அன்றொரு நாள்: ஜூலை 4:
- ஒட்டுமாங்கனி பிராந்தியம்.
இன்று உலகளவில் இந்தியர்கள் பிரபலமானதிற்குக் காரணம், நம் குடும்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நபராவது அமெரிக்காவில் பேரெடுப்பது தான். நிர்வாஹத்திறன் என்று ஒன்று, எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், இந்தியாவில் இருந்தது என்றால், ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் அளித்தக் கல்வியின் முழுமை, பாரிஸ்டர் (படிப்பு?) தோழமை முக்கிய காரணம் எனலாம். கலையுணர்வு, இலக்கிய தாகம் இவற்றை அதிகரித்தது மொகலாய சாம்ராக்யம், ராஜபுதானா வீரம், மராட்டா நாட்டுப்பற்று, தமிழனின் சிந்தனை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம். மாற்றியும் அடுக்கலாம். ஒன்று சொல்ல, மற்றொன்று சொல்லி அழைப்பது தான் வழக்கம்.
இன்று ‘ஆவ்சம்’ அமெரிக்காவின் சுதந்திர தினம். ஜென்மதினமும் இது தான், அகதிகளால் உருவாக்கப்பட்ட, உலகின் வலிமை மிக்க இந்த ஒட்டுமாங்கனி பிராந்தியத்திற்கு. அந்நாட்டு மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போமாக. ஜூலை 4, 1776 அன்று 56 பிரபலங்கள் கையெழுத்திட்ட இன்றளவும் மதிக்கப்படும் சுதந்திர பிரகடனத்தின் முழுமையையும், அதனுடைய கூகிள் பெயர்த்தெழுதுதலையும், பட்டயத்தின் சித்திரத்தையும் இணைத்து, அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம் செய்து, அதற்கு வந்தனை சொல்வதே, இந்த இழை. ஒரு தடிமனான நூல் எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது.
அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம்:
மனிதனின் வரலாற்றுப்போக்கில், சில சமயங்களில் அக்காலத்து அரசியல் தளைகளை கழற்றுவது இன்றியமையாததாக அமையலாம். அவரவர், இயற்கையும், இறையாண்மையும் அளித்த உரிமை, பதவி ஆகியவற்றை காப்பாற்றிக்கொள்ள தேவையானது, அவ்வாறு கழற்றியதின் பின்புலத்தை உரைப்பதே. அது தான் மனித இனத்திற்கு மரியாதை காட்டும் பண்பு.
யாவரும் சமானமானவர்கள்; இறையாண்மை யாவருக்கும், வாழ்வு, சுதந்திரம், மனநிறைவு நாடும் உரிமை ஆகியவற்றை அளித்துள்ளது. மக்களின் சம்மதத்துடன், அந்த உரிமைகளை அளிக்க, அரசு உழைக்கும். அதற்கு தான் அரசு. அந்த கடமையிலிருந்து தவறி, அவற்றை ஒழிக்க ஒரு அரசு முனையுமானால், அந்த அரசை மாற்றி/ஒழித்து செயல் பட மக்களுக்கு முழு உரிமை உண்டு......”
2. அடேங்கப்பா!
‘வந்த சுவடு தெரியாமல்’ என்றொரு சொற்றொடரொன்று உண்டு. பின் லேடனை அமெரிக்கர் ‘வந்த சுவடு தெரியாமல்’ வந்திறங்கி கொன்றனர். கந்தஹார் விமானதளத்தில் ஒரு இந்திய விமானம் சிக்கிய போது, அக்காலத்து இந்திய அரசு, ‘தொம் தொம் தொபக்ட்டீர்’ கோகுலாஷ்டமி கிருஷ்ணனைப்போல் அங்கும், இங்கும், எங்கும் சுவடு பதித்து, அபகீர்த்தி கட்டிக்கொண்டது. வல்லுனர்கள் செய்யவேண்டியதை அரசியலர் செய்தால், பிடிக்கப்பட்ட பிள்ளையாரும் வானர ரூபத்தில்! ஜூலை 4, 1976 அன்று நடந்த கதையே வேறு.
மழை ‘சோ’ என்று பொழியும். ஆனால், மின்னலும், இடியும் தோன்றி மறையும், வினாடித்துளியில். அந்த மாதிரி ஆகாசத்திலிருந்து குதித்தனர் நூறு வீரர்கள், கும்பிருட்டில். பகையிடம் சிக்கியிருந்த அப்பாவிகளில் 103 பேரை மீட்டு, அலாக்கா, தூக்கிச்சென்றனர். பகை புகையாகி விட்டிருந்தது! கூண்டோடு கைலாசம். துணைக்கு மேலுலகம் சென்றது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டு வீரர்கள் 45, அப்பாவிகள் மூன்று, 11 மிலிடரி விமானங்கள். கன கச்சிதமாக, கறாராக, உச்சகட்ட ரகசியமாக, ஒரு வார காலம் இட்ட திட்டம் 90 நிமிடங்களில் அமர்க்களமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு குறை. அல்ல. கறை. தளபதி போர்க்களத்தில் மாண்டு போனான். ஐவருக்கு பலத்த அடி. இது தற்கால வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வீராதி வீர, தீராதி தீர பராக்கிரமங்களில் முதலிடம் வகிக்கும்.
‘மின்னலும், இடியும்’:
இஸ்ரேலி கமாண்டோ படை;
தளபதி:
கர்னல் யோனாதன் நேதன்யாஹூ (பிற்கால இஸ்ரேலிய பிரதமரின் அண்ணன்: ‘மின்னலும் இடியும்’ என்று நாமகரணம் செய்யப்பட்ட இந்த அதிரடி தாக்குதலுக்கு அவருடைய பெயர் சூடப்பட்டது).
இடம்:
உகாண்டா, ஆப்பிரிக்கா
நடந்தது என்ன?:
ஒரு வாரம் முன்னால் ஜூன் 27 அன்று 248 பயணிகளுடன் ஏதென்ஸிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தை பாலஸ்தீனிய & ஜெர்மானிய பயங்கரவாதிகள் நால்வர் கடத்தி லிபியாவின் பெங்காசியில் இறக்கினர். ஒரு பெண் விடுதலை. விமானம் கிளம்பி உகாண்டாவின் எண்டெப்பெ விமானதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் நால்வரும், உகாண்டா கொடுங்கோலன் இடி அமீனும் பகைக்குத் துணையாயினர். யூதப்பயணிகள் கொலைகளத்துக்காக தனிப்படுத்தப்பட்டனர். டிமாண்டு: 53 பயங்கரவாதிகளை விடுவிக்க
வேண்டும். ஆனால், ஃபிரன்சு விமான தளபதியும், அவரது பணியாளர்களும், ஒரு கன்யாஸ்திரீயும், மற்றும் சில பயணிகளும் விடுதலையை மறுத்து விட்டனர். என்னே பெருந்தன்மை! என்னே தியாகம்!
உலகை வியக்க வைத்த இந்த வாகை சூடிய படலத்தைக் கண்டு அமெரிக்க ராணுவமே பாடம் கற்க வந்தது. ஆனால், அவர்களுக்கு வந்த சோதனையில் தோல்வி அடைந்தனர். அது போகட்டும்.
இஸ்ரேல் சிறிய நாடு. யூதர்களுக்கு சொந்த மண் கிடையாது என்ற நிலை வரலாறு முழுதும் உண்டு. ஆயினும் தங்கள் குட்டி ராஜ்யத்தை திறம்பட நிர்வஹித்தனர். இன்னல்களை சமாளித்தனர். இந்த இன்னலை தீர்க்க, முடிந்தவரை இடி அமீனோடு சமாதானப் பேச்சு நடத்தினர். அதெல்லாம் வீண் ஆன உடன், அவர்கள் வகுத்தத் திட்டங்கள், செய்து பார்த்த சோதனைகள், வெள்ளோட்டங்கள் எல்லாம் உச்சாணிக்கிளை தரம் வாய்ந்தவை. ஆறு விமானங்கள் நள்ளிரவில், எண்டெப்பெ விமானதளத்திற்குத் தெரியாமல் வந்து இறங்கின. அப்பறம் என்ன? டமால் டுமீல்? இல்லை! ஒரு கறுப்பு பென்ஸ் கார் வந்திறங்கி, இடி அமீனை அழைத்துப்போவது போய் பாவ்லா செய்து, மாட்டிக்கொண்டது, அவன் வெள்ளைக்காருக்கு மாறிய சமாச்சாரம் தெரியாததால், எதிர்பாராமல் வந்த சிக்கல். குறுக்கே வந்த இருவரை கொன்று, கையோடு கையாக டமால் டுமீல்.
நான் இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மூன்று காரணங்கள்:
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை, இஸ்ரேலுக்கு. 1990ல் கூட இந்தியா இஸ்ரேல் நாட்டைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால், 1962லியே சில ரகஸ்ய தகவல் பரிமாற்றத்தின் பயனாக, அப்போதே எனக்கு அவர்களின் தீவிர தேசபக்தி, அசாத்ய துணிச்சல், பல துறைகளில் கிடு கிடு வளர்ச்சி, திட்டமிடுவதில் மேன்மை, கடமை, கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றின் மேன்மையெல்லாம் புரிந்தது. சில நாட்கள் முன்னால் ஒரு இஸ்ரேலிய நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அன்னாட்டு மக்களின் என்றும் குறையாத தேசாபிமானத்தின் ஆழம் புரிந்தது. நமக்கு ஒரு துளி ஒட்டிக்கொள்ளட்டுமே.
- மின்னல், இடி எல்லாம் சரி தான். ஒரு உடும்புப்பிடி வேண்டும். வலுவான திட்டம் வேண்டும். ரகசியம் காக்கவேண்டும்.
- கொடுங்கோலன் இடி அமீனுக்கு கென்யா மீது சந்தேஹம். உகாண்டா வாழும் நூற்றுக்கணக்கான கென்யர்களை கொன்றான். வெறுப்பு மிகுந்து மக்கள் அவனை ஒதுக்கினர். கழுதை கெட்டால் குட்டிச்சுவர். செளதி அரேபியாவில் சரண் புகுந்தான். அங்கு, ஆகஸ்ட் 2003ல் செத்தான்.
இன்னம்பூரான்
04 07 2011
உசாத்துணை
நன்றி, வணக்கம்.
No comments:
Post a Comment