Friday, September 2, 2016

சிவகாமியின் செல்வன் 7

சிவகாமியின் செல்வன் 7
இன்னம்பூரான்
செப்டம்பர் 2. 2016

“ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில் தான் அவர் வாழ்ந்தார்.
அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். 

காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.
விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.
‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒரு பார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர். (நான் வேறு இடத்தில் அறிந்து கொண்ட தகவல். தனக்கு இருந்த ஒரே உடுப்பை நனைத்து காயவைக்கிறார், ஜீவா. அதனால் பெரியவர் வைட்டிங்!}

அதை விட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.


~ வைகோ

பின்குறிப்பு
தொடர் தொடர்ந்து வரவில்லை. பிறகு சரி செய்கிறேன். எனக்கு ஜீவாவை தெரியும். அந்த ஆதங்கம். மன்னிக்கவும்.

No comments:

Post a Comment