Tuesday, January 6, 2015

என்னத்தைச் சொல்ல?! ~7: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

என்னத்தைச் சொல்ல?! ~7: 




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

இன்னம்பூரான்
ஜனவரி 6, 2015

பல வருடங்களுக்கு முன் மும்பையில் சொற்பசம்பளத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஒரு ஆபத்பாந்தவன் வந்து சேர்ந்தார். அவர் நடத்தும் தர்மஸ்தாபனத்துக்கு சில ஆயிரங்கள் காசோலை மூலம் நன்கொடை அளித்தால், கறாராக அதை முழுதும் காசாகவே திருப்பிக்கொடுப்பேன். உங்களுக்கு வரிச்சலுகை. எனக்கு நிறமாற்றம் (கருப்பிலிருந்து வெள்ளை). எப்படி ஐடியா என்று கொக்கரித்தார். இது அதர்மமில்லையோ என்ற என்னை புழுவைப்போல் துச்சமாகப் பார்த்தார். பத்து வருடங்கள் முன்னால் இந்திய மக்கள் ஆலோசனை மன்றம் துவக்கவேண்டும் என்ற வீராப்புடன் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தரமுயர்ந்த தன்னார்வக்குழுக்களுடன் கலந்தாலோசனை செய்தேன். அடிப்படை ஊழியம் செய்ய ஆள் கிடைக்கவில்லை. ஆனால் யாரோ பதினொரு ஆசாமிகளை கொணர்ந்து என்ஜீவோ சிறகு சொருக பல சில்லறைகள் தயாராக இருந்தன. போட்ட கைப்பணம் போச்சு என்று நானும் வாகை சூடா மன்னனாக இங்கிலாந்து திரும்பினேன். எதற்கு இந்த பீடிகை என்றா கேட்கிறீர்கள்?

இதோ. இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய்களில் புரளும் 25 லக்ஷம் தன்னார்வக்குழுக்களில் 10 % தான் சட்டத்திற்கு உட்பட்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்கள் என்ற இந்திய புலன் விசாரணை கழகத்திடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஹெ.எல்.டத்து அவர்களின் தலைமையில்  அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு, ‘எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தொகுக்கவும்.பிறகு, உங்கள் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம். இந்த தன்னார்வக்குழுக்கள் அவர்களை ஆவணப்படுத்திய மையங்களுக்கு முழுமையாக கணக்கு வழக்கு தரவேண்டும் என்ற விதி என்ன ஆனது? அப்போது தான் வெளிப்படுத்தல் ஒழுங்காக நடைபெறும்.” என்று அறிவுரை அளித்தது. 

புள்ளியியல் கூறுவது: ஒன்பது மாநில தன்னார்வக்குழுக்களிலிருந்து தகவல் இல்லை. தமிழ் நாடும் அவற்றில் ஒன்று. 20 மாநிலங்களில் 23 லக்ஷம் குழுக்களில் 2.23 லக்ஷம் குழுக்கள் தான் கணக்கு வழக்கு அளித்தன.கிட்டத்தட்ட வருடம்தோறும் 950  கோடி அரசு மான்யம் பெறும் குழுக்கள் 2002 -2009 ல் பெற்ற மான்யம்: 6654  கோடி ரூபாய். மத்திய அரசின் நேரடி அரசாட்சி பெறும் பிராந்தியங்களில், டில்ல் பதில் சொல்லவில்லை மற்றவையில் கணக்குக் கொடுத்தவர்கள்: நூறில் ஒன்று. (1%). 22 ஆயிரம் குழுக்கள் பெற்ற வெளிநாட்டுக்கொடை $ 3.2 பில்லியன்.

இதெல்லாம் தோண்டித்துருவிய பெருமை எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞருக்கு உரியது. ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை என்ற அன்னா ஹஜாரேயின் தன்னார்வக்குழுவை பற்றி அவர் விவரங்கள் கேட்க, இரண்டு வருடங்களுக்கு முன் உச்ச நீதி மன்றம் புலன் விசாரணைக்கு ஆணையிட, இத்தனை தேள், புழு, பூரான், நட்டுவாக்கிளி எல்லாம் தெரிய வந்தது.
எனக்கு என்னமோ சம்சயங்க:
  1. எந்த தைரியத்தில் அத்தனை அழுச்சாட்டியம் நடந்தது?
  2. உடன்கட்டை ஏற்றப்படுபவர்கள் யாரார்?
  3. கேட்க வேண்டியவர்கள் செத்து விட்டார்களா?
  4. தமிழ் நாட்டு தன்னார்வத்துக்கு தெனாவட்டு ஏன்?
  5. இந்த தன்னார்வக்குழுக்களை சீஏஜியை விட்டு தணிக்கை செய்தாலாகாதா?
அடுத்த ஐந்து கேள்விகளை நீங்கள் தான் கேட்கணும்.‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று குந்திக்கிணு இருந்தா எப்படீங்க!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.pambazuka.net/images/articles/500/hakima_abbas/gado_ngo_cashcow.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment