Monday, December 15, 2014

ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9 என்னத்தைச் சொல்ல! 7


ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9
என்னத்தைச் சொல்ல! 7
இன்னம்பூரான்
15 12 2014
கிணற்றுத்தவளை ஒன்று ஒரே தாவலில் ஓடோடி குளம், குட்டை, கண்மாய் எல்லாவற்றையும் கன கச்சிதமாக அனுமார் போல தாண்டி, கடலிலேயே கலந்து உறவாடியமாதிரி, மத்தியப்பிரதேசத்து மாமனிதர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கினார். உலக பிரசித்தமானார். மனமுருக சொற்பொழிவு ஆற்றினார். சிறார்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆபத்பாந்தவனான அவரை அறியாதவர்கள் இருப்பது, அந்த மத்தியப்பிரதேசம் எனப்படும் கிணற்றில் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ பிரபலங்களின் வாழ்க்கை நெறி! ஆண்டவா! 

மத்திய பிரதேச சட்டசபையில் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை போற்றி ஒரு தீர்மானம் நிறைவேறிய பின்னும், அவருக்கு பர்த்தியாக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு வாழ்த்துரை மடல்கள், நோபல் பரிசு பெற்றதற்கு! 

வழங்கிய மேதைகள்:

“ நமது சகபாடி அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. அவர் செய்த சமூகசேவையை பாராட்டவேண்டும்.” -அமைச்சர் குஸும் மாஹ்டெலெ. ஆஹா!

“ கைலாஷ் விஜயவர்கியாவை போல சாதனையாளர்கள் எங்கள் கட்சியின் பல அங்கத்தினர்கள்!” - அமைச்சர் ஞயான் சிங். ( இவர் கலாச்சாரத்தின் விசிறி. ஆன்மீக இசை வித்தகர்.) பேஷ்!

திலீப் சிங் பரிஹார், ரஞ்சீத் சிங் என்ற சட்டசபை அங்கத்தினர்கள் விஜயவர்கியாவை போன்ற சாதனையாளர்கள் இந்தூரில் செய்த சமூக சேவைக்கு பரிசில் கொடுத்த நோபெல் கமிட்டியின் அருமை பெருமைகளை பாராட்டினார்கள். இதை கண்டு பொறுக்காத எதிர்கட்சி பெருமகனார் ஒருவர் விஜயவர்கியாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டதே மத்திய அரசும், மாநில அரசும் செய்த சதி என்று குற்றம் சாட்டினார். சத்ய பிரகாஷ் என்ற ‘உண்மை விளம்பி’ விஜயவர்கியாவை தாக்கிப்பேசினார்.

ஒரு ‘கைலாச’ குழப்பம். அரசியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றிருந்த சஞ்சய் பதக் என்பவர் ‘தபக்’ என்று ஒரிஜனல் கைலாஷை மறந்து விட்டு கைலாஷ் விஜயவர்கியாவுக்கும்  கைலாஷ் சாவ்லாவுக்கும் கன்ஃப்யூஸ் செய்து கொண்டு, யாரை பாராட்டுவது என்ற ‘தொபக்கட்டீர்’ வியாகூலத்தில் ஆழ்ந்தார். அஞ்சாநெஞ்சனாகிய அமைச்சர் பூபேந்திர சிங் இதையெல்லாம் ‘ஃபூ..பூ...’ ஊதி விட்டார். கைலாஷ் விஜயவர்கியா எல்லா புகழுரையும் ஜாலியாக வாங்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை குறை கூறினார்.

இந்த கந்தரகூளங்களை ஊடகங்கள் எள்ளல் செய்ததை பொறுக்காத இந்த ஆட்சி மேலாண்மை மவுனம் காத்தனர். நம்ம கிராம ஊழியர்கள் தேர்வு வைத்தால் இதுகள் தோல்வி தழுவுங்கள். அதை விடுவோம். மாபெரும் சாதனையாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை விதீஷா என்ற உள்ளூர் வாசிகள் கண்டு கொள்ளவேயில்லை. அவர் விளம்பரம் நாடாத உழைப்பாளி. அவரால் பல உதவி பெற்றவர்களே அவரை மதிக்கவில்லை. சிறார்களுக்கு அவர் இத்தனை பாடுபட்டபின்னும் உள்ளூரில் இன்று கூட சிறுவர்களை வேலை வாங்குகிறார்கள், விதீஷாவில்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் இந்த ரகம் அல்ல. சுதாரித்துக்கொள்வார்கள். 1970ம் வருடம் ஏ.ஜீ ஆஃபீஸில் ஒரு கலை நிகழ்வு. ஒரு அமைச்சர் சிறப்புரை ஆற்றினார், தேனீர் ஆற்றுவது மாதிரி!
கலையை பற்றி பேசுவதில் இடைச்செருகலாக, ‘நாங்கள் உங்களுக்கு அகவிலைப்படி வாங்கிக்கொடுத்தோம். நன்றி செலுத்துக’ என்று ஒரு ஊசிப்பட்டாசு வீசினார். மத்திய அரசு துறையான அந்த அலுவலக ஊழியர்கள் முணமுணத்தார்கள், உரத்த குரலில். அமைச்சர் தப்புத்தவறி தலைமை தாங்கிய நான் இதை அவரிடம் விளக்கி, இந்த ஆடிட் பசங்க ஒரு டோண்ட் கேர் டைப் என்றேன். புன்னகை பூத்த அமைச்சர் பிரான் அடுத்து சொன்னது, ‘ புதுக்கோட்டை அருகில் இருக்கும் சித்தன்ன வாசலிலே... என்று அரை மணி நேரம் ஒரு பிடி பிடித்த லாகவம். இல்லை லாவகமா?

மாரல்: கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம்.






pastedGraphic.pdfSatyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Satyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

No comments:

Post a Comment