சிவகாமியின் செல்வன் 13
இன்னம்பூரான்
செப்டம்பர் 13, 2016
"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!
சொல்லக்கேட்டதாக சொன்னவர்: சூலூர் லெக்ஷ்மணன்.
இடம், பொருள், ஏவல்: " ஐயாவோட சகோதரி மகன்கள் ரெண்டு பேர் விருதுநகரில் இருக்கின்றனர். அதில் ஒருவர் சரியில்லை...நாங்க கேட்டா 'காமராஜ் என் தாய்மாமன் தெரியுமா? என்று எங்களையே மிரட்டுகிறார்." என்ற கவலையுடன் பெரியவரின் அபிப்ராயம் கேட்க வந்த காவல் அதிகாரியிடம்.
என் குறிப்பு 1:
பிரபலங்களின் வரலாறு மற்றவர்கள் மூலமாக வரும் போது, அவர் காந்திஜியாக இருந்தால் கூட வாயாவார்த்தையாக,யதார்த்தமான சொல்மாற்றம், மிகை, இடைச்செருகல், புரட்டுக்கதை இத்யாதி இடம் பெறலாம். காஞ்சி முனிவரை பற்றிக்கூட அவருடைய சீடர்களே மிகைப்படுத்தலாம். விரோதம் பாராட்டுபவர்களோ அதகளம் செய்வார்கள். அதே மாதிரி காமராஜரை பற்றியும் செய்திகள் புரளலாம். திரு.லெக்ஷ்மணன் செய்தி நம்பகத்தன்மை உடையது என்பது என் கருத்து. லவலேசமும் ஐயம் இருந்தால் அவற்றை போடமாட்டேன்.
என் குறிப்பு 2:
எம்.ஓ.மத்தாய் என்று ஒருவர் நேருஜியின் காரியதரிசியாக இருந்தார். அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு நல்ல கடிதம் வந்திருக்கிற்து. ஆனால், அவர் எழுதிய 'டெல் ஆல்' புத்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி தான். அதில் அவர் நேரு இந்திராவிடம், 'இந்த திருட்டு உன் பசங்களின் கைங்கர்யமா?என்று கேட்டதாக எழுதியிருக்கிறார்.பின்னணி: உளவுத்துறை ராஜீவும், சஞ்சய்யும் ஒரு காரை லவட்டியதாகவும், தாத்தா பெயர் சொல்லி தப்பியதாகவும், அவரிடம் போட்டுக்கொடுத்து இருக்கிறது. அப்படியிருந்தால், அது அவர்கள் கடமை என்க. இது எத்தனை தூரம் நிஜம் என்று தெரியாது.
என் குறிப்பு 3:
இன்று ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருடைய வீட்டில் வருமானவரி சோதனை நடந்த பின். உளவுத்துறை, முன்னரே, வருமுன் காப்போனாக, உண்மை விளம்பியதா என்ற வினா எழுகிறது
-#-
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.ukhttp://innamburan.blogspot.de/view/magazinewww.olitamizh.com
No comments:
Post a Comment