அன்றொரு நாள்: நவம்பர் 18
அமர் சித்ர கதா
அமர் சித்ர கதா இதழ் நிறுவிய நண்பர் திரு. அனந்த் பாய் அவர்கள் நான் தலைப்பை இரவல் வாங்கியதை கண்டு மகிழ்ந்திருப்பார். ஏனெனில், கதாநாயகன் அமரர்; சித்ராங்கதர்; காவியமும், ஓவியமும், இசை, இயல், நாடகமும் ஒருங்கே உருவகமான சகல கலா வித்தகர். ஆங்கிலத்தில் லெஜெண்ட் என்பார்கள், வாழும் காலத்தே வரலாறு படைத்தவர்களை. தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற டைரக்டர் பத்ம பூஷண் வி.ஶாந்தாராம் அவர்கள் ஒரு லெஜெண்ட் தான். இந்திய திரைபடக்கலையின் எல்லா கலையம்சங்களிலும், பொறியியல் நுட்பங்களிலும், சினிமா தியேட்டரில் திரைதூக்கும் சில்லறை வேலையில் தொடங்கி அமர சித்திர கதைகளை திரைப்படங்களாக படைப்பது வரை, 75 ஆண்டுகள் தன்னை இந்திய திரைப்படக்கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர். மற்றவர்களுக்குக் கலங்கரை விளக்காக விளங்கினார். அவர் விட்டுச் சென்ற கருவூலங்களும் சிறந்தவை. கொடுத்து வைத்த மனிதர். அவருடைய மனைவிகளும், மக்களும் அவருடைய புகழை மங்காமல் பார்த்துக்கொண்டனர். என்றுமே, அவர் ஒரு ‘பளிச்’ மனிதர்.
நவம்பர் 18, 1901 அன்று கோலாப்பூரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த திரு.ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் பள்ளிக்கு செல்லவில்லை. எடுபிடி வேலைகள் செய்து பிழைத்தார். அதுவே அவருக்கு நடிப்புத்துறையின் அணு-நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தது. வல்லுனர்களுக்கு அணுக்கத்தொண்டு செய்ததின் பிரதிபலனும் கிடைத்தது. வாய்ப்பை ஆற்றிக்கொள்ளும் ஆற்ரலும் உடன் பிறந்தது என்க. பிரபல டைரக்டர் பாபுராவ் பெய்ண்டர் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார், 1925ல். டாம்லே, பெய்ண்டர், குல்கர்னி, சையத் ஃப்தேஹ்லால் போன்ற ஜாம்பவான்களுடன் 1929ல் ஒரு சுபயோக சுபதினத்தில் பிரபாத் என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்தார், ஶாந்தாராம்.
கோபால் கிருஷ்ணா (1931) என்ற முதல் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. தொன்மை நாடகங்களில் தற்கால சமுதாய பிரச்னைகளை நுட்பமாக ஆராய்வதே, இவரது தனிச்சிறப்பு. அடுத்த வருடமே ‘அயோத்தியா கா ராஜா’ என்ற பேசும் படம். அத்துடன் விட்டாரா? ஜெர்மனிக்கு சென்று கலர் சினிமா உத்திகளை கற்று வந்தார். உடனடியாக, கலர் படங்கள். பூனாவுக்கு சென்று ஸ்டூடியோ அமைத்துக்கொண்டஅர். 1941ல் எடுத்த ‘படோஸி’ (பக்கத்து வீட்டுக்காரன்) என்ற படம் இனவெறியை தணிக்கும் செய்தியாக அமைந்தது. பெளத்தம் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்ததை பிரதிபலித்த ‘அம்ருத் மந்தன்’ சமகாலத்து சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மென்மையாகக் கண்டித்தது. அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு சேதி சொல்லின.
1942ல் மும்பைக்குத் திரும்பி ராஜ்கமல் ஸ்டூடியோவை துவக்கிய ஶாந்தாராம் ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ என்ற படம் எடுத்ததும் இல்லாமல், அவரை பிரதான நாயகனாக நடித்தார். 1957ல் அவர் எடுத்த ‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’ பெர்லின் சினிமா பரிசு, மெட் ரோ கோல்ட்வின் மேயர் பரிசு, ஜனாதிபதியின் தங்க மெடல் எல்லாம் பெற்று, போடு போடுன்னு போது போட்டது. அதற்கும் மேலாக தடபுடல் வரவேற்பு. ‘ஜனக் ஜனக் பாய்லெ பாஜே’ (1955) என்ற நிருத்திய நாடகத்திற்கு.
சுருங்கச்சொல்லின், 1990ல், 89 வயதில் அமரரான திரு. ஶாந்தாராமும், இந்திய சினிமாவும், தோளுடன் தோள் வளர்ந்த ஜிக்ரி தோஸ்த்துக்கள். இந்திய சினிமாவின் ‘பொழுதொரு வண்ண, நாளொரு மேனி’ வளர்ச்சியின் ஒட்டு மாங்கனி: டைரக்டர் ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் அவர்கள்.
இன்னம்பூரான்
18 11 2011
உசாத்துணை
No comments:
Post a Comment