அன்றொரு நாள்: ஜூலை 2:
‘தெய்வம் மனுஷ ரூபேண...’ என்றும், ‘அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்’ என்றும் சொல்வதற்கும், நாட்டுப்புறதெய்வங்களாக மூதாதையார் வணங்கப்படுவதற்கும் இணக்கமுண்டு; பிணக்கமில்லை. காங்கோ நதியை பற்றியும் பூமத்தியரேகையை பற்றியும் பூகோள பாடங்களில் அரையும் குறையுமாகப் படித்ததுண்டு. தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்த, கானகங்கள் படர்ந்த அந்த தொன்மை வாய்ந்த ஆஃப்பிரக்க நாட்டில், நிஸாம்பே (தெய்வம்) லுமும்பா என்ற தேவன் வியாதிகளை தீர்ப்பார் என்று படேடலா பழங்குடி மக்கள் நம்புகிறார்கள். அவருக்கு தொழுகை நடக்கிறது. ஜூன் 2, 1925ல் பிறந்த அவர் ஜனவரி 17,1961 அன்று மறைந்தார். ஐம்பது வருடங்களில் தெய்வமாகிவிட்டார். அவரை ‘சங்கரர்’ போல என்கிறார், என்றது பீ.பீ.ஸீ, 2003ல். மன்னார்குடி ‘ராஜகோபாலனை’ப்போல், பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம், இவருடைய பெயர். இத்தனைக்கும் அவர் சாதாரணமான சராசரி மனிதன்; அஞ்சலுவலக குமாஸ்தா. பீர் விற்றவர். இல்லறம் பேணியவர். பொய்க்கேஸ்ஸில் மாட்டிக்கொண்டு, சிறை சென்றவர்.
தேசாபிமானிகளுக்கு என்றுமே ஆபத்து. எந்த நாட்டிலும். நமக்கு தமிழ் நாட்டை பற்றியும், இந்தியாவை பற்றியும் ஓரளவு தெரியும் எனினும், மற்ற நாடுகளின் விடுதலை வீரர்களை பற்றியும் எழுதுக, என்றார் நண்பரொருவர். ஏசு பிரான் கழுவேற்றப்பட்டார். அண்ணல் காந்தியை தெய்வமென போற்றியவர்கள் உண்டு. அவரை சுட்டுக்கொன்றனர். அமெரிக்க ஜனாதிபதி லிங்கன், ஏழை கறுப்பனின் புன்முறுவலைக் கண்டார். அவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேசாபிமானி பாட்ரிக் எமரி லுமும்பா அவர்களுக்கும் அதே அதோ கதி தான். ஒரு வித்தியாசம். அவரை டார்ச்சர் செய்து தான் கொன்றார்கள். தெரியாமலா சொன்னார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா,
‘படுகொலை செய்வது உச்சக்கட்ட கருத்துரிமைப்பறிப்பு.” என்று.
அமெரிக்க ஜனாதிபதியான ஐஸன்ஹோவரும், இங்கிலாந்து பிரதமர் மாக்மில்லன் துரையும், பெல்ஜிய மன்னரும், அன்னாட்டு தொழிலதிபர்களும், முதலாளிகளும் அவரை ஒழிக்கத் திட்டமிட்டனர். அமெரிக்க உளவு நிறுவனம் சீ.ஐ.பி. தான் சூழ்ச்சிகளின் ஊற்று. ஐநாவின் பிரதிநிதியான இந்தியர் பிரிகேடியர் இந்தர் ஜித் ரிக்கேயும் ஐநாவின் கையாலாகாத நிலையை ஒப்புக்கொண்டார். உலக வரலாற்றில் இதனை விட கேவலமான நிகழ்வுகள் மிகக்குறைவு. மற்றொரு நீசச்செயல் நடந்ததாக வலுவான ஐயம் உண்டு. அதை பிறகு சொல்கிறேன்.
நான் மாணவனாக இருந்த காலத்தில் தென் கொரியாவில் ஸிங்மன் ரீ என்ற அந்த நாட்டின் முதல் அதிபர் இருந்தார். அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களை உலுக்கி முனைவர் பட்டம் பெற்றவர்,சர்வதேச சட்டம் என்ற துறையில். அதற்கு செலவழித்த பணத்தை, அப்படி ஒரு துறை இல்லாததால், திருப்பித்தரவேண்டும் என்று கேட்ட மஹானுபாவனவர். ரீ சார்! பாயிண்ட் மேட்.
கடைத்தேங்காயை திருடுவதில்லை; முதலில் தேங்காய் மண்டியை லபக்குவார்கள்; பின்னர் தென்னந்தோப்பிலேயே, உம்மை வெளியேற்றி, குடியேற்றம். இது தான் மேற்கத்திய கலோனிய பேராசைப்பேரரசுகளின் சர்வதேச நெறி. அமெரிக்கா, ஒரு படி மேலே போய், எண்ணைய்க்கு முன் எள்ளாக, எள்ளுக்கு முன் கொள்ளாக, கொடுங்கோலர்கள், வெறியர்கள், பகல் கொள்ளையர், லஞ்ச மஹாப்பிரபுக்கள், ஊழல் மன்னர்கள் எல்லோருடனும் கூடா நட்பு வைத்துக்கொள்ளும். சமயம் வரும்போது, அவர்கள் காலையும் வாரி விடும். வாய் கிழிய நியாயம் பேசும். உடனே, அந்த நாடுகளில் நற்பண்புகள் இல்லை, நம் மாதிரி என்று மார் தட்டிக்கொள்ளலாகாது. அங்கும் நற்பண்புகள் உண்டு; இங்கும் கரும்புள்ளிகள் உண்டு. இது எல்லாம் வரலாறு என்ற குன்றத்தின் மேடு பள்ளங்கள், கல்லு முள்ளுகள். மேற்கத்திய நாடுகளில், எங்கிருந்தோ ஒரு நிருபர்/படைப்பாளர்/ குறும்பட அமைப்பாளர்/பேராசிரியர் வருவார். தன்னுடைய நாட்டு அவலங்களையும் அலசி, அலசி, தயவு, தாக்ஷிண்யமில்லாமல் உண்மை விளம்புவார். லூடோ டி விட் என்ற பெல்ஜியன் ஆசிரியர், ‘லுமும்பாவின் படுகொலை’ என்ற நூலில் அக்கு வேறு, ஆணி வேறு என்று கழட்டி எடுத்து, பிற்காலம் (ஃபெப்ரவரி 2002) பெல்ஜியம் நாடே காங்கோ மக்களிடம்,லுமும்பா கொலையில் மறுக்கமுடியாத பங்கும், தார்மீக பொறுப்பும் ஏற்று, பொது மன்னிப்பு கோரும் அளவுக்கு ஆதாரங்களை முன் வைத்துள்ளார். 40 வருட ஆய்வு. அதை பார்க்கும் முன் சில வார்த்தைகள். வரிசை ஆவேச வரிசை; நாட்காட்டி வரிசை அல்ல.
கொலை விழும் என்று அவருக்குத் தெரியும். மனைவிக்கு எழுதும் கடைசி மடலில், காதலில்லை, காமமில்லை, குடும்ப நலம் பற்றிய பதற்றம் இல்லை, இந்த 36 வயது இளைஞருக்கு. படியுங்கள்:
‘என் பிரிய சிநேகிதியே! நாம் தனித்து இல்லை. ஆஃப்பிரிக்கரும், ஆசியரும், விடுதலை பெற்ற உலகளாவிய மக்கள் யாவரும், நமது காங்கோ பக்கம். கலோனிய அரசுகளும், அவர்களின் கூலிப்பட்டாளங்களும் இருக்கும் வரை, அவர்களின் ஒளியும், ஆதரவும் அழியாது. மாண்பு இல்லையெனின், விடுதலை இல்லை. தர்மம் இல்லையெனில் மாண்பு இல்லை. விடுதலை இல்லையெனின் நாம் அடிமை... வாழ்க காங்கோ! வாழ்க ஆஃப்பிரிக்கா!’
படிக்க, படிக்க, மருது சகோதரர்களின் பிரகடனம் போல் அல்லவா இருக்கிறது.
மற்றொன்றை பார்ப்போம். காங்கோவின் சாபக்கேடு இனவெறி. வேறு பழங்குடி இனங்களை சார்ந்த மோய்ஷே ட்ஷோம்பேயும், ஜோஸஃப் கஸவுபுவும், இவரை போல் பரந்த மனப்பான்மை இல்லாதததால், பகையுடன் சேர்ந்து, இவருக்கு இன்னல்கள் பல விளைவித்தனர். இவரோ படித்து, தெளிவடைந்தவராக இலங்கினார். நான்கே வருடங்களில் பிரதமரானார். தம்மாத்தூண்டு பெல்ஜியம் வசம் கட்டுண்டு கிடந்தது, இயற்கை வளம் நிறைந்த விசாலமான, காங்கோ பிரதேசம். 1960ம் வருடம் விடுதலை. விழாவில் புறக்கணிக்கப்பட்ட பிரதமர் லுமும்பா ஆற்றிய சொற்பொழிவு, பெல்ஜியம் மன்னரின் வழவழா பேச்சையும், அதிபர் கஸவுபுவின் கொழகொழா பேச்சைப்போல் இல்லாமல், ஆணித்தரமாக மக்களின் துன்பத்தையும், அவர்கள் பட்ட இன்னல்களையும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல், எடுத்துரைத்தது. இதை ஜூலை 1ம் தேதி பீ.பீ.ஸீ. உள்ளது உள்ளபடியாக, உலகுக்கு உரைத்தது. கத்திகள் தீட்டப்பட்டன. ட்ஷோம்பேக்கு உதவியாக, பெல்ஜியம் துருப்புகள் வந்தன. கடாங்கா மாகாணம் பிரிவினை கோஷம் எழுப்ப தூண்டப்பட்டது.. ஐ.நா.விடம் நியாயமும், உதவியும் கேட்டார், லுமும்பா. ஐ.நா. கையை விரித்தது. வேறு வழியில்லாமல், சோவியத் ரஷ்யாவை நாடினார். கசவுபு அவரை கம்யூனிஸ்ட் என்றார். அமெரிக்க பொம்மை தலையாட்டியது. கசவுபு இவரை டிஸ்மிஸ் செய்ய, இவர் அவரை டிஸ்மிஸ் செய்ய, சந்தடி சாக்கில் மொபுடு என்ற கொடுங்கோலன் ஆளுமையை பறிக்க, காங்கோ மக்கள் அல்லாடினர். ஒரு கால கட்டத்தில்,ஒவ்வொரு எதிரிக் குழுவும், சிறையடைக்கப்பட்டிருந்த லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன, ஒரு மாத காலம். ஜனவரி 17, 1961 அன்று லுமும்பா, விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அன்று இரவு பெல்ஜியன் ராணுவ அதிகாரிகளால் அடித்து, உதைத்து, துன்புறுத்தப்பட்டார். ட்ஷோம்பே என்ற கயவனின் சன்னிதானத்தில், காலை 9 40லிருந்து 9 43க்குள், ஒரு மரத்தில் கட்டப்பட்டு, சுடப்பட்டார், இரு சகபாடிகளுடன். அவர் அனைத்து சித்திர வதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர். அரைகுறையாக புதைக்கப்பட்ட உடலை மீட்டு, துண்டு துண்டாக்கி, கந்தகாகி அமிலத்தில் (sulphuric acid) கரைத்தனர், பெல்ஜியன் அதிகாரிகள். ஒரு மடையன், அவருடைய பற்கள் இரண்டை பிடுங்கிக்கொண்டதாக, அகந்தையுடன் பிற்காலம் கூறினான்.
அக்காலத்தில் காங்கோவில் ஐ.நா. காரியதரிசியின் ராணுவ பிரதிநிதியாக இருந்த பிரிகேடியர் இந்தர்ஜீத் ரிகே கூறியது: ‘ஐநா வல்லுனர்களின் பணியை வழி மறித்தது பெல்ஜியன் அதிகாரிகள். அவருக்கு சதியை பற்றி தெரியும் என்கிறது ஆய்வு. அவர் இந்தியர். அது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. அன்று இச்செய்தி படித்து, மனம் கலங்கியது, நினைவில் உள்ளது. நேருவும் கலங்கியதாக செய்தி படித்ததாக நினைவு.
உலகெங்கும் மக்கள் சக்தி ஓங்குக.
இன்னம்பூரான்
02 07 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment