அன்றொரு நாள்: நவம்பர் 25
செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்
பெண்ணியத்தை பற்றி நாலு வார்த்தை சொன்னால் போதும். மொட்டைத்தலை ஆணுக்குக் கூட முடி சிலிர்க்கும். ஃபெப்ரவரி 6, 2011 அன்று மின் தமிழர்கள் எனக்கு ராஜோபசாரம் செய்தார்கள். என் விருந்தினராக, கவிஞர் க்ருஷாங்கினியும், கணவர் நாகராஜனுடன் வந்திருந்தார். பூரணி~ க்ருஷாங்கினி ~நீரஜா என்ற மூன்று தலைமுறை பெண்ணியத்தை சார்ந்த அவர், அதை பற்றி நாலு வார்த்தை மென்மையாக சொன்னார். பட்டிமன்றத்தின் களை கூடியது. யாரும் தவறாக பேசவில்லை. ஆனால் ‘ஆணின் நியாயம்’ ஈனக்குரல் எடுத்து, சப்பைக்கட்டுக்கட்டியது. அதை அவிழ்த்து,‘மங்கையராய்ப்பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’ என்று கவிமணியுடன் பாடுவதுடன் நிற்காமல், மனமுவந்து திரு.வி.க. அவர்களுடன் ‘பெண்ணின் பெருமை’ யை போற்றும் நாள் வந்து விட்டது. அது நவம்பர் 25 தேதி, வருடந்தோறும். பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக 1981 லிருந்து பெண்ணியம் குறித்துள்ளது, அந்த தினத்தை. அது சம்பந்தமான டைம்-லைன்.
1. November 25, 1960: மிராபெல் சகோதரிகள் நால்வர். அவர்கள் தென்னமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு என்ற பொய்யியல் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தார்கள். சர்வாதிகாரி ராஃபேல் ட்ருயியோ, அவர்களை ஆள் வைத்து கொலை செய்தான். ஒருவர் தப்ப, மூவர் செத்தனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தினம்.
2. 1981: பெண்ணியம் மிராபெல் சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தத் தொடங்கிய வருடம். சும்மா 20 வருட தாமதம் அவ்வளவு தான்.
3. டிசம்பெர் 17, 1999: ஐ.நா. தீர்மானம் 54/134. நவம்பர் 21ஐ ‘பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக’ ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தது. சும்மா 40 வருட தாமதம். அவ்வளவு தான்.
4. நவம்பர் 25, 2011: அரை நூற்றாண்டு கழிந்தும் பெண்களுக்கு காபந்து இல்லை.
சமீபத்தில் மின் தமிழில் இடுப்புவலியை பற்றி சில எண்ணங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. எண்ணங்களை தவிர்த்து, வலியை மட்டும் நோக்கினால், வலி நிவாரணத்துறையில் நற்பெயர் எடுத்த என் பிள்ளை ‘ஒருவர் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளமுடியாது. எனினும், நிவாரணம் அளிக்க நாங்கள் ஓரளவு புரிந்து கொள்ளவேண்டும். அதற்கென்ற அளவுகோலின் எல்லை அறிந்து, பணிவுடன் செயல்படுகிறோம்.’ என்று சொல்வது ஆண்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பு என்க. மேற்கத்திய நாடுகளின் பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தந்தையை அனுமதிக்கிறார்கள்; ஊக்கப்படுத்துகிறார்கள். ஏனெனின், ஓரளவு புரிந்து கொள்ளமுடியும். இதோ பாருங்கள், கவிஞர் க்ருஷாங்கினி, ‘இரட்டுற மொழிதல்’ பாணியில், பிரசவித்தலையும், வாஷிங் மெஷினின் செயல்பாட்டையும்’ இணைத்து எழுதிய கவிதையை:
“அடைத்து உள்செலுத்தியும்
கதவை அழுத்தி மூடியபின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும்,
உருளும், புரளும்
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்
அறைக்குள் சிறைவாசம்
சிறுதுளை வழியே உள்நீர் வெளிவடிய
உச்சக் கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில் இறக்கி கீழே விழும்.”
உருக்கமான கவிதை. நெருடலான கருத்து. அதிரவைக்கும் உவமை. நற்றாயை பற்றிய இலக்கியமிது.
இப்போது ‘கால்கட்டு’ இல்லத்தரசியை காண்போம். நீலா கண்ணன் மின் தமிழில் மே 8, 2010 அன்று அனுப்பிய சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு!. அதிலிருந்து ஒரு பகுதி:
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, அசோக்குமார் கங்குலி இருவரும் இல்லத்தரசிகளின் முக்கியத்துவத்தை அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
"வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதன்படி, வாகன விபத்துக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படுகிறது. அது தவறான வகைப்படுத்தல்" என்று கண்டித்திருக்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, இல்லத்தரசிகளின் பணி எத்தகையது என்பதையும் விளக்கியிருக்கிறார் தனது தீர்ப்பில்...
பணத்தால் மதிப்பிட முடியாத கொடை!
"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. வீட்டு வேலைகள், குழந்தைகளின் படிப்பு, கணவரின் ஆரோக்கியம் என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும் உழைப்பையும் கொடுக்கவில்லை. கொடையாக(Gratuity) வழங்குகிறார்கள். வேலையாள் வைத்து செய்யும் இந்த வேலைகள், அவர்களின் எதிர்பார்ப்பற்ற சேவையைப் போல் இருக்காது. எனவே, அவர்களின் பெருமதிப்பை, பங்களிப்பை இந்த நீதிமன்றம் அறியும். அதை அங்கீகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தீர்ப்பு எழுதப்படுகிறது..." என்று கூறி, கீழ் கோர்ட்டையும், குறிப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளாததையும் கண்டித்து தீர்ப்பு வழங்கினார்.
"குறைந்தபட்சம் மோட்டார் வாகனச் சட்டப்படி கணவனின் வருவாய் அடிப்படையிலாவது இந்த பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கியிருக்க வேண்டும். அதன்படி ரூபாய் ஆறு லட்சம் நஷ்டஈட்டை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு வட்டியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டதோடு, வழக்குக்கான செலவுத் தொகையையும் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி!
கணவனின் சம்பளத்தில் பாதி மனைவிக்கு!
இல்லத்தரசிகளை நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக பயன்தராதவர்கள் பட்டியலில் வைத்துள்ளதை கடுமையாக கண்டித்து தீர்ப்பு எழுதியிருக்கிறார் மற்றொரு நீதிபதியான அசோக்குமார் கங்குலி.
"2001-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பவர்கள், விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் இல்லத்தரசிகளையும் சேர்த்துள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களை, பொருளாதார அளவில் பயன்தராதவர்கள் பட்டியலில் எப்படி சேர்க்கலாம்? வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை, வீட்டையும்... குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும்" என்று தீர்ப்பு கூறிய கங்குலி,
"கடந்தாண்டு இதேமாதிரி சென்னையைச் சேர்ந்த மைனர் பெண் தீபிகாவின் தாயார் விபத்தில் மரணமடைந்த வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பில், பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து, அவற்றையும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தோடு சேர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது இந்த வழக்குக்கும் பொருந்தும்" என்றதோடு,
சட்டத்தை திருத்துங்கள்!
"இந்தியாவில் பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். இதற்கான சட்டத் திருத்தை மோட்டார் வாகன சட்டத்தில் மட்டுமல்ல... திருமணங்களுக்கான சட்டத்திலும் கொண்டு வந்து இல்லத்தரசிகளுக்கு அவர்களுக்கான அங்கீகாரத்தை, மரியாதையை வழங்க வேண்டும்!" என்று வலியுறுத்தி வரைந்துள்ளார் இந்த முக்கியமான தீர்ப்பை!
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இது காமன் சென்ஸ் இல்லையோ? உச்ச நீதி மன்றம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா? உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், சட்டத்துறை எல்லாவற்றிலும் இருப்பது ரிஷ்ய சிருங்கர்களா? அல்லது சுகபிரும்ம ரிஷிகளா? ‘வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள்’ என்பது தான் தற்கால பொது அணுகு முறை என்றால், ஆண்கள் பிள்ளை பெறவேண்டும். குறைந்தது பிள்ளை கொடுக்காமலாவது இருக்க வேண்டும். வெட்கக்கேடு.
அது தான் போகட்டும். தாத்தா பாட்டிகளை பாருங்கள். அன்யோன்ய தம்பதி என்றால், தொண்டு கிழம் ஆனபிறகு ‘உங்களுக்கு பிறகு நான் அமங்கலியாக போகிறேன். உங்களால் தனிமையை தாக்குப்பிடிக்கமுடியாது’ என்று தமிழக பாட்டிகள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ஒரு தியாக உணர்ச்சி, யதார்த்தம் என்றாலும், ஆணின் பலவீனத்தை ஃப்ரேம் போட்டு காட்டுகிறது.
இதற்கு மேல் எழுதினால், யாரும் படிக்க மாட்டார்கள். ஏற்கனவே நீண்டு போய்விட்டது. இன்றைய இழையை செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது ஒரு யக்ஞம்.பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறை உலகெங்கும் காலங்காலமாக அமலில் உள்ளது. அதை தண்டிக்கும் சட்டம் போட்டால் ஆயிரம் விதண்டாவாதம். இத்தனை தூரம் பேசியாச்சு. இதையும் சொல்லி விடுகிறேன். இங்கிலாந்தில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் வேலை செய்யும்போது, பக்கத்தில் Victim Support. அடடா! எத்தனை சிக்கலான கேஸ்கள். என்னே கரிசனம். நான் அனுபவம் என்று சொன்னால், உடனே முதுமையின் குரல் என்று நினைத்து விடுகிறார்கள். வெளியூரிலிருந்து எல்லாம் domestic violence பிரச்னைகளுடன் ‘திக்கற்ற பார்வதிகள்’ வரும் போது, கல்லும் உருகி விடும். ஆனால், அவர்களின் ரகசியத்தை காப்பாற்றி, முழு பாதுகாப்பு அளித்து, சட்டரீதியாக சண்டை போட வழி வகுக்கும் போது, மனது கனத்து விடுகிறது. ஒரே ஒரு கேஸ். கொஞ்சம் விவரம் சொல்லலாம். 20 வருடம் வாழ்ந்த பிறகு ஒருத்தி தனித்து விடப்படுகிறாள், ஆங்கிலம் கூட தெரியாமல். நாள் தோறும் அவளை, கைத்தாங்கலாக, கவனித்து, குடியுரிமை வாங்கிக்கொடுத்து, வேலை வாங்கிக்கொடுத்து, வீடு அமர்த்தி. அடேயப்பா! அந்த மையம் செய்த உபகாரத்துக்கு, அந்த மையமே சொர்க்கத்துக்கு தகுதி. இவற்றையெல்லாம் என் ஆய்வுக்கு எடுத்ததால், அனுபவம். வயது ஏறியதால் அன்று. இதே இங்கிலாந்தில், ஒரு செல்வந்தர் வீட்டு இல்லத்தரசி ஒதுக்கப்பட்டாள். உள்ளூர் வக்கீல்கள் கூட உதவ தயங்கினார்கள். அந்த அவலக்ஷணம் இந்தியாவில் அதிகம். ‘வாழாவெட்டி’ என்ற சொல்லே நம் நாகரீகத்தின் துன்ப வரவு. ஆனாலும் ஒரு நல்ல வார்த்தை சொல்லி முடித்து விடுகிறேன். போன நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு தொண்டு கிழவர் மைலாப்பூரில் சொந்த செலவில் ஒரு Victim Support நடத்திக்கொண்டு இருந்தார். எத்தனை ப்ரெஷர் வந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவருடைய ஆத்மா இன்றைய தினம் பக்கதில் நிற்பதாக தோன்றுகிறது.
இன்னம்பூரான்
25 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment