அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!
தலைப்பு கொஞ்சம் கிருத்திரமமாக இருந்தாலும், இலக்கு உன்னதமாக இருப்பதால், இந்த இழையும் சீதாலக்ஷ்மி ஸ்பெஷல். அவருக்கு பிடித்த சமாச்சாரம்: வசீகரம். உரையாடல் நடை. புகுந்து விளி ஆடுவது எளிது. என்ன தான் திசை மாற்றினாலும், வள்ளிசா புறமுதுகுக் காட்டி, கம்பாஸ் போல துருவ நக்ஷத்திரம் நோக்கி திரும்பிக்கொள்ளும்.
அன்றொரு நாள் ஆண்டோ பீட்டருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் அந்த அரிய தருணம் கிடைத்தது என்பதையும் தக்கதொரு தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டு, விஷயத்துக்கு வருகிறேன். ஆருத்ரா தரிசனம் கிடைத்தாலும் ஆண்டோ தரிசனம் கிடைக்குமோ? அந்த சமயம் கூட இருந்த நண்பர் ஒருவர் சுயமுன்னேற்றத்தை பற்றி ஆர்வத்துடன் பேசி வரும் போது, வழக்கம் போல் குறுக்கிட்ட யான், டேல் கார்னீகீ பற்றி அறிவீரோ என்று கேட்டேன். ‘லபக்’ என்று அவர் திசை மாற்ற, எனக்கும் பசியெடுக்க, சு.மு. பேச்சு அபார்ஷன் ஆகிவிட்டது! அது தொடர்ந்திருந்தால்.....!
ஒரு கற்பனை உரையாடல்:
பாத்திரங்கள்: ஆண்டோ பீட்டர், நண்பர், இன்னம்பூரான்.
நிழல் மாந்தர்: சாமுவேல் ஸ்மைல்ஸ், டேல் கார்னீகீ, நெப்போலியன் ஹில், மரியன் ரூடி கோப்மேயர், மற்றும் பலர்.
தமிழ்ச்சாயலில்: சிபி.கே.சாலமன், சோம.வள்ளியப்பன், ‘வல்லமை’ புகழ் N.கணேசன், மற்றும் பலர்.
நண்பர் சுனா.முனா. ஏணியில் விரைவாக ஏறி வரும் வேளையில்:
இ: நீங்கள் டேல் கார்னீகீ எழுதிய ‘How To Win Friends And Influence People’ படித்திருக்கிறீர்களோ?
ந: நான் சுனா. முனா. பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், சார்.
இ: (தனி மொழி) இவர் தமிழர் என்பதில் ஐயமில்லை. இனி பேசியும் பயனில்லை. நவம்பர் 24,1888 அன்று வறுமையில் பிறந்து,உழன்று, ஒரு ‘ஜயங்கொண்டான்’ விற்பனை பிரதிநிதியாக, ஊரெல்லாம் சுற்றி, பல அனுபவங்களை சுவைத்து, அசைபோட்டு, ஒரு சொற்பொழிவாளாராகத் திகழ்ந்தார், டேல் கார்னீகீ. அவர் எழுதிய மேற்படி நூல் தன்னை ஒரு ‘ஜயங்கொண்டானாக‘ மாற்றியது என்கிறார், வாரன் பஃபெட். அந்த நூல் 1955லியே 50 லக்ஷம் பிரதிகள் விற்று வாகை சூடியது. 29 மொழிகளில் மொழி பெயர்ப்பு.
சுருங்கச்சொல்லின், மக்களை வசீகரித்து ஆட்டிப்படைப்பது எப்படி, அவர்கள் நம்மை நாடவைக்க ஆறு வழிமுறைகள், நம்ம ரூட்டுக்கு அன்பர்களை கட்டி இழுத்து வருவது எப்படி, மற்றவர்களுக்கு கசப்பு ஏற்படுத்தாமல் தலைமை எடுத்துக்கொள்ளும் உத்திகள் என்ற தலைப்புகளில் அவர் அளித்த அரிச்சுவடி, தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும், தமது திறன்களை பலப்படுத்துவதற்கும், பயனளிக்கும் பேச்சு வார்த்தை திறமைகளை தரமுயர்த்துவதிலும், தலைமை தாங்கும் சக்தியை விளக்குவதிலும், தமது நோக்கு, போக்கு, சுளிவுகளை சரி செய்து, அநாவசிய அழுத்தங்களை குறைப்பதிலும், லக்ஷக்கணக்கான மக்களுக்கு தக்கதொரு அறிவுரையை உரிய தருணத்தில் அளித்துள்ளது.
ஆண்டோ: இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் அவர் கடை பிடித்தாரோ?
நண்பர்: அதெல்லாம் இருக்காது சார். இவங்க எல்லாம் பேச்சோடு சரி.
இ: அதான் இல்லை. விற்பனை வேலையை அவர் விட்டதும் விவேகம். முதல் லெக்சரில், மக்கள் கருத்துக்கேட்டு, அதன்படி இயங்கியது, வசீகரம். மனுசன் கில்லாடி, சார். அவர் பெயர் “Carnagey”. அக்காலம் Andrew Carnegie பிரபல தொழிலதிபர், செல்வந்தர், வள்ளல். தன் பெயரை Carnegie என்று மாற்றிக்கொண்டு உலகையே வில்லாக வளைத்து விட்டார்! அது சூத்திரம். இத்தனைக்கும் ஆண்ட்ரூ கார்னீகி, இவருடைய போட்டியாளரான நெப்போலியன் ஹில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்.
ஆண்டோ: எனக்கு புரிகிறது. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய சுயமுன்னேற்றத்தை பற்றி மின் தமிழில் எழுதியிருக்கிறேனே. உங்களுடைய மேலான மீள் பார்வைக்கு:
இ: படித்து மகிழ்ந்தோம். ஆமாம். டையின் முடிச்சு தளர்ந்து இருக்கே.
அன்டோ: நான் தளரவில்லையே. அதான் பாயிண்ட்:-) உங்களுடைய வாத்தியார் யாரு?
இ: எனக்கு உத்வேகம் கொடுத்தது சாமுவேல் ஸ்மைல்ஸ். வேளை வந்தா எல்லாம் சொல்லலாம். கார்னீகியை கேட்டால் ‘வள வள’னு பேசாதே. நாலு பேர் கேட்டால் சொன்னால் போதும் என்பார். சீதாலக்ஷ்மியை கேட்டால், எத்தனையோ பேருக்கு சுயமுன்னேற்ற பாடம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை விட உனக்கு என்ன வேலை என்பார். அவரே பாடம் எடுத்தால் நன்முத்துக்கள் உதிரும். இப்போதைக்கு ஒரு கார்னீகி மேற்கோள். ஃபெப்ரவரி 14, 1937 அன்று, இந்த நூலை மதீப்பிடு செய்த ந்யூ யார்க் டைம்ஸ் சொன்னது: ‘ டேல் கார்னீகி வாகை சூட தரும் சூத்திரம்,‘புன்சிரிப்பு, நட்புரிமை, வாதமிடுவதையும், குற்றம் காண்பதையும் தவிர்த்தல், மேலும் யாரிடமும் ‘நீ சொல்வது தவறு’ என்று அறை கூவாமல் இருத்தல்’. இது கொஞ்சம் cynical என்றாலும், "simple sound, practical common sense.".
இன்னம்பூரான் ~ சீதாலக்ஷ்மி தனி மடல்: “... என்னமோ நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் எழுதிவிட்டேன். தொடர்ந்து எழுதினால் ஒரு மின்னூலே ரெடி. உசாத்தூண்கள் பல நின்றாலும், உப்பரிகை எமதே. போகப்போக பார்க்கலாம்...”
இன்னம்பூரான்
24 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment