நாளொரு பக்கம்: III: 001
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
“வயது முதிர்ந்துவிடினும் - எந்தை
வாலிபக் களைஎன்றும் மாறுவதுஇல்லை;
துயர் இல்லை, மூப்பும் இல்லை, - என்றும்
சோர்வுஇல்லை, நோயொன்று தொடுவதுஇல்லை;
பயமில்லை, பரிவுஒன்றுஇல்லை, - எவர்
பக்கமும்நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவது இல்லை
நயம்மிகத் தெரிந்தவன்காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
~ [செய்யுள் 9: கண்ணன் என் தந்தை: மகாகவி சுப்ரமண்ய பாரதியார்]
தண்டியலங்காரம் என்ற தமிழிலக்கண நூல் ‘பாவிக அணி’ என்ற சொல் அலங்காரத்தை விளக்கும் போது, மையக்கருத்து அமைவதையும் அதை சுற்றி அமையும் மண்டலத்தை பற்றியும் எடுத்துரைக்கும். மகாகவி, கண்ணனை மையப்படுத்தி, அவனை பற்பல உறவுகளாகக் கற்பித்து பாடிய பாடல்களில் மென்மை (காதலன்), கனிவு (காதலி), யதார்த்தமும், பணியின் மேன்மையும் (சேவகன்) எல்லாமே பாவிக அணியாக அமையும். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று மேடையில் உசாவி விட்டு, வீட்டில் அவரை (முதியவர்கள் யாவரையும் தந்தை ஸ்தானத்தில் வைத்து அழைப்பதை மேநாடுகளில் காணலாம். பேச்சளவில் மட்டும்தான் என்று சிலர் சொல்லலாம். அதுவாவது உளதே!) உதாசீனம் செய்யாதவர்களுக்கும், பாமரனுக்கும் மகாகவியின் சொற்கள் புரியும்.
முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவேண்டும். உடல்நலம் பேணுவது தற்காப்பு. மனவலிமையில்லையெனில் உடல் தளர்ந்து போகும். மனவலிமை ஒரு அப்பியாசமே. முதுமையையும் என்றோ சம்பவிக்கப்போகும் மரணத்தையும் இணைத்து கவலைப்படுவதோ,பச்சாதாபப்படுவதோ நலம் தரப்போவதில்லை. மேலும், கவலையில்லாத மனிதன் உலகில் இல்லா மனிதன். நடப்பது நடக்கட்டும் என்று விட்டேற்றியாக இருப்பது தான் விவேகம். முன்னேற்பாடுகள் நலம் தரும். அறிவு தேடலும், இளைப்பாறுதலும், நட்பும் பண்பும் கலந்த புதிய உறவுகளும் வாழ்க்கைக்கு செழிப்பு சேர்க்கும். இது இப்படியாக இருக்க, மகவுகளும், மகாகவி போல பெற்றோரை எங்கிருந்தாலும் போற்றி வந்தால், அது கொடுப்பினையே. இங்கு சொல்லப்படுவது இருபாலாருக்கும் பொது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், நயம் மிகுந்து, துயர் ஒழிந்தால், எதிர்வாடை வாட்டாது.
இந்த வினாடி புத்தாண்டு ஜெனனம். யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மகாகவியின் சொல் பலிக்கட்டும். முதியோரும், வாலிபர்களும், சிறார்களும் ’நடுநின்று விதிச்செயல் கண்டு’ மகிழ்வோமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://images.rapgenius.com/ 9f89b08a952f75c7160ea31d3cdea6 12.570x571x1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment