Monday, June 6, 2016

6 6 66 இன்னம்பூரான் பக்கம் 1 [3] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

இன்னம்பூரான் பக்கம் 1 [3] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

6 6 66
இன்னம்பூரான்
6. 6. 2016

பிரசுரம்: http://www.vallamai.com/?p=69484 
Monday, June 6, 2016, 22:10 





[Try watching this video on www.youtube.com
, or enable JavaScript if it is disabled in your browser.]



“பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை…ஒப்பிலாத சமுதாயம்…உலகத்துக்கொரு புதுமை…” என்று பாடிய மகாகவி சுப்ரமண்ய பாரதியார்…தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் “ என்றும் சூளுரைத்தது ஆவேசம் மட்டுமல்ல. அதனுள் ஒரு பொருளியல் தத்துவம் அடங்கியுள்ளது. அந்த தத்துவம் உலகுக்கு பொதுமை. நடைமுறை அவ்வாறு இல்லாததால், ஏழ்மையும் திரவிய செருக்கும் எல்லா நாடுகளிலும், அக்கம்பக்கத்தில் பரவி வாழ்கின்றன. இது நிற்க.

இந்தியா விடுதலை பெற்ற 1947ம் வருடம் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். அந்த டாலரை 67 ரூபாயில் வாங்க, இன்று சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. அரசியல் பொருளியலாகவும், பொருளியல் அரசியலாகவும் மக்களை அலக்கழித்தால், ஏன் ரூபாய் தம்பிடியாகாது! ‘ஸப்ஸே படா ருபையா’ என்று மகமூது 1976ல் எடுத்த சினிமா ஒரு பொருளியல் விசாரணை: பாரத சமுதாயம் வாழ்கவேண்டும் என்றால் மக்களிடையே/ உலக சந்தையில் ரூபாய் மதிக்கப்படவேண்டும் என்பதே. இதுவும் நிற்க.

தலைப்புத்தேதியை 6 . 6. 66. கவனிக்கவும். என் சம்பந்தப்பட்டவரை அது மறக்க முடியாத தேதி. எனக்கு ‘உகாய்’ என்ற அடைமொழி ஒன்று உண்டு. தபதி நதியில் உகாய் என்ற பழங்குடி கிராமத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுப்பணி , மற்றும் பல அரசு ஊழியங்களிலும் நிதி ஆலோசகராக பணி ஏற்றத் தருணம். நிதி தான் தட்டுப்பாடு. 6.6.66 அன்று மத்திய அரசு திடீரென்று ரூபாயின் மதிப்பை 37.5% சரித்து விட்டதால், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்த எல்லா வெளிநாட்டு கனரக ஊர்திகளின் இறக்குமதி செலவு விண்ணை தொட்டது. முதல்வர் என்னை அழைத்து ‘சிக்கனம் செய்வாயாக’ என்று ஆணையிட்டார். நானும் கோடிக்கணக்கில் செலவை குறைத்தேன். அப்படியும் போறாக்குறை தான். இதுவும் நிற்க.

கி.பி. ஆறாவது நூற்றாண்டிலேயே ரூபாய் நாணயம் உருவெடுத்தது. ஷெர்ஷா சூரி என்ற மாமன்னரின் காலத்தில் தான் (16வது நூற்றாண்டு) வெள்ளி ரூபாய் அச்சடிக்கப்பட்டது. (அவர் தான் நாடு முழுதும் நீண்ட ராஜபாட்டை அமைத்தார்.). இந்தியா முழுதும் வணிகம் பொருட்டு, லேவாதேவி பொருட்டு பண நடமாட்டம் கனஜோராக 18ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. வழிப்பறி கொள்ளையும் அடக்குமுறையும் நிலுவையில் இருந்தன.

விடுதலை பெற்ற காலகட்டதில் நம்மிடையே பிரபல நிதி அமைச்சர்கள் இருந்த போதிலும், ‘ the monkey called ‘money’ – in Crowther’s words) பற்றிய நுட்பங்கள் ஆளுமையில் உற்றதொரு இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் சோவியத் ரஷ்யாவை நாடியது. அமெரிக்காவுடன் உறவாட இந்தியாவும் தயங்கியது. சோவியத் ரஷ்யாவும் கவனத்துடன் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இறக்குமதி ஒவ்வாமையை, போதிய காரணமில்லாமல் இந்தியா, கடை பிடித்ததால், தளவாட இறக்குமதியெல்லாம் ரஷ்யாவிடமிருந்து; ரூபிள்-ரூபாய் நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவை தலையெடுக்கவிடவில்லை.

இந்த அழகில், பொன்னும், பவுனும் ரூபாய்க்கு அடிப்படை என்ற கொள்கை இருந்தது. 1947ல் ஒரு ரூபாய்க்கு 4.15 க்ரைன் பொன் வாங்கலாம். 6.6.66. அன்று அது 1.83 க்ரைன் ஆக குறைந்தது. ஒரு நாள் முன்னால் ஒரு டாலரின் விலை ரூ.4.75. 6. 6. 66. அன்று அது ரூ.7.50 ( 57%) ஆக எகிறியது. இதற்கு காரணம், இங்கிலாந்து பவுன் உடன் இணைந்து ஏறி இறங்கியது ரூபாய். பவுனோ, டாலருடன் இணைந்து ஏறி இறங்கியது. ஆகஸ்ட் 18, 1949 அன்றே, இந்த முதல் பாடம் நடந்த பின்னரும், இந்தியா பழைய சுருதியில் தான் இசைத்து வந்தது. பணவீக்கமும் 5.8%லிருந்து அடுத்த வருடத்திலேயே [1967] 6.7% அளவுக்கு ஏறி விட்டது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சைனா, பாகிஸ்தான் போர்களினால் அதீதமான செலவு ஏற்பட்டதாலும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டாலும், அதனால் பணவீக்கம் குறையும், இறக்குமதி தாராளமாகும், மேனாட்டு கொடை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளினாலும், இந்த தடாலடி நிறைவேறியது. வேறு வழிகள் தென்படவில்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும், அவ்வாறு நிறைவேறவில்லை. மறுபடியும். 1992ல், அக்காலத்து நிதி அமைச்சர் மன்மோஹன் சிங் ரூபாயின் மதிப்பை ( ரூ 25: டாலர் – ரூ.32: டாலர்) குறைத்தார். பின்னர், கோட்பாட்டை சந்தை உள்வாங்கிக்கொண்டது. அதனால் தான் நாள்தோறும் மாற்றங்கள். ரூபாய் மேலும் மேலும் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது, தற்காலம். எப்படி என்றால்:
  • 6. 6.66: $! = ரூ. 7.50.
  • 6..6.2016 $1 = ரூ. 67.
  • தற்காலத்து அன்னிய செலவாணி பற்றாக்குறை: 1.5% மட்டுமே.
  • இந்தியாவின் அன்னிய செலவாணி சேகரிப்பு $ 360 பிலியன் (ஒன்பது மாதம் தாங்கும்).
  • 2015ல் அன்னிய செலவாணி நல்வரவு அதிகமாக இருப்பது இந்தியா தான்.

நம் இந்தியா சுபிக்ஷம் அடைய வேண்டும். சுப்ரமண்யம் சுவாமி – ரகுராம் ராஜன் – பிரதமர் விவகாரம் ஒரு பெரிய காண்டம். பின்னர் பார்க்கலாமா? முதலில் இதற்கு வாசகர்கள் கிடைத்தால் தானே, அங்கே போகலாம்.

ஆவணப்பட்டியல்:
விழியம்:
http://www.youtube.com/watch?v=qUoB80sKxc4″ target=”_blank”>Try watching this video on


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment