Friday, October 2, 2015

"செல்லுலாயிட் வெங்காயம்"

"செல்லுலாயிட் வெங்காயம்"

இன்னம்பூரான்
02 10 2015
கனவு காணாத மானிடர்கள் அரிது. நனவில் இருப்பது கனவில் வந்தாலும் சங்கடம் தான். அது திரிந்து பிரிந்து வரும். எண் சாண் உடம்புக்கு இடது கால் கட்டை விரல் பிரதானமாக வரலாம். தலை பிரிந்து தனியே ஓடலாம். ‘கனவே! கனவே! ஒரிஜினல் கனவே! வா! வா!’ என்று வந்தாலும் வம்பு. உள்ளதை உள்ளபடி பெல்ஜியம் கண்ணாடி போல காட்டி, இலக்கியம் போல ஒரு கலக்குக் கலக்கி விடும். போதுமப்பா இந்த பீடிகை, சமாச்சாரத்தை சொல்லுடா! என்றார், அந்த பெரிசு; தாடியும் மீசையுமாக இருந்தாலும் தாட்யமாக இருந்தார். துர்வாசரொருபாகமாக இருந்த வசிட்டர் போல் தோற்றம். அவர் சொல்லில் திடம் இருந்ததால், என்னால் தப்பி ஓட முடியவில்லை, அந்த சொப்பனத்தில், மூன்றே பாத்திரங்கள்: பெரிசு, டவுசருக்கு மாறின இளசு, ஒம்மாச்சி. 

கனவில் வந்தது ஒரு ஓரங்க நாடகம். ஒம்மாச்சியே விதூஷகன். டிக்கெட் வாங்காமல் நான் குட்டிச்சுவர் மேல் குந்தியிருந்ததால், யானொரு பாத்திரமில்லை. அரங்கத்தில் ஒருமுக எழினியும் பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் தன்னிச்சையாக, விலகியும், ‘பொத்’ என்று விழுந்து, மறைத்தும், பாடாத பாடு படுத்தின. அத்தருணம், இது தெய்வசங்கல்பம் என்று மோப்பம் பிடித்த ‘டவுசர்’  பெரிசை பார்த்து செப்பியது யாதெனில்:

“ ஐயா! ராமானுஜ தயா பாத்திரம் என்று ஜபியுங்கள். நல்லதே நடக்கும், திரை விலகி நிற்கும், நாமும் கூத்தடிக்கலாம்.” “என்னப்பா! மடியிலேயே கையை போடுகிறாய். நானோ அண்ணன் பெயரை அலங்கரிக்கிறேன். தம்பியின் தயவு நாடலாமா?” என்று சொல்லிவிட்டு, பெரிசு இடத்தை காலி செய்தது. இளசு, மனைவி கொற்றவையுடன்,  திருக்கோட்டியூர் சென்று பூசை புனஸ்காரம் செய்து விட்டு, வீடு திரும்ப, அன்னை கருணாவிலாசம் அவர்களை பாராட்டினார். தந்தை தயாபரன் அவர்களை ரகசியமாக பாராட்டினார். அண்ணன்  குஸ்திக்கு அழைத்தார். மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவின் அலுவலகத்தில் சரணடைய நினைத்து விழுந்தடித்து ஓடிய இளசை, சிலாரூபத்திலிருந்த பெரிசு, ‘நில். என்னை பார். என் காலடியைப்பார். என் பொன்வாக்கை படி. பகுத்து அறிக.’ என்றார்.

அன்னாருக்கு பல கூழைக்கும்பிடுகளை போட்ட வண்ணம், இளசு, ‘நாங்கள் ப்ரத்ய்ங்கா தேவியிடம் தங்கள் கோட்பாடுகள் பரவவேண்டும் என்று விண்ணப்பம் செய்தோம். திருவேங்கிடத்தான் கிட்ட போய் வேறே கும்பிடணும்.’ என்றார், அளவிலா தயக்கத்துடன். சினம் கொப்பளிக்க, பெரிசு இளசை நோக்கிக் கூறீனார்,.
“ நீ ஒரு "செல்லுலாயிட் வெங்காயம்".
திரை விழுந்தது. கனவும் கலைந்தது. உவமையும் நன்றாகவே தெய்வாதீனமாக அமைந்து விட்டது.
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://i.ebayimg.com/00/s/MTUzNVgxNTAw/$(KGrHqZHJBwE-d,bnSpvBPsV524+ig~~60_35.JPG

No comments:

Post a Comment