தடையும் விடையும்
பரிக்ஷைக்கு வராததை படிப்பதின் சுவையை ஏவாள் கடித்த ஆப்பிளுக்கு ஒப்பிடலாம். ஒரு கையில் அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ ~காப்பியத்தில் மெனக்கட்டுப் பொறுக்கிய காமம் தூண்டும் வரிகள். மற்றொரு கையில் ‘Brave New World’ ~ Aldous Huxley யின் தத்துவ போதனை. முதலாவது தடுத்தாட்கொள்ளபட்டது; இரண்டாவது தடை செய்யப்பட்ட நூல். அரசியலரும், சமய போதனை/பிரசாரம் செய்பவர்களும், தமக்கு ஒவ்வாத கருத்துக்களை சிரச்சேதம் செய்ய விழைவார்கள். முதல் பலிகடா, நூல்கள். அமெரிக்காவில் ஸெப்டம்பர் 24 லிருந்து அக்டோபர் 1 வரை தடை செய்யப்பட்ட நூல்களுக்கு விழா எடுப்பார்கள். இந்தியாவிலும் விழா எடுக்கலாமே!
சில பார்வைகள்:
- சைனாவில் தொன்மை இலக்கியத்தில் சன்வோகோங்க் என்ற குரங்கு தேவர்களை எதிர்த்ததால், ‘புத்தரின் கையினால்’ உருவாக்கப்பட்ட மலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாம். முது மொழி: ‘என்ன குதி குதித்தாலும், புத்தரின் கைக்குள் அடங்கித்தானே ஆகணும்.” டேனியல் வூ என்ற பாமரர் தன்னை பற்றி அப்படித்தான் சொல்லிக்கொள்ளுகிறார்.அவருடைய இடுகைகளை சைனாவின் அரசு குண்டாம் தடியெடுத்து அடித்தி, நசுக்கி, பொசுக்கி விட்டது. அவர் செய்த குற்றம்: அமைச்சர்கள் போகுமிடமெல்லாம் கவனித்து, அவர்கள் அணியும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களை படமெடுத்து, அவற்றின் விலையை குறிப்பிடுவது. லஞ்சலாவண்யத்தைப் பற்றி பேச்சு எழவில்லை; வெள்ளிடை மலை.புரிந்து விட்டது, மக்களுக்கு. அமோக வரவேற்பு. கருத்துத்தடை துறைக்கும் இவருக்கும் ஒரு நிழல் உடன்படிக்கை? மிகவும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களையும், பெரிய மீன்களையும் விட்டு விட்டால், சின்ன மீன்களை பற்றி எழுதலாம்! அதையும் தூக்கி அடித்து விட்டார்கள். மற்ற குரல்களையும் அடக்கியாச்சு.. சைனாவில் கால்ஃப் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது, முதலாளித்துவ விளையாட்டு என்று. ஆனால், விதிகளை மீறிய பிரம்மாண்டமான கால்ஃப் விளையாட்டு மைதானங்கள் உருவாகின்றன. அதிகார பலசாலிகள் ரோலக்ஸ் வாட்சு, பெரிய காரு, தாட்டு பூட்டு தஞ்சாவூர்னு அங்கு வந்து வெளயாடுகிறார்கள். கேட்டால், தடா!
- ஊதிக்கெடுப்பவர்கள், விக்கி லீக்கு, தகவல் உரிமை சட்டம் எல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயங்களே. காலம் மாறிக்கிட்டு இருக்கு. தடைக்கு ஒரு தடா போடணுமோ? அந்த தடாவுக்கு விதி விலக்கு தேவைப்படும் என்பதற்கு ஒரு உதாரணம், அடுத்த பகுதியில்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இம்ரான் கான் ‘பாகிஸ்தானின் வரலாறு’ என்று எழுதிய புத்தகம், இந்தியாவில் வாபஸ்ட். எல்லைகள் தவறாக வரையப்பட்டன என்று குற்றச்சாட்டு எழக்கூடும் என்று, முன்சாக்கிரதையாக, ராண்டம் ஹெளஸ் என்ற பிரசுரகர்த்தா, அவற்றை தடுத்து விட்டது. அவர்களுக்கு இதே பிரச்னை பாகிஸ்தானிலும் எழுந்தது, நிக்கலஸ் ஷ்மிடில் என்பவர் எழுதிய நூலை பற்றி.
- செய்திகளுக்கு ‘வருமுன் பூட்டு’ : சோனியா காந்தியின் சிகிச்சை: ஸூப்பர் கமுக்கம்! பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் உடல்/மன நலம் பற்றி பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு கட்சி. லார்ட் மொரான் என்பவர் சர்ச்சிலின் டாக்டர். சர்ச்சிலின் மன ஓட்டம்/அழுத்தம்/சஞ்சலம் எப்படி அவருடைய அரசியல் பணிகளில் தாக்கம் அளித்திருக்கும் என்ற கவலை. அவர் எழுதிய நூல் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. தடை செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபர் பீடி பிடிப்பது முதற்கொண்டு பொது மன்றத்தில். இங்கிலாந்தில், பிரதமர் கண் பரிக்ஷை செய்து கொண்டால், ஊடகத்தில் அறிவிப்பு. ஏன். பிரதமர் மன்மோஹன் சிங்கின் இதய ஆபரேஷன் கூட மறைக்கப்படவில்லை. ஏன் சோனியா காந்தியின் உடல் நிலை பரமரகசியம், அவர் திரும்பி வந்த பிறகும்? 1982 ல் சோவியத் ரஷ்யாவில் ப்ரெஸ்னவ் உடல் நிலை பற்றி மூடுமந்திரம் முணுமுணுத்த மாதிரி, இது இருக்கு.
- ஆனால், என்ன பேச்சுரிமை வேண்டிக்கிடக்கு? காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் உடைந்த இல்லறவாழ்க்கையை பற்றி இந்த தொல்லைக்காட்சிகள் படாதபாடு படுத்தி விட்டன?
நூலறுப்பது எப்படி?
அக்கவுண்டட் ஜெனரல்களை தணிக்கை செய்ய இன்ஸ்பெக்ஷன் பிரிவு ஒன்று உண்டு. அவர்கள் டேரா போட்டு, தோண்டித் துருவி, நம்மை வறுத்தெடுப்பார்கள். ஒரு ஆவணப்போர்:
அ:அக்கவுண்டட் ஜெனரல்; இ.பி: இன்ஸ்பெக்ஷன் பிரிவு
இ.பி: ஏஜி ‘Roses in December’ என்ற நூலை வாங்கியிருக்கிறார். ஆக்ஷேபணை.
அ: புத்தகங்கள் வாங்க ஏஜிக்கு முழு அதிகாரம் உண்டு. எதற்கும் உங்கள் மேலான பார்வைக்கு அதை முன் வைத்திருக்கிறோம். (அது எம்.சி.சக்லா என்ற இந்தியாவின் பிரபல தலைமை நீதிபதியின் வரலாற்று நினைவுகள். தணிக்கைத்துறை பிரபலங்கள் சிலாகித்த புத்தகம் என்று சொல்லவில்லை.)
இ.பி: அந்த நூலை பிரிக்க நேரமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும்.
அ: கேட்ட கேள்வி என்ன? ஆக்ஷேபணை என்ன?
[அங்கும் கடப்ஸ். இங்கும் கடப்ஸ். புத்தகம் அலமாரியில்.]
சீன் மாறுகிறது ~ டில்லி அக்கவுண்டட் ஜெனரல் கான்ஃபரன்ஸ்.
அ: சுருக்கமாக, கதை சொல்கிறார்.
இ.பி: அது சரி. அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
மேலா: (ஆவணங்களை வாங்கி பார்த்து): ‘அ’ நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதது சரியல்ல!
(ஆடிட் உள்குத்தே இப்டின்னா, கச்சா எண்ணெய், 2ஜி, கா.வெ.கேம்ஸ் கும் குமா குத்து எல்லாம் எப்டி இருக்கும்? by the way.)
அமெரிக்க உள்குத்து ஒரு பார்வை:
அமெரிக்காவில் வருடக்கணக்காக பெரிதும் பேசப்படும் நூல்களில் நான்கு: 1. அல்டஸ் ஹக்ஸ்லியின் Brave New World, ஜே.டி.சலிஞ்சரின் Catcher in the Rye, ஜான் ஸ்டைய்பெக்கின் The Grapes of Wrath & ஃபிட்ஸ்கெரால்டின் The Great Gatsby. அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் தற்காலிகமாக ஆகஸ்ட் 6, 2009 ல் தடை செய்யப்பட்டன, பள்ளிகளில். அந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் பலவற்றை உசாத்துணையில் காணலாம். ஒரு செய்தி: இறுதியில் சொல்லப்பட்ட The Great Gatsby என்ற நூலை மதிப்பீடு செய்யச்சொல்லி 14 வயது மாணவ மாணவிகளுக்கு ஹோம் ஒர்க், இங்கிலாந்தில்! ஹூம்.தடை, தடா, தட்தடா எல்லாம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும், சைனாவிலும் அதிகப்படி. தமிழ் நூல்கள் ஏதாவது ~ திருக்குறளின் காமத்துப்பாலை போல ~ஏதேனும் தடை செய்யப்பட்டது உண்டோ?
இன்னம்பூரான்
24 09 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment