Thursday, October 1, 2015

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்


இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2015

Take that thine is, and go thy way: I will give unto this last, even as unto thee.
-Matthew 20:14

நீரின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அவ்வுலகின் மேன்மை. பொருளாதாரம் என்ற சொல்லைத் தவிர்த்து பொருளியல் என்று எகனாமிக்ஸ் என்ற துறையை வகைப்படுத்துவது சாலத்தகும்.  அத்துறையில் நான்கு நிபுணர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள் வலம் வரும் என்று கேலி செய்வதுண்டு. ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற பொருளியல் தந்தைகளால் போதிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளியல் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்னால் கூட, நமது பாடபுத்தகங்களில் கோலோச்சின. பின்னரும்!  இத்தனைக்கும் 1860லேயே அதில் புதைந்திருந்த பாகுபாடுகளை, சமுதாய அநீதிகளை அலசி உதறிய ஜான் ரஸ்கினின் ‘Unto This Last’ என்ற நூல் வலம் வந்து, சில மாற்றுக்கருத்துக்களை முன் வைத்தது. சான்றோரை சிந்திக்க வைத்தது. அக்காலத்து பொருளியல் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியது. அந்த நூல் புரட்சிக்கு வித்திடுகிறது என்று முதலாளித்துவம் அஞ்சியது.

விவிலியத்தில் ஒரு குட்டிக்கதை. திராக்ஷை தோட்டம் ஒன்று. முதலாளி காலையில் சில கூலிகளையும், பின்னர் சில கூலிகளையும் ‘ஆளுக்கொரு தம்பிடி’ என்று சொல்லி அமர்த்தினார். அவ்வாறே கொடுத்தார். சிரமத்துக்கு ஏற்ற கூலியில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தவர்களிடம், ‘நான் அநியாயம் செய்யவில்லையே! பேசியதை கொடுத்தேன். ["Friend, I do thee no wrong. Didst not thou agree with me for a penny? Take that thine is, and go thy way. I will give unto this last even as unto thee."] என்றார். சரி தான். ஆனால் சரியில்லை தான்.

அண்ணல் காந்தி புரட்சிக்கு வித்திடும் இந்த நூலை 1904ல், ஒரு ரயில் பிரயாணத்தின் போது படித்த போது, ‘ எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் வைக்க முடியவே இல்லை’ என்று தன்னுடைய சுயசரிதையில் பின்னர் எழுதினார். அவர் மேலும் சொன்னது, “...என்னை பிடித்து ஆட்டியது அந்த நூல். அதன் இலக்குகள் தான் எனக்கு அடிப்ப்டை போதனை...என் வாழ்வை அதற்கிணங்க அமைத்துக்கொள்வேன்... என்னுடைய மனத்தின் ஆழத்தைத் தொட்ட இந்த நூல் என் கோட்பாடுகளுக்கு கலங்கரை விளக்கு. என் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது, அது” என்றார்.
சுருங்கச்சொல்லின், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை மஹாத்மா ஆக்கியது, இந்த நூல் தான். இங்கு நான் பொருளியல் பேசவில்லை.அதற்கு பல பரிமாணங்களும், பரிநாமங்களும் உண்டு. அண்ணல் காந்தியை பற்றி பேசி, அவரை, அவரது ஜன்மதினமன்று, வணங்குகிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.dominantbooks.com/pic/book/big/8178886669.jpg


No comments:

Post a Comment