Monday, April 3, 2017

நாளொரு பக்கம்: 6: 2017



நாளொரு பக்கம்: 6: 2017

-இன்னம்பூரான்
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76071&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Vallamai+%28Vallamai%29


innam

नभसो भूषणं चन्द्र:
नारीणां भूषणं पति: |
पृथिव्या भूषणं राजा
विद्या सर्वस्य भूषणं ||

நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:
நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |
ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா
வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||
சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, April 1, 2017

நாளொரு பக்கம்: 4: 2017



நாளொரு பக்கம்: 4: 2017

-இன்னம்பூரான்மார்ச் 29, 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=75960

innam4
நான்மணிக்கடிகை: 66
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு.
ஆண்டவன் சன்னதியில் சுடர் விட்டு எரியும் திரியுடன் பிரகாசிக்கும் விளக்கைக் கண்டவுடன் கை கூப்பித் தொழுவார்கள். திருமடைப்பள்ளியில் அடுப்பில் சமைக்க உதவும் விறகு கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை மதியார், மக்கள். அதே மாதிரி, ஒரே வீட்டில் மூத்தது மோழையாகவோ, கோழையாகவோ, அறிவிலியாகவோ இருந்து விட்டால், அதே வீட்டில் இளைய மகன் கல்விமானாகவும், தலைவனுக்குரிய பண்புள்ளவனாகவும் இருந்து விட்டால், அவனுக்குத் தான் மதிப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:
http://eluthu.com/images/poemimages/f24/zjsoe_247061.jpg







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, March 29, 2017

நாளொரு பக்கம் 2 2017

நாளொரு பக்கம் 2 2017
-இன்னம்பூரான்
innam

மார்ச் 27, 2017
'History is a novel whose author is the people.' – Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863)
கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்.
ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பதுமைகள். வரலாற்றின் பக்கங்களை முன்னும் பின்னுமாக பலமுறைப் புரட்டினாலும், பாமரகீர்த்தி காணக்கிடைப்பதில்லை. சரித்திரத்தில் வளைய வரும் மாந்தர்களில், விவசாயி, சக்கிலியன், தீவட்டிதூக்கி, தேசாந்திரி, தச்சன், கொல்லன், கடைக்காரன், தொழிலாளி போன்றோர் இருந்ததில்லை என்று தோற்றம். அப்படியிருந்தால், சக்கரவர்த்தித் திருமகன்கள் யாரை ஆண்டனராம்? சிலருக்குத் தவறு கண்டுபிடிக்காவிட்டால் உறக்கம் வராது. ஏன், சங்கத்தமிழில் இரவலர்களும், புரவலர்களும் வருகிறார்களே என்பார்கள். ஆடிப்பாடி மெய்கீர்த்தி இசைத்து ஆனையும், தேரும் ஆக, ரத்னமாலையும், முத்தங்கியும் பரிசிலாகப் பெறும் இசைவாணர்கள் மட்டும் தரணி வாழும் மாந்தர்கள் அல்ல. அதனால் தான், நாம் எல்லாரும் தற்காலத்து பாமரகீர்த்திகளை இயற்ற வேண்டும்.  மூன்று உதாரணங்கள் தருகிறேன்.
மு.ராகவ ஐயங்கார் என்ற தமிழ் அறிஞர் தமிழாய்வு என்ற துறைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த காலம் (1878-1960) அண்மையில்தான். அவருடைய தமிழ்த்தொண்டு வியக்கும் அளவு பெரிது. தற்காலம் இணைய தளம் மூலம் அத்தகைய சான்றோர்களின் கீர்த்தி பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும் என்றாலும், ஷேக்ஸ்பியரை கரதலை பாடம் செய்தவர்களில், இவரை அறிந்து கொண்டவர் சொற்பம். இருவரையும் அறியாதவர்கள், பலர்.
நடிகர் ரஜனிகாந்தையும், நடிகர் ஜோதிகாவையும் பற்றி யாவும் அறிந்த பலருக்கு சத்யஜித் ராய், பிருத்விராஜ் கபூர் யார் என்று தெரியாது. உங்களுக்கு தெரியுமானால், நல்லது. உங்களை உயர்திரு பாமரர் என்பேன்.
மகவுகளின் படிப்புதான் முக்கியம் என்று ‘தியாகபூமி’ பெற்றோர்களை நான் அறிவேன். அவர்களின் பாமரகீர்த்தி மற்றவர்களுக்கு படிப்பினை அல்லவோ?
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 28, 2017

நாளொரு பக்கம்: 3: 2017

நாளொரு பக்கம்: 3: 2017

இன்னம்பூரான்
மார்ச் 28, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75884

பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை கதை சொல்லி இலக்கியங்களில் முதன்மை வகிக்கிறது என்று அந்த காலத்து பெரிசுகள் சொல்லிக்கொள்வார்கள். அந்த விக்ரமாதித்யனின் அண்ணனாக கருதப்படும் ராஜரிஷி பர்த்ருஹரி உஜ்ஜெய்ன் சமஸ்தானத்தின் அரசர், அறிவாளிகளின் தலைவர், துறவு பூண்ட மாமனிதர். அவருடைய நீதிசதகம், வைராக்யசதகம், சிருங்கார சதகம் ஆகியவை புகழ் வாய்ந்தவை. ஒரு மாதிரி, இங்கே.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसमप्यस्थिकम्
श्वा लब्ध्वा पारितोषमेति न तु तत्तस्य क्षुधः शान्तये ।
सिंहो जम्बुकमङ्कमागतमपि त्यक्त्वा निहन्ति द्विपम्
सर्वः कृच्छ्रगतोऽपि वाञ्छति जनः सत्त्वानुरूपं फलम् ॥
- नीतिशतकम्


தனக்கு கிடைத்த எலும்புத்துண்டில் கொஞ்சம் கூட மாமிசபசை இல்லாவிடினும், கிடைத்ததை உண்டு, பசி தணியாவிடினும், மனநிறைவு கொள்ளும்,நாய். கண்ணில் பட்ட நரியை கண்டும் காணாமல், யானையை வேட்டையாடும் சிங்கம். தன்னால் முடிந்தவரை நன்றாகவே இயங்கி பலனை அடைய எல்லாரும் முயல்வார்கள்.

எட்டாதாயினும் கிட்டாது என்றோ/ சீ! சீ! இந்த பழம் புளிக்கும் என்றோ/ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றோ பெரும்பாலோர் இருப்பதில்லை. 

#
சித்திரத்துக்கு நன்றி:
https://s-media-cache-ak0.pinimg.com/736x/f3/2a/c8/f32ac84414a4944737b611976086fb9d.jpg

Monday, March 27, 2017

நாளொரு பக்கம்: 1: 2017

நாளொரு பக்கம்: 1: 2017 

Monday, March 27, 2017, 5:26

இன்னம்பூரான்
மார்ச் 26, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75829

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
ai
ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம் 
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் 
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் 
போகாத இடந்தனிலே போக வேண்டாம் 
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் 
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [1]
அன்றாடம் படித்து வருவது நலம் பயக்கும்.
‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று உதட்டளவில் நாட்தோறும் ஓதும் பலர், இதன் மூலம்   விளம்பி நாகனார் இயற்றிய  நான்மணிக்கடிகையிலிருந்து என்று அறிந்து இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.
பொல்லாங்கு என்ற சொல் தீய சொற்கலை விட கொடியவை. தவிர்ப்பது நலம். அன்னையை மறக்கவே கூடாது. நமது வாழ்வின் ஆதார ஸ்ருதி அவளல்லவோ! துஷ்டனை கண்டால் தூரவிலகு என்கிறார், உலகநாதர். அது எளிதல்ல. ஆனாலும் அறிவுரை அபாரமானது தான். செல்லத்தகாத இடங்களுக்கு போகாதே என்கிறார். செல்லத்தகாத இடங்கள் இல்லை என்பது என்று எனகு தோன்றுகிறது. விலைமாதுகள் வசிக்கும் இடங்கள், குஷ்டரோகி வசிக்கம் இடங்கள் கூட செல்லத்தகாதவை என்பார்கள். ஆனல், அவர்களுக்கு உதவ அங்கு போகத்தானே வேண்டும். கவனித்து செயல்படு என்பது உலகநாதரின் அறிவுரை. ‘புறம்’ பேசுவதை பரவலாகக் காண்கிறோம். ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. வாழ்நெறியின் அருமையான அறிவுரைகளை தெளிவாக உரைத்த நூலாசிரியர் வள்ளி மணாளனை துதித்து, தன் நான்மணிக்கடிகையை துவக்குகிறார். யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய பளிங்குநீர் தமிழ்.
-#-

சித்திரத்துக்கு நன்றி:

Thursday, March 16, 2017

படவாகினி

படவாகினி

இன்னம்பூரான்
15 03 2017
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=75554

உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாத குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி. 

பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான போன்ற தலங்களில், ஆலயங்கள், வழிபாடுகள், குருக்கள் வாழ்நெறி ஆகியவை நிறைந்திருக்கும். வானமாமலை, ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய வைணவ தலங்களுக்கு சென்றால், மாட்டு வண்டிக்காரன் கூட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவான். மாடும் தலையாட்டிக்கொண்டே செல்லும். தார்க்கோல் போடவேண்டிய அவசியமில்லை.  அருகே உள்ள நாசரேத் என்ற ஊரில் ஏசு கிருஸ்து பிரார்த்தனையும், ஆங்காங்கே அமைந்துள்ள மசூதிகளின் அதிகாலை உரத்த குரல் அரபி தொழுகையும் தடை படாது. 1647ல் கட்டப்பட்ட பொட்டல் புதூர் தர்காவில் இந்துக்களின் சாயலை ஒத்த வழிபாடு. கந்தூரி திருவிழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இனபேதம், மதபேதம், பேதபேதம் எல்லாம் உண்டு; ஆனால், இல்லை. அப்படி ஒருவிதமான இணக்கமான வாழ்க்கைப்படகு. தற்காலம் போல் வெறித்தனம் கிடையாது. நாத்திகம் பேசிக்கொண்டே நேர்த்திக்கடன் செய்வது கிடையாது. வரட்டு சம்பிரதாயம் கிடையாது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன். இது என்ன திருநெல்வேலி ஜில்லா சொக்கிப்பீடியாவா என்ன? இது நிற்க.

குருக்களோட அப்பாவோட கீர்த்தி தான் வம்சத்துக்கே கவசமாக இருந்தது. சிவாச்சாரியார் ‘மங்களம் மாமா’ ( அவர் ரொம்பப் பெரியவர்; பெயர் தெரியாது.) அற்புதமா, மனப்பூர்வமாக அர்ச்சனை செய்வார். சாயரக்ஷை அவருடைய பிரவசனத்துக்கு, வண்டிக்கட்டிண்டு கல்லிடைக்குறிச்சி பெரிய பண்ணை வருவார். ஆனால், ஏகபுத்திரன் ஆன ‘வில்லுவை’ சம்ரக்ஷணை செய்ய அவருக்கு நேரம் இல்லை. ஆகவே ‘வில்லு’ எனப்படும் வில்வநாத குருக்கள் ஒரு நிரக்ஷரகுக்ஷி. ஆனால் அதிகம் படித்த மேதாவி என்று மிதப்பு! காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைங்கோ என்று ஊருக்கு உபதேசி வைத்தியோட அட்வைஸ். சங்கீத மேளகர்த்தா ஸ்ரீ சேர்மாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த குந்தளாம்பிகை தான் ‘வில்லுக்கு’ வந்து வாய்த்தாள். வாய்துடுக்கு.  மாமி போனபிறகு தனித்து விடப்பட்ட முதியவர் மங்களம் மாமாவை உதாசீனம் பண்ணி, அவரை ‘உண்டு இல்லை’ என்று செய்து விட்டாள். அவரும், ஏற்கனவே சாந்தஸ்வரூபி, விட்டேற்றியாக, கோவிலே கதி என்று இருந்து விட்டார். 

சுகஜீவி ‘வில்லும்’ ‘பளார்! பளார்’ குந்தளாவும் நடத்திய இல்லறத்தில் புழு, பூச்சி ஒன்றும் வரவில்லையே என்று இருவரும் அங்கலாய்த்தாலும், காலாகாலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தன. காலம் நிற்கிறதா என்ன? வயதாக ஆக, ‘வில்லுக்கு’ பிடிவாதம் ஏறியது. குந்தளாம்பிகையின் கொம்மாளம் எல்லை மீறிப்போயிற்று. வேலை வெட்டி இல்லாமல் இருந்த ‘ஜபர்தஸ்து’ மணிக்கு (தலைமகன்) அத்தை பெண் மீனாக்ஷியை கல்யாணம் செய்து வைத்தது, ‘வில்லுக்கு’ அவ்வளவாக சம்மதம் இல்லை. ஆனால் குடும்பநிலை அப்படி. இரண்டு பக்கமும் நல்ல பணம். அது பிரியக்கூடாது என்பது குந்தளாவின் அரசியல் சாஸனம். ஆச்சுப்போச்சு கல்யாணம் என்றாலும் பத்து வருஷம் ஆனபிறகும் குஞ்சும் கிடையாது; குளவானும் கிடையாது; ஹோப்பும் கிடையாது. பழி வாங்கிறதற்கு அகப்பட்டுக்கொண்டாள், இரண்டாவது மாட்டுப்பெண், சுந்தரி. நல்ல இடம். இரண்டாவது பிள்ளை மாதவன் தான் வீட்டுக்குத் தூண். நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். கொடுக்கிற மனசு. 
சுந்தரியும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள் தான். அப்பா சுந்தரராமன், வீரவநல்லூரில் நல்ல பெயர் வாங்கின கவர்ன்மெண்ட் டாக்டர். ஆந்திராவுக்கு மாற்றி விடவே, வேலையை உதறி விட்டு, அங்கேயே ப்ராக்டீஸ். செல்வாக்கு. பங்கமில்லா வருமானம். ஏழைப்பங்காளன் என்பதால் சொத்து. சொதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சீரான வாழ்க்கை. பெரிய பையன் சங்கரன் ஒரு மாதிரி. கண்ட இடங்களில் பணத்தைக்கட்டி, படிச்சேன் என்று பேர் பண்ணி ஐஏஎஸ் எழுதினான். இண்டெர்வ்யூவில் பிச்சுண்டுடுத்து. அவாள்ளாம் இனம் காண்றதிலெ கெட்டி. இவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு கொண்டார்கள். பாசாகவில்லை. நாடு தப்பியது. எல்லார் மீதும் இவனுக்கு கோபம். நாட்தோறும் அப்பாவோட சண்டை. பணம் கறப்பான். பொறுப்பு நில். இதையெல்லாம் பார்த்த அடுத்தவன் ஆம்படையாளை கூட்டிக்கொண்டு அயல் தேசம் போய்விட்டான். நூல் அறுந்தது.

இந்த கூட்டுக்குடும்பத்து சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது, மாதவனும் சுந்தரியும் தான். இத்தனைக்கும் வரதக்ஷிணை பேரம் நடத்திய குந்தளாவுக்கு, தன் ஒரே பெண் சுந்தரியின் நலன் கருதி, டாக்டர் சுந்தரராமன் வளைந்து கொடுத்தார். வில் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, குந்தளா கையில் பத்தாயிரம் ரூபாய் சொளையா அழுத்தினார். ஐந்து கிலோ வெள்ளி, வைரத்தோடு, கணிசமா ஆறு பவுனுக்கு ஆபரணங்கள், காஸ்ட்லி பட்டுப்புடவைகள் இத்யாதி. தடபுடலா கல்யாணம். ஆனால், சுந்தரி வீட்டுக்கு சேர்த்தி இல்லை. எல்லாரிடம், கூசாமல், இவளுடைய அப்பா ஒன்றுமே தரவில்லை என்று அங்கலாய்ப்பாள், குந்தளா. 

குடித்தனம் எல்லாம் தடித்தனம் தான். வந்த சீர் எது என்ன என்று மாதவனுக்கே தெரியாதபடி, எல்லா நகையும் பூட்டி வைத்துக்கொண்டு, சுந்தரியை மஞ்சக்கயிறுடன் தான் வளைய விட்டாள். அந்த காலத்து வீடா? புருஷன் பொண்டாட்டி பேசிக்கொள்ளக்கூட வாய்ப்பு கிடையாது. பணங்காய்ச்சி மரம் மாதவன் செலவில் தான் குடித்தனம், சின்னவர்கள் படிப்பு எல்லாம். முறைப்பொண்ணை கல்யாணம் செய்து கொண்ட மணிக்கு நோ வாரிசு, கொடுக்க ஒன்றும் இல்லை என்றாலும். படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. அவனொரு விருதா. 

ஒரு நாள் சுந்தரிக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தது. கழுகுக்கண்ணா! குந்தளா தொளைத்து எடுத்து விட்டாள். அழுதுகொண்டே, சுந்தரி தன் அபிலாஷையை சொன்னாள். தொலைந்தது. பெரிய மாட்டுப்பெண் இப்படி இருக்கும்போது, உனக்கு இது ஒரு கேடா என்றாள். சிலபேருடைய சாபம் பலிக்கும். கலியுகம் அல்லவா. கருச்சிதைவு ஆகி விட்டது. குந்தளா பாயசம் வச்சு சாப்பிட்டாளாம். என்னை வந்து யார் கேட்டார்கள்? கேட்டால், சொல்லியிருப்பேன், “ குந்தளா மாமி. நீங்க தாடகை அவதாரமோ, சூர்ப்பனகை அவதாரமோ, பூதகி அவதாரமோ! யார் கண்டா? பெரிய மாட்டுப்பெண்ணுக்கு பதினாறு பிறந்த பின், அடுத்தவனுக்கு கல்யாணம் செய்திருக்கலாமே. உங்கள் அழிச்சாட்டியம் இந்த  அருள்மிகு வில்வநாதேஸ்வரனுக்கே பொறுக்காது.’ என்று.

கதை நீண்டுண்டு போறது. மறுபக்கமும் சொல்லவேண்டும். பிறந்த வீட்டில் சுந்தரிக்கு சலுகை குறைந்து வருகிறது. எல்லா பணம் உனக்குத்தான் செலவாச்சு என்று சங்கரன் அவளை உதறி விட்டுட்டான். ‘வில்’லுக்கு டயாபிடீஸ். எல்லா செலவும் மாதவன் தலையில். ஏதோ நல்ல காலம். மாதவனும், சுந்தரியும் உயிருக்கு உயிராக ஒருவரை நேசித்தார்கள். ஆனாலும், மாதவனுக்கு டெஸ்ட் செய்து கொள்ள இஷ்டமில்லை. அம்மாக்காரி விவாகரத்து வரை கொண்டு போய்விடுவாள். வில் தலையாட்டும் என்ற பயம். எனக்கு அது சரியாக படவில்லை. என்னை மாதவன் ஆலோசனை கேட்கவில்லையே. திடீரென்று ஒரு நாள் போய்விட்டார். இப்போது சுந்தரிக்கு துணை பெருமாள் தான். ஏதோ புத்திசாலித்தனமோ கொஞ்சம் வைத்து விட்டு போய்விட்டார், மஹானுபாவன். அதை பிடுங்க ஆயிரம் பேர். எல்லாம் சொந்தக்காரர்கள் தான்.

நேற்று சுந்தரி என்னிடம் கேட்டாள். எச்சக்கையால் காக்காய் ஓட்டாதே. உள்ளதை காபந்து செய்து கொள். என்றேன்.
என்னமோ போங்கோ சார்! கூட்டுக்குடும்பத்தில் உழைத்து சம்பாதிக்கிற பையன் உழவு மாடு. அவனுடைய பார்யாள் கறவை மாடு. அவாளோட இளமை காணாமல் போனது. அவர்களுக்கு வயது காலத்திலே, நிர்க்கதி. என்ன வேண்டிக்கிடக்கு, இந்த கூட்டுக்குடும்பம், நல்ல பையனை கூட்டுகிற விளக்குமாறாக வைத்துக்கொண்டு.

எனக்கு தெரியும், ‘படவாகினி’ என்றால் என்ன என்று கேட்பீர்கள். அது ஒரு வட்டார மொழி. பொருள்: குந்தளா குணாதிசயமுள்ள பெண்மணிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

Tuesday, February 28, 2017

கோப்புக்கூட்டல் [1]

Innamburan S.Soundararajan

கோப்புக்கூட்டல் [1]

Innamburan S.Soundararajan Tue, Feb 28, 2017 at 8:55 PM


 கோப்புக்கூட்டல் [1]

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [1]

மதராஸ் சட்டசபைக்கான தேர்தலில், ஃபெப்ரவரி 23ம் தேதி அதிகாலை கிடைத்த தகவல்படி, 109 இடங்களில் 78 இடங்களை தி.மு.க. கூட்டணி ( ஸ்வதந்திரா + கம்யூனிஸ்ட் மார்க்ஸிட்) கைப்பற்றியது. [இன்றைய கட்சி சார்பு வகையறா யாவரும் அறிந்ததே.] அவற்றில் 62 தி.மு.க.விற்கு மட்டுமே. காங்கிரஸ் கட்சிக்கு படு தோல்வி. அமைச்சர்கள் திருவாளர்கள் வி. ராமையா, என்.எஸ். மன்றாடியார், பி.கக்கன் தோற்றுப்போனார்கள். திரு வி.ராமையாவை தோற்கடித்த  திரு.பி.பொன்னம்பலம் ஒரு பள்ளி ஆசிரியர். 
[ படித்தது :ஹிந்து இதழ்]
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Innamburan S.Soundararajan Tue, Feb 28, 2017 at 9:17 PM

இன்றைய கோப்பு: [2]
மார்ச் 1, 2017
இது நடந்து ஐம்பது வருடங்கள் ஆயின.


***

இன்றைய கோப்பு: [2]

 01 03 2017

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியின் காரணம் 1965ம் வருடம் நடந்தேறிய மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்பு. அந்த காலகட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி கற்பிக்கப்பட்டது. அதற்கு சலுகைகள் இருந்தன. நான் அதன் பொருட்டான பொறுப்பை வகித்து வந்ததால், நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தேன். டில்லிக்கு அழைக்கப்பட்டு, சென்ற என் கூற்றை கேட்க, அரசுக்கு ஹிந்தி ஆலோசகராக பணி புரிந்த பிரபல கவிஞர் ராம்தாரி சிங் 'தினகர்' அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழனின் ஆதங்கத்துக்கு, அச்சலுக்கு, வயிற்றுப்பாட்டுக்கு உரியன செய்யவில்லையெனின், நானும் ஹிந்தியை எதிர்ப்பவன் தான் என்றதை பாராட்டிய அவர், ஆவன திருத்தங்கள் செய்தார். என்னை ஊக்கப்படுத்தினார். ஆனால், உண்மையை மறைத்து, மாணவர்களை வழி நடத்தியவர்கள் பிரிவினையை தான் தூண்டினர். மத்திய அரசை விட குறைந்த புரிதல், மாகாண அரசியலர்களுக்கு. 

இந்த காலகட்டத்தில், பெரியார் விரும்பியது காமராஜரின் வெற்றி.அவர் தோற்று, அண்ணா முதல்வர் ஆனதை விரும்பாத ஈ வே ரா. அவர்கள், '... தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரி விடும் துரோகச்செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழி செயல் இல்லாத தமிழன் அரசியலிலோ,, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?" என்று காட்டமாக எழுதினார் (விடுதலை: 1.10.1967). ஒன்றுக்கொன்று முரணாக பேசுவது அவருடைய வழக்கம் என்றாலும். இவ்வாறு அனுபவத்தின் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளை, எளிதில் உதறி விட முடியாது என்பதை பிற்காலம் உறுதி செய்துள்ளது.
சித்திரத்துக்கு நன்றி: http://img.vikatan.com/news/images/vnr%20mdmk02.jpg



இன்னம்பூரான்

Monday, February 13, 2017

Disproportionate assets case


Disproportionate assets case
The Supreme Court on Tuesday convicted AIADMK general secretary V.K. Sasikala in a disproportionate assets case. A Bench of Justices Pinaki Chandra Ghose and Amitava Roy set aside the Karnataka High Court acquittal of Ms. Sasikala, Ms. Ilavarasi and Mr. Sudhakaran and restored the trial court verdict.
Ms. Sasikala has been asked to surrender immediately. The quantum of punishment that had been given by the trial court was 4 years imprisonment.
Justices P.C. Ghose and Amitava Roy concur in separate verdicts that the case reflected rising corruption in society. "In my concurring verdict I express my deep concern about the escalating corruption in society," Justice Amitava Roy said.
The judgment has meant a closure to the wealth case haunting Tamil Nadu politics for over two decades.








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இசையும், நடனமும், கருத்தரங்கமும்



இசையும், நடனமும், கருத்தரங்கமும்


இன்னம்பூரான்
12 02 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75007

உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4

இன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீணையின் ரீங்காரமும், ஒத்த மத்தள சொல்லுக்கட்டு போன்ற ஆற்றல் மிகுந்த வாசிப்பும் அவைக்கு அலங்காரமாக அமைய, நடனம் அதற்கு மெருகேற்ற, ‘காலந்தோறும் தமிழ்!’ என்ற தலைப்பில்  ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் எஸ்.மோஹன் அவர்களின் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதிரா என்ற அதிகாரியினி தான் ஓடியாடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல! அதே கருத்து. மலேசியா போல, அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே! அதே! சபாபதே’ என்று மனனம் செய்து கொண்டு இருந்தபோது, தலைமை தாங்கிய நீதியரசர் எஸ்.மோஹன் அவர்கள் திருக்குறளை முன்வைத்து ஒரு கருத்துக்களஞ்சியமே வழங்கினார். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாணய ஆய்வு ஒன்றை அருளினார். எல்லாம் செல்லாக்காசு தான்! விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம்? தமிழ் உச்சரிப்பு என்ற கவின்கலை. மொழி நயமும், குரல் வளமும், குறையிலா உரை ஒலியும், சொல்லும், பொருளும், கருத்துமாக இணைந்து வந்தன. 

இந்த நிகழ்வு ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ரகம். முனைவர் கோ.பெரியண்ணன் முதல் திரு.எ.கலி வரதன் வரை ஏழு புலவர்கள் அடங்கிய குழு ஒன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற இந்த ஆய்வுக்கோவையை ( கை வலி: அத்தனை தடிமன்: 180 கட்டுரைகள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது, இதன் 1022 பக்கங்கள் திக்கெட்டும் செல்லும். என் குட்டுரை ( ஒரு மோதிரக்குட்டு வைக்கும் கட்டுரை: 25வது).

அரங்கம் இருந்த இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை. இத்தனை பரிசுத்தமான கல்லூரியை நான் இந்தியாவில் கண்டதில்லை. மாணவர்களின் நன்னடத்தை வெளிப்படையாக தெரிந்தது. கல்லூரித்தலைவர் முனைவர். எஸ். ராமநாதன் அவர்களின் பெருந்தன்மை கண்கூடு. அவர் எங்களுக்கு அவர்கள் கல்லூரி ஹோட்டல் துறை மாணவர்கள் தயாரித்து பரிமாறிய இரு சுவை விருந்து அளித்தார். பிரமாதம். அந்த இரு சுவை இனிப்பு. இனிய விருந்தாகியதால், மற்ற சுவைகள் என் நாவை அடையவில்லை. ஆகவே, இனிப்பு + இனிப்பு. மற்ற சான்றோர்களை பற்றி எழுதாதது கை வலியால்! பொறுத்தாள்க. மாலை அமர்வில் கவிஞர். வைரமுத்து வந்திருக்கிறார். விருந்து லாகிரியில், நான் துயில் கொண்டேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

மேற்கோளுக்கு நன்றி: இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு.


இன்னம்பூரான்
வல்லமை -  மின்னிதழ்.

காலந்தோறும் தமிழ்!
11 12 2016
ஞானத்தமிழ் என்ற சொல் ஒன்று உண்டு. அமுதம் என்றும் ஒரு சொல் உண்டு. ‘... திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுனும்துங்கமலி கடலுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்.’ என்ற சிறப்புப் பாயிரமாயினும், ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார், அன்பையும், ஆர்வத்தையும், இன்பத்தையும், சிந்தையையும் கலந்து இறைப்பற்று ஞானமுதமாக, நெக்குருகி பாடியது ஆயினும், ‘தமிழ்கூறு நல்லுலகத்து...’
என்று தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் பாராட்டியது ஆயினும், ‘தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை..’ என  சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் சீராட்டியது ஆயினும், ‘தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! என்று கம்பர் மெய்மறந்து கனிவுடன் அழைத்ததாயினும்,

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்தொழுது படித்தடடி பாப்பா’ என்று மகாகவி பாரதியார் மழலை அமுதமூட்டியது ஆயினும்,  ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!’ என்று தமிழமுதத்தை  பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!’ என்று இனமும் குணமும் கண்டு நாமக்கல் கவிஞர் கவி இசைத்தது ஆயினும், அவற்றுடன்,

மலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியமும்,  ‘அனைத்தும் ஒன்றே’ ஶ்ரீ நாராயண குருவின் பிரதம சீடராகிய மகாகவி குமரன்  ஆசான் அவர்கள் நினைவை போற்றும் தமிழகக் கலை அறிவியல் கல்லூரியும், எம்மை இங்கு பிடித்திழுத்து வந்த ஆதிரா பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நற்பயனாகவும் சரி,

காலந்தோறும் தமிழ் செழித்து ஓங்கவேண்டும்; பட்டி, தொட்டி, பளிங்கு மாளிகை, கூட கோபுரம் தோறும், இறவா வரமாகத் திகழவேண்டும் என்று தமிழ்த்தாயிடம் வேண்டிக்கொண்டு,  அதன் பொருட்டு, வரலாற்றின் அடிப்படையில் சில கசப்பான உண்மைகளை முன்னிறுத்தி, வருங்காலந்தோறும் தமிழ்மணம் தரணி முழுதும் வீசுவதற்கான ஆயத்தங்கள் செய்வோமாக.

இந்தியா விடுதலை பெற்றபின், அரசும், சமுதாயமும், கல்வித்துறையும் தமிழுக்கு செய்த பணிகள் சொற்பம். உதட்டளவில் உதிர்த்த வாய்பேச்சு வீரதீரங்கள் வியர்த்தமாயின. ‘நல்லதோர் வீணையாகவும், மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமல செல்வியாகவும், அன்னை பராசக்தியாகவும் அவதரித்த உத்தமி தமிழன்னை ‘திக்கற்ற பார்வதியாக’ வாடுகிறாள் என்பது தான் வரலாற்று உண்மை.

நமது கிராமங்களில், நிறைகுடங்களாகவும், கலங்கரை விளக்குகளாகவும், பண்டைத்தமிழின் திறவுகோல்களாவும் பணி புரிந்த தமிழறிஞர்கள் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் இலவசமாக எடுத்த பாடங்கள் எங்கே? சுப்ரதீபக்கவிராயர் வீரமாமுனிவருக்கு பாடம் எடுத்த விதம் அதே.  தமிழ்த்தாத்தா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் கற்றுக்கொண்டவிதம், அதே. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் தந்தையிடம் படித்த விதம் அதே. அத்தகைய நன்முத்து வாசிப்புகள் ஏன் காணாமல் போயின?

கலோனிய அரசு தமிழுக்கு அளித்த பெருமிதம், விடுதலை அடைந்தபின் நமக்கு கிட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றுடன் தற்கால பட்டப்படிப்பு அட்டவணையை ஒப்பிட்டால், வெட்கி தலை குனிவோம். கலோனிய ஆட்சிமொழி சோற்றுக்கு  ஒரு சோறு பதம், ஐ.சி.எஸ் பாடபுத்தகத்திலிருந்து:

1864 வருடம் ஜனவரி மீ 8 உ.”
 ‘மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.

விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.

மைல்கல்களாக நட்டவை, கூப்பிடும்தூரத்து கூழாங்கல்களாக வலுவிழந்த வரலாற்றை புரிந்து கொண்டால் தான்,  பாசம் அவசரமாக பரவசமான உரு எடுக்கும். 
  • 1956: டிசம்பர் 27:  ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்
இந்த நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார்.
  • 1966: ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா! 
  • 1967: தி.முக. பதவியேற்பு:‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். 
  • 1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
  • 1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
  • 1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
  • 1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
  • 1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது
  • 2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும்.
  • 2010: மே 8: இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும் என்ற வீராப்பு.
  • 2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது..என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். 
  • 2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி.1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆட்சி புரிந்தனர்.1966 லியே குஜராத்தி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேரூன்றிவிட்டது.. அங்கு தமிழ்நாட்டை சார்ந்த மேலதிகாரிகள் குஜராத்தியில் உரையாடினர்.  இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன.
  • 2017: காலந்தோறும் தமிழ் மின்னொளி வீச, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்வு அச்சாரமாக இருக்கட்டும் என்ற அவா;
  •  2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956)  நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா நடந்தால்..’ என்று ஒரு பகடி கற்பனை: கடுஞ்சொற்களை மட்டுறுத்தியதால் எனக்கு மன அழுத்தம்.
  • அந்த விழாவில் ஏகோபித்தத் தீர்மானங்கள்: 
    • ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; 
    • அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; 
    • தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; 
    • ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

ஐயன்மீர்! அன்பு சகோதரிகளே! மாணவ மாணிக்கங்களே! இந்த பகடி கற்பனை உங்களை உசுப்பி எழுப்புவதற்கே. இன்று முதல் நாம் யாவரும் நாட்தோறும் இடை விடாமல் தமிழ் பாடங்கள் எடுப்போம்; தமிழ் பாடங்கள் கற்போம். அதுவே தமிழன்னையின் வேண்டுகோள் என்க.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 

உசாத்துணை: 
Guide to Records, Coimbatore District, pg.139
Salem District Gazetteer - Richards, Volume - 1 Page.93 
Madras Legislative Debates, ‘The Madras Official Language Bill| Dated: 28.12.1956, Pages: 393 to 422)











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com