நமது பாதுகாவலர்கள் தினம்
இன்னம்பூரான்
15 01 2016
உலகிலேயே பெரிய ராணுவங்களில் ஒன்று, இந்திய ராணுவம். இரண்டு உலக யுத்தங்களிலும், விடுதலைக்குப் பிறகு நடந்த யுத்தங்களிலும், உலக சமாதான சேவைகளிலும், உள்நாட்டு கலவரங்களை தணிப்பதிலும், அண்மையில் சென்னை வெள்ளத்தை லாகவமாக கையாண்டு, மக்களை உய்வித்த பணியிலும், கட்டுப்பாட்டுடனும்,தியாக உணர்வுடனும், திறனுடனும், துணிவுடனும் இயங்கிய இந்திய ராணுவத்தின் மகத்துவத்தை பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பம்.
இன்று இந்திய ராணுவ தினம். இதே தினத்தில் 1949ல் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்த்ப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதை நாம் கொண்டாட வேண்டும்.
ராணுவம் உகந்த முறையில் கொண்டாடும். நாமும் அதனுடைய வரலாற்றை அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்றி செலுத்தும் செயலில் முழுமனதுடன் ஈடுபடவேண்டும். அவர்களையும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும் சந்தித்துப் போற்றவேண்டும்.
ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவத்தை மதித்தார்கள். கிட்டத்தட்ட 1900 வருட காலகட்டத்தில் இங்கிலாந்தின் ராணுவம் தமது பட்டாலியன்களை இந்தியாவில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. மதராஸ், பம்பாய், பெங்கால் ராணுவங்களை ஒன்றுபடுத்தி இந்திய ராணுவத்தை கர்சான் பிரபு அமைத்தார். அக்காலத்து ராணுவ தளபதி கிச்சனர் பிரபு ராணுவ பயிற்சி மையங்களை 1903ம் வருடம் துவக்கினார். 1917லிருந்து இந்தியர்கள் உயர்பதவிகளில் அமர்வது தொடங்கியது. 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உருவான போது இராணுவம் இரண்டு பட்டது. ஆங்கிலேயர்களில் பலர் வெளியேறினர். இந்திய ராணுவத்தின் தன்னார்வ படை மிகவும் பெரிது.
என் குடும்பத்திலும், நண்பர்கள் குழாமிலும் ராணுவ வீரர்கள் உளர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணி புரிந்தேன். அப்போது பல ராணுவ அதிகாரிகளுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பதவி சிறியது;ஆனால் பல பொறுப்புகள் : பட்ஜெட், ஆயுதங்கள் & தளவாடங்கள், விஞ்ஞான ஆலோசகரின் உதவியாளர், யுத்தம் பொருட்டு அதிரகசிய கையேடுகள் தயாரிப்பு, பாராளுமன்ற கவனிப்பு, இத்யாதி. அப்போது தளபதி ஜெனெரல் செளதரி அவர்கள். ராணுவ அதிகாரிகளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த மரியாதைக்கு ஏற்ற நன்றி செலுத்துகிறேன்.
எனக்கு ஒரு வருத்தம். எல்லா வாலிபர்களுக்கும் (16-17 வயது) கட்டாய ராணுவ சேவை கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நமது சந்ததி மிகவும் பொறுப்புடன் பல சேவைகளை செய்வதை தன்னிச்சையாக கற்றுக்கொண்டிருக்கலாம். போனது போகட்டும் குழந்தைகள் பிறந்த வண்ணம். இனி மேலாவது இதை எல்லாம் செய்யலாம்.
வாழ்க இந்திய ராணுவம்.
சித்திரத்துக்கு நன்றி:http://indianarmy.nic. in/FlashImage/Fdss2.jpg
உசாத்துணை:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment