Showing posts with label நானும். Show all posts
Showing posts with label நானும். Show all posts

Tuesday, June 28, 2016

இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]

இன்னம்பூரான் பக்கம் 1 [4] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69992

Wednesday, June 29, 2016, 5:20

இன்னம்பூரான்
ஜூன் 28. 2016
‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’

என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.

பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.

எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.
அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.

நன்றி.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, June 6, 2016

6 6 66 இன்னம்பூரான் பக்கம் 1 [3] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

இன்னம்பூரான் பக்கம் 1 [3] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

6 6 66
இன்னம்பூரான்
6. 6. 2016

பிரசுரம்: http://www.vallamai.com/?p=69484 
Monday, June 6, 2016, 22:10 





[Try watching this video on www.youtube.com
, or enable JavaScript if it is disabled in your browser.]



“பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை…ஒப்பிலாத சமுதாயம்…உலகத்துக்கொரு புதுமை…” என்று பாடிய மகாகவி சுப்ரமண்ய பாரதியார்…தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் “ என்றும் சூளுரைத்தது ஆவேசம் மட்டுமல்ல. அதனுள் ஒரு பொருளியல் தத்துவம் அடங்கியுள்ளது. அந்த தத்துவம் உலகுக்கு பொதுமை. நடைமுறை அவ்வாறு இல்லாததால், ஏழ்மையும் திரவிய செருக்கும் எல்லா நாடுகளிலும், அக்கம்பக்கத்தில் பரவி வாழ்கின்றன. இது நிற்க.

இந்தியா விடுதலை பெற்ற 1947ம் வருடம் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். அந்த டாலரை 67 ரூபாயில் வாங்க, இன்று சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. அரசியல் பொருளியலாகவும், பொருளியல் அரசியலாகவும் மக்களை அலக்கழித்தால், ஏன் ரூபாய் தம்பிடியாகாது! ‘ஸப்ஸே படா ருபையா’ என்று மகமூது 1976ல் எடுத்த சினிமா ஒரு பொருளியல் விசாரணை: பாரத சமுதாயம் வாழ்கவேண்டும் என்றால் மக்களிடையே/ உலக சந்தையில் ரூபாய் மதிக்கப்படவேண்டும் என்பதே. இதுவும் நிற்க.

தலைப்புத்தேதியை 6 . 6. 66. கவனிக்கவும். என் சம்பந்தப்பட்டவரை அது மறக்க முடியாத தேதி. எனக்கு ‘உகாய்’ என்ற அடைமொழி ஒன்று உண்டு. தபதி நதியில் உகாய் என்ற பழங்குடி கிராமத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுப்பணி , மற்றும் பல அரசு ஊழியங்களிலும் நிதி ஆலோசகராக பணி ஏற்றத் தருணம். நிதி தான் தட்டுப்பாடு. 6.6.66 அன்று மத்திய அரசு திடீரென்று ரூபாயின் மதிப்பை 37.5% சரித்து விட்டதால், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்த எல்லா வெளிநாட்டு கனரக ஊர்திகளின் இறக்குமதி செலவு விண்ணை தொட்டது. முதல்வர் என்னை அழைத்து ‘சிக்கனம் செய்வாயாக’ என்று ஆணையிட்டார். நானும் கோடிக்கணக்கில் செலவை குறைத்தேன். அப்படியும் போறாக்குறை தான். இதுவும் நிற்க.

கி.பி. ஆறாவது நூற்றாண்டிலேயே ரூபாய் நாணயம் உருவெடுத்தது. ஷெர்ஷா சூரி என்ற மாமன்னரின் காலத்தில் தான் (16வது நூற்றாண்டு) வெள்ளி ரூபாய் அச்சடிக்கப்பட்டது. (அவர் தான் நாடு முழுதும் நீண்ட ராஜபாட்டை அமைத்தார்.). இந்தியா முழுதும் வணிகம் பொருட்டு, லேவாதேவி பொருட்டு பண நடமாட்டம் கனஜோராக 18ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. வழிப்பறி கொள்ளையும் அடக்குமுறையும் நிலுவையில் இருந்தன.

விடுதலை பெற்ற காலகட்டதில் நம்மிடையே பிரபல நிதி அமைச்சர்கள் இருந்த போதிலும், ‘ the monkey called ‘money’ – in Crowther’s words) பற்றிய நுட்பங்கள் ஆளுமையில் உற்றதொரு இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் சோவியத் ரஷ்யாவை நாடியது. அமெரிக்காவுடன் உறவாட இந்தியாவும் தயங்கியது. சோவியத் ரஷ்யாவும் கவனத்துடன் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இறக்குமதி ஒவ்வாமையை, போதிய காரணமில்லாமல் இந்தியா, கடை பிடித்ததால், தளவாட இறக்குமதியெல்லாம் ரஷ்யாவிடமிருந்து; ரூபிள்-ரூபாய் நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவை தலையெடுக்கவிடவில்லை.

இந்த அழகில், பொன்னும், பவுனும் ரூபாய்க்கு அடிப்படை என்ற கொள்கை இருந்தது. 1947ல் ஒரு ரூபாய்க்கு 4.15 க்ரைன் பொன் வாங்கலாம். 6.6.66. அன்று அது 1.83 க்ரைன் ஆக குறைந்தது. ஒரு நாள் முன்னால் ஒரு டாலரின் விலை ரூ.4.75. 6. 6. 66. அன்று அது ரூ.7.50 ( 57%) ஆக எகிறியது. இதற்கு காரணம், இங்கிலாந்து பவுன் உடன் இணைந்து ஏறி இறங்கியது ரூபாய். பவுனோ, டாலருடன் இணைந்து ஏறி இறங்கியது. ஆகஸ்ட் 18, 1949 அன்றே, இந்த முதல் பாடம் நடந்த பின்னரும், இந்தியா பழைய சுருதியில் தான் இசைத்து வந்தது. பணவீக்கமும் 5.8%லிருந்து அடுத்த வருடத்திலேயே [1967] 6.7% அளவுக்கு ஏறி விட்டது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சைனா, பாகிஸ்தான் போர்களினால் அதீதமான செலவு ஏற்பட்டதாலும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டாலும், அதனால் பணவீக்கம் குறையும், இறக்குமதி தாராளமாகும், மேனாட்டு கொடை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளினாலும், இந்த தடாலடி நிறைவேறியது. வேறு வழிகள் தென்படவில்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும், அவ்வாறு நிறைவேறவில்லை. மறுபடியும். 1992ல், அக்காலத்து நிதி அமைச்சர் மன்மோஹன் சிங் ரூபாயின் மதிப்பை ( ரூ 25: டாலர் – ரூ.32: டாலர்) குறைத்தார். பின்னர், கோட்பாட்டை சந்தை உள்வாங்கிக்கொண்டது. அதனால் தான் நாள்தோறும் மாற்றங்கள். ரூபாய் மேலும் மேலும் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது, தற்காலம். எப்படி என்றால்:
  • 6. 6.66: $! = ரூ. 7.50.
  • 6..6.2016 $1 = ரூ. 67.
  • தற்காலத்து அன்னிய செலவாணி பற்றாக்குறை: 1.5% மட்டுமே.
  • இந்தியாவின் அன்னிய செலவாணி சேகரிப்பு $ 360 பிலியன் (ஒன்பது மாதம் தாங்கும்).
  • 2015ல் அன்னிய செலவாணி நல்வரவு அதிகமாக இருப்பது இந்தியா தான்.

நம் இந்தியா சுபிக்ஷம் அடைய வேண்டும். சுப்ரமண்யம் சுவாமி – ரகுராம் ராஜன் – பிரதமர் விவகாரம் ஒரு பெரிய காண்டம். பின்னர் பார்க்கலாமா? முதலில் இதற்கு வாசகர்கள் கிடைத்தால் தானே, அங்கே போகலாம்.

ஆவணப்பட்டியல்:
விழியம்:
http://www.youtube.com/watch?v=qUoB80sKxc4″ target=”_blank”>Try watching this video on


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, May 31, 2016

இன்னம்பூரான் பக்கம் [1]:சமுதாயமும், நீயும், நானும், அவரும்.:மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1

இன்னம்பூரான் பக்கம் [1]

சமுதாயமும், நீயும், நானும், அவரும்.
மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1
இன்னம்பூரான்

வல்லமை பிரசுரம்: http://www.vallamai.com/?p=69339

WORD CLOUD CONCEPT ILLUSTRATION OF DIABETES CONDITION
சில வருடங்களுக்கு முன் வல்லமையில் நீரிழிவு நோயை பற்றி எழுதியிருந்தேன். அதிகமான வாசகர்கள் என்றும் சொன்னார்கள். சென்னையின் ஒரு பிரபல டாக்டர் தன் ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் லாமினேட் செய்து அதை வைத்ததாக கடிதம் எழுதினார். செல்வன் மாற்றுக்கருத்து கூறினார். அது டாக்டர்களை பற்றி. ஆனாலும், நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசட்டுத்தனமாக இருக்கிறது. நாட்தோறும், முறைகேடாகத் தான், அபாயமாகத்தான் எதிர்சாரியில்பயணம் செய்கிறார்கள். இது நிற்க.

நான் எந்ததொரு வைத்திய முறைகளையும், மேனாட்டு வைத்தியம், ஆயுர்வேதம், சித்தம், இயற்கை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் வகையறா எதையும் சிபாரிசு செய்யவில்லை. எல்லா முறைகளையிலும் நிவாரணமும் பக்க விளைவுகளும் உண்டு. ஆனால், நிச்சியமாக கொலை செய்யக்க்கூடியவர்கள், போலி டாக்டர்கள், அரைகுறை வைத்தியர்கள், சுற்றி வளைத்து, பொய்யை மெய்யாக்கும் விளம்பரங்கள், இயலாததை செய்து காட்டுவதாக உத்தரவாதங்கள். நீங்கள் உலகமெங்கும் சென்று உண்மையை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீரிழிவு தீராத வியாதி. உணவு கட்டுப்பாடு, தேக பயிற்சி உதவும், ஆரம்பகாலத்தில். பின்னர் மருந்து, மாத்திரை. சிலருக்கு இன்ஸுலின் போட்டுக்கொள்ள வேண்டி வரும். அது தாய்ப்பால் போல. நான் நாட்தோறும் நான்கு முறை இன்ஸுலீன் போட்டுக்கொள்கிறேன். அதை நிறுத்தி விட்டு, அத்தையும், இத்தையும், கையாலகாதத்தையும் செய்வேன் என்ற வீராப்பு மக்களை ஏமாற்றுவது, வஞ்சகம், கொலைக்கு அஞ்சாத நெஞ்சம்.

இந்த கதையை கேளுங்கள்: உசாத்துணையும் கொடுத்து இருக்கிறேன்.
“இன்சுலின் ஊசியை நிறுத்தி சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்…. திருப்பூர் மாணவன் பரிதாப பலி By: Mathi Published: Saturday, May 28, 2016, 15:31 [IST] திருப்பூர்: “
“அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்… அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் ‘அக்குபஞ்சர்’ பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.”

ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தியின் பகுதி:
“…Asked about the matter, Balamurugan told Express that the boy might have been brought to him on the brink of death. “There are numerous patients whom I have cured. This case is one in a thousand. Other medical systems too do not guarantee saving life. They started taking treatment only after accepting my suggestion to stopping the insulin injections,” he said.
Balamurugan, who owned a photo studio till 2010, completed his Diploma in Acupuncture Science through an open university course. He has been running a clinic at Ramnagar in Coimbatore from 2011.
He accepted that there is no statutory body to register or regulate acupuncture healers, unlike systems of medicine like Siddha and Ayurveda.
The family of Subash, who are yet to overcome the grief caused by his death, are yet to take a decision on proceeding with legal action against the therapist.
There are numerous patients whom I have cured. This is one in a thousand. Other medical systems too do not guarantee saving life.”

இந்தியா மண்ணின் மைந்தர்கள் ‘கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது’ என்றால் நம்பலாமா? நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:https://smartypantsvitamins.com/wp-content/uploads/2013/04/Diabetes-wordcloud.jpg

பழங்கதை:
வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
-ஆசிரியர்

Innamburan Innamburan
Mon, Nov 14, 2011 at 12:33 PM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள்
விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.

உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.

நீரழியா வேதம்:

பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே
என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.

என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;

சிறார்களை ‘கஷ்குமுக்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக்“கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.
(தொடரும்)
இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்

Sunday, March 27, 2016

இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3‘சாதிப்பெயர்…’


இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3
  1. Monday, March 28, 2016, 5:30
  1. Featuredஇலக்கியம் 3. பிரசுரம் http://www.vallamai.com/?p=67489
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016

சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

நிகழ்காலத்துக்கு வருவோம்.
  • சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

  • ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘

-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
  • சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
  • -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
  • கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, March 7, 2016

இன்னம்பூரான் பக்கம்: III: 2 இந்திய தணிக்கைத்துறையும், நானும் [2]



இன்னம்பூரான் பக்கம்: III:1 

இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

Monday, March 7, 2016, 9:58

பிரசுரம்: http://www.vallamai.com/?p=66923

இன்னம்பூரான்

150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். 

இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.

விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.

~ தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.

~ நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. 
ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை?

ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை?

அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! [It is a myth. None can influence the Audit depot.]

எல்லாம் வேஸ்ட் ஸார்!!!

~ நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.

இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.

*கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.

நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.

சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg

ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


*




III:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்

Friday, March 11, 2016, 4:50
பிரசுரம்: வல்லமை இதழ்: http://www.vallamai.com/?p=67015
கடையில் இருக்கும் நெய்யே…🛂 
இன்னம்பூரான்

மார்ச் 9, 2016

ஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.
சாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.

இன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,

‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…
கனப்பொருத்தமாக அமைகிறது.

Do not bark at the wrong tree, please.

தணிக்கைத்துறையின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது ! சிட்டிஸன் -ஆடிட்டரைத்தான் காணமுடியவில்லை!

மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.

நான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை?’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு! வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.
இன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.

அவுட்! 12,400 கோடி ரூபாய் அபேஸ்! ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.

நடந்தது என்ன?

ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.
சாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை. 

‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’ 

என்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.
கொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம்? ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா? ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.starlightinvestigations.co.uk/wp-content/uploads/2015/01/Investigation-1038×576.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, February 25, 2016

‘இன்னம்பூரான் பக்கம்’- 1சமுதாயமும், நீயும், நானும், அவரும்


‘இன்னம்பூரான் பக்கம்’- 1


Friday, February 26, 2016, 5:17

பிரசுரம்: வல்லமை: 26 02 2016
சமுதாயமும், நீயும், நானும், அவரும்

‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)
மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com