ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11
என்னத்தைச் சொல்ல! 8
இன்னம்பூரான்
19 12 14
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்...’ என்று ‘நல்வழி’ யில் ஒளவைப்பாட்டி பாடினார். அது அவ்வாறு இருக்க, தனது உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. மனநிம்மதியை குலைக்கின்றன. இன்றைய செய்திகளில் எடுத்துரைக்கப்பட்ட தற்கொலைகளின் பின்புலமும், பயங்கரமான செய்முறைகளும், அவலங்களும் நம்மையே தற்கொலை செய்துகொள்ள தூண்டிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது.
பாண்டிச்சேரியின் முக்கியத்துவம் ஶ்ரீஅரவிந்தர் ஆசிரமம் தான். ஶ்ரீஅரவிந்தர் நிறுவிய அந்த ஆன்மீக மையம் அண்மையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. அங்கு வசித்து வந்த ஐந்து சகோதரிகளுக்கும் ஆசிரம பொறுப்பாளர்களுக்கு ஒவ்வாமை, சண்டை. கோர்ட் வாசற்படி ஏறினார்கள். உச்சமன்றம் அவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என ஆணையிட, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஐவரும் அவர்களது பெற்றோரும் தற்கொலை செய்ய கடலில் குதித்தனர். மூவர் காலி. மூவர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் தன்னை காப்பாற்றியவரே தன்னை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கினர் என்று புகார் அளித்தார். தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் ஆசிரமத்தைத் தாக்கினர்.
கந்துவட்டி துன்பம் தாங்காமல் கரூரில் இரு சகோதர்கள் நஞ்சுண்டு செத்துப்போனார்கள். இருளப்பசாமி என்ற விவசாயி தன் தந்தை காசிராஜனிடம் உரம் வாங்கக்கொடுத்தப் பணத்தில் கள்ளை குடித்து விட்டு வந்தார், தந்தையார். மகன் அதைக் கண்டிக்க, அப்பன் தீக்குளித்து மரணம் அடைந்தார். கலப்பு மணம் செய்து கொண்ட ஒரு யெளவன தம்பதியை, இரு தரப்பிலும் வீட்டார் ஒதுக்கி வைத்தனர். தன்னுடைய வளைகாப்பு வைபவத்துக்கு ஒருவரும் வரவில்லை என்று மனைவி தூக்கில் தொங்க, அதை கண்டு மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டுக்கொண்டான். தேனியில் தலைமை ஆசிரியை தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தீக்குளித்தான். மேலதிகாரி ஒருவர் தலைமை ஆசிரியை மீது குற்றம் என்றார். அந்த அம்மையும் ரஜாவில் போய்விட்டார்.
தமிழகமே! நீ எங்கே போகிறாய்? Quo Vedis?
Image Credit:
http://www.notable-quotes.com/s/suicide_quote.jpg
No comments:
Post a Comment