Thursday, January 14, 2016

நமது பாதுகாவலர்கள் தினம்


நமது பாதுகாவலர்கள் தினம்



இன்னம்பூரான்
15 01 2016

உலகிலேயே பெரிய ராணுவங்களில் ஒன்று, இந்திய ராணுவம். இரண்டு உலக யுத்தங்களிலும், விடுதலைக்குப் பிறகு நடந்த யுத்தங்களிலும், உலக சமாதான சேவைகளிலும், உள்நாட்டு கலவரங்களை தணிப்பதிலும், அண்மையில் சென்னை வெள்ளத்தை லாகவமாக கையாண்டு, மக்களை உய்வித்த பணியிலும், கட்டுப்பாட்டுடனும்,தியாக உணர்வுடனும், திறனுடனும், துணிவுடனும் இயங்கிய இந்திய ராணுவத்தின் மகத்துவத்தை பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பம்.

இன்று இந்திய ராணுவ தினம். இதே தினத்தில் 1949ல் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்த்ப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதை நாம் கொண்டாட வேண்டும். 

ராணுவம் உகந்த முறையில் கொண்டாடும். நாமும் அதனுடைய வரலாற்றை அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்றி செலுத்தும் செயலில்  முழுமனதுடன் ஈடுபடவேண்டும். அவர்களையும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும் சந்தித்துப் போற்றவேண்டும்.

ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவத்தை மதித்தார்கள். கிட்டத்தட்ட 1900 வருட காலகட்டத்தில் இங்கிலாந்தின் ராணுவம் தமது பட்டாலியன்களை இந்தியாவில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. மதராஸ், பம்பாய், பெங்கால் ராணுவங்களை ஒன்றுபடுத்தி இந்திய ராணுவத்தை கர்சான் பிரபு அமைத்தார். அக்காலத்து ராணுவ தளபதி கிச்சனர் பிரபு ராணுவ பயிற்சி மையங்களை 1903ம் வருடம் துவக்கினார். 1917லிருந்து இந்தியர்கள் உயர்பதவிகளில் அமர்வது தொடங்கியது. 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உருவான போது இராணுவம் இரண்டு பட்டது. ஆங்கிலேயர்களில் பலர் வெளியேறினர். இந்திய ராணுவத்தின் தன்னார்வ படை மிகவும் பெரிது.

என் குடும்பத்திலும், நண்பர்கள் குழாமிலும் ராணுவ வீரர்கள் உளர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணி புரிந்தேன். அப்போது பல ராணுவ அதிகாரிகளுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பதவி சிறியது;ஆனால் பல பொறுப்புகள் : பட்ஜெட், ஆயுதங்கள் & தளவாடங்கள், விஞ்ஞான ஆலோசகரின் உதவியாளர், யுத்தம் பொருட்டு அதிரகசிய கையேடுகள் தயாரிப்பு, பாராளுமன்ற கவனிப்பு, இத்யாதி. அப்போது தளபதி ஜெனெரல் செளதரி அவர்கள். ராணுவ அதிகாரிகளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த மரியாதைக்கு ஏற்ற நன்றி செலுத்துகிறேன்.

எனக்கு ஒரு வருத்தம். எல்லா வாலிபர்களுக்கும் (16-17 வயது) கட்டாய ராணுவ சேவை கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நமது சந்ததி மிகவும் பொறுப்புடன் பல  சேவைகளை செய்வதை தன்னிச்சையாக கற்றுக்கொண்டிருக்கலாம். போனது போகட்டும் குழந்தைகள் பிறந்த வண்ணம். இனி மேலாவது இதை எல்லாம் செய்யலாம்.

வாழ்க இந்திய ராணுவம்.
சித்திரத்துக்கு நன்றி:http://indianarmy.nic.in/FlashImage/Fdss2.jpg

உசாத்துணை:





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, January 11, 2016

ஒரு கடுதாசி

அன்பார்ந்த திரு. ராவ் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பிய பாபா மெயில் பதிவு தமிழரன்பர்கள் என்னுடைய கருத்துக்களையும் பெறவேண்டி என் வலைப்பூவிலும் மற்ற இடங்களிலும் என் பொறுப்பில் தமிழில் 
பதிவு செய்கிறேன்.

1. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே,
எளிய அறிவுரை. அவரவர் பிரச்னை, தீர்வு அவரவர் கையில். சொந்த சமாச்சாரங்கள் தனியாரின் உரிமை. எனினும் ஆலோசனை மன்றங்கள் உளன. அது கேட்பவர்களுக்கு மட்டும் பொறுப்பாக அளிக்கப்படும். ஒருவர் மற்றொருவரின் சம்பளம் பற்றி கேட்பது அநாகரீகம். அவரே வட்டி விகிதம் பற்றி கேட்டால் தீர விசாரித்து சொல்வது நலம்.

2. மன்னித்து மறந்து விடு.
இதை சொல்வது எளிது. செய்வது கடினம். தாரதம்யம் வேறு இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவனை காட்டிக்கொடுக்கவேண்டும். துஷ்டனை கண்டால் தூர விலகுவது விவேகம். ஆனால் சிலர் அவமானப்படுத்துவார்கள். அவர்களை மன்னித்து விட்டு மறந்து விட்டால், மனம் இலேசு ஆகும்.

3. தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.
தற்புகழ்ச்சியையும் புகழ்மாலைகளையும் விட்டொழிப்பது நன்மை பயக்கும். ‘பணி செய்து கிடப்பது’ உன்னதமான செயல். புகழ்பவர்கள், காலம் மாறினால், இகழ்வார்கள்.

4. பொறாமை வேண்டாம்.
வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு. பொறாமையினால் மன நிம்மதி தான் குலையும். அதை விட்டொழிக்க.
5. சூழ்நிலையுடன் ஒத்து வாழ்.
தலைக்கேற்ற குல்லா வாங்கு. குல்லாவுக்கு ஏற்றபடி தலையை வெட்டிக்கொள்ளலாமா?!

6. பொறுத்துக்கொள்வதே நிவாரணம்.
நம் கையில் யாதும் இல்லை. எல்லாமும் இருக்கிறது. இதில் முரண் யாதுமில்லை. மாற்ற முடியாத சிக்கல்களை சுயநம்பிக்கையுடன் இயங்கி தீர்வு காண முடியும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’.

7. இயன்றதை செய். அதிக பளு வேண்டாம்.
எளிது. ஆனால், நானே கேட்கவில்லை. பாருங்களேன்!⏳

8. தியானம் செய்,
நல்ல அறிவுரை. நானும் கேட்கப் பார்க்கிறேன்!⛺

9. மனதை சோம்ப விடாதே,
மனம் இயங்கிக்கொண்டிருந்தால், பிரச்னைகள் அணுகா. ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலை செய்து வா.

10. எதையும் ஒத்திப்போடாதே.
அதனால் தான், உடனே இதை எழுதினேன்!

11. நடப்பது நடக்கும். அலட்டிக்காதே.〽

பாபாமெயில் சொன்னபடி திரு. பி.எஸ்.ஆர்.ராவ். அவர் சொன்னதை சற்றே மாற்றி எழுதிய

Wednesday, January 6, 2016

தோன்றியதும், தோன்றி மறைந்ததும், மறைந்திருந்து ஊசாடுவதும். ~1

தோன்றியதும், தோன்றி மறைந்ததும், மறைந்திருந்து ஊசாடுவதும். ~1


யாவருக்கும்  2016ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். யாவருக்கும் சுபிக்ஷம் உண்டாகுக.

பொழுதொரு வண்ணமாகவும், நாளொரு மேனியாகவும், தனிமனிதர்களாகிய நாமும், நமது சுற்றம், அக்கம்பக்கம், நமது நெருங்கிய சமூகம், சமுதாயம், கல்வித்தளம், அரசாட்சி, மற்றும் பற்பல தளங்கள் எல்லாம் வளர்ந்தும், தேங்கியும், தேய்ந்தும் வருகின்றன. வரலாறு, நடையுடை பாவனைகள், சம்பிரதாயம், ஆளுமை, கொத்தடிமை போன்ற புறமும், தத்துவங்கள், அபிமானங்கள், சிந்தனைக்களம், நினைவலைகள் போன்ற அகமும் இணைந்து செயல்படுவது தோற்றமாகவும் அமையலாம்; தோன்றி நிலைக்கலாம்; மறையலாம்; மறைமூர்த்திக்கண்ணன் என்ற உருவகத்துக்கு உற்றவாறு உள்ளுறையாகவும் அமையவும் அமையலாம்.

சான்றாக, நற்றிணை என்ற அருமையான சங்கப்பாடலுக்கு புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் பகர்ந்த கடவுள் வாழ்த்து இங்கே:

‘மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளவ முடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகதத் தடக்கிய
வேத முதல்வ நென்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.’

தோன்றியது அகிலாண்டம். ‘ஏன் தோன்றியது?/எப்படி தோன்றியது?/ யாருக்காக தோன்றியது?/ தோன்றிய விதம் என்ன?/ தோற்றுவித்தது யார்? போன்ற வினாக்களுக்கு விஞ்ஞானம் விடை தேடிக்கொண்டே இருக்கிறது. சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. தத்துவ வாதப்பிரிதிவாதங்கள் காதைக்கிழிக்கின்றன.  அவரவர் அபிமானங்கள் அவரவர்களுக்கு. சிந்தனைக்களமோ, யாழ்ப்பாணத்துத்தமிழில் சொன்னால், ஊசாடுகிறது. நினைவலைகள் தான் தோன்றி மறைந்ததை முன் கொணர்ந்து சிந்தனைத்திகிரியை சுழற்றி, உள்ளுறையை ஓரளவாவது புரியவைக்கிறது.

பாரதம் பாடிய பெருந்தேவனார் சூரியசந்திரர்களை பரந்தாமனின் கண்மலர்களாக பாவித்து, அவனது திருமேனியை விண்ணாகவும், திருவடிகளை மண்ணாகவும் பாவித்து, நான்கு கைகளை நாற்திசைகளாக பாவித்து, பாற்கடலை ஆடையாக அவன் உடுத்துலவும் அழகை போற்றும் போது, அவர் பாராட்டியது அஃறிணையான அகிலாண்டமாகவும் இருக்கலாம். சங்குச்சக்கிரம் தரித்தத் திருமாலாகவும் இருக்கலாம். ‘தீதற விளங்கிய திகிரி’ தீமைகளை களைத்தழிக்கும் சக்கரத்தாழ்வாராகவும் இருக்கலாம். புறத்தே, எண்ணற்ற வானங்களில் திகழும் வின்மீன் குழுமங்களாகவும் இருக்கலாம். அகத்தே, அகல் விளக்காக, தண்மையான சுடர் வீசும் உள்ளுறை தீபமாகவும் இருக்கலாம்.

சிந்தித்து செயல்படுக.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
சித்திரத்துக்கு நன்றி: http://wallpapercave.com/wp/1GHbBMU.jpg

Saturday, January 2, 2016

நாளொரு பக்கம்: III: 002



நாளொரு பக்கம்: III: 002
[Page of the Day]


இன்னம்பூரான்
ஜனவரி 2, 2016

I long for eternity because there I shall meet my unwritten poems and my unpainted pictures. -Kahlil Gibran (1883-1931) [Sand and Foam]

One longs to interpret the mystics and get lost in the conundrums for years. Suddenly, wisdom dawns in a flash from nowhere and is Gone With The Wind, by the time you put pen to paper. The fragrance, though, lingers; so, do Kahlil Gibran's unwritten poems and unpainted pictures. All of them are metaphors. The feel that remains with you during the everlasting spells of deep meditative reflections on nothing in particular, is the fragrance that endures.  The unwritten poems are those that you composed in your subconscious mind.  A many-splendored panorama of love and affection for kindred souls flit through my mind in a dream that I forget; it was a lovely poem, I said to myself then. The day I drowned in a temple pond in my early boyhood, I thought I would die and witnessed a grandiose procession of all my sins committed before reaching the age of five! Seenu, who saved me, said that the whole episode lasted two minutes. I still do not believe him as I had seen many a picture pre-painted for me!  The meaning eludes you. Is it not? So, is the case with me.

Perhaps, his oeuvre  about the erased foot-prints and the swept away foam stands for the ephemeral, the sea and the shore, in some vague manner, representing Kahlil Gibran’s very own ‘Eternal’. Let us recite the opening lines:

‘I AM FOREVER walking upon these shores,
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever….’
-x-


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










Friday, January 1, 2016

இனி ஒரு விதி செய்வோம்: 1

இனி ஒரு விதி செய்வோம்: 1

  • Friday, January 1, 2016, 5:30

இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
பிரசுரம் வல்லமை: http://www.vallamai.com/?p=65295

innam
தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.
நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.
பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.
இனி ஒரு விதி செய்வோம்.
பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம்: III: 001

நாளொரு பக்கம்: III: 001


இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
“வயது முதிர்ந்துவிடினும் - எந்தை
வாலிபக் களைஎன்றும் மாறுவதுஇல்லை;
துயர் இல்லை, மூப்பும் இல்லை, - என்றும்
சோர்வுஇல்லை, நோயொன்று தொடுவதுஇல்லை;
பயமில்லை, பரிவுஒன்றுஇல்லை, - எவர்
பக்கமும்நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவது இல்லை
நயம்மிகத் தெரிந்தவன்காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 
~ [செய்யுள் 9: கண்ணன் என் தந்தை: மகாகவி சுப்ரமண்ய பாரதியார்]

தண்டியலங்காரம் என்ற தமிழிலக்கண நூல் ‘பாவிக அணி’ என்ற சொல் அலங்காரத்தை விளக்கும் போது, மையக்கருத்து அமைவதையும் அதை சுற்றி அமையும் மண்டலத்தை பற்றியும் எடுத்துரைக்கும். மகாகவி, கண்ணனை மையப்படுத்தி, அவனை பற்பல உறவுகளாகக் கற்பித்து பாடிய பாடல்களில் மென்மை (காதலன்), கனிவு (காதலி), யதார்த்தமும், பணியின் மேன்மையும் (சேவகன்) எல்லாமே பாவிக அணியாக அமையும். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று மேடையில் உசாவி விட்டு, வீட்டில் அவரை (முதியவர்கள் யாவரையும் தந்தை ஸ்தானத்தில் வைத்து அழைப்பதை மேநாடுகளில் காணலாம். பேச்சளவில் மட்டும்தான் என்று சிலர் சொல்லலாம். அதுவாவது உளதே!) உதாசீனம் செய்யாதவர்களுக்கும், பாமரனுக்கும் மகாகவியின் சொற்கள் புரியும்.

முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவேண்டும். உடல்நலம் பேணுவது தற்காப்பு. மனவலிமையில்லையெனில் உடல் தளர்ந்து போகும். மனவலிமை ஒரு அப்பியாசமே. முதுமையையும் என்றோ சம்பவிக்கப்போகும் மரணத்தையும் இணைத்து கவலைப்படுவதோ,பச்சாதாபப்படுவதோ நலம் தரப்போவதில்லை. மேலும், கவலையில்லாத மனிதன் உலகில் இல்லா மனிதன். நடப்பது நடக்கட்டும் என்று விட்டேற்றியாக இருப்பது தான் விவேகம். முன்னேற்பாடுகள் நலம் தரும். அறிவு தேடலும், இளைப்பாறுதலும், நட்பும் பண்பும் கலந்த புதிய உறவுகளும்  வாழ்க்கைக்கு செழிப்பு சேர்க்கும். இது இப்படியாக இருக்க, மகவுகளும்,  மகாகவி போல பெற்றோரை எங்கிருந்தாலும் போற்றி வந்தால், அது கொடுப்பினையே. இங்கு சொல்லப்படுவது இருபாலாருக்கும் பொது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், நயம் மிகுந்து, துயர் ஒழிந்தால், எதிர்வாடை வாட்டாது. 

இந்த வினாடி புத்தாண்டு ஜெனனம். யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மகாகவியின் சொல் பலிக்கட்டும்.  முதியோரும், வாலிபர்களும், சிறார்களும் ’நடுநின்று விதிச்செயல் கண்டு’ மகிழ்வோமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://images.rapgenius.com/9f89b08a952f75c7160ea31d3cdea612.570x571x1.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, December 26, 2015

நாளொரு பக்கம் 44


நாளொரு பக்கம் 44

Wednesday, the 8th April 2015



Ludwig Wittgenstein has been considered by many as the most influential Western philosopher since Immanuel Kant. He had wide-ranging interests -moving from engineering to philosophy to becoming an elementary school teacher to military service, all the while deeply delving in philosophical investigations.
‘Bertrand Russell, his pupil Ludwig Wittgenstein  and their colleague G. E. Moore – the pioneers of Analytic philosophy – shared the view that ‘all sound philosophy should begin with an analysis of propositions’ (Russell 1992: 9; first published in 1900). In Russell and Wittgenstein such analysis was centrally a matter of logic.’
Viewed in this background, it come as no surprise that he uses the simile of a combination lock. In sum, Phlosophy is an alluring Spreadsheet.
-x-

Thursday, December 24, 2015

நாளொரு பக்கம் 43

நாளொரு பக்கம் 43


Tuesday, the 7th April 2015

स्वभावो नोपदेशेन शक्यते कर्तुमन्यथा ।
सुतप्तमपि पानीयं पुनर्गच्छति शीतताम् ॥

கல்யாண தரகர்களில் ஒருவர் சொன்னாராம், ‘ நான் சிபாரிசு செய்யும் பையனுக்கு தாராளமாக உங்கள் பொண்ணை கொடுக்கலாம். 64 குணங்களில் அவனுக்கு இரண்டு தான் இல்லை. மற்றபடி தங்கமான பையன்’. பொண்ணை பெத்தவன் கவலை அவனுக்கு. அந்த இரண்டும் என்ன என்று கேட்டாராம். பதில்: ‘தனக்காவும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்!’.

இந்த பூவுலகில் பெரும்பாலோர் இப்படித்தான் ‘ரண்டுங்கெட்டான்’ என்ற உண்மையை மேற்படி சுபாஷிதம் டபால் என்று  போட்டு என்றோ உடைத்துவிட்டது: “ அடுப்பில் வைத்தால் தண்ணீர் வென்னீராகிறது. சற்று நேரம் கழித்து ஆறிவிடுகிறது. அது போல ஆலோசனை வழங்கி ஒருவரின் குணாதிசயங்களை மாற்றமுடியாது.”
இதையே, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’ என்பார்கள். ஆனால், நாய் வாலை எதற்கு நிமிர்த்தவேண்டும்? அது பொருத்தமான உவமை அன்று.
In English: You can take the horse to water, but cannot make it drink.
அப்படியானால் என்ன் செய்யலாம்? தெரியவில்லை. சொல்லுங்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://markewbie.weebly.com/uploads/4/0/3/9/40396485/7667532.jpg

Wednesday, December 23, 2015

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

INNAMBURAN

23 12 20115




IMAGE CREDIT & COPYRIGHT & THANKS TO GOOGLE




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, December 21, 2015

நாளொரு பக்கம்: 42

நாளொரு பக்கம்: 42


Monday, the 6th April 2015
பாரம்பரியம், மரபு போன்ற சொற்கள் நம்மை வரலாற்றின் முன்பக்கங்களுக்கு எடுத்து செல்கின்றன. தற்காலத்தில் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு, பழங்காலத்து ஆளுமை இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோமானால், அவற்றை பற்றி மேலும் மேலும் அறிய அவா எழும், ஆர்வம் உள்ளோருக்கு. ஆர்வமில்லாதவர்களுக்கும் மேலும் அறிய ஆவல் ஏற்படலாம். 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அறம் சாற்றும் நூற்கள், திருக்குறளுக்கு இணையாகவே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ‘இனியவை நாற்பது’ என்ற கடைச்சங்க நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இறைவணக்கத்துக்கு பின் வந்து முதல் செய்யுளை காண்போம். 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. ~ [1]

பிச்சை யெடுத்துண்டாயினும் கற்பனவற்றைக் கசடறக்கற்றல் மிக இனிது.  அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல சபையில் உரையாட, அளவளாவ, தர்க்கம் செய்ய வந்துதவும். அதுவும் இனிதே. முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது வாய்ச்சொல் இனிது. அது போலவே  சான்றோரின் துணைக் கொள்ளுதல் தெளியவுமினிது.
இத்தருணம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்று புறநானூறு கூறும் 177 செய்யுள் கண் முன்னே வந்து நிற்கும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geotamil.com/pathivukalnew/images/stories/crit_7.jpg