Showing posts with label அந்தோ பரிதாபம். Show all posts
Showing posts with label அந்தோ பரிதாபம். Show all posts

Sunday, July 19, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]


அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]



இன்னம்பூரான்
ஜூலை 19, 2015

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்/ மாண்டார் வருவரோ மாநிலத்தீர் ...’ என்று நல்வழியில் ஒளவைபாட்டி உணர்த்தினார். தானே நாண்டு கொண்டு மாண்டவர்களை பற்றி பரிதாபப்படுவதைத் தவிர, யாது செய்ய முடியும்? கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் ஒரு சிறுமி பூப்படைந்தாள். உதிரப்போக்கு அவளை நிலைகுலைய செய்தது. அத்தனை திகில்! மென்மையாக உணர்த்த யாரும் இல்லை போலும். தாங்கொண்ணா மன அழுத்தம் உந்த, தன்னை மாய்த்துக்கொண்டாள். இதன் பொருட்டு, சிந்தித்த ஒருவர் துவக்கிய Befriender International அமைப்பு எத்தனையோ தற்கொலைகளை தடுத்து நிறுத்தி, அந்த மாந்தர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. சென்னையிலும் அத்தகைய அமைப்பு பற்பல வருடங்களாக, இந்த பணியை சிறப்புற செய்து வருகிறது. எனினும், போன வருடம் 16,122 நபர்கள் [16.2%: இந்தியா] தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டனர். எனக்கு அரைகுறையாக தெரிந்தவர் ஒருவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். அந்த 16, 122 நபர்கள் வறுமை, கஞ்சா, சாராயம் போன்ற லாகிரி, இல்லறச்சிக்கல், தீரா வியாதி என பல காரணங்களால் உந்தப்பட்டனர் என்று ஆய்வு கூறுகிறது. காதல் தோல்வி: 506. தற்கொலை செய்து கொண்டவர்களில், பெரும்பாலோர் எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. 16,122 ல் 11,738 நபர்களுக்கு வருட வருமானம் ஒரு லக்ஷத்துக்குக் குறைவு; அவர்களில் 3,880 நபர்கள் அன்றாடம் காய்ச்சிகள்; 166 நபர்கள் திவாலானவர்கள். 5,155 பெண்மணிகளில், 2,143 பெண்மணிகள் இல்லத்தரசிகள். என்ன அரசியோ! 36 நபர்களுக்கு சீதனக்கொடுமை; 853 மாணவர்கள் தற்கொலை; அவர்களில் 247 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். 70% தற்கொலையாளர்கள் திருமணம் ஆனவர்கள். 552 நபர்கள்  லாகிரி சாவு என்று ஒரு ஆய்வு. எய்ட்ஸ் பொருட்டு 18 நபர்கள் தற்கொலை. 
தற்கொலை தலைநகரம் சென்னை, பின்னர் பெங்களூரு, டில்லி, மும்பை.

சரி, தடுக்க/ கட்டுப்படுத்த/ புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம். ‘ஸ்நேகா’ என்ற புகழ் வாய்ந்த அமைப்பு சென்னையில் நாட்தோறும், இடை விடாமல், நேரிலும், தொலை பேசி மூலமாக ஆலோசனை வழங்கி ஆயிரக்கணக்கான தற்கொலைகளை தடுத்து உளது.

ஸ்நேகா சினேகத்துடன் சொல்வதை கேளுங்கள்.
*

விலாசம்:

SNEHA
11, Park View Road,
R.A. Puram,
Chennai-600028. 

Helpline Phone
91-44-2464 0050 [HOT LINE]
91-44-2464 0060

Helpline Email
help@snehaindia.org

Admin E-mail
admin@snehaindia.org

சித்திரத்துக்கு நன்றி: http://ivanhanigan.github.io/images/sneha-ad.jpg


-#-

Saturday, July 18, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [3] & [4]



அந்தோ பரிதாபம்!!! தொடர் [3]
இன்னம்பூரான்
ஜூலை 18, 2015

‘ஆவின்’ பாலில் கண்ட கண்ட இடங்களிலிருந்து எடுத்த தண்ணீர் கலந்த வைபோகமும், ஒரு அமைச்சர் வேலையிழந்த அலங்கோலமும் பழங்கதை. இன்றைய செய்தி: 

நங்கநல்லூர் லோகேஷ்வர் ராவ்  வாங்கிய ஆவின் பாலை காய்ச்சி அருந்திய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாம்; ஆவின் பால் வாங்கிய கடையிலும், ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்காததால், நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்.
அந்த பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்த கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று, நங்கநல்லூர் பகுதியில் வாங்கிய பால் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக, மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆமாம்! மண்ணெண்னெய் காசு கொடுத்து வாங்கணுமே. இந்தக்கலப்படம் தாக்குப்பிடிக்குமோ!
-#-

அந்தோ பரிதாபம்!!! தொடர் [4]

டாஸ்மாக் வசனம்: குடி குடியை கெடுக்கும். அது குடியை கொளுத்தும் என்று இனி எழுதப்பட வேண்டும். ராமதுரை நடுத்தெரு வாசி-  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெரு. மனைவி முத்துலெட்சுமிக்கும் ஆறு வருடமாக, மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்த பின்னும், நாட்தோறும் லடாய்.  தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரை மிடாக்குடியன்.  இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் விழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, July 17, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]




அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

இன்னம்பூரான்
ஜூலை 17, 2015

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்துக் கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை மட்டும் தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:
அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]


  1. ‘தமிழக பாடநூல் கழகத்துக்கு இப்போது தலைமையே இல்லை. செயலாளரும் இல்லை. பொது மேலாளரும் இல்லை...(தாமதம்...வேண்டியவர்களுக்கு மட்டுமே ஆர்டர்கள்) ... ஆட்சி மாற்றம் வந்தபோதும் யாரும்...இத்தனை ஆண்டுகளாக முகவுரையை சரி செய்யாத அதிகாரிகள்...மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் புத்தகங்களை திருப்பி வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  ...ஜூ வி. 24 06 15.
  2. திருச்சிக்கு அருகே உள்ள குளக்கரை மாநகராட்சி மயானத்தில், இறந்து போன பாப்பாம்மாள் சடலத்தை ஓரம் கட்டி விட்டு, சட்புட்னு, ஊழியர்கள் உறவினர்களிடம், ;அவருடைய ‘அஸ்தியை’ பத்தே நிமிடங்களில் கலசத்தில் வைத்துக்கொடுத்தவுடன், சந்தேகத்துடன் தடாலடியாக உறவினர்கள் உள்ளே சென்றால், அங்கே பாப்பாம்மாள் பாடி கிடக்கிறது, அநாதையாக. அடி நொறுக்குப்பிட்டாங்க. பசங்களும் ஓடிட்டாக.... தினமலர்: 16 07 2015
  3. ஹெல்மட் போடாவிடின், வண்டி, உரிமம் எல்லாம் பணால் என்று டமாரம் போட்டபின், சென்னை செல்லும் வழியில் கண்ட காட்சிகள்: பேட்டைகளில் சட்டத்துக்கு மட்டம் தான். ஒரு வண்டியோட்டி கூட ஹெல்மட் போடவில்லை. மற்றபடி சர்வம் ஹெல்மட் மயம், பின் சீட் பெண்ணரசிகளைத் தவிர. நாலு நாள் ஆச்சு. பழைய குருடி கதவை திறடி. சில மஹானுபவர்கள் ஹெல்மட்டை எதிர்த்துக் கோர்ட்டுக்கு போனார்கள். அதிரடி நோ தான் பதில்!
[தொடரும்]



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVWzD8ovVVP7oEvxI9Ll8iW7vWb8YWBn-w7ynPJNZaCw2PI_MRksuIm_gNg8A3zy846ikgjD-PZalmP0eQ8pk04vCqyP1slxX2wWw1zz01NY3KCjpvPSYbb4slC8wmXEQYZ41az2_iMV8/s400/sans-titre+helmet.png