு மெய்காப்பாளராயின. ஒரு கிளி அவர் வந்து கொஞ்சும் வரை, ‘பாலூ’ ‘பாலூ’ என்று கூவித்தீர்த்து விட்டது. சிங்கத்தையும் புலியையும் நன்கு பயிற்சிக்கு உட்படுத்தமுடியும். யானைக்கு வடமொழி புரியும் என்று மணக்குளத்து விநாயகர் கோயில் யானையின் பாகன் செய்து காண்பித்தார். அறுபது வருடங்களுக்கு முன்னால் இலங்கை பிரதமர் லண்டன் மிருக கண்காட்சி மையத்து யானையுடன் நீண்ட நேரம் பேசி, எல்லாரையும் அசத்தினார். பீடிகை முற்றிற்று.

c. 484–425 BC

தொல்காப்பியம் தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியல் இலக்கணம். ‘என்மனார்’ என்ற தொல்காப்பிய அடக்கம் மிகுந்த சொல், அதற்கும் தொன்மையான தமிழ் மொழி படைப்புகளை கூறுகிறது. காலத்தின் பரிமாணத்தில் அத்துடன் ஒப்புமை உடையது எனலாம், ஹெரொடோட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலம் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முன்னால்கிடைத்த  ஒரு தகவலும், ஆராய்ச்சியும், முடிபும். முதலில் மூன்று வினாக்கள்:


  1. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ காலகட்டத்தில், மொழியில் புலமை, பெற்றபோதே கிடைத்ததா? பின்னர் பெறப்பட்டதா?;
  2. மொழி இயற்கையின் வரமென்றால், ஏன் பற்பல மொழிகள்?:
  3. பிறந்தவுடன் குழவியை கண்காணாதத் தேசத்திற்கு அனுப்பி தனிமையில் விட்டு விட்டால், அது பழகப்போகும் மொழி யாது?. 

ஹெரொடோட்டஸ் எகிப்தில் ( தமிழாக்கம் அருமையாக அமைந்திருப்பதை நோக்கவும்.) பயணம் செய்யும் போது, சாம்திக் ("Psamṯik") என்ற அரசன் மொழியின் மூலாதாரத்தை அறிய, இரு குழந்தைகளை ஒரு இடையனிடம் கொடுத்து, அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை போட்டு விட்டாராம். ஆனாலும் அவர்களுக்கு அன்னமிட்டு சிரத்தையுடன் கவனித்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு, முதற்சொல் அமைந்த விதத்தை தெரிவிக்கவேண்டுமெனெ ஆணை. ஒரு மழலை "βεκὸς" என்று கூவினானாம். மற்றொரு மொழியில் அது ரொட்டியை சுட்டும். அந்த மொழி தான் ஆதிமொழி என்று  சாம்திக் அறிவித்து விட்டானாம். ஆதாரம் இல்லாத கதை தான். ஆனால், ஹெரொடோட்டஸ் சொன்ன செய்தியல்லவா!  அப்படியிருந்தாலும் அவர் கூறிய ஆரூடம் பலித்தது எனலாம். என்ன தான் சொன்னாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 

1769 AD

பற்பல நூற்றாண்டுகள் கழிந்த பின் வந்த ஒரு ஆய்வை நோக்குவோம்.
கிட்டத்தட்ட 250 வருடங்கள் முன்னால் பெர்லின் அறிவியல் மையம், சில வினாக்களை எழுப்பி, ஒரு போட்டி வைத்தார்கள்: வினாக்கள்:
  1. மனித இனம் தன்னுடைய இயல்பான போக்கில் இயங்கி ஒரு மொழியை உருவாக்க முடியுமா? 
  2. அது சாத்தியம் என்றால், அவர்கள் கையாளப்போகும் உத்திகள் யாவை? 
  3. மேற்படி வினாக்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் விடை அளிக்கவேண்டும்.
வாகை சூடிய கொட்ஃப்ரிட் ஹெர்டர் என்பர் ‘மொழியின் மூலம்’ என்ற கட்டுரையில்  மனிதன் விலங்கினத்தை சார்ந்தவர் தான். அதனால் அவனிடம் மொழியறிவு ஏற்கனவே இருந்தது தான் என்றார். 170 வருடங்கள் கழிந்த பின் ‘மொழியை பெற்ற பேறுப் பற்றி அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தேறும் என்பதை அந்த அறிவியல் மன்றமே எதிர்ப்பார்த்து இருக்கமுடியுமா என்பது வியப்புக்குரிய கேள்விக்குறி தான்.


1937
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பெர்த் வில்சன் ‘மொழி பிறந்த வரலாறு’ [1937] என்ற நூலை எழுதினார். சிறிய நூல் தான்; ஆனால், இருபது வருட ஆய்வின் பயன். தன்னுடைய நூல்  புறவெளிக்கும் [Space] காலதேவனுக்கும்  [Time]  உள்ள உறவு பற்றி அமைந்தது என்றார். அவர் என்னமோ பெரிய கை அல்ல. காலாவட்டத்தில் அந்த நூலுக்கு சமாதி வைத்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. நாடகத்துறையிலும், இலக்கிய விமர்சனத்திலும், சமத்துவ பிரச்சாரத்திலும் உலகப்புகழ் பெற்ற பெர்னாட் ஷா இந்த நூலை பரிந்துரை செய்ததுமில்லாமல், நீண்டதொரு முகவுரையும் அளித்தார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. மொழியின் பிறப்பும், அது புறவெளிக்கும் காலதேவனுக்கும்  உள்ள உறவின் அரும்தவப்பேறு என்ற கருத்து, கடுகு சிறுத்தது ஆனாலும் காரம் போகாது என்பது போல, ஒரு நவீனத்துவமாக அமைந்து விடுகிறது என்பதை எல்லா மொழிகளிலும் காணலாம்.

தமிழில், தொன்மை வாய்ந்த பரிபாடலில்:
நிலனும், நீடிய இமயமும், நீ. 
அதனால், 
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என, 
அன்னோர் யாம் இவண் காணாமையின், 
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55 

மன்னுயிர் முதல்வனை ஆதலின், 
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே! 
நின் ஒக்கும் புகழ் நிழலவை; 
பொன் ஒக்கும் உடையவை; 
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60 

1979

ஹெரொடோட்டஸ்ஸின் ஆரூடம் நிக்கராகுவேயில் பலித்தது. காது கேளாத சிறார்களின் பள்ளிகளில் அவர்களுக்கு மொழியின் பயன் கிடைக்கவேண்டி செய்த முயற்சிகள் வியர்த்தமாயின. அமெரிக்காவிலிருந்து 1986ல் வரவழைக்கப்பட்ட நிபுணர் ஜூடி கெகல் கண்டு கேட்டு அனுபவித்த வியப்புக்குறிய விஷயம்: அந்த குழந்தைகள், பெரியவர்களின் பாடங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, தாங்களே உருவாக்கிய மொழியில் பேசிக்கொண்டார்கள், இயல்பாகவே. ஆசிரிய பெருமக்களுக்குத் தான் அது புரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொடுத்தது பல நூல்களாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவுகிறது.

இந்த கட்டுரையின் இலக்கு ஆய்வுக்குறிய விதங்களில் எல்லாமொழிகளின் வரலாறு அமைகிறது, அதில் ஏற்படுத்தப்படாமல் ஏற்படும் விந்தைகள் தான் நமக்கு தாரகமந்திரங்களாக அமைகின்றன என்ற கருத்தை மற்றவர்கள் அலச வேண்டும் என்ற ஆர்வமமே.
-#-




சித்திரத்துக்கு நன்றி: http://biblelight.net/tower-painting-parliament.jpg

Wednesday, April 6, 2016

இன்னம்பூரான் சரடு 4

இன்னம்பூரான் சரடு 4


பொதுவுடமைக்காரர்களும், முதலாளித்துவத்தினரும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு ஜோக்கடிப்பார்கள். அவற்றில் சில அறுவைஜோக்குக்களாக அமையும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு விமானங்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக [சென்னை தமிழில் 'கண்டிப்பாக) தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! மன்னிக்க வேண்டும். என்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தர இயலாது. 

சர்தார்ஜி ஜோக்குக்கள் மாதிரி, இத்தகைய ஜோக்குக்களில் பொய் மிகைப்படுத்தப்படலாம் அல்லது நிதர்சனம் தலையை நீட்டலாம். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, உமாநாத் போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள் சொத்தையும், வரவையும் கட்சிக்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஜீவா அவர்கள் அதைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. தற்கால ரஷியாவின் அழகு பனாமா கண்ணாடியில் பிரதிபலிப்பு.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, April 5, 2016

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்! இன்னம்பூரான் சரடு 3

இன்னம்பூரான் சரடு 3

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!
தோஸ்த்! வஸ்தாத் ! உஸ்தாத் !

நான் சுல்தான் கீ பப்டி என்ற ஊரில் ராஜ்யபரிபாலனம் [அசிஸ்டெண்ட் கலைக்டர்] செய்து கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாததால் ரொம்ப அவஸ்தைப்பட்டேன். லக்டி என்றால் விறகு. லட்கி என்றால் பொண்ணு. விறகு வாங்கினதில் ஒரு தாவா, ஓட்டல் ஓனருக்கும், விறகு மண்டி ஓனருக்கும். அதற்கு நியாயமான தீர்வு வழங்கினேன். ஆனால், எல்லாரும் கொள்ளைச்சிரிப்பு. லக்டீ கீ பதிலாக லட்கீ வாங்கி விற்கறதாக நான் எழுதிய அனுமார் வால் தீர்ப்பு அபத்தமாக இருந்தது. ஊர் சிரிச்சுப்போச்சு.  அந்த மாதிரி தான் பஹூ என்றால் மருமகப்பெண். பஹீ என்றால் வரவு செலவுக்கணக்குப்புஸ்தகம். பஹூவை பஹீ என்று கூப்பிட்டு விட்டு, அவள் ஒரு குரல் கூக்குரலெடுத்து அழுத பின் தான் , அந்த விவாகரத்துக் கேஸே வாபஸ் வாங்கப்பட்டது. குரங்கைப்பிடிக்கப்போய் அது பிள்ளையார் பிடித்தக் கதையாகி விட்டது என்று சிலாகித்தார்கள்.  இது நிற்க.

அங்கு உருதுவுக்கு செல்வாக்கு என்பதால், ஜனாப் ஜலாலுதீன் சாஹேப் ‘தோஸ்த்’ ஆன எனக்கு ‘உஸ்தாத்’ ஆனார். அவர் பக்கத்து மைதானத்தில் குஸ்தி அக்காடா வைத்திருந்த ‘வஸ்தாத்’ சோம்தத் அகர்வாலை பற்றி ஒரு லோக்கல் கதை சொன்னார். அதான், ‘தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!’.

இந்த ரகசிய என்கெளண்டர் போலீஸ் வேலைக்கு மூன்று பேரும் விண்ணப்பம் செய்தனராம். காலியிடம் ஒன்று மட்டுமே.

டெஸ்ட்:

என் நிழலாகிய தோஸ்திடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, ‘அந்த அறையில் உன் மனைவி/கணவன் இருக்கிறார். சுட்டுக்கொன்று விட்டு வா.’ தோஸ்த் அழுத வண்ணம் திரும்பி வந்து ‘சுட கை வரவில்லை.’ என்றார். அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்து வந்த உஸ்தாத்துக்கும் இதே அதோகதி! வஸ்தாத்தோ வாகை சூடினார். அது எப்டி?

அவர் அந்த அறையில் நுழைந்தவுடன், சரமாரியாக குண்டுகள் வெடித்தன. பின்னர், கைக்கலப்பு சண்டைக்கான அறிகுறிகள், சத்தம், கூச்சல், அழுகை, முனகல், மவுனம். அவர் வெளியில் வந்து புகாரித்தார். ‘என்னது இது? நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா? சுட்றேன். சுட்றேன். நோ எஃபெக்ட். அப்றம் அடிச்சுக்கொன்னேன்.’ அவருக்கு உடனே கை மேல் வேலை.

இந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஆண் பெண் சமானம். மூவரில் யாரு யாரு எந்த பால்? ஏன்?
உடனே பதில் போடுவதாக செல்வன் சொன்னார். பேலியோ டையட் துணிவு. 
கமான் செல்வன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 5, 2016

Monday, April 4, 2016

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. பல்லென்னவோ சொல்லுக்கு உறுதி. மாணிக்கவேலு முதலியார் உள்ளூரில் பெரிய புள்ளி. மாவட்டத்தில் சற்றே சிறிய புள்ளி. மாநிலத்தில் சின்ன புள்ளி. பாரத நாட்டில் தம்மாத்தூண்டு புள்ளி. அவரு ஒரு நாள் தன்னுடைய மாருதி காரில் மாருத துல்ய வேகமாக, செங்கல்பட்டிலிருந்து தருமமிகு சென்னைக்கு செல்லும் போது, மாமாண்டூரில் ஹெட் கான்ஸ்டபிள் முனுசாமி விசிலடித்து நிறுத்தி, பேரையும், ஊரையும் எழுதிக்கொண்டு ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை வாங்கிப்பார்த்தார். ‘ஐயா இங்கே 60 கிலோமீட்டதில் தான் ஓட்டலாம்னு ரூலு. நீங்க 61 கிலோமீட்டரில் ஓட்றீங்க. கண்ணுக்குக் கண்ணாடிப் போட்டு ஓட்டணும்னு போட்றிக்கு. போட்டுக்கில்லை. பிடி சாபம்’  என்று சலானித்தார். முதலியார் கிளம்பச்ச சம்சாரம் கொடுத்த தாம்பூலத்தைத் துப்பாமல், இது வரை தப்பி வந்தார். ஆகவே, ‘நான் காண்டேக்ஷ்ஷ்...’ என்றவுடன், ‘சாமி! இது எலெக்ஷன் டைம். நாங்க வணங்காமுடியா இயங்கலாம். நீங்க எந்த மந்திரி தந்திரி காண்டேக்ட் சொன்னாலும், நாங்க டோண்ட் கேர், இன்னம்பூரானைப்போல, என்றார்.
முதலியார் பாவம் சொத்து இருந்தததால், ஷோக்குக்கு காண்டேக்ட் கண்ணாடி...
சரி விடுங்க. வேந்தன் வந்தா பேசிக்கலாம்.
இன்னம்பூரான்
04 04 2016
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, April 3, 2016

லோ! லோ!




லோ! லோ!
இந்த ஆனானப்பட்ட ஆங்கிலம் ஆளாளுக்கு வெவ்வேறு பொருள் கொடுத்து ஆலாய் படுத்துகிறது ஐயாமார்களே! அம்மாமார்களே!

இனி இங்க்லீஷ்  அப்பொத்தான் புரியும்.

Two American soldiers were traveling in an overcrowded London bus, standing. Within earshot, two ladies were talking about getting down in the next stop. 

One GI said to the other: Hi! When the ladies rise, we shall pinch their seats’

Perturbed, the ladies got down at the very next stop, to save their skin.

Comment Please.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com