Friday, April 19, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 23 கோட்டையும், கொத்தளமும்




அன்றொரு நாள்: ஏப்ரல் 23 கோட்டையும், கொத்தளமும்

Innamburan Innamburan Sun, Apr 22, 2012 at 10:28 PM

அன்றொரு நாள்: ஏப்ரல் 23
கோட்டையும், கொத்தளமும்
தனம் நாடி, திரவியம் தேடி, தோணி ஏறி, கடல் கடந்து, நாடு பிடித்து, மக்களை மடக்கிப்போட்டு, சாம்ராஜ்யம் நடத்திய ஆங்கிலேய பிரபுக்களும்,மமதாதிகாரிகளும் இரண்டுங்கெட்டான்களும், பனாதைகளும், கயவர்களும் வணிகம் செய்ய வந்தோம் என்று மெய்யையும், பொய்யையும் சரி சமமாகக் கலந்து, சாம தான பேத தண்டோபாயங்களையும் பிரயோகித்து, பஞ்ச மா பாதகங்களில் ஒன்றைக்கூட விடாமல், காலத்துக்கேற்ப சில நற்பண்புகளையும் அரிதாக உள்புகுத்தி, ராசாங்கம் நடத்திய கிழக்கிந்திய கம்பெனியால், முதல் முதலாக, தருமமிகு சென்னையிலே, ஏப்ரல் 23,1640ம் தேதி ‘முரசொலித்து’ எழுப்பிய கோட்டையும் நானே! கொத்தளமும் நானே. முரசொலியும் நானே.
அந்த கலோனிய அரசின் வாரிசுகளும், கரணம் தப்பாமல், (எப்பவாவது சான்றோர் ஆட்சி உண்டு என்பதையும் நான் கண்டு களித்தது உண்டு.) மெய்யையும், பொய்யையும் சரி சமமாகக் கலந்து, பஞ்ச மா பாதகங்களில் ஒன்றைக்கூட விடாமல், நற்பண்புகளை அறவே மறக்காமல், ஆட்சி பீடத்திலமர்ந்து, மறந்தும் செங்கோலை சுமக்காமல், வெண்குடை ஒழித்து, வானவில்லினும் மிகுந்த நிறங்கள் தைத்த ஜிகினா குடையின் கீழே நின்று கொண்டு ராசாங்கம் செய்ததும் என் விலாசத்தில் தான்.

கதை கேளும். பிடித்தால் சொல்லும்; பிடிக்காவிட்டாலும் சொல்லும். 

தமிழ்நாட்டு அரசின் இணையதளம், நான் வணிகத்துக்கு இருப்பிடம் என்பதால், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகள் இல்லை என்று சொல்வதை வன்மையாக மறுக்கிறேன். ஏரிகளை குப்பை கூளங்களால் நிரப்பி, கோயில் சொத்தில் கை வைத்து,நஞ்சை, புஞ்சை எல்லாம் பினாமி வீடு கட்டி, ரங்கநாதன் தெரு இலக்கணம் பேசும் மக்கள், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகளை விட்டு வைக்கவில்லை என்பதே என் ஆதங்கம். ஐயம் இருப்போர் சென்னை வரலாற்றுப் பதிவாளர் முத்தையா அவர்களையும், அவருடைய சகபாடியும், எமது நண்பருமான கே.ஆர்.என்.நரசய்யா அவர்களையும் அணுகலாம். 

தடுக்கி விழுந்தால், குட்டியூர் சமஸ்தானங்கள், ராசாக்குஞ்சுகள், ஜமீந்தார், ஜாகீர்தார், மிராசுதார்கள் தூங்கி வழிந்த அந்தக்காலத்தில், சந்திரகிரி சமஸ்தானாதிபதி தாமர்லா வெங்கட்டப்ப நாயக்கரிடம், ‘கூவம் நதிக்கும், வங்காள விரிகுடாவுக்கும் நடுவில் உள்ள உள்ளங்கை நிலத்திலே எங்களுக்கு ஒரு அமைப்பு ( பாக்டரி) வேணும்.’ என்று கூழைக்கும்பிடு போட்ட பரங்கி (ஆங்கிலேயன்), வாசாலகமாக பேசி, நைச்சியம் பல பகர்ந்து, ஒரு கோட்டை, கொத்தளமும் கட்டிக்கொண்டான், அது தான் நான். நாற்பது வருடம் கழித்து,அக்டோபர் 28, 1680 அன்று எழும்பியது இந்தியாவின் முதல் ஆங்ளிகன் மாதாகோயில்: சைண்ட் மேரிஸ் சர்ச், இந்த வளாகத்துக்குள்ளெ. அங்கே தான் ராபர்ட் க்ளைவ் என்ற கயவனாக வந்து பிரபுவாகி, பனாதை ஆகிவிட்ட வரலாறு புடைத்தவனுக்கு, மார்கெரெச் மாஸ்கலீனுடன் திருமணம், ஃபெப்ரவரி 18, 1753 அன்று, பதிவானது. சொல்லப்போனால், திறந்த சிலநாட்களிலே எலிஹு யேல் என்ற கவர்னருக்கும்,கேத்தரீன் ஹிம்மர்ஸ்ஸுக்கும் நவம்பர் 4, 1680 அன்று திருமணம் பதிவானது. எலிஹூ அடித்த கொள்ளை சொல்லி மாளாது. பரவாயில்லை. அமெரிக்க யேல் பல்கலைகழகம், அவனுடைய நன்கொடையில் வளர்ந்தது.

சுற்றுப்படையில்லாத கோட்டையா, நான்? ஊஹூம். கவர்னரின் உப்பரிகை நடுவில். அதை சுற்றி ஆங்கிலேயர்களின் இல்லங்கள். இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் தான், கை பிடிக்க, கால் பிடிக்க ஆட்கள். இங்கிலாந்தில் இஸ்திரி போடக்கூட ஆள் கிடைப்பதில்லை. கூலியும் கட்டுப்படியாகாது. ஆனால், அக்காலத்து கலோனிய அதிகாரவர்க்கத்துக்கு, கை பிடிக்க ஒரு ஆள், கால் பிடிக்க ஒரு ஆள். மாமியின் தாதிகள், கணக்கில் அடங்கா. அதனாலே, நெசவாளிகளும்,சலவையாளிகளும், குசினிக்காரர்களும், பட்லர்களும் வாழ்வதற்கு, வடக்கில் சென்னப்பட்டணம். பெரி திம்மப்பா தான் ஸ்தாபகர். காலம் போகிறப்போக்கில் உப்பரிகைகள் குப்புறக்கவிழ்ந்தன. அதாவது இடிந்து போயின. ஃப்ரென்ச்க்காரன் வேறு 1746ல் போரில், பாதி ஊரை அழித்து விட்டான். அந்தக்காலத்தில் பண்ட/நிதி பரிமாற்ற மையமாக இருந்தவிடத்தில் தான் கோட்டை ம்யூசியம் உளது. 
ஆக மொத்தம், சென்னையின் பழைமை கட்டிடம்: அந்த 1680ம் வருட மாதா கோயில். எதற்கும், லஜ் மாதாகோயிலுக்கும் (Luz Church) (தேவகி ஆஸ்பத்திரி பக்கம்) ஒரு நடை போய் வருக.
இன்னம்பூரான்
23 04 2012
Inline image 1
உசாத்துணை:
K. Kalpana and Frank Schiffer(1948): Madras The Architectural Heritage: (An INTACH Guide) Souvenir of the Fort Museum-1948

கி.காளைராசன் Sun, Apr 22, 2012 at 10:45 PM

வணக்கம் ஐயா,

2012/4/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>
பஞ்ச மா பாதகங்களில் ஒன்றைக்கூட விடாமல், காலத்துக்கேற்ப சில நற்பண்புகளையும் அரிதாக உள்புகுத்தி, ராசாங்கம் நடத்திய கிழக்கிந்திய கம்பெனியால், முதல் முதலாக, தருமமிகு சென்னையிலே, ஏப்ரல் 23,1640ம் தேதி ‘முரசொலித்து’ எழுப்பிய கோட்டையும் நானே! கொத்தளமும் நானே. முரசொலியும் நானே.

கோட்டையின் வரலாற்றை படிக்காமல் கோட்டைவிட்டிருந்தோம்.
இப்போதாவது படித்து அறிந்து கொண்டோமே!

நன்றி
அன்பன்
கி.காளைராசன்

No comments:

Post a Comment