அன்றொரு நாள்: நவம்பர் 23
“..மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!.."
~ மணிமேகலையில் சுதமதி
சுதமதி உதயகுமரனுக்கு வழங்கிய அறிவுரையை, மில்டன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்துக்கு வழங்கிய அறிவுரையுடன் ஒப்புமை செய்ய, முனைவர் ராஜத்தின் நேற்றைய மணிமேகலை தொடர் உபயமளித்தது. நன்றி.
“சிறந்த நூல் என்றால், அதுவே ஜீவனின் இரக்ஷண்ய யாத்திரீகம் என்க. அதுவே இம்மைக்கும், மறுமைக்கும் ஆதாரஸ்ருதி.’
~ ந்யூயார்க் நூலகத்தில் மில்டனின் Areopagitica என்ற நூலிலிருந்து மேற்கோள்.
(ஆங்லிலத்தில் bloodstream என்ற சொல்லை இரக்ஷண்ய யாத்திரீகம் என்று தமிழில் எழுதியதற்கு பொறுப்பு எனது.)
கருத்து, சிந்தனை, எண்ணங்கள், ஆற்றல், படைப்பு, வெளிப்பாடு ஆகியவை, வாய்மொழியாகவோ, எழுத்து, சித்திரம், கலை மூலமாக நிகழ்வதை ராஜாங்கமும், அவர்களின் நிழல் எஜமானர்களும் வரவேற்காமல் போகலாம். தடை செய்ய நேரலாம்.
இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலையில்,
மக்களின் பிரிதிநிதிகளில் பலர் ஏகோபித்தவகையில் பெருத்த ஏமாற்றம் அளித்து வரும் காலகட்டத்தில்,
இதழியல், தெனாலிராமன் குதிரை போல, இரண்டடி முன் சென்று நான்கு அடி பின்வாங்குவதை, நோக்குங்கால்,
இங்கிலாந்தில் இதழியலையும் நூல்களையும் கடுமையாகக் கட்டிப்போட்ட 1643ம் வருட இதழியல் லைசன்ஸிங்க் சட்டத்தைத் தளர்த்தக்கோரி, பிரபல கவிஞர் ஜான் மில்டன், நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 23, 1644 அன்று விடுத்த மடல், இறவா வரம் பெற்றது எனலாம். அமெரிக்க அரசியல் சாஸனத்தின் உரிமை பட்டியலின்/ இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படை உரிமைகளின் அஸ்திவாரம் எனலாம். அந்த மடலின் பெயர் தான் Areopagitica. அந்த நூலின் முகப்பில் ஒரு பொன்மொழி:
‘உகந்த அறிவுரையை மக்களுக்கு அளிப்போருக்கு புகழும், இயலாமையால் அமைதி காப்போருக்கு நிம்மதியும் கிடைக்கும் வகையில் பேச்சுரிமை அமையவேண்டும். இல்லையெனில் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மேலான நியாயமுண்டோ?’
யூரிபிடீஸ்: கிரேக்க தத்துவ ஞானி
கிரேக்க/ரோமானிய சமுதாயங்களில் இல்லாத மட்டுறுத்தல் ஏன் என்பது அவரது கேள்வி. அதனுடைய பின்னணி: விவாகரத்து பற்றிய மில்டனின் முற்போக்குக் கருத்துக்கள் தடை செய்யப்பட்டதே. இந்த மடலிலிருந்து கவிஞரும் சொல்லாட்சி மன்னரும் ஆன மில்டன் ஒரு அரசியல் பேச்சாளரும் என்று தெரிகிறது. நாடாளுமன்றம் அவருடைய மடலை மதிக்கவில்லை. அவர் ஏற்கனவே அதை வம்புக்கிழுத்தவர் என்பதால் இருக்கலாம். என்ன தான் விவிலியத்திலிருந்து மேற்கோள்கள் கொடுத்த வண்னம் இருந்தாலும், மில்டன் பத்தாம்பசலி சம்பிரதாயத்தை ஒதுக்கியவர் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த காலத்தில் மடலாடும் போது திசைமாற்றும் தொட்டில் பழக்கம் இருப்பது போல, அந்த காலத்தில் தலையை சுற்றி தான் மூக்கை தொடுவார்கள். ஜவ்வு மிட்டாயாக இழுத்து, அனுமார் வாலாக நீட்டி, பட்டி மன்றமாக முழங்கி தான் எழுதுவார்கள். அலுத்து போகும் வரை சொல் ஆடி வரும். எனவே, உங்கள் சுகானுபவத்தை முன்னிட்டு, இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
23 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment