Monday, December 21, 2015

நாளொரு பக்கம்: 42

நாளொரு பக்கம்: 42


Monday, the 6th April 2015
பாரம்பரியம், மரபு போன்ற சொற்கள் நம்மை வரலாற்றின் முன்பக்கங்களுக்கு எடுத்து செல்கின்றன. தற்காலத்தில் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு, பழங்காலத்து ஆளுமை இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோமானால், அவற்றை பற்றி மேலும் மேலும் அறிய அவா எழும், ஆர்வம் உள்ளோருக்கு. ஆர்வமில்லாதவர்களுக்கும் மேலும் அறிய ஆவல் ஏற்படலாம். 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அறம் சாற்றும் நூற்கள், திருக்குறளுக்கு இணையாகவே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ‘இனியவை நாற்பது’ என்ற கடைச்சங்க நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இறைவணக்கத்துக்கு பின் வந்து முதல் செய்யுளை காண்போம். 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. ~ [1]

பிச்சை யெடுத்துண்டாயினும் கற்பனவற்றைக் கசடறக்கற்றல் மிக இனிது.  அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல சபையில் உரையாட, அளவளாவ, தர்க்கம் செய்ய வந்துதவும். அதுவும் இனிதே. முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது வாய்ச்சொல் இனிது. அது போலவே  சான்றோரின் துணைக் கொள்ளுதல் தெளியவுமினிது.
இத்தருணம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்று புறநானூறு கூறும் 177 செய்யுள் கண் முன்னே வந்து நிற்கும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geotamil.com/pathivukalnew/images/stories/crit_7.jpg


No comments:

Post a Comment