Showing posts with label Supreme Court. Show all posts
Showing posts with label Supreme Court. Show all posts

Thursday, May 23, 2013




கனம் கோர்ட்டார் அவர்களே!-1

Innamburan S.Soundararajan Thu, May 23, 2013 at 2:22 PM

கனம் கோர்ட்டார் அவர்களே!-1


இன்னம்பூரான்
Thursday, September 15, 2011, 14:43
இந்தியாவுக்கு நல்ல பெயரும் உண்டு, அதனில் மாசு படிந்தும் இருக்கும், நச்சுக்காளான்கள் பூத்தும் இருக்கலாம். ஏன்? இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எனினும், உலகெங்கும் மதிக்கப்படும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்‘இந்தியா மசி’ என்று ஒரு தொடரை துவக்கியிருப்பதும், அவ்வாறு ஒரு தேசத்தின் மீது அந்த இதழ் சிறப்புத் தொடர் ஒன்றை அமைத்தது இது தான் முதல் தடவை என்று கேட்கும்போது, மகிழ்ச்சிக்கு மேலாக, கவலை எழுகிறது. இந்தியர்களாகிய நாமும், நமது குடியரசும், வண்ணக் கலவை போல் திகழும் பாரத சமுதாயமும், அதனுள் உறையும் சமூகங்களும், வணிகம், தொழில், சேவை, கட்டுமானம் போன்ற கிளைகளும் செவ்வனே இயங்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
மார்க் டல்லி ஒரு பிரபல நிருபர். இந்தியாவின் நண்பர், டில்லி வாசி. அவர் பத்து வருடங்கள் முன்னால், ‘மந்தகதியில் இந்தியா’ என்ற நூல் எழுதினார். முகவுரையிலேயே, ‘இந்தியாவில் அரசுதான் பிரச்னை…மாசு படிந்த அரசாட்சி அதனுடைய தனித்துவம்’ என்றார். எள்ளலன்று அது, கசக்கும் உண்மையென்று 2011-ல் நாம் தலையில் அடித்து சத்தியம் செய்கிறோம். கையோடு கையாக சோறு தின்னப்போய் விடுகிறோம். இந்தப் பின்னணியில் தொடங்குகிறது: கனம் கோர்ட்டார் அவர்களே! தொடருவது உங்கள் கையில். வாசகர்களுக்கு பயன் இல்லாததை எழுதுவது தவறு. அவர்களுக்கு ஆர்வமில்லாததை எழுதுவது வீண். தனக்காக எழுதுவது அசட்டுத்தனம்.
தற்கால அரசியல் அமைப்புகளுக்கு வடிவமும், கடமைகளும் வகுத்த மாண்டஸ்க்யூ என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றம், பரிபாலிக்க அரசாளும் ஆளுமை, அறிந்தும், ஆராய்ந்தும் உரை பகர நீதிமன்றம் என்று பாகப்பிரிவினை செய்தார். அவ்வழியே இயங்கும் இங்கிலாந்தின் உச்ச நீதி மன்றமான பிரபுக்கள் சபையின் தீர்வுகளை அலசும் பணியிலிருந்த போது, ஒரு தீர்வு கண்டு அசந்து போனேன்.
பினோஷே’ என்ற தென்னமெரிக்காவின் சில்லி நாட்டு கொடுங்கோல் அதிபர் இங்கிலாந்தில், கொலைகள் பலவற்றிற்கு காரணமானவர் என்று தண்டிக்கப்பட்டார், பிரபுக்கள் சபையினால். அந்த சபையே, வழக்கை மறுபடியும் அனுமதித்துத் தள்ளுபடி செய்தது. காரணம்: ஒரு நீதிபதியின் மனைவி, பினாஷேக்கு எதிர் வாடையில் இருந்த உலகப்புகழ் சமாதான மையத்திற்கு (ஆம்னஸ்டி இண்டெர்நேஷனல்)நன்கொடையாளர். அதை அவர் முன்கூட்டிச் சொல்லவில்லை. ஒரு பிரபலத்திடம் விளக்கம் கேட்டேன். இது நியாயமில்லை என்றேன். அவரோ ‘நியாயத்தை விட தர்மம் உயர்ந்தது. இந்த தீர்வு தார்மீகம்’ என்றார்.
இதை நான் எடுத்துச் சொல்வதற்குக் காரணம், இன்று (14-09-2011) இந்தியாவின் உச்ச நீதி மன்றம், என்றுமில்லாத வகையில் உன்னதத்திற்கும் உயரமாக, வானத்தில் ஒளி விடும் விண்மீனைப் போன்ற தீர்ப்பு ஒன்றை வழங்கி, இந்தியாவின் உச்ச நீதிமன்ற மேலாண்மைக்கு என்றும் மறவாத வகையில் புகழ்மாலை சூடியிருக்கிறார்கள். இத்தனைக்கும் வழக்கு சிறியது; தீர்வு கல்வெட்டு சாஸனம்.
தீர்வு முழுதும் இணையதளத்தில் வரவில்லை. அநேக நாளிதழ்கள் அதை இன்னும் கண்டு கொள்ளவில்லை. இருந்தும், நான் பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், மக்கள் மன்றம் என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள. சூடு தணிவதற்கு முன்னே என்பது, என் கட்சி.
தீர்ப்பு: “எந்த ஒரு அரசுக்கும், அதிகார மையத்துக்கும், தலைமை நீதிபதி உள்பட, அளவு கடந்த அதிகாரம் கிடையாது. தட்டிக்கேட்க முடியாத ஆளுமை கிடையாது. நீதித்துறை எந்த முடிவையும் பரிசோதிக்கலாம்.”
வழக்கு: தன்னுடைய 50 ஊழியர்களுக்கு விதிமுறைகளுக்கு அதிகமான சலுகைகளை, கல்கத்தா உயர்நீதி மன்றம் அளித்தது. ஒரு ஊழியருக்கு தவறுதலாக அளித்த சலுகையை, மற்றவர்களுக்கும் வழங்க, முடிவு எடுத்தது தலைமை நீதிபதி. உள் தணிக்கைத்துறை இதை தவறு என்றது. அரசாட்சியும் அவ்வாறே கூறியது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாதத்தை ஒத்துக்கொண்டு, தலைமை நீதிபதியின் ஆணையை சட்டப்படி தள்ளுபடி செய்தார். தலைமை நீதிபதி, தன்னுடைய ஆணை கவர்னரது போல; நீதித்துறை அந்த முடிவை பரிசோதிக்க முடியாது என்றார். தள்ளுபடியை தள்ளுபடி செய்தார். மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
வழக்கை விசாரித்த திரு.ஆர்.வீ.ரவீந்தரன் அவர்களும், திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்களும் போட்ட போடு: “ஜனநாயக ஆட்சியில், சட்டத்தின் மேலாண்மை தான் தலைமை. யாரும், எத்தருணமும், தன்னிச்சையாக நடப்பதை அது அனுமதிக்காது. ‘நான் ஆணையிட்டால்…’ என்றெல்லாம் ஆட விடாது, நீதித்துறை. சட்டபூர்வமான ஆளுமையை ‘சட்’ என்று தட்டி விடமாட்டோம். ஆனால், அது ஒரேடியாக ஆட்டம் போட முடியாது.”
இதைப் படித்தபோது ஒன்று நினைவில் வந்தது: “ஒரு நாடாளும் மன்றம், பூனைக்கண் குழந்தைகளை கொன்று விடவேண்டும் என்று தீர்மானித்தால், அக்குழந்தைகளை பராமரிப்பது சட்ட விரோதம். ஆனால், அப்படி ஒரு சட்டம் இயற்றுபவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். அதற்கு பணியும் மக்களும் மூடர்களே.” (லெஸ்லி ஸ்டீஃபன்: 1907) ஹூம்! அவர் சொல்லி நூறு வருடங்களுக்கு மேல் ஆச்சு.  நூறு வருடங்கள் ஆனாலும் செவிடனாகத்தான் இருப்பேன் என்றால், என்ன செய்யமுடியும்? நீங்களே சொல்லுங்கள்.
(தொடரும்)

பிரசுரம்: http://www.vallamai.com/?p=7996

  • தமிழ்த்தேனீ wrote on 15 September, 2011, 15:13
    முதலையும் மூர்க்கரும் கொண்டது விடார் என்னும் சொல்வழக்கு இன்னமும் தொடர வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை இக்கட்டுரை மிக அழகாக உணர்த்துகிறது
    அன்புடன்
    தமிழ்த்தேனீ
  • dr.tv wrote on 15 September, 2011, 15:58
    தொடருங்க. படிக்க இருக்கோம்.
    அதே சமயம் இதுக்கும் ஒரு எல்லை இருகக்ணுமே. இப்ப மூணு பேரை தூக்கில போட ஆய்வு செய் ங்கிறவங்க இத கெட்டியா பிடிச்சுப்பாங்க….
  • கேப்டன் கணேஷ் wrote on 16 September, 2011, 14:53
    தள்ளுபடிக்கே தள்ளுபடியா! இது அந்த நீதிபதியின் அகந்தையைக் காட்டுவதாக உள்ளது. ஊடகங்களின் கவனத்தில் இருந்து நழுவிப் போன மிக முக்கிய தீர்ப்பினை வாசகர்களின் கவனத்திற்குக் கொணர்ந்தமைக்கு நன்றி ஐயா. அருமையான கட்டுரை. நல்ல தொடக்கம். தொடருங்கள் ஐயா!

Friday, May 10, 2013

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29





Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 9:11 AM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29
  1. Friday, May 10, 2013, 6:49
  1. Featuredஇலக்கியம்Inline image 1பத்திகள்


இன்னம்பூரான்
pastedGraphic.pdf

இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.
கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.
அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.
அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.
இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;
இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:





பின்குறிப்பு: இது வல்லமை இதழில் அவ்வப்பொழுது தலை காட்டும் வேறு ஒரு தொடர். தொடர் 1 -28 பின்னர் வரும்.
இன்னம்பூரான்
10 05 2013

Sunday, April 7, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே -15

கனம் கோர்ட்டார் அவர்களே -15
  1. Monday, April 8, 2013, 5:22
  1. 1 comment


இன்னம்பூரான்

சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.
திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.
அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.
தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.
பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.
இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!
சித்திரத்துக்கு நன்றி:

பிரசுரத்துக்கு நன்றி: வல்லமை மின் இதழ்:http://www.vallamai.com/?p=34279#comments