இன்னம்பூரான் பக்கம் 1 [4]
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]
பிரசுரம்: http://www.vallamai.com/?p= 69992
Wednesday, June 29, 2016, 5:20
இன்னம்பூரான்
ஜூன் 28. 2016
‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’
என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.
நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.
பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.
எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.
அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.
நன்றி.
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment