Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 13. அந்த நாளும் வந்திடாதோ?

அம்மா சொல்படி ராஜூ: (அந்த நாளும் வந்திடாதோ!)

பகுதி 12: 29 10 2009

(இடி விழுந்தது)

... அப்போது என் முதற்பிள்ளைக்கு 4 வயது இருக்கும். 55,56 பிறகு ஒரு பெண் எனக்கு 57, அந்த பெண்ணை என் அம்மாவிடம் விட்டு இருந்தேன். நாங்கள் போய் என்ன செய்வது. ஆனால் நாத்தனாருக்கு நிறைய நகை 58 போட்டிருந்தார் அவர் புருஷன். என் நாத்தனார் சொன்னாள். உனக்குப் பெண் இருப்பதால் நீயே எடுத்துக்கொள் என்று சொன்னாள். ஆனால் என் புருஷன் வரதாச்சாரியாரை கேட்காமல் நான் வாங்கிகொள்வது தப்பு என்றும் சொல்லிவிட்டார். ரொம்ப நல்லதாகப்போச்சு. 59 இப்படியிருக்கும் போது நான் நாலாவது பிரஸவத்திற்கு போனேன், என் அப்பா வீட்டிற்கு. அப்போது எனக்குப் பெண் பிறந்தது. 60 அதே மாஸத்தில் என் அப்பாவிற்கு (அடித்தல், திருத்தல்)... அப்போது செட்டியார் வீட்டு வேலை விட்டு விட்டார். நாதன் கம்பெனி என்று பிஸினஸ் நடத்தினார். அந்த சமயத்தில் தான் 60வது கல்யாணம் நடந்தது. ரொம்ப நன்றாக நடந்தது. அரியக்குடியிலிருந்து யானை மேல் பூர்ணகும்பத்துடன் புடவை வேஷ்டி எல்லாம் என் அப்பாவிற்கு வந்தது. 61 அதிலிருந்து எனக்கு ஆறாவது குழந்தை பிறக்கும் வரையில் செழிப்பாக இருந்தது. என் தம்பி சரியாக படிக்கிறதில்லை. இருந்தாலும், அவனுக்கும் கல்யாணமாகி இரண்டு குழந்தை பிறந்து இறந்தது.

பிறந்து இறந்துவிட்டது. அப்பா தான் என்ன செய்வார்? இப்படியிருக்கும்போது, என் அப்பா மாஸம் ஒரு தரம் ஸ்ரீரங்கம் வருவார். அப்போது வீட்டில் கார் இருந்தது. டைரவர் நாரயணன் என்று இருந்தான். அவன் தான் ஒரு தரம் ஸ்ரீரங்கம் அழைத்துப் போனான். அப்போது பெருமாள் சேவித்து விட்டு திரும்பும்போது ஒண்ணுக்குப் போகலாம் என்று காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி அங்கு ஒரு இடத்தில் ஒண்ணுக்கு போய்விட்டு எழுந்தார். அப்போது காலில் முள்ளு தைத்துவிட்டது என்று ஊருக்கு வந்துவிட்டார், ஒரு வாரம் ஆனதும் காலில் பெரியதாக வீங்கிவிட்டது. வலி தாங்காமல் டாக்டர் நாராயனசாமி என்கிறவர் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வந்து பார்த்து ஆபரேஷன் செய்தாராம். அது நன்றாகத் தேவலை. ஆனால், ஏதோ ஒரு உடம்பு வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டாராம். 62 அப்போது எல்லாம் நான் என் புருஷனுடன் உசிலம்பட்டி என்ற ஊர் மதுரை அருகில் இருக்கிறது. அங்கு தான் இருந்தேன். என் அப்பா உடம்பு விஷயம் பற்றி எனக்கு லட்டர் வரும். நான் வருகிறேன் என்றால் வரவேண்டாம் என்று போடுவார்கள். இப்படியிருக்கும்போது தான் நான் ஐந்தாவது உண்டாகியிருக்கிறேன். என்ன செய்வது? ஆனால் முதல் குழந்தை பிறக்கும்போது எனக்கு 17 வயது? இரண்டு வயது வித்யாஸமாக எனக்கு குழந்தை பிறக்கும். என் மாமியாரும் இல்லாததினால் என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. என் மாமனார் மாத்திரம் இன்னம்பூரில் இருக்கிறார். இப்படியிருக்கும் போது தஞ்சாவூரில் இருந்த நாத்தனார் லட்டர் போட்டார். என்ன என்றால், என் மைத்துனர் இரண்டு பையன்களையும் தான் படிக்க வைத்துக்கொள்வதாகவும், உன் பிள்ளை பெரியவனை என்னிடம் விட்டால் என் பிள்ளை இருவருடன் நன்றாகப் படிக்கலாம். தவிர, கல்கத்தாவிலிருந்து நாமு என் பிள்ளையை நீ வைத்துக்கொண்டு படிக்க வை; நான் பணம் அனுப்புகிறேன் என்று லட்டர் போட்டிருக்கிறாள். நீ என்ன சொல்கிறாய் என்று அந்த நாத்தனார் லட்டர் போட்டாள். அதற்கு பதில் போட்டுவிட்டார். பிள்ளையை அனுப்பி வைக்கிறேன் என்று. எனக்கு மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது தான் என் மைத்துனருக்குக் கல்யாணம். அவர் கல்யாணத்தை தஞ்சாவூர் மாப்பிள்ளை செய்து வைத்தார். அவர் திடீரென்று இறந்து விட்டதால், நாத்தனார் தனியாக இருக்க வேண்டாம் என்றும், என் புருஷன் தன் பிள்ளையை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார். அதே போல் நாமு என்கிற நாத்தனாரும் அவள் பிள்ளையை அனுப்பிவைத்தாள். இவர்களையும், தம்பியையும் வைத்துக்கொண்டு63 நாத்தனார் கொஞ்ச நாள் தஞ்சாவூரிலேயே இருந்தாள். பிறகு, நான் மூன்றாவது குழந்தை பிறந்து 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அப்போது எல்லாம், என் அப்பா நன்றாக இருந்தார். நல்ல பணம் சம்பாத்தியம் உண்டு. இப்படி காலம் போய்க்கொண்டிருந்தது. இப்படியிருக்கும் போது நான் ஐந்தாவது உண்டாகியிருந்தேன். அப்போது என் அப்பாவிற்கு ஏதோ கொஞ்சம் தேவலை. என்னைக் கவலைப்படவேண்டாம். ஆராவமுதுவை அனுப்பிவைக்கிறேன். அவனோடு ருக்மணியை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா லட்டர் போட்டார். அதே போல் நான் ஒன்பதாவது மாஸம் என்னிடம் இருக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரஸவத்திற்கு காரைக்குடி வந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா நடத்துகிற அரியக்குடி உத்ஸவ வேத பாராயணமும் நடந்து கொண்டிருந்தது. 64 அதோடு நம்ம ஆசாரியன் ஆக்கூர் ஆண்டவனை ஒரு வருஷம் வைத்து ஆராதனை நடத்தினார்...

(அந்த நாளும் வந்திடாதோ!)

55. அன்று:

தஞ்சாவூர் ஸ்டேஷனில் இஞ்சின் தண்ணி குடித்ததை வியப்புடன் பார்த்ததும், படியேறி ஜட்கா வண்டி பிடித்ததும், வீடு பூரா நான் அத்திம்பேரின் சடலத்தைத் தேடியதும் நினைவில் இருக்கிறது. அன்று மதியம் மச்சிலிருந்து பெரும்கூச்சல் கேட்டு ஊரெல்லாம் ஓடி வந்தது. (என்னடா என்று தும்பி - அவரின் இரண்டாவது மகன் - கேட்டான். மச்சிலே போட்டிருக்குன்னு சொன்னான். ஏறி தேடியிருக்கிறேன். இறங்கத்தெரியவில்லை. சடலம் எழுந்தா வம்புன்னு கூச்சல். செக்காணூரணிப்பாட்டி மோர் காச்சி கொடுத்து, கட்டி கொண்டாள். (அவள் என் அம்மாவுக்குப் பாட்டி. எனக்கு காவல் தெய்வம். காரைக்குடி முத்தூரணீக்கரை திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வித்யாப்யாஸம். ... வாத்தியார் [பேர் வேண்டாம் - பாஸ்வெர்ட்] அடிச்சார். பாட்டிட்டே சொன்னாள். அவரை வைதாள், “... கட்டேலே போக! குழந்தை மேல கை வச்சே, கண்டங்கண்டமா வெட்டி குளத்தலே போட்ருவேன்.” அப்பறம் ஐயா தான் ஹீரோ!).

56. இன்று:

அக்கால வரதக்ஷிணைக்கொடுமைக்கு பலியானார், என் அத்தை என்ற வ்யாகூலம். ஆயுசுக்கு கண்ட கண்ட இடங்களில் பிள்ளைப்பேறுக்கு உதவி, என் பெண் பிறந்தபோது கூட. அவள் பெண் தெய்வம். சுயகல்விக்கு அவருக்கு ஈடு கிடையாது. எப்படியோ இருக்கவேண்டியவள் எங்கள் நல்ல குடும்பத்திலேயே, இன்னல்களுக்கு இரையானார் என்று வருந்துகிறேன். ஆறுதல்: அவருக்கு பக்கபலம் வஸந்தா, என் மனைவி.

57. அவள் ஜெம்பகம், என் உயிர்த்தோழி. இப்போது இல்லை.

58. அதன் மேல் எத்தனை பேருக்கு கண்!

59. ஆண்கள் முடிவு எடுப்பார்கள். பெண்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

60. கமலா. அவள் வீட்டில் தான் வாழ்கிறேன். இன்று சில நண்பர்களைத்தவிர, என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமை, அவளுக்கு.

61. எனக்கு நினைவு இருக்கிறது. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி. ரொம்ப நாளுக்கு பிறகு தான் தெரியும், அவரும், நாடகச்சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் தாத்தாவுக்கு நண்பர்கள் என்று.

62. செய்வினையோ என்று பேசிக்கொண்டார்கள் என்று நினைவு.

63. இதில் ஒரு நுட்பம். அத்தைக்கு வருமானம் இருக்க ஒரு உத்தி, இது.

64. உத்ஸவம்னா, பசங்களுக்கு கொண்டாட்டம். மேற்பார்வை கிடையாது. விடியல் காலத்திலே, தேசாந்திரி மாதிரி, கோயில்லே தோசை; குளத்திலேயே வாசம்; தாத்தா உபயதாரர் என்பதால், வெள்ளித்தடி ஒன்று தாங்கி வருவார், பெருமாள் ஊர்கோலம் வரச்ச. அதை பிடுங்கிண்டு, நானும், என் தம்பியும், பேண்ட்மாஸ்டர் மாதிரி, சுழுற்றிண்டு வருவோம். அப்பப்போ தேவதாசிகள் மேலே ஒரு கண்ணு. புரியாது; ஆனா புரியும். வேத பாராயாணகோஷ்டியோட நடந்து தாகசாந்தி. உடனே ஓடிப்போய், பின்னாலே வரும் திவ்யபிரபந்தகோஷ்டியோட தாகசாந்தி.. அந்த நாளும் வந்திடாதோ!

அம்மா சொல்படி ராஜூ: 12. இடி விழுந்தது.

`அம்மா சொல்படி ராஜூ: (இடி விழுந்தது) பகுதி 11: 27 10 2009

(வந்தனன்! வந்தனன்!)

குழந்தை பிறந்து மூன்றாம் மாஸம் என்னை சீர் செய்து திருமங்கலம் கொண்டு வந்து விட்டாள். அம்மாவும் உடனே ஊருக்குப் போய் விட்டாள். (அடித்தல், திருத்தல்) என் மைத்துனரும் திருமங்கலம் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். இன்னம்பூரில் என் மாமனார் மட்டும் தானே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் கூப்பிட்டும் வரமாட்டார். எங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். மாமியார் இறந்து கொஞ்சநாள் ஆனதும், கல்கத்தா நாத்தனார் கல்கத்தா போய்விட்டாள். என் கல்யாணத்தின் போது என் மைத்துனருக்கும் பூனூல் போட்டார்கள். என் புருஷன் வீட்டில் எனக்கு யாரும் இல்லாததால் என்னுடைய குடும்பத்தை என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. ஆனால், என் அக்காவுக்கும் என் அப்பா தான் கவனிக்க முடிய ஆயிற்று. (அடித்தல், திருத்தல்). என் அக்காவுக்கு இரண்டு பிறந்து மூன்றாவது பிரஸவத்திற்கு என் அப்பா வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த சமயத்தில் தான் எனக்குப் பிள்ளை பிறந்த்தது? அக்காவிற்கு பெண் பிறந்ததது. ஒரே வீட்டில் இரண்டு பிரஸவம் நடந்ததது. எனக்குப் பத்து வயதுக்கு பிறகு என் அப்பாவிற்கு நல்ல பணம் சம்பாத்தித்து நன்றாக இருந்தோம்.

இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போய்விடுவேன். இப்படியிருக்கும் போது அக்காவும் என்னைப் போல் பிரஸவத்துக்கு வருவாள். அவளுக்கு பெண் பிறக்கும். எனக்கு பெண்ணும், பிள்ளையுமாக கலந்து பிறக்கும். ஆனால் அக்காவிற்கு நாலு பெண் பிறந்து விட்டது. அக்கா கவலைப்பட்டு பிறகு பிரஸவத்திற்கு வருவதில்லை. இருந்தும் பிறகும் ஒரு பெண் ஆக ஐந்து பெண் பிறந்தது. அதனால் அவள் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு வருவதில்லை. நான் தான் போய் வருவேன். நான் பிரஸவத்திற்கு வந்து அப்பா வீட்டில் இருப்பேன். நான் பிரஸவமாகி ஊருக்கு போகும் வரை என் புருஷன் ஓட்டலில் தான் சாப்பிடுவார். ஆனால் என் அப்பா இன்கம்டாக்ஸ் கணக்கு வேறு பார்த்துக்கொண்டிருந்தார். தனியாக ஆபீஸ் வைத்துக் கொண்டார். இருந்தாலும் பழய செட்டிமார் வீட்டு வேலையை விடவில்லை. தனக்கு குமாஸ்தாவாக அய்யங்கார் பையன் ஆராவமுது 54 என்று அவனை வைத்துக்கொண்டார். திடீரென்று தஞ்சாவுரிலிருந்து என் நாத்தனார் புருஷன் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. ஆனால் முன்னடியே பேப்பரில் அவர் போன செய்தி தெரிந்தது.

என் புருஷன் படித்துவிட்டு ரொம்பவும் வருத்தப்பட்டார். மறு நாள் லட்டர் வந்தது. ஆனால், இந்த கஷ்டத்தைப் பார்க்க என் மாமியார் இல்லை. இன்னம்பூரிலிருந்து என் மாமனார் வந்துவிட்டார். நாங்கள் பிறகு தான் போனோம். நாத்தனாரைப் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.

54. ஜப்பானீஸ் லாயல்டி . தாத்தா காலம் வரை, அவர் நீடித்து அந்த ஊழியத்தில் இருந்தார். தாத்தாவை விட, பாட்டியிடம் தான் அவருக்கு பயம். வபையாப் பிடித்து விடுவாள்.

(இடி விழுந்தது)

அம்மா சொல்படி ராஜூ: 11. வந்தனன்! வந்தனன்!

`அம்மா சொல்படி ராஜூ: (வந்தனன்! வந்தனன்!) பகுதி 11: 27 10 2009

(சுழன்ற காலச்சக்கரம்... )

... உடனே என் அப்பா என்ன செய்வார். உள்ளூரில் என் சின்ன அத்தை இருந்தாள். அவள் புருஷனைக் கூப்பிட்டு என்னை மெட்றாஸ் கொண்டுவிடும்படி சொன்னார். அதன்படி அவர் மெட்றாஸ் என்னை கொண்டு விட்டுட்டு அவர் ஊருக்குப் போய்விட்டார். ஆனால் என் புருஷன் முன்னாடியே போய் காரியங்கள் நடந்ததது. கல்கத்தாவிலிருந்து நாமு வரவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். 3 நாள் கழித்து கல்கத்தா நாத்தனார் வந்து விட்டாள். தஞ்சாவூரிலிருந்து கடைசி நாத்தனார் பத்து நாள் முன்னாடியே வந்திருக்கிறாள். நான் தான் மாமியாரை பார்க்கமுடியவில்லை. அதுவும் மெட்றாஸ்ஸில் பெரம்பூரில் என் மாமியாருடைய தங்கை இருந்தாள். அவள் வீட்டில் தான் என் மாமியார் இறந்ததது. மற்ற காரியங்கள் நடந்ததது.. அதற்கு எனக்குச் சீர் செய்யவேண்டுமாம். அதற்கு என் மாமியாருடைய அம்மா எனக்கும் பாட்டி. அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் உனக்கு சீர் செய்யவேண்டும். அதற்குப் பதிலாக பணமாக அனுப்பும்படி உன் அப்பாவிற்கு எழுது என்று சொன்னார். ஆனால் எனக்கு நடக்கிறெதெல்லாம் தெரியும். 51 அதனால் நான் என் அப்பாவிற்கு லட்டரில் சீர் செய்வதற்குப் பதிலாகப் பணமாக அனுப்பினால் செளகரியமாக இருக்கும் என்று லட்டர் போட்டேன். அதற்குப் பதில் நான் நேரில் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனுக்கு லட்டர் போட்டு விட்டார். அடுத்த வாரம் என் அப்பா வந்து எல்லா செலவுகள் எல்லாம் தானே பார்த்துவிட்டு சீர் வரிசையும் செய்து விட்டு காரியங்களை முடித்து விட்டு என்னையும் என் புருஷனையும் திருமங்கலம் கொண்டு போய் விட்டுட்டு அவர் காரைக்குடி போய்விட்டார். 52 பிறகு மாமனாரும் கல்கத்தா நாத்தனார் மைத்துனர் எல்லாரும் திருமங்கலம் வந்தார். மாமியார் இறந்த சமயம் நான் தீர்த்தாமாடாமல் இருந்தேன். அது புரட்டாசி மாஸம்.

இப்படியிருக்கும்போது மாமனார் நான் ஊருக்குப் போகிறேன் என்ரு போய்விட்டார். நாங்கள் சின்னவர்களாக இருக்கும்போதே என் மாமியார் இறந்து விட்டார். அவருக்கு வயது ரொம்ப ஆகவில்லை. 43 வயது தான். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அதற்கு பிறகு என் புருஷன் வீட்டில் யாரும் இல்லை. நாத்தனர்கள் அவர் புருஷனோடு இருந்து விட்டார்கள். ஆனால் கடைசி நாத்தனாருடைய புருஷன் யார் என்றால் மெட்றாஸ்ஸில் ஹைக்கோர்ட் வரதாச்சாரியாரின் தம்பி. தஞ்சாவூரில் பெரிய வக்கீல். அவர் என் மாமியார் வைத்தியச்செலவு செய்திருக்கிறார். இப்படியிருக்கும் போது எனக்கு மாஸம் ஆகி, என்னை பிரஸவத்திற்கு என்னை என் அப்பா அழைத்துப் போய்விட்டார். ஆனால், என் மாமியாருக்கு மாசியம், ஜோதகும்பம், எல்லாவற்றிக்கும் சமையல் செய்ய என் அப்பா தளிகை செய்கிறவரை போட்டார். நான் பிரஸவத்திற்குப் போனபிறகு நம்ப ஜாதி மாமி செய்து போட்டாள். என் மாமியார் இறந்து (அடித்தல், திருத்தல்) பத்து மாஸம் ஆவதற்குள் எனக்குப் பிள்ளைக்குழந்தை பிறந்ததது. குழந்தை ரொம்பவும் சின்னக்குழந்தையாக இருந்ததது. மூன்று மாஸம் ஆனபிறகு தான் குழந்தை தெளிந்து விளையாடிற்று. 53

51. எல்லாம் பாத்துண்டு இருக்காளோல்லியோ!

52. அதான் தாத்தா!

53.. கொஞ்சம் ட்யூப் லைட்டோல்லியோ!

(வந்தனன்! வந்தனன்!)

அம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்

அம்மா சொல்படி ராஜூ: (சுழன்ற காலச்சக்கரம் ...) பகுதி 10: 26 10 2009

(வந்தே மாதரம்...)

... உடனே என் அப்பா என்னை திருமங்கலம் கொண்டு விட்டு விட்டு காரைக்குடி போய்விட்டார். நானும், கடசி நாத்தனாரும், என் புருஷனோடு இருந்தோம். அந்த சமயத்தில் என் மாமியாருடைய கடைசித்தங்கை பிள்ளைகள் இரண்டு பேர் 44 லீவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு வாரம் இருந்தார்கள்.

திடீரென்று, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்றும் லட்டர் போட்டு என்னை வரச்சொன்னார்(கள்). ஆனால், என் மாமியாருக்கு உதவி யார். என் நாத்தனார் இருந்தார். ஆனால், நாமு என்ற நாத்தனார் கல்யாணம் ஆகி கல்கத்தா போய்விட்டார். உடனே என் புருஷன் என்னை வந்திருக்கும் பையன்கள் கூட அனுப்பி வைத்தார். அவர்களுடன் நான் இன்னம்பூர் போனேன். மாமியாருக்கு நான் போனது ரொம்ப சந்தோஷம். ஆனால் மாமியார் உடம்பு சரியில்லாமல் படுக்கையாக இருந்தார். அவருக்கு உதவி 45 என் மாமனார் செய்து கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போது கடைசி நாத்தனாருக்கு தஞ்சாவூரிலிருந்து வரன் வந்தது. அதை முடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த வரன் இரண்டாம் தாரமாக இருந்தது. மாமியாருக்கு இஷ்டமில்லை. மாமனார் தான் முடிக்கலாம் என்று சொன்னார். மாமியாருக்கு உடம்பு வேறு சரியில்லை. வேறு எந்த வரனைப் பார்ப்பது என்று தஞ்சாவூர் வரனுக்கு 46 நிச்சியம் செய்து விட்டார். தஞ்சாவுரில் என் மாமனாருடைய அக்கா பிள்ளை ஆஸ்பத்திரியில் மானேஜராக 47 இருந்தார். அவர் அந்த வரனை கொடுத்தார். பிறகு என்ன செய்வது என்று தஞ்சாவூர் வரனுக்கே கடைசி நாத்தனாரை கல்யாணம் செய்து வைத்தது. ஆனால் என் மாமியாரால் உட்கார்ந்து கன்னிகாதானம் செய்யமுடியவில்லை. அதனால் என் புருஷனுக்கு லட்டர் 48 போட்டு அவர் வந்து அவரும் நானும் தான் கன்னிகாதானம் செய்தோம். பிறகு மாமியாரை மெட்(ரா)ஸ் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆனால், நானோ, என் புருஷனோ போகவில்லை. கல்யாண நாத்தனார் அவள் புருஷன் வீட்டில் இருந்து விட்டாள். அவள் என்ன செய்யமுடியும். இரண்டாம் தாரமாக கொடுத்தாயிற்று. மூத்தாளுக்கு நாலு பிள்ளைகள் 49 எல்லாம் சின்னக்குழந்தைகள். அதைப்பார்த்துகொள்ளவேண்டுமே என்று அம்மாவுக்கு உதவிக்குப் போகவில்லை. என் மைத்துனர், மாமனார், என் மாமியாருடைய «õÁ¡ 50, þÅ÷¸ள் ¾¡ý ±ý Á¡Á¢Â¡Õ¼ý ¯¾Å¢ìÌ ¦ÁðÈ¡Š §À¡É¡÷¸û. அப்போது எனக்கு 16 வயது. என் புருஷனுக்கு 21 வயது தான். ஆனால், நாங்கள் நாத்தனார் கல்யாணம் ஆனதும் நேராக திருமங்கலம் என் புருஷனுடன் போய்விட்டேன். ஆனால், மாமியார் சொன்னார், ‘நான் பிழைக்கமாட்டேன். என்ன செய்வது. நீ ஊருக்குப்போ’ என்று என் புருஷனிடம் சொல்லிவிட்டார். நாங்கள் ஊருக்குப்போய் என் மாமனாருக்கு அம்மாவிற்கு உடம்பு எப்படியிருக்கிறது என்று லட்டர் போட்டோம். அவர் உள்ளதை சொல்லாமல் தேவலை என்று லட்டர் போடுவார். ஆனால், என் புருஷனுக்கு கோபம் வரும். என்ன செய்வது? கவலைப்படுவார். என்னை என் அம்மாவாத்தில் வந்து அழைத்துப் போனார்கள். அங்கு கொஞ்ச நாள் இருக்கலாம் என்று நான் அங்கு இருந்தேன். நவராத்திரிக்குப் போனேன். அந்த சமயத்தில் திடீரென்று தந்தி வந்தது. என் மாமியார் இறந்துவிட்டார் என்று வந்தது.

(சுழன்ற காலச்சக்கரம்... )

44. அவர்களில் கோபால் சித்தியா தொடர்பில் இருக்கிறார். அவரது தந்தை மற்றொரு சிங்கம். அதுவும் அழகிய சிங்கம். சித்தியா கடற்படை, விமானப்படை, காலாட்படை எல்லாவற்றிலும் பணி புரிந்து, பிறகு போலீஸ். மூன்று தலைமுறை உயர் போலீஸ் அதிகாரிகள், அந்த திங்களூர் குடும்பம். கோபால் தலைமையில், சடகோபன், கண்ணன், கோபால் II, நான் ஆகியோர், ஆடுதுறை பாட்டி வீட்டில் செய்த ரகளைகளும் கின்னஸ் புத்தகத்தகுதி பெற்றவை. வீரசோழனாற்றின் பாலத்தில் ரயில் வண்டியைக்கூட நிறுத்தியிருக்கிறோம்! பாடி முன்னால் பெட்டிப்பாமு என்பதால், அவர் புகார்களை புறக்கணிப்பார்! சித்தியா தான் முதலில் சுய சரிதம் எழுதியவர், அதன் என்னுரையில், “... என் அண்ணன் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.&ஏ.எஸ் அதிகாரியுமான திரு. எஸ்.செளந்தரரஜன் அவர்கள் ஆங்கில புலமை பெற்ற இனிய பண்பாளர். ஆங்கிலத்தில் நான் எழுதிய பக்கங்களை முழுதுமாகப் படித்து பிழை திருத்தி தந்தார். ஓய்வு பெற்றாலும் பல்வேறு பணிகளின் அழுத்ததிற்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிய அவரது பண்புக்கு என் நன்றி.... “வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி ! தற்காலம், ஒரு அமைப்புக்கு நான் போஷகர். அவர் உப தலைவர்.

45. இப்படி அப்படி இல்லை. அணுக்கத்தொண்டு. துணி தோய்த்து, வீடு பெருக்கி, சமையல் செய்து ஊழியனாக செயல்பட்டாராம். நாமு அத்தை சொல்வாள். இதுவல்லவோ மாறாக்காதல்!

46. அவர் பெரிய வக்கீல். அதுவும் வறுமையால் முந்திய தலைமுறையில் புலன் பெயர்ந்த குடும்பம். சகோதரர்கள் சுயமுயற்சியால் முன் வந்து உயர் பதவிகள் வகித்தனர். ஒருவருக்கு ‘ஸர்’ விருது கூட.. தற்கால தலைமுறையுடன் தொடர்பு உள்ளது.

47. அவர் தான் ‘அத்தான்’. அவருக்குக் கோபம் வந்தால், அண்டமெல்லாம் கிடுகிடுக்கும், மகன் ‘தம்பி’ யைத்தவிர! சமீபத்தில், அவனது சதாபிகேஷேத்துக்குப் போயிருந்தேன். இன்னம்பூருக்கும், ஈராக்கின் பாஸ்ரா நகருக்கும் ஏதொ ஒரு தொடர்பு! தேசிகன் என்ற பெரியவர், முதல் உலக மகா யுத்தத்தின்போது, அங்கு ராணுவப்பணி புரிந்தார். இரண்டாம் யுத்ததில், ‘அத்தான்’. தற்காலம், என் திருமகன்!

48. அந்த லட்டரைப் படித்து என் தந்தை அழுதாராம்.

49. எல்லாரும் படிப்பில் புலி. உயர் பதவிகள் வகித்தார்கள். தலைமகனை நாங்கள் ‘பெரியவர்’ என்று பவ்யமாகக் கூப்பிடுவோம். அவரது மகனும் நானும் இன்றளவுக்கு நண்பர்கள்.

50. இவர் தான் ஆடுதுறைப்பாட்டி. அறியாப்பருவத்தில், நான் அவரிடம், ‘உன் பெண் செத்துவிட்டாளே. ¿£ ²ý º¡¸Å¢ø¨Ä’ ±ýÚ §¸ð§¼É¡õ! (²§¾¡ …£É¢Â¡Ã¢ðÊ ¸½ìÌ!) ¦º¡øÄ¢î¦º¡øÄ¢ Á¡öóÐ §À¡வாள்.

அம்மா சொல்படி ராஜூ: 9: வந்தே மாதரம்

அம்மா சொல்படி ராஜூ: (வந்தே மாதரம்...) பகுதி 9: 25 10 2009

(ஆனா பின்ன இருக்காதா...? )

... மறுபடியும், என் மாமனார் லட்டர் போட்டுவிட்டார். உடனே பெண்ணைக் கொண்டு போய் விடுங்கள் என்று எழுதிவிட்டார். அப்பா உடனே என்னையும் அம்மாவையும் திருமங்கலம் அனுப்பி வைத்தார். ஆனால், அம்மா உடனே காரைக்குடி வந்து விட்டாள். நானும் நாத்தனாரும் இருந்தோம் அந்த சமயத்தில் நான் பெரியவளாகிவிட்டேன். (அடித்தல் திருத்தல்) உடனே இன்னம்பூருக்கு தந்தி கொடுத்து, காரைக்குடிக்கும் தந்தி கொடுத்து என் மாமியாரும் என் அம்மாவும் வந்து அந்த ஃபன்க்ஷ்னை (function) செய்துவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு என் அம்மாவுடன் காரைக்குடி போய்விட்டேன். பிறகு ஆறு மாஸம் ஆனபிறகு என் மாமியார் பெண்ணை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து அழைக்கப்போகிறோம். அதற்கு முன்னாடி லட்டர் போடுகிறோம்; நீங்கள் அதற்கு தகுந்ததாப்போல் வரலாம் என்று லட்டர் போட்டார். என் மாமானார் தேதியும் தெரிவித்தார். அதற்குள் எனக்குத் தலைதீபாவளி வந்தது. அதற்கு என் மாமானார் எல்லாருக்கும் என் அப்பா லட்டர் போட்டார். அதே சமயத்தில் என் அக்காவிற்கு மூன்றாவது பெண் பிறந்திருந்தது. ஆனால், என் அக்காவிக்கு என் அப்பா வீட்டில் தான் குழந்தை பிறந்தது. அப்போது எல்லாம் என் அத்திம்பேருக்குக் கோபம். அவர் ஸ்வீகாரம் போனதால், அவருக்கு சொத்து உண்டு. அதின் பேரில் கடன் வாங்கு (கி) சைக்கிள் கடை வைத்து நடத்தினார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். எனக்கு நினைவு இருக்கிறது. அக்காவுக்கு சாமான்கள் எல்லாம் நான் தான் வாங்கி தருவேன். இப்படியிருக்கும் போது என்னை நாள் பார்த்துக்கொண்டு விடும்படி லட்டர் வந்தததை பார்த்து, என்னைக் கொண்டுவிட ஏற்பாடு நடந்தது. எனக்கு வெள்ளிப்பாத்திரம், ஈயம், இலும்பு, பித்தளை உள்பட புடவை, மாப்பிள்ளைக்கும் பட்டு, வெல்வெட் மெத்தை, தலைகாணி உள்பட எல்லாம் தைத்து, எல்லாச்சீர்களுடன் எல் லாரும் இன்னம்பூர் போய்ச் சேர்ந்தோம். அந்த ஃபன்ஷனும் நன்றாக நடந்ததது...44

(வந்தே மாதரம்,,,)

44. வெள்ளந்தியாக இருந்தாலும், என்னே நுட்பம் ஒரு ஆங்கிலச்சொல்லை ரத்னமாக பொதித்து !

“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே ... அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே ... அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே ...இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி, என்

வாயுற வாழ்த்தேனோ ...இதை

‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’

என்று வணங்கேனோ”

- மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

(வந்தே மாதரம்...)

அம்மா சொல்படி ராஜூ: 8: இருக்காதா?

அம்மா சொல்படி ராஜூ: (ஆனா பின்ன இருக்காதா... ?) பகுதி 8: 24 10 2009

(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)

... எனக்கு மூன்று நாத்தனார். பெரிய நாத்தனாருக்கு37 ஒரு பெண்38 அது என் கல்யாணத்தின் போது வயது 3. என் கல்யாண சமயத்தில் அந்த நாத்தனார் இரண்டாவது உண்டாயிருந்து பிறகு பிள்ளை39 பிறந்தது. மற்ற இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவில்லை. என் வயதுக்கு ஒரு வயது பெ(ரி)யவர் ஒருவர்40. மற்றவருக்கு41 என் வயதை விட ஒரு வயது சின்னவர். நான் கல்யாணம் ஆகிப் போனபோது அவர்களுடன் ஏதாவது வேலை செய்வேன். என்னை மாமியார் ரொம்ப அழகாய் இருப்பார். குணமும் அப்படி. என்னை

ஒரு இடத்திற்கும் என் நாத்தனாரோடு (?)42 போகவிடமாட்டர். அது மாதுரி என்னை 16 வயது வரையில் நாள்கிழமைகளில் என்னை கொண்டுவந்து விடும்படி மாமனார் லட்டர் போடுவார், என்ன செய்வது என்று என் அப்பாவே கொண்டு விட்டுட்டு வருவார். ஆனால், என் புருஷனை சாத்தூரிலிருந்து, திருமங்கலம் என்கிற ஊர். மதுரைக்கு பக்கத்திலிருக்கிறது. அங்கு மாத்தல் ஆகி வந்து விட்டார். அங்கும் என்னை வரும்படி லட்டர் வரும். அப்போது என் அப்பா தான் கொண்டு விடுவார். எனக்கு ஒரு தம்பி இருந்தும், அவன் செய்யமாட்டான். அதனால் தான் என் அப்பா தான் கொண்டு விடுவார். கொஞ்ச நாள் ஆனதும், என் மாமியார் பிள்ளை சாப்பட்டுக்குக் கஷ்டப்படவேண்டாம் என்று தானும் மற்ற இரண்டு பெண்களும், மச்சினர் உள்பட எல்லாரும் திருமங்கலம் வந்து குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்போது, நானும் அவர்களோடு இருக்கவேண்டும் என்று வரும்படி லட்டர் (வரும்). என்னையும் அங்கு கொண்டு விடுவார்கள். அப்படி அங்கு இருக்கும்போது, மாமியார் நாமு என்ற பெண்ணுக்குக்கு ஜாதகம் வந்திருப்பதாகவும், அவளுக்குக் கல்யாணம் செய்யலாம் என்று இன்னம்பூருக்குப் போய்விட்டார். கடைசிப்பெண்னை பிள்ளைக்கு சமையல் செய்து போகும்படி வைத்துவிட்டுப்போனார். ஆனால், திருமங்கலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லாரும் தெலுங்கர்கள். ரொம்ப நல்லவர்கள். அவர்களிடம் பெண்ணைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப்போனார். அந்த சமயம் நான் அப்பாவாத்தில் இருந்தேன். இப்படியிருக்கும்போது, எனக்கு கல்யாணம் ஆகி முதல் வருஷம் பொங்கலுக்கு வரும்படி லட்டர் வந்த்தது. என்ன செய்வது. சீர் செய்து கொண்டு விடவேண்டுமே என்று(ம்), யார் போய் கொண்டு விடுவது என்று யோஜனையாக இருந்ததது. என் பெரியம்மாவிற்கு லட்டர் போட்டு வரும்படி எழுதி, அவள் வந்தாள். அவளிடம் என் அப்பா சீர்வரிசையுடன் ருக்மிணியை கொண்டு விடவேண்டும். உன் யோஜனை என்ன என்று கேட்டார். ஆனால், என் அப்பா சொன்னார்; அவளுக்கு வைரத்தோடு போடலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய். அதற்கு அவள் சொன்னாள். அவளைக் கொடுத்த இடம் சாதாரண இடமமாக இருப்பதால், தோடு இப்போது வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கு அவளுக்குப் பாத்திரமாக வாங்கிக் கொடுப்பது தான் நல்லது என்று சொன்னாள். அவள் சொன்னபடி பொங்கல் சீர் என்று 5 பவுனுக்கு கழுத்துக்கு அட்டிகை பதக்கம் உள்பட செய்து, ஏதோ பித்தளைபாத்திரம், பொங்கலுக்கு வெண்கலப்பானை எல்லாம் கும்பகோணத்தில் வாங்கி என் பெரியம்மா தான் கொண்டு விட்டாள். நான் அங்கு ஒரு மாஸம் இருந்தேன், அப்போது தான் என் நாத்தனார் நாமுவிற்குக் கல்யாணம் நடந்ததது. அந்த மாப்பிள்ளையும்43 கும்பகோணம் தான். நான் கல்யாணத்திற்கு இருந்தேன். அதே சமயத்தில் என் தம்பிக்கும் கல்யாணம் என்றும், என்னை வரும்படி என் அப்பா எழுதியிருந்தார்.

­­­­­­­­­­­­­­­ அதனால், நாத்தனார் கல்யாணத்திற்கு என் புருஷன் வந்திருந்தார். கல்யாணம் குடவாசலில் நடந்ததது. நான் என் அப்பா அவர்களுடன் காரைக்குடி போய்விட்டேன். கல்யாணம் முடிந்ததும் நான், என் கடைசி நாத்தனார், என் புருஷன் எல்லாரும் (அடித்தல், திருத்தல்) போனோம். நாத்தனர், என் புருஷன் இருவரும் இன்னம்பூருக்கு போய்விட்டார்கள். என் புருஷன் திருமங்கலம் போய்விட்டார். இப்படி நாளாக எனக்கு வயது 15 தாண்டிவிட்டது. பெரிய ஆளாகவில்லை. இதனால், என் அப்பா, அம்மா கவலையாக இருந்தார்கள். அதே சமயத்தில் ஒரு லட்டர் வந்தது. என்னவென்றால், திருமங்கலத்தில் என் பெண்ணைத் தனியாக பிள்ளைக்கு சமையல் செய்வதற்கும், பிள்ளை ஓட்டலில் சாப்பிடவேண்டாம் என்று பெண்ணை அனுப்பியிருக்கிறேன். பெண் தனியாக இருப்பதால், உங்கள் பெண்ணையும் அங்கு அனுப்பி வையுங்கள் என்று லட்டர் என் அப்பாவிற்கு வந்தது. அப்பா லட்டரைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று என் அம்மாவிடம் சொன்னார். அதற்கு, அம்மா பெண் பெரிய ஆளாகிற சமயம் என்ன செய்வது என்று சொல்லிக்கொண்டிருந்தார்...

37. சிரித்தே இன்னல்களை சமாளிப்பாள், பெரிய அத்தை . புகுந்த இடம் ரொம்ப ஆச்சாரம்.

38. இவளைப் போன்ற அழகியை நான் கண்டதில்லை. அறியாப்பருவத்திலே, அவள் மேல் எனக்கு கைக்கிளை. நான் அவளை துரத்துவேன்; அவள் என்னை விரட்டுவாள். கல்யாணம் வேறு ஆயிடுத்து.. சமீபத்தில் இது பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்’

39. எதிர்நீச்சல் மன்னன். நான் அவனை ‘ஜகதலப்பிரதாபன்’ என்று கூப்பிடுவேன்.

40. இவர் பெயர் நாமு. சிறந்த பரோபகாரி.. அதர்மம் பொறுக்கமாட்டார். என் மனைவி இவரை மிகவும் மதித்தாள்.

41. இளம் விதவை. மற்றவர்களுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எனது தாய், தந்தை, ஆசான் எல்லாம் இந்த அத்தை தான். அவரை பற்றிய சிறு கட்டுரை, ஒரு அனுபந்தத்தில்.

42. நாத்தனார் துணையில்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்று கூறுகிறார், என நினைக்கிறேன். பாட்டி கண்ஜாடையிலேயே பேசுவாளாம். பலவிதங்களில் அம்மாவுக்கு பாதுகாப்பாக இருந்தாளாம்.

43. அவர் ஒரு புதிர்.

(ஆனா பின்ன இருக்காதா...? )

அம்மா சொல்படி ராஜூ: ருக்மிணி கல்யாணம்

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 7: 23 10 2009

(என்னடாது ...!)

கடைசியில் மாப்பிள்ளை வந்துவிட்டார்31. நிற்க. 32

மாப்பிள்ளையோடு தம்பிக்கும்33 பூணூல் போட்டார்கள். ஆனால் இதில் ஆச்சரியம் (என்ன) என்றால் என்னுடைய அக்கா இந்த சமயம் மூன்றாவது குழந்தை உண்டாயிருந்தாள். ஆனால், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தாள்.அவளுடைய புருஷன் ஒரு மாதிரியான குணம்.34 பிறந்தவீட்டுக்கு அனுப்பமாட்டார். இதில் என் கல்யாணம் என்று தெரிந்த உடன், அக்காவை அவருடைய அம்மா வீட்டிற்கு கொண்டு போய் விட்டார். அவள் வராமல் எப்படிக் கல்யாணம் நடப்பது என்று என் அப்பாவிற்கு (கவலை). வெள்ளை தோடு, பட்டுப்புடவை, என் அத்திம்பேருக்கு வேஷ்டி, வெள்ளிச்சொம்பு, குளவாத்திரம்35 எல்லாம் செய்து, என் அப்பாவுடைய பெரியப்பா பிள்ளையை போய் என் அக்காவை அழைத்து வரும்படி என் அப்பா அவரை அனுப்பி வைத்தார். ஆனால், என் அக்கா வந்தது எப்போது என்றால் எனக்கு கழுத்தில் தாலி கட்டின சமயம். எட்டிப்பார்த்து விட்டு உடனே அக்கா அரியக்குடிக்கு போய்விட்டாள். என் கல்யாணத்திற்கு சொந்த மனுஷ்யர்கள் யாரும் இல்லை. ஆனால், புதுக்கோட்டையில் என் அப்பாவுடைய பெரியப்பா பெண்36 ஒருத்தி இருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தாள். ஆனால், கல்யாணம் ரொம்ப நன்றாக நடந்தது. எல்லாம் முடிந்து என்னை மாமியார் அழைத்துப் போனார். நானும் பயப்படாமல் போனேன்.

31. அப்பா ஆணழகன். கட்டுக்குடுமி. சிவந்த மேனி.. கட்டு மஸ்து . இளகிய மனது.. பட்டப்பா என்று உகந்த செல்லப்பெயர். ‘சட்’னு கோபம் வந்துடும். அவரது போஃட்டோக்களை பதிவு செய்து இருக்கிறேன்.

32. நிற்கறதாவாது! உப செய்திகள்:

ü முகூர்த்த்தின் போது, சிறுமியான ருக்மிணி, புரோகிதர் சொல்லுக்கு கட்டுப்படாமல் வேடிக்கைப் பார்க்க, கோபத்துடன், அப்பா அவரைத்தூக்கி வைத்தாராம். தாத்தா அதிர்ந்துவிட்டாராம்.!

ü பஸ் லேட்! அப்பா குதியா குதிச்சாராம்! வி..ஐ.பி. கெஸ்ட் அக்னிஹோத்ரம் ஸ்ரீ இராமானுஜ தாத்தாச்சாரியர் எங்கிட்டெ சொன்னார். ’’அவனுக்கு அப்பா கிட்ட பயம். அவருக்கு சம்பந்திட்ட பேச லஜ்ஜை. சம்பந்திக்கு நிஜமான கவலை. குறுக்கெ நெடுக்கெ ஓடின கிருஷ்ணன் தூது நான்.” ஆச்சாரியன் சார்பிலே வந்திருந்தாலும், மாப்பிள்ளை தோழன் மாதிரி.. அவரும் பால்யம் தானே!

ü சின்ன அத்தை குட்டிப்பொண்ணு. ஏதோ விஷமம். அம்மாவோட அப்பா ஒரு குட்டு குட்டிப்பிட்டார். அவ பண்ண ஆகாத்தியம் தாங்காம, அவர் மன்னிப்பு கேட்டாராம். தாத்தா கேட்ட முதல் & கடைசி மன்னிப்பு அதுவா தான் இருந்திருக்கும்.

ü

.

33. அண்ணனுக்கு தம்பி, முன்கோபத்தில் ஒரு படி மேல். ரோஷத்தில் இரண்டு படி. படிப்பை உதறி,ட்டு தன் வாழ்க்கையை பிற்காலம் திறம்பட அமைத்து செல்வம் சேர்த்தார், புனே சென்று . என்னை வாஞ்சையுடன் வளர்த்தவர். தோளில் சுமந்து, வித்யாரம்பம் செய்தவர், செக்கானூரணியில். நன்றாக பாடம் சொல்லிக்கொடுப்பார். இவர் தூண்ட, கொங்கணேஸ்வரர் வித்யாசாலையின் பாலு சார் சொல்லிக்கொடுத்தபடி. ஏழு வயதில், தஞ்சை திலகர் மைதானத்தில் பொதுமேடை ஏறினேன், பாரதியார் புகழ் பாட.. பாரதியின் பகவத் கீதை பரிசு. இன்றும் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். ஓரளவு தொடர்பு இருக்கிறது, சந்ததியுடன்.

34. முசுடு என்று பொருள் கொள்க. ஆனால், யாவரையும் கவர்ந்து விடுவார். சுயநலம் அறவே கிடையாது.. என் தந்தை அவரை கண்டு ஓடி ஒளிவார். ஏனென்றால், நடுத்தெருவில் அவரிடம் மாட்டிக்கொண்டால், எதிரில் உள்ளவரின் சட்டை பொத்தானைப் பிடித்துக்கொண்டு, சில மணி நேரங்கள், யோகக்ஷேமம் விசாரிப்பார். வண்டிகள் ஓரம் கட்டும். ஹிட்லர், நம்மாழ்வார், ஃபோர்ட் கார், கறிகாய் விலை: எல்லாரும் வருவார்கள். அவர் ரேஞ்ச் அப்படி. எங்கள் பெரியண்ணாவுக்கு இணை அவரே.

35. வைஷ்ணவ டம்ளர்.

36. பின்னணியும் முன்னணியும், பிறகு.

(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)

அம்மா சொல்படி ராஜூ: பராக்! பராக்!

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 6: 22 10 2009

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்!)

அவர்களும் ஜாதகம் பொருத்தம் லட்டர் போட்டுவிட்டு, பையனை பெண்ணைப் பார்க்கும்படி பையனுக்கு லட்டர் போட்டிருக்கிறேன். அதன்படி பையன் வந்து பெண்ணைப் பார்த்து லட்டர் போடுவான். அதற்கு மேல் பேசிக்கொள்ளலாம். அதன்படி பையன் பெண்ணைப் பார்த்துப்போய் (?) அவர் அப்பாவிற்கு லட்டர் போட்டானாம். என்னவென்றால், பெண் நன்றாகயிருக்கிறது. 22 ஆனால், அம்மைதழும்பு இருக்கிறது என்று எழுதியிருந்தானாம். அதற்கு பையனுடைய அம்மா 23 பரவாயில்லை என்றும் லட்டர் பிள்ளைக்கு எழுதிவிட்டாராம். அந்த சமயத்தில் என் அக்காவுக்கு இரண்டாவது குழைந்தை பிறந்து இறந்துவிட்டது. மறுபடியும் இன்னம்பூர் 24 சம்பந்திக்கு25 என் அப்பா லட்டர் போட்டு, பையன் பெண்ணை பார்த்துவிட்டு போனான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அதன்படி செய்கிறேன். இந்த லட்டருக்கு உடனே லட்டர் போடும்படி ஒரு லட்டர் போட்டார்? அவர்கள் என்ன எழுதினார் என்றால் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தில் வந்தால் நாங்கள் பெண் பார்க்க செளகரியம் என்று லட்டர் போட்டுவிட்டார்.

அதனால் அப்பா என்ன செய்வது என்று கவலை இருந்தாலும், கும்பகோணம் தன் மாமா பிள்ளை ஆராவமுதுவிற்கு லட்டர் போட்டார். இன்னம்பூரிலிருந்து சம்பந்தி சுவாமிகள் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தி/ர்கு வந்தால் நாங்களும் பார்க்கவேண்டும் என்று சொல்லி லட்டர் போட்டிருக்கிறார். அதனால் உன் வீட்டில் தங்கி (அடித்தல் திருத்தல்) பெண் பார்க்க செய்யலாம் என்று நினைக்கிறேன். அதனால் உனக்கு லட்டர் போட்டிருக்கிறேன். நீ உடனே எனக்கு பதில் போடு.; எதிர்பார்க்கிறேன் என்று அவருக்கு என் அப்பா லட்டர் போட்டார். அவர் உடன் லட்டர், தாராளமாக வரலாம்; எப்போது வருவீர்கள் என்று எழுது. (நா)ங்கள் நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று பதில் போட்டுவிட்டார். உடனே என் அப்பா, அம்மா, நான், தம்பி எல்லோரும் கும்பகோணம் போய் அவர்கள் வீட்டில் தங்கினோம். மறுநாள் சாயங்காலம் இன்னம்பூரிலிருந்து பையன் அப்பா, அம்மா, மற்ற எல்லாரும் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். நாங்கள் மறுநாள் திருப்பதி போய் தம்பிக்கு பூணூல் போட்டுக்கொண்டு26 கும்பகோணம் (போய்) முன்போல் அவர்கள் வீட்டில் தங்கி என் கல்யாணத்தை நிச்சியம் செய்தார்கள். சம்பந்தி அவர்கள் கையில் வரதக்ஷிணை என்று 500 ரூபாய் கொடுத்து மற்றதெல்லாம் என் அப்பா செய்வதாக சொல்லிவிட்டார். மறுநாள் கடைக்குப் போய் பித்தளை, வெள்ளிப்பாத்திரம், நகைகள், திருமாங்கல்யம்27உள்பட வாங்கிகொண்டு நேராக காரைக்குடி வந்தோம். அந்த சமயத்தில் உள்ளூரில் இருந்த அத்தை மாமியார் இறந்துவிட்டார் என்று என் அத்தை கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. ஆனால் எனக்கு விபவ வருஷம் ஆனி மாஸம் 8ம்தேதி 28 முஹூர்த்தம் வைத்தார்கள்.

அதற்கு கல்யாண பக்ஷணம் செய்வதற்கு, என் அப்பாவுடைய தங்கையும், பாட்டியும் தான் செய்தார். ஆனால், என் அம்மாவுடைய தங்கை சிறிய வயதில் விடோவாகப் (widow) போய்விட்டாள். ஆனால், அவளுக்கு நாங்கள் தான் குழந்தை. அதனால், அவள் தான் என்னுடைய கல்யாணங்களுக்கு 29 உதவி செய்வாள். கல்யாணம் நெருங்கிவிட்டது. ஜான்வாஸத்தன்று 30 இன்னம்பூரிலிருந்து எல்லாரும் வந்து விட்டார்கள். ஆனால், மாப்பிள்ளை ஜான்வாஸத்திற்கு வருவது லேட்டாகி விட்டது. அதற்குள் என் அப்பாவிற்கு கவலையாப் போய்விட்டு...

22. அன்றும், இன்றும் பெண் என்றால் அஃறிணை தான்! இத்தனைக்கும், பெண்களை பன்மையில் குறிக்கும் பண்பை, சேக்கிழாரே துவக்கி வைத்தார்.

23. இவரை பண்பின் சிகரம் என்று ருக்மிணி சொல்வார். கண்ஜாடையிலேயே குறிப்புணர்த்துவாராம். ருக்மிணிக்கு பலவிதங்களில் பாதுகாப்பு அளித்தாராம். நான் பிறக்கும் முன் புற்றுநோயால் இறந்துவிட்டார். போஃட்டோ உள்ளது. பதித்திருக்கிறேன்.

24. இன்னம்பூர் கும்பகோணத்திலிருந்து ஸ்வாமிமலை போகும் வழியில் உள்ளது. பெருமாள் கோயில் சிறியது; எழில் மிகுந்தது. சிவன் கோயில் பாடஸ்தலம். கஜபிருஷ்ட விமானம் சிறப்பு. ஹிந்து இதழ் குடும்பமும், இந்த மண் தான்.

  1. இவர் தான் ‘இன்னம்பூர் சிங்கம்’. இவரை நான் நன்கு அறிந்திருந்ததால், தனிக்கட்டுரை

அனுபந்தத்தில். ஊர் பட்டாமணியம். வைத்தது சட்டம் என்று வாழ்ந்த தடாலடி, ஆனால், ஜாலி மனிதர். இந்த நூலின் கதாநாயகர் இவரை விட வயதில் பெரியவர். அவர் முன்னிலையில் இவர் அடக்கி வாசிப்பது போல் பாவ்லா காட்டுவார். மற்றபடி ‘டோண்ட் கேர்’ மாஸ்டர். இந்த வம்சாவளியில் இன்னொரு ‘டோண்ட் கேர்’ மாஸ்டரும்னு பேசிப்பா இவர் பைய்ட் பைப்பைர்; செல்லும் இடமில்லாம், ஒரு சிறுவர் குழாம் தொடரும். தீவிர பிரிட்டீஷ் விசுவாசி.. ஆனால், மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, குழந்தை போல் விக்கி விக்கி அழுதார்.

  1. திட்டம் போடுவதிலும், சிக்கனத்திலும், தாத்தாவிற்கு ஈடு, இணை கிடையாது .

  1. நாண்
  2. என்னே ஞாபகசக்தி! என்னே தமிழ் நடை! யாராவது இங்கிலீஷ் தேதி சொல்லுங்களேன்.

  1. சுப காரியங்கள், லெளகிகம், பக்ஷணங்கள், மேற்பார்வை எல்லாம், அவருக்கு அத்துபடி. எப்படி தான் அந்த காலத்து மனிதர்கள் ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருந்தார்களோ!

  1. திருமணத்திற்கு முந்திய நாள். மறுபடியும் நிச்ச்சியதார்த்தம், ஊர்வலம் எல்லாம் அன்று தான். விமரிசையாக, மேளதாளங்கள், பேண்டு வாத்தியம், காஸ்லைட், வெடி, மத்தாப்பு, ஆண்கள் முன்னாலும், பெண்கள் பின்னாலும். கோலாஹலம் தான். மாப்பிள்ளையை ஊருக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு. ஸைடு அடிக்கறத்துக்கும்!

(என்னடாது ...!)

அம்மா சொல்படி ராஜூ: கல்யாணம் வந்த்து

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 5. 21 10 2009

(நகரத்தார் வாழ்க)

நாங்கள் ஒருவீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருந்தோம். அதே சமயத்தில் என் அக்கா வேறு குடுத்தினம் நடக்கும்படி செய்து கொண்டார்களாம். இந்த சமயத்தில் என் தம்பிக்கு பெரிய அம்மை போட்டியிருந்தது. அப்போது நானும் என் தம்பியும் சிவன் கோவில் தெருவில் இருந்த ஹேட்ஸ்கூலில் நாங்கள் படித்தேன். என் தம்பியும் அங்கு தான் படித்தான். அந்த நாளில் ஐந்து க்ளாஸுக்கு மேல் தான் இங்கிலீஷ். நான் ஏதொ 8 வரையில் படித்தேன். தம்பிக்கு அம்மை போட்டினதால், நான் வீட்டிற்கு போகமாட்டேன். எனக்கு அம்மை போட்டவில்லை. அதனால் என் அத்தை அதே தெருவில் இருந்தாள். அங்கு போய் சாப்பிடுவேன். இப்படியிருக்கும் (போது) திடீரென்று எனக்கு அம்மை போட்டுவிட்டது. என் அப்பாவும் இல்லை. அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாளாம். என்ன செய்வது. நானும் தம்பியும் அம்மையில் பிழைக்கமாட்டோம் என்று இருந்தாளாம், என் அம்மா. ஏதோ மகமாயி அருளால் இருவரும் உயிர் பிழைத்து எழுந்தோம். அம்மை போட்டின (து) நினைவு இருக்கிறது. நான் அம்மை வேகத்தில் பட்டுப்பாவாடை வேணும் என்று கேட்டேனாம். எங்களுக்கு மூன்று ஜலம் தலைக்கு விட்ட பிறகு என் அப்பாவுக்கு லெட்டர் போடும்படி என் அம்மா சொன்னாளாம். லட்டர் கிடைத்துவிட்டது. அந்தக்கணக்கும் முடிந்ததாம். உடனே என் அப்பா மெட்றாஸ்ஸில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கிவந்தார். அதை உடனே தைத்து நான் உடுத்திக்கொண்டேன்.15 அப்போது எனக்கு 10 வயது. ஆனால், அக்காவைக்கொடுத்த மாப்பிள்ளை அவர்கள் உறவில் ஸ்வீகாரம் போனவர்? 16

என் பெரியப்பா தஞ்சாவூருக்குப் போனவர், திடீரென்று என் வீட்டை விற்கப்போகிறேன். நீ வாங்கிகொள் என்று சொன்னாராம். அவருக்குக் காரைக்குடியில் மேல ஊரணீக்கரை மேல் ஒரு வீடு இருக்கிறது. அதைத்தான் வாங்கும்படி சொன்னாராம். உடனே என் அப்பா சரி என்று சொல்லிவிட்டாராம். தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம், நான் வீடு வாங்கப்போகிறேன் என்றும், அதற்கு பண உதவி நீங்கள் தான் செய்யவேண்டும் என்று சொன்னதின் பேரில், அப்பாவிற்கு அந்தச் செட்டியார் 1000 ரூபாய் கொடுத்தாராம். அதை வாங்கி பெரியப்பாவிடம் கொடுத்து வீட்டின் பேரில் பத்திரம் எழுதி வீட்டை வாங்கிக்கொண்டார்.

நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து விட்டோம். எங்களுக்கு அம்மை போட்டினபோது என் தம்பிக்கு திருப்பதியில் பூணூல் போடுகிறேன் என்று என் அம்மா வேண்டிக்கொண்டாளாம். இதற்கிடையில் என் அக்காவுக்கு தலைக்குழந்தை இறந்து போயிற்று. அப்பாவுக்கு செட்டியார் வீட்டில் நல்ல பெயர். அவர்கள் கார் வாங்கி, அதில் வெள்ளித்தகடு போட்டு இருக்கும். அந்தக்காரில் தான் என் அப்பா போவார். 17 நான் ஐந்தாவது பெண்ணாம். அதனால் எனக்கு 10 வயது ஆவதற்குள் நல்ல காலம் என்று என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்? இப்படியிருக்கும் போது தான் எனக்குக் கல்யாணம் செய்யவேணும் என்று என் அப்பா நினைத்தார்.

ஆனால், அரியக்குடி என்ற ஊரில் என் பெரி (ய) அத்தை இருந்தாள். எனக்கு நினைவு இருக்கிறது. அந்த அத்தைக்கு ஒரு பிள்ளை தான்.18 அதனால், அத்தை என் அப்பாவிடம் வந்து உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடு என்று கேட்டாள். அதற்கு அப்பா சொன்னது என்னவென்றால், வயது அதிகம், வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதற்குள் என் அத்தை வந்து என் மைத்துனர் பிள்ளை இருக்கிறான். நல்ல சம்பாத்தியம். நல்ல வேலை பார்க்கிறான். அவனுக்குக் கொடு என்றாள். அதையும் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், பையனுக்கு மூலா நக்ஷத்திரம் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் திருவித்யானம்19, கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். அவர் வந்து என் அப்பாவிடம் ஒரு ஜாதகம் வந்திருக்கிறது. அதை உன் பெண்ணுக்கு பார்க்கலாம் என்று சொன்னாராம். என் அப்பா அந்த ஜாதகத்தைப் பார்த்தாராம். ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது என்று தெரிந்ததும் என்ன செய்வது என்று யோசித்துப்பார்க்கும் போது, கும்பகோணத்தில் ரெட்டிராயர் குளத்தெருவில், என் அப்பாவுடைய மாமா பிள்ளை இருந்தார். அவருடைய பெயர் ஆராவமுது. 20 அவருக்கு லட்டர் (போட்டு) கேட்டார்களாம். அவர் வந்து என் தம்பி பெண்ணுக்குத் தான் பார்த்தது. பொருத்தம் இல்லை என்பதால் உனக்கு அனுப்பும்படி என் தம்பி சக்கரவர்த்தி எழுதியிருந்தான். அதனால் உடனே உனக்கு அனுப்பினேன். அவர்கள் நல்லவர்கள் தாம். சக்கரவர்த்தி சாத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கிறான். அங்கு தான் அந்த பையனும் இருக்கிறான். பையன் நன்றாக இருப்பான். வேலை நல்ல கெவர்மெண்ட் வேலை. அதனால் சாத்தூருக்கு லட்டர் போட்டு தெரிந்து கொள் என்று அந்த ஆராவமுது லட்டர் போட்டுவிட்டாராம். பிள்ளைவீட்டுக்காரர்களும் ஜாதகம் பொருத்தம் என்றும் லட்டர் போட்டுவிட்டார். அதனால், என் அப்பா உடனே சாத்தூருக்குப் போய் பிள்ளையைப் பார்த்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஊருக்கு வந்து விட்டார். என் அம்மாவிடம் பையன் நன்றாக இருக்கிறான், எனக்கு பிடித்து விட்டது; அவர்கள் பூர்வீக ஊர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறதாம். அவர்களுக்கு லட்டர் போட்டு கேட்கிறேன் என்று சொன்னாராம். அதன்படி அவர்களுக்கு என் (அப்பா) லெட்டர் போட்டாராம். 21

15. இதற்குப் பிறகு, ருக்மிணி, தனக்கென்று ஒரு ஆசை வைத்ததாக, நான் அறியேன்.

16. நாங்கள் அறியாத செய்தி.. சில செய்திகள் தொடர்பில்லாமல் இருந்தாலும், இடம், பொருள், ஏவல் பொருத்தி புரிந்து கொள்ளவேண்டும். கேள்விக்குறி ருக்மிணியோடது..

17. நகரத்தார் நாகரீகத்தார் அல்லவா!

18. இவர் என் ஃப்ரெண்ட்., ஹீரோ, அனுகூலசத்ரு. ஒரு நாள் அரியக்குடி உத்ஸவத்தின் போது எனக்கு பிடிக்காததை இலையில் போட்டார். சட்ணு அதை பரிமாறும் பாத்திரத்தில் வீசி எறிஞ்சேன். சுத்திவர ஆசார பிராமணா. அடிச்சார். பிறகு, தனியா அக்காரவடிசல் கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு, மும்பைக்கு போகும் ரயில்வண்டியில் பார்த்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். அவரது மகவுகள் வளப்பமாக இருப்பதாக சொன்னார்.

19. இறந்தவர்களுக்கு வருடாவருடம் செய்யும் திதி..

20. முதல் தடவையாக, ஒரு பெயர். இத்தனைக்கும் துணை மாந்தர். தன் அப்பாவின் பெயரைக்கூட ருக்மிணி எழுதவில்லை.

21. காரியத்திலெ இறங்கினா, தாத்தா சட்புட்ணூ முடித்து விட்டு தான் மறுவேலைக்குப் போவார். ஏகாக்ரஹ சதாவதானி. அடிக்கடி இதை பார்ப்போம்.

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்)

அம்மா சொல்படி ராஜூ: நகரத்தார் வாழ்க

(ருக்மிணி சுபஜனனம்....)

அந்த சமயத்தில் என் அப்பாவிற்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து போய்விட்டதாம். பிறகு நான்காவது ஒரு பெண் பிறந்தது.9 பிறகு என் அப்பா அம்மா வேண்டாத கோவிலை வேண்டி (பிறகு) ராஜமன்னார்குடிக்குப் போய் அங்கு ஒரு சந்தானகிருஷ்ணன் வைத்திருக்கிறார்கள். அந்த கிருஷ்ணனை என் அம்மா எடுத்துக்கொண்டபிறகு ஒரு பிள்ளை பிறந்தான்.10

ஆனால், என் அப்பா அதே செட்டியப்ப செட்டியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதம் 50 ரூபாய் (அடித்தல், திருத்தல்) சம்பளம். அந்தச்சம்பளத்தில் தான் பெரிய பெண்ணுக்கு கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை படிப்பு அந்த நாளில் பத்து க்ளாஸ் படித்தால் போதும் என்று இருப்பார்களாம். அதனால் என் அப்பா மாப்பிள்ளையை ஆத்தில் வைத்துக்கொண்டு படிப்பதற்காக தன் வீட்டில் வைத்துக்கொண்டார். செட்டிநாட்டில் பெரிய பணக்கார செட்டியார் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் சொக்கலிங்க செட்டியார் என்று பெயர் அவர் செட்டி நாடு என்கிற காரைக்குடியில் பெரிய சிவன் கோவில் தெருவில் ஹேட்ஸ்கூலும் 2. பாய் (Boy) ŠÜÖõ ¸ðÊÉ¡÷¸û. «Å÷¸û ¾¡õ ÌÆó¨¾¸ÙìÌ ÒŠ¾¸õ, §¿¡ð, ¦Àýº¢ø ±øÄ¡õ ¦¸¡ÎôÀ¡÷¸û. அதில் அப்பா மாப்பிள்ளையை படிக்க வைத்தார். அதே போல் பெண்ணும் ஹேட்ஸ்கூலில் படித்தாள். இருவரும் சின்னவர்கள் தாம்.

ஆனால், அந்தக்காலத்தில் செட்டியார்கள் கோவில் உத்ஸவம் நடத்துவது, குளம் வெட்டுவது செய்வார்கள்.11 தவிற ஒரு விஷயம். அவர்கள் வீட்டில் கல்யாணம் என்றால் ரொம்ப விமரிசையாக நடக்கும்.

அப்போது பிராமணர்களுக்கு வெத்திலைப்பாக்கு கொடுக்கும் போது, பித்தளை பாத்திரம் தருவார்கள். பிராம(ண)ர்களுக்கு தான் தர்மம் செய்வார்கள்?12 இப்படியிருக்கும்போது (அடித்தல், திருத்தல்) மாப்பிள்ளைய மெட்ரிகுலேஷன் எழுதவேண்டும் என்றால், புதுக்கோட்டை போய்த்தான் எழுதவேண்டும். அதனால், மாப்பிள்ளையை13 புதுக்கோட்டை போய் எழுதச்சொன்னார், என் அப்பா. அதே போல் அவர் எழுதி வந்தார். அப்போது என் அப்பா மாப்பிள்ளையைக் கூப்பிட்டு நான் இன்கம்டாக்ஸ் கணக்குகள் கொடுக்கிறேன். 14 அதைப்பார்த்துக்கொண்டுவந்தால் நல்லது. எனக்கு உதவியாக இருக்கும். எனக்குச் செட்டியார் கொடுக்கிற சம்பளம் போதவில்லை. அதனால் உன்னை என்னோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நீ என்ன சொல்கிறாய் சொல் என்று மாப்பிள்ளையைக் கேட்டார்.ஆனால் மாப்பிள்ளை இஷ்டபடவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் என் அப்பாவிற்கு கொஞ்சம் வருத்தம். இப்படியாக வருஷம் ஆகிவிட்டது?அப்போது எனக்கு 9 வயது. என் தம்பிக்கு 7 வயது ஆகிறது என்றும் எங்களுக்கு கொஞ்சம் நினைவு தெரியும். செட்டியார் வீட்டில் வேலை பார்க்கும்போது நான் தான் டிஃபன் கொண்டு கொடுப்பேன். ஆனால் செட்டியாருக்கு ரங்கூன், சிங்கப்பூரிலிருந்து கடைக்கணக்குகள் வரும். அதோடு எங்களுக்கு பிஸ்கோத்து, பாவாடைத்துணி எல்லாம் வரும். என் அக்கா கல்யாணத்தின்போது நான் ஒரு வயதுக்குழந்தையாம். என்னை அத்திம்பேர் தூக்கி வைத்துக்கொண்டிருப்பாராம். என் அப்பா மாப்பிள்ளையை கோபிப்பாராம். அதே சமயத்தில் அப்பாவிற்கு குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்ததாம். அதனால் தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம் (அடித்தல் திருத்தல்) 500 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மத்ராஸ் போய் ஒரு குமாஸ்தாவை வைத்துக்கொண்டு கணக்கு முடித்து தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டு அப்பா மத்ராஸ் போய்விட்டார்.

9. ருக்மிணி, தன்னை தான் குறிக்கிறார் போலும்.

10. ஊழ்வினையோ, செல்லம் கொடுத்து கெட்டதோ, சகவாசதோஷமோ, மாமாவின் வாழ்க்கையை திசைமாற்றி அலக்கழித்துவிட்டது. திடீரென்று வருவார். திடீரென்று போவார்.

11. நகரத்தார் சமுதாயச்செய்திகள் இந்த வரலாற்றில் பல உள்ளன. வாழ்வு கொடுத்தவர்கள் அல்லவா.

12. கேள்விக்குறி ருக்மிணியின் தார்மீகநிலையை உணர்த்துகிறது.

13. பெரியண்ணாவுக்கு உலகமே நட்பு, தாத்தாவைத்தவிர! ருக்மணி அவரது பிரதாபங்களையையும் விட்டு விடவில்லை. எங்கள் மீது, அவருக்கு அளவு கடந்த வாஞ்சை. அவருக்கு வந்த வெளிநாட்டு கவர்களின் ஸ்டாம்புகளை லாகவமாக எடுத்துக்கொண்ட நான், அவற்றை என் பேத்தி ருக்மணியிடம் கொடுத்துள்ளேன். பெரியண்ணாவுக்கு பெருமிதத்துடன் தோள் கொடுத்தவன்ர்களில், நான் ஒருவன்.

14. அன்றிலிருந்து கடைசிநாள் வரை (என் திருமணத்திற்கு பிறகும்) தாத்தா காரைக்குடியில் பிரபல இன்கம்டாக்ஸ் பிராக்டிஷனர். மேற்படிப்புகள் படித்து உயர் பதவிகள் வகித்த எனக்கு, இன்றும் ஆங்கிலம் அறியாத அவரது ஆற்றலும், திறனும், புதிராகவே உள்ளன. அங்கும் ரகசியமாக ஸ்டாம்புகளை உருவிவிடுவேன். பெரியண்ணாவுக்கு இவருடன் போட்டாப்போட்டி. 1947க்குப்பிறகு, புதுக்கோட்டையில், எங்கள் வீட்டில் தாத்தா விளம்பரப்பலகை வைத்தார். பெரியண்ணாவும் பக்கத்திலேயே தனதையும் பொருத்தினார்! குட்டி சமஸ்தானமா? அங்கு வருமானவரி முன்பு கிடையாது. வருமானவரியை எதிர்த்து மாஜி திவான் ஒருவர் ஹிந்துவில் எழுத, மாணவனாகிய நான், ‘ Does he think tha Pudukkottai is an enclave in Free India?’ என்று மறுப்பு எழுதினேன், காரசாரமாக. என்றுமில்லாத திருநாளாக, பெரியண்ணா அதை தாத்தாவுக்கு வாசித்துக் காட்ட, தாத்தா என்னை அன்றிலிருந்து ‘முந்திரிக்கொட்டை’ என்று தான் கூப்பிடுவார். ‘ இப்போ மட்டும் என்ன வாழ்ந்த்தாம்?’ என்று மின் தமிழில் யாரோ கேக்கிறாளே! புதுக்கோட்டை மெர்ஜெர் ஆன நிகழ்வுக்கு நான் ஒரு சாட்சி..

(நகரத்தார் வாழ்க ,,,)