Sunday, April 14, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!




இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!

Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 6:57 AM

10/19/12


பச்சண்ணா சந்தில் நவசீலம்!
mInline image 1

மனுஷ ஜன்மம் எல்லாமே ‘இதுவும் ஒரு பிருகிருதி’ தான். ஒவ்வொண்ணும் அஷ்ட கோணல். ஒரு வருஷம் ஆகப்போறது, கீதா சாம்பசிவம். ‘சரியாப் போச்சு போங்க,  சரியான இடத்திலே நிறுத்திட்டா என்ன அர்த்தம்?? ‘ என்று உரிமை பிரச்னை எழுப்பி. இப்பவாவது வரேனே, அதை சிலாகிச்சுக்குங்கோ, என்ன!

பச்சண்ணா சந்து அஃறிணையில்லை. அதற்கு ஆத்மா உண்டு. சாக்கடைக்கு எதிர்வாடைலே ஆறாவது வீடு தான் அந்த உசிரை பிடிச்சுண்டு நிற்கறது. ஒண்டுக் குடித்தனம் ஒன்பதா! அந்த உசிர் ஊசலாட்றது.  அமீன் பிச்சுமணி ஐயர் என்ற பேஃபார்ஸ் (இரண்டுங்கெட்டான்) ஆசாமியை பத்தி ஆரம்பிச்சதே தப்பு. நாக்கு உலர்ந்து போச்சு. பின்னெ என்ன? சர்வோத்தம ராவை விட்டுட்டு இந்த தடிப்பிராமணனை பத்தி என்ன பேச்சு வேண்டியிருந்தது? எழுதியாச்சு. அன்னிக்கு காளை ராஜன் நிவாரணம் அளிக்கவும் என்றார். இதோ நிவாரணம் வந்தாச்சு.

’பிச்சுமணி ராவுஜியை ஒரு பிடி பிடிச்சார். அந்த கதையை அப்றம் சொல்றேன்...’ என்றதற்குத் தான் உரிமை பிரச்னை எழுந்தது. எனக்கு சப்ஜாடா மறந்து போயிடுத்து. ‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’. சர்வோத்தமராவ் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஒண்ணு சகாராம ராவோட பிள்ளை என்று கேக்கணும்; இல்லை. சக்குபாய் ஆத்து மாமா என்று சொல்லணும். அத்தனை சாது அவர். அவரா சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையையும் விட்டுடுவார். நத்தை மாதிரி சங்கோஜி. அவராச்சு. அந்த லொட லொட தையல் மிஷின் ஆச்சு. அதுவும் ராத்திரியில் மட்டும். ஜன்னலைக் கூட சாத்திண்டு, அவிஞ்சு போயிண்டே, தீபாவளி ஆர்டர் எல்லாம் தயார் செய்வார். கொஞ்சம் சத்தம் கேட்டாக்கூட பிச்சுமணி அதட்டும். பகல்லெ நேரம் ஏது ஓய்? ஜோஷிக்கடைலெ முழம் போடவும், புடவை அடுக்கவும் தான் சரியா இருக்கும். சக்குபாய் மாமி அவருக்கேற்றவள். செட்டா குடித்தனம். கடன் வுடன் வாங்கமாட்டா. இரண்டு பேரும் பட்டினி கிடந்தாலும் கிடப்பா. கை நீட்டி யாசகம் செய்ய மாட்டா. குழந்தை கூட பெத்துக்கலெ என்றால் பாத்துக்கோங்களேன். சக்குபாய் மாமி எல்லாருக்கும் ஒத்தாசையா இருப்பாள். அதனாலே இந்த ஆறாம் நம்பார் ஸ்டோர் என்ன? பச்சண்ணா சந்திலெயும் சரி, மேலராஜவீதி வக்கீல்கள் வீடுகளிலும் சரி, அவளுக்கு நல்ல பெயர். அதுவும் வக்கீல் ராகவாச்சரியாரோடெ மாட்டுப்பெண் சரோஜாவுக்கு, மாமி மேலெ ஒரு பரிவும் உண்டு. இது நம்ம பிச்சுமணிக்கு எரிச்சல். அந்த விஷயத்தில் மட்டும் அவரோட ஆத்துக்காரி தையூவுக்கு பூர்ண சம்மதம்.

இனி ஒரு உரையாடல்:

பிச்சுமணி: (கூச்சல் போட்டு) என்ன ராவுஜி! நாங்கள் எல்லாம் மனுஷாளா உமக்குப் படலையா? தெரியாமாத்தான் கேக்றேன்.

கோடியாத்து கமலப்பொண்ணு: அம்மா! அந்த கிழம் ஏதோ கத்தறது. நான் சக்குபாய் மாமிக்குத் துணைக்குப் போறேன். (பதிலுக்கு நிக்கலை. ‘சர்’ணு, தாவணி சறுக்க, அங்கே போய் விட்டாள், ஒரு தடி புஸ்தகத்தை எடுத்துண்டு.)

சக்குபாய்: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) அவா இப்போத்தான் ஜோஷிக்கடையிலிருந்து வந்தா. ஸ்நானம் பண்ணிண்டிருக்கா.

பி: சரி. சரி. எனக்கும் ஆயிரம் ஜோலியிருக்கு. அந்த மனுஷன் இன்னிக்கி ராத்திரி மிஷின் ஓட்டினா, என்ன நடக்கும்னு தெரியாது. சொல்றதை சொல்லிட்டேன்.

கமலா: மாமா! இன்னிக்கி வாண்டையாரோட ஆள் வந்து உங்களை கேட்டான். என்னமோ ‘ஜப்தியை’ ஜப்தி பண்ணிடுவோம்லெ’ அப்டின்னு சொல்லிண்டா. (சமயம் பார்த்துத் தாக்குவதில் கமலத்துக்கு இணை அவளே தான். அவளுக்கு நன்னா புருஷன் அமையணும் நான் ஸ்வாமியை கேட்டுப்பேன்.)

பி: சரி. சரி. நீ எங்கெ இங்கே வந்தே. படிக்கிற பொண்ணு. 
(ராவுஜி கதவை பார்த்து, உரக்க) குளிச்சுட்டு இங்கெ வரட்டும். ஒண்லெ ரண்டு பாத்துறலாம்.

ச: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) நவராத்திரி இல்லையா. தேவி பூஜை பண்ணுவா. நாழியாகும். அவாள்டெ சொல்றேன். (இனி மாமி கிச்ச்ன்லெ ரிடயர்ட். ஃபீல்ட் ஓப்பன் ஃபார் கமலா. அவள் கிட்ட தான் பிச்சுமணிக்கு கொஞ்ச பயம். அப்படி வாயாடி, அவள்.)

பத்து நிமிஷ இண்டெர்வல். பிச்சுமணி பஜ்ஜி சாப்ட்டிண்டு இருக்கு.

பி: சர்வோத்தம ராவ்! கொஞ்சம் இப்டி வரேளா?

க: மாமா! சக்குபாய் மாமி சொன்னாளோனோ. எங்க அம்மா கூட சொன்னா. ராவுஜி மாமா பண்ற ஆத்மார்த்தமான பூஜையினால் தான் இந்த பச்சண்ணா சந்து நவசீலம்  உருப்படியா இருக்குனு. சரோஜா மாமி கூட சொன்னா, ‘ ராவுஜி மாமா பூஜை பண்ணப்றம், கொஞ்சம் பிரசாதம் எடுத்துண்டு வா. மாமனார் சந்தோஷப்படுவார்னு.  ராவுஜி மாமா கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லுங்கோ. நான் போய் சொல்றேன்.

பி: (உள்ளூர கருவிக்கொண்டு, ஆனா பொட்டிப்பாம்பா அடங்கிப்போய்) ஒண்ணுமில்லெம்மா. நீ போய் படி.
க: மாமா! லைட்டை போட்டுருங்கோ, மாமா. ப்ளீஸ். (‘உலகே மாயம்...’ முணுமுணுத்துண்டு போகிறாள்.)

பி: (தனி மொழி) என்ன பாட்டு வேண்டிகிடக்கு. ஒரு ஸ்லோகத்தை பாடாதோ.

தையூ: ஆமாம். அந்த குட்டி கிட்ட என்னமா பயப்படறேள். பெரிய அமீன்!!!
[பச்சண்ணா சந்துக்கு ஆத்மாவுடன் வாயும் இருந்தால், ஒரு நூறு பிருகிருதிகளையாவது ஒப்பேற்றலாம். எழுதறவனுக்கே இத்தனை மறதி இருந்தால், படிக்கிறவாளுக்கு எவ்வளவு இருக்கும். அதான், ‘இதுவும் ஒரு பிருகிருதி ~7’ கீழே.
இன்னம்பூரான்
19 10 2012
படத்துக்கு நன்றி: http://farm1.static.flickr.com/159/392184521_7f7aae9c18.jpg

No comments:

Post a Comment