அன்றொரு நாள்: நவம்பர் 26
மதி தந்தருளிய விதி
‘சாலையோரம் ஆலமரங்கள் நட்டேன், மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நிழல் தருவதற்கு;ஆங்காங்கே மாந்தோட்டங்கள்; எட்டெட்டு கோசங்களிடையே கிணறுகள் வெட்டினேன்; இளைப்பாறும் விடுதிகள் அமைத்தேன்; ஆங்காங்கே பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் நீர்ச்சுனைகள் அமைத்தேன்; இவை எல்லாம் சின்ன விஷயங்கள். மற்ற அரசர்களும் செய்தவை தான். யான் செய்ததெல்லாம், நமது மக்கள் யாவரும் ‘தம்மம்’ உயர் வாழ்நெறியை கடைப்பிடிக்க வேண்டும்” என்ற இலக்கை நோக்கி.
~ அசோக சக்ரவர்த்தியின் கலிங்கா கல்வெட்டு.
‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது... அரசு,சமயம், இனம், சாதி,பாலினம், பிறந்த மண் ஆகியவற்றை வைத்து, வேற்றுமை பாராட்டக்கூடாது. கடை, கண்ணி, நீர் நிலைகள், பொது ராஸ்தா இவைகளில் இத்தகைய வேற்றுமை பாராட்டக்கூடாது. பெண்கள்/சிறார்கள்/ ஹரிஜனம் ஆகியோருக்கு சலுகைகள் இருக்கக்கூடும்.
~ பகுதி 14 & 15: இந்திய அரசியல் சாஸனம்.
அசோகர் உயிரினங்கள் யாவற்றையும் போற்றினார். இந்திய அரசியல் சாஸனம் கொஞ்சம் சறுக்கி, மனித இனத்தை மட்டும் போற்றுகிறது என்றாலும், அது சுதந்திர இந்தியாவுக்கு ஏற்புடைய நுழைவாயில்.
‘பேச்சு உரிமை வந்தாச்சுன்னு
கீச்சு கீச்சுன்னு கூவுவோமே.’
என்று இன்று, தொடை தட்டி கொட்டி முழக்கி துட்டுலெ புழங்கும் அரசியலருக்கு, நமது அரசியல் சாஸனம் வந்த விதம் மறந்து போயிருக்கும். சான்றோர் சபை ஒன்று பல முறை கூடி, ஆய்வுகளும், ஒப்புமைகளும் பல செய்து, பல துறை வல்லுனர்கள் ஆக்கபூர்வமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, கட்டுக்கோப்பான ஒற்றுமையுடன், தேசாபிமானத்தை அடித்தளமாக அமைத்துக்கொண்டு, மக்கள் நலத்தை இலக்காக நிறுவிக்கொண்டு, சமத்துவத்தை நாடி, ஜனநாயகத்தை போற்றி, புகழ் வாய்ந்த அரசியல் சாஸனம் ஒன்றை நமக்கு அருளிய தினம், நவம்பர் 26, 1949.
அரசியல் சாஸனங்கள் வேத பாடம் மாதிரி. பிரிட்டீஷ் அரசியல் சாஸனம் ஶ்ருதி. எழுத்து மூலம் இல்லை. அமெரிக்காவின் அரசியல் சாஸனம் கீர்த்தி மிகுந்தது. அது ஒரு அமர காவியம். ஐரோப்பிய நாடுகளில் தேச வரலாறும், அரசியல் சாஸன வரலாறும், ரயில் தண்டவாளம் போல: அடுத்தடுத்தும், ஒரே பயணத்திலும். ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாஸனம் அந்த சமுதாயத்தின் பண்பை பிரதிபலிக்கும் என்று பொதுவாகச் சொல்லலாம். இருந்தும் போலிகள் நிறைந்திருக்கும் உலகமல்லவா! கொடுங்கோல் அரசுகளின் த்வஜஸ்தம்பத்தில் ஜனநாயக அரசியல் சாஸனம் கொடி கட்டி பறக்கும், ஸோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் போல.
நமது அரசியல் சாஸனத்தின் வரலாறு, என்னுடைய கணிப்பில், தொடங்கியது 1909ல். பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் இந்தியாவை ஆளத்தொடங்கியது 1857ல். ஐம்பது வருடங்களிலேயே, தேசாபிமான புத்துணர்ச்சியை மதித்து இயங்கவேண்டியது, இன்றியமையாததாக ஆகி விட்டது. பாடம் புகுத்தியதில் ஆங்கிலேயரின் பங்கு உண்டு. மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகளை மறக்கலாகாது. பின்னர் மாண்டேகு - செம்ஸ்ஃபோர்ட் திட்டம் 1919. அடுத்து இந்திய அரசியல் சட்டம் 1935. அதை முதுகெலும்பு போல் பாவித்துத் தான் நமது அரசியல் சாஸனம் வரையப்பட்டது. இன்றைய அரசியல் பின்னணியில் வாசித்தால், மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகள் தென்படவில்லையே என்ற கேள்வி எழலாம். வாஸ்தவம் தான். தனி மனிதன், சிறிய சமுதாயம், பெரிய சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் வேகம் ஒரே துரித கதி அல்ல. பாருங்களேன். 1950ல் ‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது...’ என்று சட்டம் தீட்டி விட்டு, அறுபது வருடம் கழித்து இரட்டை டம்ளர்! கட்டப்பஞ்ச்சாயத்து! தேர்தலில் சாதீயம்! போலீஸ் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு!
நமது அரசியல் சாஸனம் அமைத்த சான்றோர் சபை சுதந்திரம் வருமுன் நிறுவப்பட்ட இந்திய பார்லிமெண்ட் எனலாம், நேர் முறை தேர்தல் இல்லை என்றாலும். தொடக்கத்தில், பாகிஸ்தானும் இன்றைய பங்களா தேஷும் உள்ளடங்கியவை என்றாலும். அதனுடைய முதல் மீட்டிங் டிசம்பர் 9, 1946. 11 தடவை கூடி 165 நாட்கள் விவாதித்து, நவம்பர் 26, 1949 அன்று இறுதி கூட்டம் நடந்தது. ஜனவரி 26, 1929 அன்று தான், இருபது வருடங்களுக்கு முன்னால், பூர்ண ஸ்வராஜ்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனுடைய ஞாபகார்த்தமாக, இந்திய அரசியல் சாஸனத்தின் பிரகடன தினம் ஜனவரி 26, 1950. முதல் கூட்டத்தின் தலைர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் பாபு ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 உபகமிட்டிகள். சாஸனத்தை வரைந்து, உருக்கொடுத்து அமைக்கும் உப கமிட்டியின் தலைவர் பாபாசாஹேப் அம்பேத்கார். மெஜாரிட்டி கட்சியான காங்கிரஸை சார்ந்தவர் இல்லை. சொல்லப்போனால், அவர் எதிர்க்கட்சிக்காரர் எனலாம். அந்தக்காலத்தில் இந்த சின்ன விஷயங்கள் ஒரு பொருட்டல்ல. தேசாபிமானம், உண்மை உழைப்பு, திறன், பகிர்வு ஆகியவை தான் முக்யம். அதை கவனத்தில் கொள்ளாமல், பாபா சாஹேப் அம்பேத்கார் ஒருவர் மட்டுமே நம் அரசியல் சாஸனத்தின் ஆயனசிற்பி என்பவர்களும் உண்டு.
அநேக பேர் அறியாத விஷயம். இந்த சான்றோர் சபையில் அங்கத்தினராக இல்லாத ஒரு மாமேதை தான் இந்திய அரசியல் சாஸனத்தின் சூத்ரதாரி. ராஜன் பாபு நவம்பர் 26, 1949 அன்று சொன்னார், ‘... ஊதியம் யாதும் பெற்றுக்கொள்ளாமல், தன்னார்வத்துடன் பணி புரிந்தார். இங்கேயே வாசம் எனலாம். தன்னுடைய அபார புலமை, அறிவாற்றல், நுண்ணறிவு மூலமாக சபைக்கு உதவியதோடு நிற்காமல், எல்லா அங்கத்தினர்களும், அறிவு கூர்மையுடன், முழுமையான ஆய்வுக்கு பிறகு இயங்குவதற்கு உதவியாக ஆதாரங்கள் கொடுத்து உதவினார்.‘ அவ்வாறு புகழப்பட்டவர், ஸர். பெனகல் நரசிங்க் ராவ் ஐ.சி.எஸ். சுருங்கச்சொல்லின், அவரில்லையேல் சாஸனமில்லை...'
சில ஊடகங்களில், மின் தமிழ் உள்பட, அரசு ஊழியர்களை சுய நினைவு இழந்தவர்கள் போல, திறனற்றவர்கள் போல, கண்ணியமிழந்தோர் போல சித்தரிப்பது ஃபேஷன் ஆகி விட்டது. பெரும்பாலும், அரசு ஊழியம் பற்றி அறியாதவர்கள் தான் இந்த உடுக்கடிக்கிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் உளர். மனித சமுதாயத்தின் ஒரு பாகம் தான் அரசு ஊழியம். அங்கு தேர்ந்தெடுக்கும் முறை சரியாக இருந்தால், பிரச்னை குறைவு. எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, பெனெகல் ராம ராவ், பெனகல் நரசிங்க் ராவ், வி.பி.மேனன், கிரிஜா சங்கர் பாஜ்பாய், பி.சிவராமன், ஹெச்.வி ஆர். ஐயங்கார், லோபோ பிரபு, எஸ்.கே.செட்டூர், பி.வி.ஆர். ராவ் போன்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தங்கத்தட்டில் ஏந்தவேண்டும். ஏன்? இன்றைய காலகட்டத்தில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. ஆஸ்ரா கார்க் ஐ.பி.எஸ். நற்பணி செய்கிறார்களா? இல்லையா? கொஞ்சம் தெரிந்ததால் தான் சொல்கிறேன். 1950 களில் நேர் காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற தணிக்கைத்துறையின் நடுத்தர நிலை ஊழியர்களில் பெரும்பாலோர் ரத்னங்களாக திகழ்ந்தனர். ஐ.ஏ.எஸ். தேர்வும் சிறந்த முறையில். நேர்காணல் செய்யும் பணியிலும் சில வருடங்கள் முன் வரை இருந்ததால், இதை சொல்ல துணிந்தேன். முதல் நிலை பயிற்சி மிக முக்கியம். ஐ.ஏ.எஸ். பயிற்சித்துறை முதல்வராக இருந்த பி.எஸ். அப்பு ஐ.ஏ.எஸ். முறைகேடான அரசியல் தலையீட்டினால் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. இருந்தும் ஒரு சம்சயம். அரசு ஊழியர்களை குறை சொல்லும் தமிழர்களின் கண்ணில் பட்ட சமீபகால ஊழியர்களில் பலரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு தேர்வாலயம் இப்போது குற்றசாட்டுகளால் குளிப்பாட்டப்பட்டு, தலை விரிகோலமாக, நடுத்தெருவில் நிற்கிறது. ஊரே சிரிப்பாய் சிரிக்கிறது. மேலே சொல்ல வெட்கமாகுது. ஒரு சமயம், இந்த சிக்கலால், நல்லவர்களுக்கும் கெட்ட பேரோ!
இன்னம்பூரான்
26 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment