Wednesday, March 29, 2017

நாளொரு பக்கம் 2 2017

நாளொரு பக்கம் 2 2017
-இன்னம்பூரான்
innam

மார்ச் 27, 2017
'History is a novel whose author is the people.' – Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863)
கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்.
ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பதுமைகள். வரலாற்றின் பக்கங்களை முன்னும் பின்னுமாக பலமுறைப் புரட்டினாலும், பாமரகீர்த்தி காணக்கிடைப்பதில்லை. சரித்திரத்தில் வளைய வரும் மாந்தர்களில், விவசாயி, சக்கிலியன், தீவட்டிதூக்கி, தேசாந்திரி, தச்சன், கொல்லன், கடைக்காரன், தொழிலாளி போன்றோர் இருந்ததில்லை என்று தோற்றம். அப்படியிருந்தால், சக்கரவர்த்தித் திருமகன்கள் யாரை ஆண்டனராம்? சிலருக்குத் தவறு கண்டுபிடிக்காவிட்டால் உறக்கம் வராது. ஏன், சங்கத்தமிழில் இரவலர்களும், புரவலர்களும் வருகிறார்களே என்பார்கள். ஆடிப்பாடி மெய்கீர்த்தி இசைத்து ஆனையும், தேரும் ஆக, ரத்னமாலையும், முத்தங்கியும் பரிசிலாகப் பெறும் இசைவாணர்கள் மட்டும் தரணி வாழும் மாந்தர்கள் அல்ல. அதனால் தான், நாம் எல்லாரும் தற்காலத்து பாமரகீர்த்திகளை இயற்ற வேண்டும்.  மூன்று உதாரணங்கள் தருகிறேன்.
மு.ராகவ ஐயங்கார் என்ற தமிழ் அறிஞர் தமிழாய்வு என்ற துறைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த காலம் (1878-1960) அண்மையில்தான். அவருடைய தமிழ்த்தொண்டு வியக்கும் அளவு பெரிது. தற்காலம் இணைய தளம் மூலம் அத்தகைய சான்றோர்களின் கீர்த்தி பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும் என்றாலும், ஷேக்ஸ்பியரை கரதலை பாடம் செய்தவர்களில், இவரை அறிந்து கொண்டவர் சொற்பம். இருவரையும் அறியாதவர்கள், பலர்.
நடிகர் ரஜனிகாந்தையும், நடிகர் ஜோதிகாவையும் பற்றி யாவும் அறிந்த பலருக்கு சத்யஜித் ராய், பிருத்விராஜ் கபூர் யார் என்று தெரியாது. உங்களுக்கு தெரியுமானால், நல்லது. உங்களை உயர்திரு பாமரர் என்பேன்.
மகவுகளின் படிப்புதான் முக்கியம் என்று ‘தியாகபூமி’ பெற்றோர்களை நான் அறிவேன். அவர்களின் பாமரகீர்த்தி மற்றவர்களுக்கு படிப்பினை அல்லவோ?
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment