Tuesday, October 6, 2015

நோபெல் விருது 2015: 1

நோபெல் விருது 2015: 1




இன்னம்பூரான்

அக்டோபர் 6 ,2015


இன்று 2015 மருத்துவம் சார்ந்த நோபெல் விருது அறிவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் இது பற்றி எல்லாம் கடை விரித்தேன்; கேட்பார் இல்லை. மறுபடியும் கடை விரிக்கிறேன். சில வியாதிகள் தொக்கி நிற்பவை. மலேரியா அந்த வகை. புலி, சிங்கம், முதலை ஆகியவற்றை வம்சத்துடன் அழிக்கும் மனிதன் தன்னை தாக்கும் கொசுவை நசுக்கமுடியவில்லை. உச்சரிப்பு தவறாமல் இருக்க ஆங்கில எழுத்துக்கள், விருது பெற்றவர்களின்/ மருந்துகளின் பெயருக்கு மட்டும். Tu Youyou என்ற 84 வயது மூதாட்டி சைனாவில் ஒரு ரகசிய ஆய்வில் பணி புரிந்த போது கண்டு பிடித்த artemisinin என்ற மருந்து மலேரியாவுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். Mao Zedong சைனாவில் சர்வாதிகாரியாக இருந்தபோது, இந்த பெண் விஞ்ஞானிக்கு மலேரியாவை ஒழிக்கும் ஆராய்ச்சி ஒதுக்கப்பட்டது. வடக்கு வியட்னாமில் விட்டில் பூச்சி மாதிரி மக்கள் செத்து விழுந்தனர், மலேரியாவில். அங்கெல்லாம் சென்று எல்லாவற்றையும் கண்டு கொண்ட பின் ஊருக்கு வந்தால், 1600 வருடங்களுக்கு முந்திய நூல் ஒன்றில் Artemisia annua என்ற மூலிகை வைத்தியம் தெரிய வந்தது. அதை ஆதாரமாக வைத்து ஆராய்ச்சி செய்தவர் Tu Youyou. Plasmodium falciparum என்ற மலேரியா மூளையை தாக்கி ஆளை கொல்லும். Plasmodium vivax கொல்லாவிடினும், குலை நடுங்கச்செய்யும். பல சோதனைகளுக்கு பிறகு இவரால் தயாரிக்கப்பட்ட artemisinin என்ற மருந்து சஞ்சீவினி போல் ஆயிற்று. இரண்டு வகை மலேரியாவையும் முறியடித்தது. நோபெல் பரிசு ரொக்கத்தில், பாதி இவருக்கு.


William C Campbell உம் Satoshi Ōmuraவும்  [Ireland, Japan] ஆகிய இருவரும் மனித வயற்றில் குடித்தனம் நடத்தும் புழுக்களை ஒழிக்க avermectin என்ற மருந்தை உருவாக்கினர். அவர்களுக்கு மீதம் பாதி. ஹவாலா நாட்டின் மேலாண்மையை தாக்கும். பாரசைட்ஸ் எனப்படும் ஊடுருவி உள்ளே டேரா போட்டு, கூடாரத்துக்கே தீ வைக்கும் இத்தகைய வியாதிகளை குணப்படுத்த உழைத்த இந்த மூவரும் பாராட்டத்தக்கவனரே. William C Campbell, Ōmuraவின் ஆராய்ச்சியின் அடிப்படையில் செய்த ஆய்வின் பயனே இந்த மருந்து. இயற்கை அன்னைக்கு இணையாக நாமும் நுண்ணுயிர்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முரசு கொட்டுவதை நையாண்டி மேளம் என்று இவர் உணர்த்தும் விதமே அலாதி. இது உண்மை தான் என்கிறது Ōmuraவின் ஆய்வுகள்.

-#-
Image Credit: http://www.cbc.ca/gfx/topvideo/2015/nobel-medicine-niles-100515.jpg
Sources: Many.


No comments:

Post a Comment